“இந்த அரசு டாஸ்மாக் கடைகளை மூடாது” என்று சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆவுடையார்கோவில் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பினர், தமிழக மக்களின் ஒருமித்த கருத்தாக இருக்ககூடிய மதுவிலக்கிற்கு ஆதரவாக “மூடு டாஸ்மாக்கை” என்ற தலைப்பில் 29-09-2015 அன்று பெருந்திரளான மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்ட பிரச்சாரங்களை பிரசுரங்களாக அச்சிட்டு மக்களிடம் கிராமம் கிராமமாக கொண்டு சென்றபோது, கிராமத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் தோழர்களை வரவேற்று, “எங்கள் ஊரில் டாஸ்மாக் கடையை அகற்ற நீங்கள் தலைமை தாங்குங்கள், நாங்கள் மூடுகிறோம்” என கோரிக்கை வைத்தனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பினரின் பிரச்சாரம் மக்களை ஈர்க்கும் என்பதை அறிந்த உளவுத்துறையினர் மக்கள் அதிகாரத்தில் திரண்ட புதியவர்களை அணுகி, “டாஸ்மாக்கை மூடுவதை நாங்களும் ஆதரிக்கிறோம், ஆனால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற மக்கள் அதிகாரம் அமைப்பில் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள். வேறு அமைப்பில் சேர்ந்து செய்யுங்கள். இந்த அமைப்பில் சேர்ந்தால் அரசு வேலை கிடைகக்காது” என்று நயமாகவும், மிரட்டியும் வந்தனர். அதனை புறம் தள்ளிய மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் மக்களை திரட்டுவதற்கு முழுவீச்சாக பிரச்சாரம் செய்து வந்தனர்.

29-09-2015-ம் தேதி ஆர்ப்பாட்ட நாளன்று உளவுத்துறையும், போலீசும் “ஏதோ 10, 20 பேர் வந்து கத்திவிட்டு போவர்கள்” என்று கடைக்காரர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆர்ப்பாட்ட நாளன்று மாலை 4.00 மணியிலிருந்து ஆவுடையார்கோவிலைச் சுற்றியிருக்கும் கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் டெம்போவிலும், வேனிலும் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த குவிய தொடங்கினார்கள். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உளவுத்துறையும், போலீசும் செய்வது அறியாது விழித்தனர்.
ஆர்ப்பாட்டம் சரியாக 29-09-2015 அன்று 5.30 மணிக்கு எழுச்சிகரமான முழக்கங்களுடன் தொடங்கியது. முழக்கம் முடிந்தவுடன் மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவினர் பாடல்பாட துவங்கியவுடன் ஆவுடையார்கோவில் கடைவீதியில் இருந்த மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்ட இடத்தில் குவிய தொடங்கினர். பெருந்திரளான மக்கள் திரண்டு இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகார அமைப்பின் உறுப்பினர் தோழர் MSK பழனி அவர்கள் தலைமை தாங்கி பேசினார்.
அவர் தனது தலைமை உரையில், பச்சையப்பா கல்லுரி மாணவர்கள் மீதான காவல்துறையின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கும் நீதிமன்றத்தின் நியாயமற்ற போக்கிற்கும் கண்டனம் தெரிவித்தும், ஆவுடையார்கோவில் பகுதியில் டாஸ்மாக்கால் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொது இடத்தில் ஏற்படும் சீரழிவு ஆகியவற்றை விளக்கி பேசியும், ஆவுடையார் கோவிலில் மக்கள் அதிகாரம் அமைப்பில் தாங்கள் இணைந்து டாஸ்மாக்கை மூட வேண்டி நடக்கின்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தவேண்டிய அவசியத்தை விளக்கியும் பேசினார்.

அடுத்ததாக கண்டன உரை ஆற்றிய வழக்கறிஞர் உலகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கண்ணன், தி.மு.கவைச் சேர்ந்த சதீஸ் ஆகியோர் “இந்த அரசு டாஸ்மாக்கை மூடமாட்டேன் என அடம் பிடிப்பது தவறு. மக்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக்கை மூடவேண்டும்” என்று வலியுறுத்தி பேசினார்கள்.
