privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக்கை தடை செய்த மேலப்பாளையூர் - நேரடி ரிப்போர்ட்

டாஸ்மாக்கை தடை செய்த மேலப்பாளையூர் – நேரடி ரிப்போர்ட்

-

சிறுதொண்ட நாயனாரின் குரலில் 74 வயதுக்குரிய முதுமை இல்லை. அவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர். நல்லாசிரியர் விருது பெற்றவர். வரலாறு, தமிழ், பொருளாதாரம், சமூகவியல் மற்றும் காந்திய சிந்தனைகள் என்று மொத்தம் ஐந்து தனித்தனி துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். முனைவர் பட்டமும் பெற்றவர். ஆனால், ஜெயாவின் தமிழக அரசோ அவரைத் தீவிரவாதியாக இனங்காணுகிறது.

மேலப்பாளையூர் டாஸ்மாக் போராளிகள்
டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்று பிணையில் வெளியில் வந்த போராளிகள் 11 பேர்.

விருதாச்சலத்தை அடுத்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் சிறுதொண்ட நாயனாரும் ஒருவர். சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் விருதாச்சலத்தில் இருந்தோம். கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.

“அய்யா, நீங்க காந்திய சிந்தனைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மக்கள் அதிகாரம் அமைப்போ டாஸ்மாக்கை மூடு அல்லது மக்களே உடைப்பார்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுகிறது.. நீங்கள் இந்த அமைப்பில் இணைந்து போராடி சிறை சென்றுள்ளீர்கள். கேட்கவே கொஞ்சம் முரணாக இருக்கிறதே?”

”தம்பி, அரசாங்கம் என்பது என்ன? மக்கள் இல்லாமெ ஒரு அரசாங்கம் இருக்க முடியுமா? அதிகாரம் தான் இருக்க முடியுமா? இவங்க ஓட்டு வாங்க வந்த போது சாராயம் விற்பது எங்கள் லட்சியம் அப்படின்னு கேட்டா வந்தாங்க? மக்களாகிய நாங்கள் சொல்றோம்…. எனக்கு சாராயம் வேணாம்.. கடைய மூடு. நீ மூடாட்டி நாங்க மூடுவோம். அவ்வளவு தான்”

”சரிங்க.. உங்க கோரிக்கை நியாயமா இருக்கலாம். அதுக்காக முற்றுகை, உடைப்பு அப்படின்னு போகணுமா? அமைதியா ஒரு மனு எழுதிக் குடுக்கலாமே?”

“நீங்க இப்ப கேட்கறீங்க பார்த்தீங்களா? இதே கேள்விய அன்னிக்கு டி.எஸ்.பியும் கேட்டார். ஆனா… எத்தினி மனு எழுதறது, எத்தினி வருசமா குடுக்கறது? இத்தினி வருசம் நாங்க குடுத்த மனுவுக்கெல்லாம் என்னவாச்சி?…. எல்லா வகையிலும் கெஞ்சிப் பார்த்தும் வேலையாகலைன்னு தான் கடைசியா வேற வழியே இல்லாம நாங்களே இறங்கியிருக்கோம்”

”அதுக்காக அதிகாரத்தை நீங்களே கையில் எடுக்கலாமா?”

“ஏன் எடுக்கக் கூடாது? அவங்க கையில இருக்கிற அதிகாரத்த பயன்படுத்தி எடுத்து டாஸ்மாக்கை மூடியிருந்தா நாங்க ஏன் எடுக்கப் போறோம்?”

சிறுதொண்ட நாயனாரின் குரலில் தொனித்த ஆத்திரத்திற்கும் கோபத்திற்கும் பின்னே ஒரு நீண்ட கதை உள்ளது. அதைப் புரிந்து கொள்ள நாம் டாஸ்மாக்கின் விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் – அந்த விளைவுகளுக்கு ஒரு எடுப்பான வகைமாதிரியாக உள்ள மேலப்பாளையூரைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலப்பாளையூர்….

மேலப்பாளையூர் சாலை
மணல் கொள்ளையர்களின் டிப்பர் லாரிகளால் வல்லுறவுக்காளாக்கப்பட்டு சீரழிக்கப்பட்ட சாலை.

விருத்தாச்சலத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் உள்ள கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து இடது புறமாக ஒடிந்து செல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் கரடு முரடான பாதையில் பயணித்தால் வரும் சிறு கிராமம் தான் மேலப்பாளையூர். மணல் கொள்ளையர்களின் டிப்பர் லாரிகளால் வல்லுறவுக்காளாக்கப்பட்டு சீரழிக்கப்பட்ட சாலையில் இதய நோயாளிகள் எவரும் பயணித்தால் உடனடி மரணம் நிச்சயம்.

