privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழப் போர்க்குற்ற விசாரணை: தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்

ஈழப் போர்க்குற்ற விசாரணை: தோல்வியில் முடிந்த தமிழினவாதிகளின் உத்திகள்

-

மிழீழ விடுதலைக்கான புலிகளின் ஆயுதப் போரைப் போலவே, ஈழ இறுதிப் போரில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பது, ஈழத்தின் திறந்தவெளியில் சிறைப்பட்டுக் கிடக்கும் அகதிகளை விடுவிப்பது, ஒரு பொதுவாக்கெடுப்பு மூலம் தமிழீழத்தைப் பெறுவது முதலானவற்றை அமெரிக்க வல்லரசின் தலைமையில் சர்வதேச சமூகத்தைக் கொண்டு சாதிப்பது என்ற இனவாதிகளின் உத்திகளும் சோகமான முடிவுகளை எட்டியிருக்கின்றன.

வவுனியா மாணிக்ஃபார்ம் முகாமில் தமிழ் அகதிகள்
வவுனியா மாணிக்ஃபார்ம் முகாமில் தமிழ் அகதிகள் (கோப்புப் படம் இணையத்திலிருந்து)

ஈழச் சிக்கலுக்குச் சர்வதேச சமூகம் மூலமான தீர்வுகளுக்குச் சாதகமாக அமெரிக்க வல்லரசின் நிலைப்பாடுகள் இருக்கும் என்று இனவாதிகள் கற்பிதம் கொண்டிருந்ததும் பொய்த்துப் போனது. சீனா – ராஜபக்சே கூட்டுக்கு எதிராக அரசியல் காய்களை நகர்த்தினால், சீன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தால், அமெரிக்க வல்லரசு மட்டுமல்ல, இந்திய வட்டார வல்லரசுகூட ஈழச் சிக்கலில் தமக்குத் துணை நிற்கும் என்று உலகின் மாபெரும் அரசியல் சிந்தனையாளர் என்று தாம் போற்றிய பிரபாகரனைப் போலவே இனவாதிகள் நம்பினர். அவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பாராட்டும் அவரது தூதருக்கு நன்றியும் செலுத்தினார்கள். ஆனால், இனவாதிகளின் உத்திகள் எல்லாம் வெறுங்கனவாய்ப் போயின.

இனப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பது போன்ற அமெரிக்க நாடகங்கள் எல்லாம் தனது விசுவாசிகளான சிறீசேனா – ரணில் கும்பல் ஆட்சியைப் பிடிப்பது வரைதான் நீடித்திருந்தன. இப்போது ஈழத் தமிழினத்துக்கு எதிராக இலங்கையின் சிங்கள இனவெறி அரசே முன்மொழிந்தவாறு அமெரிக்க வல்லரசு கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா, சீனா உட்பட சர்வதேச சமூகம் முழுவதும் கைகோர்த்துக் கொண்டு, அக்டோபர் முதலன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளன.

முந்தைய தீர்மானங்களில் இடம் பெற்றிருந்த சர்வதேச நீதி விசாரணை கிடையாது; இனப் படுகொலைகள், போர்க் குற்றங்கள் போன்ற சொற்களும் நீக்கப்பட்டு, விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு இரண்டினதும் மனித உரிமை மீறல்களை இலங்கையின் சட்ட முறைமைகளுக்குட்பட்டு, அந்நாட்டு நீதி அதிகாரிகளின் விசாரணையின் கீழ் நடத்தப்படும். அச்சமயம் இலங்கை அரசின், காமென்வெல்த் நாடுகள் போன்றவற்றின் நீதிபதிகள், சட்ட வழக்குரைஞர்கள் உடனிருப்பார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தீர்மானத்தின் அமலாக்கம் பரிசீலிக்கப்படும். இவை தவிர, ஈழத்தின் திறந்தவெளிச் சிறைகளில்/முகாம்களில் வதியும் அகதிகள் விடுதலை, இராணுவ வெளியேற்றம், பறிக்கப்பட்ட நிலங்கள் ஒப்படைப்பு மற்றும் அரசியல் உரிமைகள் ஆகியவை குறித்த பேச்சுக்கள் எதுவும் கிடையாது.

என்றாலும் அந்தத் தீர்மானத்தின் மீது நம்பிக்கை வைக்குமாறு ஆளும் தமிழ்தேசக் கூட்டமைப்பின் பிரமுகர்கள் தனித்தனியான முறையில் கூறிவருகிறார்கள். ஆனால், அந்தத் தீர்மானத்தின் மீது வடக்கின் அதிகாரபூர்வ ஆட்சியாளர்களோ ஒப்புக்கு அதிருப்தியும் அவநம்பிக்கையும் தெரிவித்தாலும், மாற்றுத் தீர்வு எதையும் முன்வைக்கவில்லை.

அந்தத் தீர்மானத்தைத் தமிழகக் கட்சிகள் அனைத்தும் நிராகரித்து, அதற்கு எதிராக ஓட்டளிக்குமாறு இந்திய அரசைக் கோரி ஒருமனதாகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின. அதைக் கழிப்பறைக் காகித அளவுக்குக்கூட இந்திய அரசு மதிக்கவில்லை. கடனுக்குத் தீர்மானம் நிறைவேற்றியதோடு கண்டன அறிக்கை தவிர, வேறு எதையும் அக்கட்சிகள் செய்யவில்லை. தமிழக இனவாதக் குழுக்கள் சடங்குத்தனமான அடையாளப் போரட்டங்களுக்கு மேல் எதுவும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. ஈழத் தமிழினம் ஆளும் சிங்கள இனவெறிக்கு எதிராகத் தமது இனவுரிமைக் கோரிக்கைகளோடு, இலங்கையின் உழைக்கும் மக்களோடு வர்க்கரீதியில் இணைந்து நீண்டகால நோக்கில் ஜனநாயகத்துக்காகப் புரட்சி வழியில் போராடுவதுதான் ஈழச் சிக்கலுக்குத் தீர்வாகும்.
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2015
_________________________________