அடுத்ததாக சமூக ஆர்வலர்கள், அருள்மேகி உலகநாதன், சொனமுத்து ஆகியோர் தங்கள் ஊழல் டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைத்து மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியிருக்கிய இந்த அரசினை கண்டித்தும் உடனடியாக தமது குடியிருப்பு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனா.
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்களான பழனி, ரமேஷ் ஆகியோர் தமது உரையில் போலீசின் அடாவடித்தனத்தை கண்டித்தும் குடிகாரர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையில் காவல்துறை இருந்து வருவதை சுட்டிக்காட்டி, அப்பாவி மக்களிடம் காட்டப்படும் காவல்துறையின் வீரத்தை எள்ளி நகையாடியும், “மக்கள் ஆள தகுதி இழந்த இந்த அரசு கட்டமைப்பிடம் டாஸ்மாக்கை மூட மனு கொடுப்பதால் எந்த பயனும் இல்லை, மக்களே தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்து டாஸ்மாக்கை மூடவேண்டும்” என்று அறைகூவி, “மக்கள் குடியிருப்பு பகுதியில் எங்கள் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் கடைகள் திறந்து நடத்தப்படுகின்றன. ஏன் கோபாலபுரத்திலும் , போயஸ்தோட்டத்திலும் டாஸ்மாக் கடைகள் திறந்து நடத்த வேண்டியதுதானே?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

இறுதியில் நிறைவுரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் பேச ஆரம்பித்தபோது மழை குறுக்கிட்டது. இருந்தாலும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த மக்கள் கலையாமல் உறுதியாக ஆங்காங்கே கடைகளின் கூரைகளில் ஒண்டி நின்று கொண்டு தோழரின் சுமார் 40 நிமிட பேச்சை கேட்டனர்.
தோழர் காளியப்பன் தமது உரையில் ஜெயா அரசின் பாசிச தன்மையையும், இந்த அரசு ஆளத் தகுதி இழந்துவிட்டது என்பதையும் விளக்கிப் பேசி மாவட்ட ஆட்சித்தலைவரும், போலீசும் டாஸ்மாக்கிற்க்காக வேலை செய்வதையும் காவல் நிற்பதையும் அம்பலப்படுத்தியும் டாஸ்மாக்கால் மக்கள் படும் இன்னல்களை எடுத்துக் கூறினார். ஒட்டுமொத்த தமிழகமே மதுவிலக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்து மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கி போராடும் போது, போராட்டங்களை போலீசை கொண்டு ஒடுக்கிவரும் இந்த அரசின் போக்கை கண்டித்தார். ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளின் மதுவிலக்கு போராட்டங்களை அம்பலப்படுத்தி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்குக்த்தான்” என அரசியல் கட்சிகள் பேசுவதை எள்ளி நகையாடினார். “மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்து போராடினால்தான் டாஸ்மாக்கை மட்டும் அல்ல மக்களின் அத்தனை பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்” என்று கூறி நிறைவுசெய்தார்.
கண்டன உரைகளுக்கு இடை இடையே ம.க.இ.கவின் மைய கலைக்குழுவினர் நிகழ்த்திய புரட்சிகர பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. அதிலும் குறிப்பாக “மூடு டாஸ்மாக்கை”, “ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயசுல உல்லாசம்”, “சொத்துக்குவிப்பு வழக்கில் சொன்ன தீர்ப்பு தப்பா” போன்ற பாடல்கள் பாடிய போது மக்கள் சாலைகளின் இரு புறமும் கூடி பாடல்களின் புரட்சிகர தன்மையை கண்டு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து கொண்டு இருந்தனர். இதனை பார்த்த போலீசார் மக்களை வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏறி ஊருக்கு போக சொல்லி விரட்டிக் கொண்டு இருந்தனர். இதனால் ஒலி பெருக்கி மூலம் போலீசாரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த உடன் போலீசார் தங்கள் செய்கையை நிறுத்திக் கொண்டனர்.