மொத்தம் சுமார் 500 குடும்பங்கள் மட்டுமே வாழும் மேலப்பாளையூர் டாஸ்மாக்கின் தினசரி வசூல் ஒரு லட்சம். மேலப்பாளையூர் கிராமத்தினுள் நுழைந்ததும் நம்மை வரவேற்பது உடைந்த பாட்டில்களும், கிழிந்த லேபிள்களும், நசுங்கிய பிளாஸ்டிக் தம்ளர்களுமாக டாஸ்மாக்கின் கழிவுகள் தான். பேருந்து நிறுத்தத்திலேயே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடையின் பக்கவாட்டில் சுமார் அரை ஏக்கர் அளவுக்கு புளிய மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. புளிய மர நிழலின் வெறுமையில் வேறு தாவரங்கள் வளராத அந்த இருண்ட அமைப்பு அதைக் குடிகாரர்கள் கூடிக் கூத்தடிக்க ஏற்றதொரு இடமாக்கியுள்ளது. அந்த மைதானத்தை ஒட்டி, டாஸ்மாக்கின் பின்புறம் சுமார் ஒரு ஏக்கர் தோட்டம் கொளஞ்சிக்கு சொந்தமாக உள்ளது.

உடைந்த டாஸ்மாக் பாட்டில்கள்
கண்ணு திரும்பின இடமெல்லாம் ஒரே உடைஞ்ச பாட்டிலுங்க

கொளஞ்சி ஒரு எளிய விவசாயி. கத்தரியும் வெள்ளரியும் வெள்ளாமை வைத்துள்ளார். நான்கைந்து கொய்யா மரங்கள் உள்ளன. சொந்த விவசாயத்தின் வருவாய் கைக்கும் வாய்க்குமே பற்றாத நிலையில் கிடைக்கும் கூலி வேலைகளுக்கெல்லாம் சென்று வருகிறார். இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கொளஞ்சியின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் குடும்பம் அவருடையது. டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று பொய் வழக்கில் சிறை சென்றவர்களில் கொளஞ்சியும் ஒருவர். மேலப்பாளையூரில் நம்மை வரவேற்ற போது அவருக்கு முகம் கொள்ளாத மகிழ்ச்சி.

”இந்த ஒரு மாசமா எங்க ஊருக்கே ஒரு விடுதலை கிடைச்சிருக்கு சார். தோ பார்த்தீங்களா… கண்ணு திரும்பின இடமெல்லாம் ஒரே உடைஞ்ச பாட்டிலுங்க. இப்ப எல்லாம் கொஞ்ச கொஞ்சமா மண்ணுக்குள்ளே போய்கிட்டு இருக்கு. கடைசியா ஒரு தரம் ஊரை சுத்தம் செய்ய வேண்டிய வேலை இருக்கு”

”நீங்க இதுக்கு முன்னே ஜெயிலுக்கு போயிருக்கீங்களா?”

“இல்லைங்க சார். இதான் மொதோ தரம்”

“போலீசு ஜெயிலுன்னா பயம் இல்லையா?”

கொளஞ்சி தனது வயலுக்கு அருகில்
கொளஞ்சி தனது வயலுக்கு அருகில்

“மொதல்ல பயமா தான் இருந்திச்சி.. என்னோட மகன் ஒரு பை நிறைய கொய்யா பழத்தோட ஜெயிலுக்கு வந்து என்னிய பார்த்து அழுதப்ப மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருந்திச்சி… ஏண்டா வந்தோம்னு கூட நினைச்சேன்.. ஆனா, திரும்ப வெளிய வந்து ஊருக்குள்ளே வந்து பார்த்தா எல்லாரும் என்ன ஏதோ கடவுள் மாதிரி பார்க்கறாங்க. நாங்க பத்து பேரு ஒரு மாசம் உள்ள இருந்து கஸ்டப்பட்டதுக்கு இந்த ஊரே இன்னிக்கு நல்லா இருக்குதுன்னா… இனிமே எத்தினி தடவ வேணாலும் ஜெயிலுக்கு போகத் தயார் சார். ஜெயிலுக்கு போனப்ப உள்ளே குடுத்த அடையாள அட்டைய பத்திரமா கொண்டாந்து உண்டியல்ல போட்டு வச்சிருக்கேன்.. நாளைக்கு நம்ப பேரப் பிள்ளைங்களுக்கு காட்டணுமில்லே?”

”உங்களோட வருமானத்த நம்பி தானே உங்க குடும்பமே இருக்குது?”

“ஆமா சார். தோ என்னோட கத்தரிச் செடிங்களோட பிஞ்சுங்க எல்லாம் கருகிப் போனிச்சி. சரியா உரம் வைக்க வேண்டிய நேரமா பார்த்து ஜெயிலுக்கு போயிட்டேன். என்னோட வெள்ளாமை எல்லாம் போச்சி. ஆனா என்ன சார்.. இன்னிக்கு ஜனங்க சந்தோசமா இருக்காங்க இல்லெ? அது போதும் சார்”

”டாஸ்மாக் உங்களை அந்தளவுக்குமா பாதிச்சிருக்கு?”

தண்ணீரை அடைக்கும் பாட்டில்கள்
பாலத்தோட வாயை ஒடைஞ்ச பாட்டிலும் பிளாஸ்டிக் தம்ளருமா அடைச்சி கிடக்கு. இதனால தண்ணி பாயாம விவசாயமே பாதிக்குது சார்

”என்ன சார் அப்படிக் கேட்டுட்டீங்க? இந்த ஊரே அழிஞ்சி போக இருந்திச்சி சார். தோ இந்த டாஸ்மாக் கடைக்குப் பின்னே இருக்கிற இந்த காவா இருக்கே… இதான் அந்தாண்ட இருக்கற பத்தாயிரம் ஏக்கர் நிலத்துக்கு தண்ணி எடுத்துப் போகிற ஒரே பாசன ஆதாரம். டாஸ்மாக்ல குடிக்கிற பயலெல்லாம் குடிச்சிட்டு பாட்டிலை ஒடைச்சி நேரே இந்தப் பாலத்துக்கு கீழ தான் போடறான். நீங்களே பாருங்க, ”

“இருக்கட்டுமே, அதுக்காக டாஸ்மாக்கை உடைக்க போறதெல்லாம் சரியா? நீங்க ஏன் அரசாங்கத்துக்கு மனு எழுதிக் கொடுத்திருக்க கூடாது?”

”என்னோட சித்தப்பா குடும்பமே இந்த கடை வந்த பின்னால குடிச்சு அழிஞ்சு போச்சு சார். ஊருக்குள்ளே போயி கேட்டுப் பாருங்க, ஒரோரு குடும்பத்திலயும் ஒரு சாவு…. அத்தினி எழவுக்கும் இந்த சாராயக் கடை தான் சார் காரணம். நாங்களும் மனு குடுத்துப் பார்த்தோம்… எவனும் கேட்கிற மாதிரி தெரியலை. அதான் ஒரு வெறில நாங்களே எறங்கிட்டோம். அப்படியும், நாங்க கடைய உடைக்கல சார். நாங்க கும்பலா போனப்ப இழுத்து பூட்டினு ஓடிட்டானுங்க. முன்னாடி போட்டிருந்த பந்தல் கூரை மட்டும் தான் ஒடைஞ்சது. இதுக்கே பொய் கேசு போட்டுட்டானுங்க”

”முதல் முறையா ஜெயிலுக்கு போயிருக்கீங்க. உள்ளே எப்படி இருந்திச்சி?”

“உள்ளயும் போராட்டம் தான். தினமும் முழக்கம் போடுவோம். அரசியல் வகுப்பு நடக்கும். சாயந்திரம் கூட்டம் நடக்கும்… யாரையாவது பேசச் சொல்லுவாங்க. நான்லாம் கூட்டமா இருந்தாலே பயப்படுவேன் – ஆனா நானே பேசினேன்… போன பின்னாடி தான் தெரிஞ்சது அங்க சாப்பாடு சரியில்லேன்னு. அதுக்கு போராடி நல்ல சாப்பாடு போட வச்சோம் – எங்களுக்கு மட்டுமில்லே எல்லாருக்கும் சேர்த்து. அங்கயே வேற வேற கேசுல வந்த கைதிங்களுக்கு எல்லாம் ஒரே சந்தோசம். எங்களைக் கையெடுத்துக் கும்பிட்டாங்க… எல்லாரும் நல்லா சாப்பிடணும் சார். நான் ஒரு சாதாரண விவசாயி.. எனக்கு வேற என்னா வேணும் சொல்லுங்க?”

”ஒரு வேளை திரும்ப டாஸ்மாக்கை திறக்க அரசாங்கம் முடிவு செய்துட்டா என்ன செய்வீங்க?”

“விட மாட்டோம் சார்.. திரும்ப ஜெயிலுக்கு போறதா இருந்தா கூட கவலை இல்ல சார்”

இந்திராணி அம்மாள்
புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியில் போலீசு பாதுகாப்போடு பாயும் சாராயம் ஆண்களுக்கு போதையையும் பெண்களுக்கு அழுகையையும் பரிசளித்துள்ளது. (இந்திராணி அம்மாள்)

கொளஞ்சியின் ஆத்திரத்தில் அநேக உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. டாஸ்மாக் சரக்கை அந்த ஊர் மக்கள் குடித்தது போய், டாஸ்மாக்கே அந்த கிராமத்தைக் குடித்துத் தீர்க்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு அம்மக்களுக்கு டாஸ்மாக் மறக்க நினைக்கும் ஒரு கொடுங் கனவு. பழைய நாட்களைப் பற்றிக் கேட்டால் கண்ணீரின்றி எவராலும் பேசவே முடியவில்லை.

டாஸ்மாக்கின் பாதிப்பை இந்திராணி அம்மாளை விட வேறு எவராலும் மிகச் சரியாக விளக்க முடியாது. இந்திராணி அம்மாளின் கணவர் ஒரு குடி அடிமை – உபயம் டாஸ்மாக். வேறு வேலை எதற்கும் செல்லாமல் இருபத்தி நான்கு மணி நேரமும் போதையில் திளைப்பது ஒன்றையே வேலையாகக் கொண்டிருப்பவர். இந்திராணி அம்மாள் கிடைக்கும் கூலி வேலைகளுக்குச் சென்று நாளொன்றுக்கு 150 ரூபாய் சம்பாதிக்கிறார். இந்த சொற்ப வருமானத்தில் வீட்டாரின் வயிற்றைக் கழுவ வேண்டும் – அதோடு மகனையும் படிக்க வைக்க வேண்டும்.