இறுதியாக மக்கள் அதிகார அமைப்பின் தோழர் கண்ணன் நன்றியுரை கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பினர் அந்த பகுதி மக்களிடையே ஆலோசித்து டாஸ்மாக்கை மூடுவதற்கான அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாரகி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகார தோழர்கள் மீது இன்ஸ்பெக்டர் காட்டிய வீரம்!
ஆவுடையார்கோவிலில் காவல்துறை ஆய்வாளராக உள்ள பிரேம் ஆனந்த் சென்னையில் பணிபுரிந்தபோது யாருக்கும் பயப்படாமல் அரசியல்வாதியையும் வழக்கறிஞர்களையும், எலும்பை முறித்ததாக புகார் கொடுக்கச் செல்லும் மக்களிடமும், இந்த பகுதி அரசியல் கட்சியினரிடமும் பீலாவிட்டு வருவது வழக்கம். “போலீசை எவன் எதிர்த்தாலும் அவன் எலும்பை முறிப்பேன்” என சிங்கம் பட பாணியில் வீர வசனம் பேசி வருவதும் அவரது வாடிக்கை.
இந்நிலையில் 29-09-2015-ம் தேதி மக்கள் அதிகாரம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆய்வாளர் பிரேம்ஆனந்த் நிற்கும்போது, காவல்துறையின் அயோக்கியதனங்களை பட்டியலிட்டு தோழர்கள் விமர்சித்து பேசியுள்ளார்கள். தனக்கு கீழ் வேலை பார்க்கும் போலீசுகாரர்களை புகார்தாரர்கள், குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் முன்பே, “பொட்ட பயலே” என்றும், “கோத்த, கொம்மா” என்றும் கெட்ட வார்த்தைகளிலும் பேசி வருபவர் பிரேம்ஆனந்த். மேலும் போலீசுகாரர்களிடம் சென்னையில் வேலை பார்க்கும் போது உயர் அதிகாரிகளையை மதித்தது கிடையாது என்றும் பல பேரை தான் அடித்து புரட்டி எடுத்துள்ளதாகவும் தான் யாருக்கும் பயப்படாத வீராதி வீரன் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி சக போலீசுகாரர்களிடம் பயத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில், 03-10-2015-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக பேசியுள்ளார்கள். இதில் ஆர்ப்பாட்டத்திற்கு இவ்வளவு பெரும்திரளான மக்கள் திரண்டதை முன்கூட்டியே கணித்து அறியமுடியாத ஆவுடையார்கோவில் காவல்துறை ஆய்வாளரை கண்டித்துள்ளதாக தெரிகிறது. போதக்குறைக்கு ஆவுடையார்கோவில் காவல்நிலையத்தில் வேலை பார்க்கும் மாரிமுத்து என்ற காவலர், “எங்களிடம் வீரன் என தற்பெருமை பேசுகிறாயே, 29-ம் தேதி நடந்த ஆர்பாட்டத்தில் போலீசைப் பற்றியும், மக்கள் அதிகாரத்தைப் பற்றியும் பேசும் போது வாலை சுருட்டிக் கொண்டு ஏன் நின்றீர்கள்? உங்கள் வீரத்தை அவர்களிடம் காட்ட வேண்டியது தானே” எனச் சொல்லி உசுப்பு ஏற்றியுள்ளார். தனது பிம்பம் உடைவதை அறிந்த பிரேம ஆனந்த் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் தலைக்கு ஏறிய பிரேம் ஆனந்த் 04.10.2015-ம் தேதி காலை 8 மணிக்கு கைலியுடன் கடைத்தெருவுக்கு வந்திருக்கிறார். மக்கள் அதிகாரத் தோழர்கள் MSK பழனி, இந்தியன் பழனி ஆகியோர் டீ குடித்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்து கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு “மைக்கை புடிச்சி பேசின தேவுடியா பயலுக நீங்க தானடா? இப்ப போலீச பத்தி பேசுங்கடா, ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா மோதி பார்ப்போம்” என்று தகராறு செய்துள்ளார்.