இந்திராணி அம்மாளின் ஒரே நம்பிக்கை அவரது மகன். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி தனது மகனை படிக்க வைத்துள்ளார். இதற்கிடையே கணவனின் குடி அவனது குடலைப் புண்ணாக்கி விட உயிரைக் காப்பாற்ற ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு வாங்கியுள்ளார். இப்போது கிடைக்கும் கூலியில் வட்டியையும் சேர்த்துக் கட்ட வேண்டும். இந்தக் கஷ்ட ஜீவனத்திற்கு இடையே மகனை சென்னைக்கு அனுப்பி எம்.பி.ஏ படிக்க வைத்துள்ளார். எப்படியாவது மகன் தலையெடுத்து குடும்பத்தை நிமிர்த்துவான் என்ற அவரது கனவில் டாஸ்மாக் பேரிடியை இறக்கியது.

பத்து நாள் விடுமுறைக்காக ஊருக்கு வந்த இந்திராணி அம்மாளின் மகன் பழைய நண்பர்களோடு சேர்ந்து உள்ளூர் டாஸ்மாக்கில் குடிக்கப் போக, அதுவே பழக்கமாக மெல்ல மெல்ல குடிக்கு அடிமையாகியுள்ளான். தாமதமாக கண்டு பிடித்த இந்திராணி அம்மாள் இடிந்து போயுள்ளார். கதறி அழுதவாறே மகனைத் தட்டிக் கேட்க மனமுடைந்த அவன் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். மீண்டும் கடனை உடனை வாங்கி மகனின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் இந்திராணி.

“எதுக்கு சார் டாஸ்மாக்கு? யாரு சார் எங்களுக்கு சாராயம் இல்லைன்னு இந்த கெவருமெண்டு கிட்டே அழுதா? நெஞ்சு வெடிக்க சொல்றேன் சார்… சாராயத்தை குடிக்க வச்சி எங்க தாலிய அறுத்தவங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது சார்… இந்தக் கடைய சும்மாவெல்லாம் மூடக் கூடாது சார்… அடிச்சி ஒடைக்கணும் சார்… தமிழ் நாட்டுல எங்கயுமே சாராயக் கடை இருக்க கூடாது சார்.. ” தனது கதையை அழுகையினூடே விவரித்த இந்திராணி அம்மாளுடைய ஆங்காரத்தின் முழுப் பொருளை உடைந்து கிடக்கும் மேலப்பாளையூர் டாஸ்மாக் கடையின் ஆஸ்பெஸ்டாஸ் பந்தலின் சிதறிய துணுக்குகளைக் கேட்டால் சொல்லும்.

புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியில் போலீசு பாதுகாப்போடு பாயும் சாராயம் ஆண்களுக்கு போதையையும் பெண்களுக்கு அழுகையையும் பரிசளித்துள்ளது.

“எங்க குடும்பத்தை பால்காரர் குடும்பம்னு சொல்வாங்க சார்… அந்தக் காலத்துல எங்களுக்கு 15 ஏக்கர் நிலம் இருந்திச்சி… எங்கப்பாவும் அண்ணனும் எல்லாத்தையும் குடிச்சே அழிச்சிட்டாங்க… இப்ப கால் காணி நிலம் கூட இல்ல. ஒரு காலத்துல நூறு பேரு எங்க வயல்ல வேலை செய்ய எங்கம்மா வரப்புல குடை பிடிச்சிட்டு ஒக்காந்திருக்கும்… இன்னிக்கு எங்கம்மா வயித்தைக் கழுவ ஆடு மேய்க்க போவுது சார்…. பார்க்க பார்க்க நெஞ்சே வலிக்குது சார்” என்கிறார் கலையரசி…

மேலப்பாளையூரில் பல குடும்பங்கள் டாஸ்மாக்கிற்கு இரத்த உறவுகளை பலி கொடுத்து விட்டு எதிர்காலத்தை இழந்து தவிக்கின்றன. சாராயத்தில் மூழ்கி மடிந்த குடும்பங்களில் மிஞ்சியவர்களிடம் எஞ்சியிருப்பது அரசாங்கத்தின் மீதான ஆழமான அவநம்பிக்கை ஒன்று மட்டும் தான். மேலப்பாளையூர் எரியக் காத்திருந்த வெயில் கால மூங்கில் காடு. ஒருவேளை மக்கள் அதிகாரம் தலையிட்டிருக்கவில்லை என்றாலும் இதே முடிவை அந்த மக்களே எடுத்திருப்பர்.

செல்லம்மாள்
“குடிச்சிட்டு எவனுக்கும் நெதானமே தெரியலை சார்…” – செல்லம்மாள்

“குடிச்சிட்டு எவனுக்கும் நெதானமே தெரியலை சார்… போதைல அர்த்த ராத்திரில வந்து கதவைத் தட்றானுவோ… வீட்டு ஆம்பளைக்கு சந்தேகம் வருமா வராதா சார்? நீ சொல்லி வந்தானா அவனா வந்தானான்னு விடிய விடிய ஒரே சண்டை தான் சார்” என்கிறார் செல்லம்மாள்.

”அம்மா, நீங்க சொல்றாப்ல.. அரசாங்கம் சாராயம் விற்குது என்னவோ சரி தான்… ஆனா, குடிக்கிறவனுக்கு எங்க போச்சி புத்தி? குடிக்கிறவன் இருக்கிற வரைக்கும் குடியை தடுக்க முடியாதுன்னு சொல்றாங்களே?” என்று அறிவு ஜீவிகளின் தரப்பை கேள்வியாக முன்வைத்தோம்.

”எவன் சொல்றது? சொல்றவன் வீட்டுல எத்தினி பொம்பளைங்க டாஸ்மாக்கால தாலி அறுத்தாங்கன்ற கணக்கை சொல்லிட்டு அப்பால பேசட்டும் சார். தோ… இந்த டாஸ்மாக் சரியா பஸ் ஸ்டேண்டு கிட்ட இருக்கு.. சாயந்திரமானா ஒரு பள்ளிக்கூடம் விட்டு பொம்பளப் புள்ளைங்க வீட்டுக்கு நடந்து போவ முடியல சார். அசிங்க அசிங்கமா பேசறானுங்க.. இடிக்கிறானுங்க. நீ சொல்றா மாதிரி பேசறவன் வீட்டு பொம்பளங்கள இந்த தெரு வழியே பொழுது சாய நடந்து போக நாலஞ்சி நாளைக்கு அனுப்பிட்டு பொறவு அதே மாதிரி சொல்றானா பாக்கலாம்… குடியானவனெல்லாம் பூமிய வித்துக் குடிச்சே அழிஞ்சி போனான் சார்.. காலனிக் காரங்க துணி மணியக் கூட வித்துக் குடிக்கிறாங்க சார்… நீயே வேணா போய்க் கேட்டுப் பாரு சார்”

மேலப்பாளையூர் வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதி. காலனி ஊருக்கு வெளியே உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியோ வன்னியர் சங்கமோ பெரியளவில் அரசியல் ரீதியில் வளராத காரணத்தால் சொல்லிக் கொள்ளும் படியான சாதி மோதல்கள் ஏதும் இல்லை. இரண்டு சாதி மக்களின் பொருளாதய வாழ்வில் சொல்லிக் கொள்ளும் படியான ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லை. மோதல்களோ முரண்பாடுகளோ இல்லையென்றாலும் விலகியே இருந்த ஊரையும் சேரியையும் ஒன்றாக இணைத்துள்ளது டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்.

சிறை சென்றவர்களில் வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர். எமது செய்தியாளர்கள் சிறை சென்றவர்கள் மற்றும் அவர்களோடு போராட்டக் குழுவினர் என்று சுமார் 25 பேரை கருவேப்பிலங்குறிச்சியில் வைத்து ஐந்துக்கு பத்து அளவுள்ள ஒரு சிறிய அறையில் சந்தித்தது. ஒருவரை ஒருவர் நெருக்கி அமர்ந்திருந்த அந்தச் சிறிய அறையில் எல்லோராலும் முக மலர்ச்சியோடு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் வேல் முருகன். அவர் தனது அனுபவங்களைச் சொல்லச் சொல்ல அந்தச் சிறிய அறையினுள் கைதட்டல்கள் எழுந்தவாறே இருந்தன.

வேல் முருகனுக்கு எந்த அரசியல் முன் அனுபவமும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பை இந்தப் போராட்டத்திற்கு முன் அவர் கேள்விப்பட்டது கூட கிடையாது. அவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். மூத்த மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். அடுத்த பெண்ணுக்கு 17 வயது, கூலி வேலைக்குச் செல்கிறார் –நாள் கூலி 150 ரூபாய். மூன்றாவதும், நான்காவதும் பெண்கள்; படிக்கிறார்கள். ஐந்தாவதாக ஒரு பையன், அவனும் படிக்கிறான். வேல்முருகன் கூலி வேலைக்குச் சென்று 300 ரூபாய் சம்பாதிக்கிறார் – அவரது மனைவியும் கூலி வேலைக்குச் சென்று 150 ரூபாய் சம்பாதிக்கிறார்.

வேல்முருகன் சம்பாதித்த காசு அனைத்தையும் புரட்சித் தலைவி அம்மாவின் அரசாங்கத்துக்கு மொய்யாக வைத்து விடுவதை பல வருட வாடிக்கையாக வைத்திருப்பவர். மனைவி மற்றும் மகளின் சம்பாத்தியத்தில் தான் குடும்பமே நடக்கிறது. வீட்டுக்கு சல்லிக் காசு கூட தராமல் போதையிலேயே சதா காலமும் மிதப்பவர் என்பதால் அவருக்கு ஊரிலும் குடும்பத்திலும் எந்த மரியாதையும் இல்லை. டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் நடந்த அன்றும் அவர் போதையில் தான் இருந்துள்ளார்.