அதற்கு தோழர்கள் ”நாங்கள் பேசியது தவறு என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்” என்று கூறியதற்கு
“நான் எந்த சட்டத்தையும் மயிருக்குகூட மதிக்க மாட்டேன்” என்று கூறி தன்னுடன் வந்த காவலர் மாரிமுத்துவிடம் “இவனுகளை அடித்து ஸ்டேசனுக்கு இழுத்து வா” என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை நிறைவேற்ற தயங்கிய காவலர் மாரிமுத்துவை பார்த்து ”ஏண்டா பொட்டப் பயலே, நீயெல்லாம் போலீசா?” என்று ஆணாதிக்கத் திமிரோடு திட்டி ஆத்திரத்தில் மாரிமுத்துவின் செல்போனை பிடுங்கி ரோட்டில் போட்டு உடைத்துள்ளார்.
பின்னர் தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றுள்ளார். அதற்கு தோழர்கள் எதிர்ப்பு தெரிவித்து நின்றபோது, ஆய்வாளர் பிரேம் ஆனந்த் ”நான் ஆம்பிளடா வாங்கடா மோதி பார்ப்போம்” என்று பலமுறை கூறியுள்ளார். ஆய்வாளரின் கைலியை மடித்து கட்டிய ரவுடித்தனத்தை காண மக்கள் திரளாக கூடிவிட்டதால் ஆண்மையுள்ள இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் ”உங்களை பின்னாடி பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு இடத்தை காலிசெய்துவிட்டு சென்றுள்ளார்.
சம்பவத்தை விசாரித்த பொதுமக்கள்,”வார்த்தைக்கு வார்த்தை நான் ஆம்பிள்ளை என்று கூறும் ஆய்வாளார் பிரேம் ஆனந்த் ஆம்பிளையாக இருந்தால் ஆர்ப்பாட்டத்தில் போலீசை விமர்சித்து பேசியபோதே தட்டிக்கேட்டிருக்கலாமே, இப்போ, தோழர்கள் தனியா இருக்கும்போது தகராறு செய்வது என்ன நியாயம்?” என ஆய்வாளர் பிரேம் ஆனந்தின் வீரத்தை எள்ளி நகையாடி சென்றனர்.
மக்கள் அதிகாரம் ஆவுடையார்கோவில் பகுதியில் நடத்திய ஆர்ப்பட்டத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டதால் அதிர்ச்சி அடைந்து அதிகாரவர்க்கமும், போலீசும் முன்னணியில் உள்ள தோழர்களை மிரட்டியும், பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தால் ஒடுக்கிவிடலாம் என திட்டம் தீட்டி இருப்பதாக தெரியவருகிறது. அதன் விளைவு தான் பிரேம் ஆனந்த், வடிவேல் பாணியில் தோழர்களிடம் மீரட்டி தகராறு செய்துள்ளார். ஆனால் மக்கள் அதிகாரம் தோழர்களின் உறுதி பிரேம் ஆனந்த் போன்றவர்களை காமெடி பீஸாக்கி விட்டது.
தோழர்களை அடித்து சித்ரவதை செய்து பொய்வழக்கு போட்டு சிறையில் அடைப்பேன் என்றும் ரவுடி லிஸ்டில் சேர்ப்பேன் என்றும் பிரேம் ஆனந்த் மிரட்டினாலும் அல்லது அதை செய்தாலும் மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் அதை எதிர் கொண்டு போலீசின் தார்மீக பலத்தை இழக்கச் செய்வார்கள்.
தகவல்
மக்கள் அதிகாரம்
ஆவுடையார்கோவில் பகுதி
புதுக்கோட்டை மாவட்டம்.