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தின் அன்று (கோப்புப் படம்)
டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தின் அன்று (கோப்புப் படம்)

டாஸ்மாக்கில் குடித்து விட்டு போதையில் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தனது ஒரே ஊர்க்காரர்களை போலீசு அரட்டி மிரட்டுவதைக் கண்டதும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

”அந்த போதையோடயே யோசிச்சி பார்த்தேன் சார்.. இந்த கருமம் பிடிச்ச குடியால வீட்லயும் மரியாதை இல்ல… ஊர்லயும் மரியாதை இல்ல.. அட, இந்தக் கடை இருக்கிறதால தானே குடிச்சி நாசமா போனோம்னு தோணிச்சி.. நேரா போயி போலீசுகாரன் கிட்ட ஒழுங்க கடைய எடுங்கன்னு கத்துனேன். நம்பளையும் தூக்கி வேனுக்குள்ள ஒக்கார வச்சிட்டாங்க. சரி உள்ற போயிட்டு வருவோமேன்னு நானும் ஒக்காந்துட்டேன்”

”சரி உள்ளே போயி போதை தெளிஞ்ச பின்னாடி எப்படி இருந்திச்சி?”

”கையெல்லாம் ஒரே நடுக்கம்… நமக்கு போதை போடலைன்னா ஸ்டெடியாவே இருக்க முடியாதே… தம்ளர்ல தண்ணி ஊத்தி குடிக்க கூட முடியலை… ரொம்ப நாளுக்கப்புறம் குடிக்காம இருந்ததாலே வயித்து வலி வந்திடுச்சி…”

“எப்படி சமாளிச்சீங்க?”

“நான் எங்க சமாளிச்சேன்… கூட இருந்தவங்க தான் வேற வழி இல்ல முருகா…. எப்படியாவது சமாளிச்சிக்கோ அப்படின்னு சொன்னாங்க… முதல்ல சாப்பாடே எறங்கல… அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஆரம்பிச்சேன்.. இவங்க டாஸ்மாக் போராட்டம் பத்தி தினமும் பேசுவாங்க.. அதையெல்லாம் இனிமே குடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணேன்… தோ, உள்ள போயி இன்னி வரைக்கும் குடிக்கவே இல்ல சார். இப்பத்தான் பொண்டாட்டி மதிக்கிறா… குடிகார நாயின்னு கேவலமா பாத்த ஊர்க்காரனெல்லாம் இப்பத் தான் சார் மதிச்சி பேசறான்”

”ஜெயில், போலீசெல்லாம் பயமா இல்லையா?”

டாஸ்மாக் போராளிகள்
விருத்தாச்சலம் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படும் டாஸ்மாக் போராளிகள் (கோப்புப் படம்)

“இன்னாத்துக்கு பயம் சார்? எனக்கு இப்ப வெளிய தான் பயமா இருக்கு. பழைய கூட்டாளிங்க திரும்ப குடிக்க வச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு… ஆனா இனிமே நான் சத்தியமா குடிக்க மாட்டேன் சார்.. இப்ப நான் மத்தவங்க கிட்டயும் குடிக்காதீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்…”

“சரி… திரும்ப டாஸ்மாக் திறந்தா குடிப்பீங்களா?”

“சார்.. பக்கத்துல சோத்தை போட்டு குழம்பை ஊத்தி வச்சிட்டு சாப்பிடுவியான்னு கேட்டா எப்டி சார்? ஆனா நான் திரும்ப டாஸ்மாக் திறக்க விட மாட்டேன் சார்.”

”அது சரி… ஆனா அரசாங்கம் போலீசை அனுப்பி டாஸ்மாக்கை திறக்க வச்சா என்னா செய்வீங்க?”

“உயிரே போனாலும் விட மாட்டேன் சார்… போய் குறுக்கால படுத்துக்குவேன்.. போலீசு என் கழுத்தை மெறிச்சி சாவடிச்சிட்டு போயி திறக்கட்டும்.”

வேல்முருகன் பேசப் பேச அந்த அறையினுள் கைதட்டல் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது… சாதி வேற்றுமைகளை வர்க்கப் போராட்டத் தீயில் வெந்து கருகும் ஆச்சர்யம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. மதமாய்ச் சேர்வோம், மொழியாய்ச் சேர்வோம், இனமாய்ச் சேர்வோம் என்ற முயற்சிகள் தோற்றுப் போன காலத்தில் வர்க்க அணி சேர்க்கையின் வெற்றியை சத்தமின்றிச் சாதித்துள்ளது மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்.

மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் என்பது மக்கள் அதிகாரம் அமைப்பு கீழிருந்து புத்தம் புதிதாக உருவாக்கிய போராட்டமன்று. மக்கள் அதிகாரம் அங்கே செல்லும் போதே அந்தக் கிராமம் காய்ந்த சருகுகளோடு எரியக் காத்திருந்த மழை காணாத வனமாயிருந்தது. சொல்லப் போனால், அந்தப் பகுதிக்கே போராட்டங்களோடு மிக நெருங்கிய தொடர்புகளுண்டு. போராட்ட வெற்றிகளை ருசித்துப் பழகியவர்கள் அம்மக்கள்..

அரசாங்கத்தை நம்பாதே – அதிகாரத்தைக் கையிலெடு

கார்மாங்குடி ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு
ம.உ.பா மைய வழக்கறிஞர்களின் தலைமையில் வெகுண்டெழுந்த மக்களின் போராட்டம் மணல் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டியது (கோப்புப் படம்)

மேலப்பாளையூரின் பக்கத்து கிராமம் தான் கார்மாங்குடி. பக்கத்தில் ஓடும் வெள்ளாற்றின் மணலை பல ஆண்டுகளாகத் அரசின் உதவியோடு திருடி விற்ற ஆற்று மணல் கொள்ளைக் கும்பலின் கொட்டத்திற்கு முடிவு கட்டிய வீரம் செறிந்த போராட்டத்தின் குவிமையமாக இருந்தது கார்மாங்குடியும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும். பல ஆண்டுகளாக அரசுக்கு மனுப் போட்டும் மணல் கொள்ளையர்களின் கொட்டம் முடிவுக்கு வராத நிலையில், வேறு சில ஓட்டுக் கட்சிகளும் போராட்டம் என்கிற பெயரில் ஏமாற்றி வந்த நிலையில் அந்தப் பகுதி மக்களுக்கு உண்மையான போராட்டம் என்றால் என்னவென்பதை அறிமுகம் செய்தனர் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள்.

ம.உ.பா மைய வழக்கறிஞர்களின் தலைமையில் வெகுண்டெழுந்த மக்களின் போராட்டம் மணல் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டியது. அரசாங்கத்தை நம்பாமல் அதிகாரத்தைக் கையிலெடுப்பது ஒன்றே கனிம வளத் திருட்டைத் தடுக்கும் ஒரே வழியென்பதை தமிழ்நாட்டுக்கு உணர்த்தினர் கார்மாங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள்.

மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெற்ற நிலையில், தமது பிற பகுதிக் கோரிக்கைகளுக்காக அம்மக்கள் தன்னிச்சையாக போராடத் துவங்கினர். கார்மாங்குடி கற்றுக் கொடுத்த பாடத்தை நன்கு உணர்ந்திருந்த சுற்று வட்டாரப் பகுதி மக்கள் தமது பிற பிரச்சினைகளிலும் அதைப் பிரயோகித்தனர். அந்த வகையில் மேலப்பாளையூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்த போராட்டம் சூடு பிடித்தது. இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினரின் ”மூடு டாஸ்மாக்கை” இயக்கமும் துவங்க இரண்டும் கைகோர்த்துக் கொண்டன.

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்
மேலப்பாளையூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்த போராட்டம் சூடு பிடித்தது. (கோப்புப் படம்)

“மூடு டாஸ்மாக்கை” இயக்கத்தின் பிரச்சாரம் சூடு பிடித்து வந்த நிலையில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் டாஸ்மாக் உடைப்புப் போராட்டத்தின் காட்சிகள் செய்தித் தொலைக்காட்சிகளின் மூலம் மேலப்பாளையூர் மக்களை அடைகிறது. சாராயக் கடை எதிர்ப்பு போராட்ட களத்தில் தாம் மட்டும் தனித்திருக்கவில்லை என்பதை உணர்ந்த மக்கள் அம்மாணவர்களைத் தனித்து விடவும் தயாராக இல்லை – முற்றுகைப் போராட்டத்திற்கான நாளாக ஆகஸ்டு 4-ம் தேதியைக் குறித்தனர்.

தேதி குறித்த நாளில் அலையெனத் திரண்ட மக்கள் வெள்ளத்தைக் கண்டு சாராயக் கடையை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர் டாஸ்மாக் அதிகாரிகள் – அன்று மக்களின் ஆவேசத்திற்கு ஆஸ்பெஸ்டாஸ் பந்தல் மட்டுமே அகப்பட்டது. பந்தல் உடையும் வரை காத்திருந்த போலீசு போராட்டத்தின் முன்னணியாக இருந்தவர்களையு, வழக்கறிஞர் ராஜு உள்ளிட்டு 14 பேரை கடையையே உடைத்ததாகச் சொல்லி பொய் வழக்கில் கைது செய்தது. ஆண்கள் கைதாவதைக் கண்ட ஊர்ப் பெண்கள் ஒன்பது பேர் தாமும் கைதாக முன்வந்தனர்.

மேலப்பாளையூர் டாஸ்மாக் மூடப்பட்டது
அதிகார வர்க்கம் இன்று வரை மேலப்பாளையூர் டாஸ்மாக் கடையைத் திறக்க முடியாமல் கை பிசைந்து நிற்கிறது.

போராட்டத்தின் முன்னணியினரைக் கைது செய்தாலும், ஊர் மக்களின் ஆத்திரத்தின் மேல் தண்ணீர் தெளித்து அடக்க முடியாத . கடைசியாக கிடைத்த தகவலின் படி மேலப்பாளையூரில் கடையே திறக்க முடியாது என்று முடிவு செய்து பக்கத்தில் உள்ள வள்ளியத்திற்கு கடையைக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர். இப்போது வள்ளியத்தில் வெப்பம் பரவி வருகிறது – அந்த ஊர் மக்களும் உள்ளே நுழைய முயற்சிக்கும் சாராய அரக்கனை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார்கள்.

சாராயம் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நாசகார விளைவுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை… “அரசாங்கமே ஸ்கெட்ச்சு போட்டு மக்களுக்கு சுலோ பாய்சன் மாதிரி சாராயத்தை ஊத்தி சாவடிக்குது சார். சாராயம் குடிச்சி செத்தவன் சாவுக்கெல்லாம் யாரு காரணம்? அந்த சாவுக்கெல்லாம் கலெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி மேல எப்.ஐ.ஆர் போடனும்” என்கிறார் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவரும், தமிழ்க விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவருமான நந்தகுமார். மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் நந்தகுமாரும் ஒருவர்.

“டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசின் நலத் திட்ட உதவிகள் எல்லாம் செய்யப்படுகின்றன என்றும், இதை மூடி விட்டால் ஏழை மக்கள் பயன்பெறும் நலத் திட்ட உதவிகளுக்கு நிதி இல்லாமல் போய் விடும் என்றும் சொல்றாங்களே?”

“என்ன சார் நலத் திட்டம்? இலவசம் குடுக்கிறதைத் தானே சொல்றீங்க? ஒரு குடும்பத்துக்கு தர்ற மிக்ஸி, கிரைண்டர், இலவச சைக்கிள் எல்லாம் கூட்டிப் பார்த்தா ஐயாயிரம் வருமா? இந்த ஐயாயிரமும் அஞ்சு வருசத்துக்கான கணக்கு. இங்க ஒவ்வொருத்தனும் கூலிய வாங்கின கையோட அப்படியே தினமும் முன்னூறு ரூபாய்க்கு டாஸ்மாக்குக்கு மொய் வைக்கிறான். ஒரு மாசத்துக்கு ஒன்பதாயிரம் கணக்கு வருது… அப்ப வருசத்துக்கு எவ்வளவு, அஞ்சி வருசத்துக்கு எவ்வளவுன்னு நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கங்க… அதெல்லாம் சும்மா சார்.. எங்க தாலியறுத்துட்டு இலவசம் தாங்கன்னு யாரு அழுதா?”

”அப்ப அரசாங்கம் இலவசங்கள் ஏதும் தரக் கூடாதுன்னு சொல்றீங்களா?”

“முதல்ல இலவசம்னு சொல்லாதீங்க சார்.. இதெல்லாம் அவன் அப்பன் வீட்டு காசிலேர்ந்தா தர்றான்? எல்லாம் மக்கள் காசு தானே? என் பிள்ளைக்கு நான் உழைச்சி சோறு போடறேன்… நீ எனக்கு பிச்சையும் போட வேண்டாம் – சாராயத்த ஊத்தி தாலி அறுக்கவும் வேணாம்… நாங்களே விளைய வச்ச நெல்ல குடோன்ல போட்டு புளுக்க வச்சிட்டு எங்களுக்கே இலவசம்னு தர்றான்… நாங்க என்ன பிச்சைக்காரங்களா?”

”சரி உங்க போராட்டத்தை அரசாங்கம் எப்படி எதிர் கொள்கிறது?”

“எங்களை பிரிச்சி விட்டு மோத வைக்கலாம்னு பார்க்கறான் போலீசு.. .நாங்க ஜெயில்லேர்ந்து ஜாமீன்ல வெளிய வந்த உடனே அம்பேத்கர் சிலைக்கு மாலை போடப் போனோம். சாதிப் பிரச்சினை வரும்னு சொல்லி தடுக்கறான் போலீசு… அவர் எந்த சாதியா வேணும்னாலும் இருக்கட்டுமே… அவர் ஒரு பெரிய தலைவர்… இந்த நாட்டுக்கே தலைவர்… அப்படின்னா எங்களுக்கும் தானே அவர் தலைவர்? போலீசுகாரன் வேணும்னு மக்கள் மோதிக்கணும்னு இப்படிச் செய்யறான்”

”அடுத்த கட்டமா என்ன செய்யப் போறீங்க?”

”மேலப்பாளையூர்ல டாஸ்மாக் இல்ல. இனிமே திறக்க விடவும் மாட்டோம். சுத்து வட்டாரத்திலயும் திறக்க விடமாட்டோம்… அடுத்து எங்களோட அடிப்படை பிரச்சினைகள் நிறைய தீராம இருக்கு.. அதுக்கெல்லாம் போராடனும். நீங்களே பார்த்திருப்பீங்க.. இங்க சாலை வசதி சரியில்லை.. அப்புறம் பக்கத்துல அம்பிகா சுகர் மில் காரன் விவசாயிகளோட 40 கோடி ரூபாய பாக்கி வைச்சிருக்கான்.. அதை போராடி வாங்கனும்… ஏரிகளை எல்லாம் ஆக்கிரமிச்சு வச்சிருக்கான் ரியல் எஸ்டேட்காரன், அதை மீட்கனும்… நிறைய செய்ய வேண்டி இருக்குங்க”

மேலப்பாளையூரில் பற்றிய நெருப்பு அத்தனை சீக்கிரத்தில் அணையப் போவதில்லை… மக்களே அதிகாரத்தை ஏந்துவதன் வெற்றிக் கதையை கம்பீரமாய் உலகுக்கு அறிவித்து நிற்கிறது மேலப்பாளையூர்… தமிழகத்தின் முன்னுதாரணமான இந்தப் பகுதியின் வெற்றிக் கதைகளை வாசகர்களுக்கு கண்டு கேட்டுச் சொல்ல வினவு எப்போதும் தயாராக இருக்கும்….

– வினவு செய்தியாளர்கள்