Monday, August 15, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கோவன் கைதை கண்டித்து THE HINDU தலையங்கம்

கோவன் கைதை கண்டித்து THE HINDU தலையங்கம்

-

Misuse of sedition law

தேசத் துரோக வழக்கு
கார்ட்டூன் : நன்றி அசீம் திரிவேதி

றுபடியும் ஒருமுறை தேசதுரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த முறை அது தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது. தேசதுரோகம் மற்றும் வன்முறையை தூண்டுதல் ஆகிய குற்றங்களை சுமத்தி ஒரு தீவிர இடதுசாரி குழுவை சேர்ந்த நாட்டுப்புறப் பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குற்றம்: முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது அரசின் மது விற்பனைக் கொள்கையை இரு பாடல்களில் பழித்து பரப்பியது. அந்த பாடல் வரிகளின் மிக தூரமான பொருளில் கூட அரசு மற்றும் அரசு நிறுவனத்துக்கு எதிராக என்று எதுவுமில்லை. அரசின் கொள்கைக்கெதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அரசு நடத்தும் மதுக்கடைகளை மூட வலியுறுத்துவதற்கு அப்பால், வன்முறையை தூண்டும்படி ஏதுமில்லை. சமூக வலைத்தளங்களில் அது மிகவும் பரவி அதன் கருப்பொருள் நிறைய பேரின் மனதோடு உறவு கொண்டிருக்கிறது. மது விற்பது என்ற அரசின் கருத்தையும் அதே நேரத்தில் இலவசங்கள் மூலம் மக்களை குளிப்பாட்டுவதையும் தேர்ந்த நகைமுரணுடனும், உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சுரத்துடனும் பாடல் விரித்துரைக்கிறது.

இன்னொரு பொருளில், அரசியல் பொருளாதாரத் துறையின் மானிய வழங்கல் கொள்கையை பாடல் விமர்சிக்கிறது. ஆளும் கட்சி, நலத்திட்டங்களை வாரி வழங்குகின்ற பாவனையில் மக்களை மதுக்குடியையும், அரசின் பிச்சையையும் சார்ந்திருக்கச் செய்திருக்கும் நிலைமையை படம் பிடித்து காட்டுகிறது. சிவதாஸ் என்ற இயற்பெயரை கொண்ட கலைஞன் கோவன் இந்த எதார்த்தத்தை தனது பாடல்களில் வசப்படுத்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டு பாடல்களில் ஒன்றின் பகடி தொனியும் கேலிச்சித்திரங்களும் ஜெயலலிதாவை மிகமோசமாக சித்தரிக்கின்றன என்றும் அது தனிநபர் மீதான தாக்குதல் என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தீவிரமான சிறு குழுக்கள் நாட்டுப்புற வடிவத்தை அரசியல் பிரச்சாரத்துக்கு வலிமையாகவும் அதே நேரத்தில் எளிமையாக புரிந்து கொள்ளக்கூடிய மொழியிலும் முன்வைத்து வருவது வாடிக்கைதான்.

செல்வாக்கான அரசியல்வாதிகள் இந்த விமர்சனங்களை உள்வாங்கி அடுத்த அடியை எடுத்து வைப்பதே சிறந்தது. அடிநாதத்தில் ஒலிக்கும் குறைகளை அவர்கள் போக்க வேண்டும். அடக்குமுறைகளை பிரயோகிப்பது பயன் தராது. அரசின் எதிர்வினையில் தேவையற்ற ஆத்திரம் வெளிப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டத்தின் 124 அ பிரிவின் கீழ் தேசதுரோக வழக்கில் கோவனை கைது செய்திருப்பது ஒரு துவண்ட போலீஸ் நிர்வாகம் அதன் வரம்புகள் பலமுறை நீதிமன்றத் தீர்ப்புகளால் மட்டுப்படுத்தப் பின்னரும் அவற்றின் மீது எந்த மரியாதையும் கொள்ளாததையே காட்டுகிறது. விமர்சனப் பார்வைகளுக்கு எதிராக இத்தகைய கொடுங்குற்ற வழக்குகளை சுமத்துவதை நிராகரித்து நீதிமன்றங்கள் பலமுறை தீர்ப்பளித்துள்ளன. வன்முறையை உண்மையாகவே தூண்டுவது மற்றும் கலகத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டிருப்பது ஆகியவற்றை தவிர்த்து அரசுக்கு எதிராக வெறுப்பை உருவாக்குவது கூட தவறானதல்ல என்று உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது.

முதலமைச்சருக்கு எதிரான உரத்த விமர்சனத்தை சட்ட ரீதியில் அமைந்த அரசுக்கு எதிரான அச்சுறுத்தலுடன் சமன்படுத்தியதன் மூலம் இந்தப் பிரச்சினையில் சென்னை போலீஸ் இழுக்கை தேடிக் கொண்டுள்ளது. மிகச் சமீபத்தில் அரசு ஊழியர்கள் அரசை விமர்சித்தால் தேசதுரோக சட்டம் பாயும் என்ற சர்ச்சைக்குரிய சட்டத்தை மராட்டிய அரசு திரும்பப் பெற்றது. ஊழலுக்கு எதிராக கேலிச்சித்திரம் வரைந்ததற்காக அசீம் திரிவேதி என்ற கார்ட்டூனிஸ்ட் 2012-ம் வருடம் தேசதுரோக குற்றம் சுமத்தப்பட்டார். கடந்த வருடம் மீரட்டில் கிரிக்கெட் ஒளிபரப்பின் போது பாகிஸ்தான் அணிக்காக கைதட்டிய காஷ்மீர் மாணவர்களுக்கு எதிராக தேசதுரோக சட்டத்தை புனைந்தார்கள். பிறகு அதனை திரும்பப் பெற்றார்கள். இச்சட்டம் திரும்பத் திரும்ப தவறாக பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது தேவையில்லாத, வழக்கொழிந்த, காலனியத்தன்மை கொண்ட இச்சட்டம் முற்றுமுழுதாக வெட்டியெறியப்பட வேண்டிய காலம் வந்திருக்கிறது.

மூலம் : THE HINDU தலையங்கம்.

தமிழில் : சம்புகன்

நன்றி : The Hindu

SUPPORT US

  1. மாட்டுக்கறி சாப்பிட்டால் உன் தலையை வெட்டுவேன் என்று கர்நாடக முதல்வருக்கு அரைகூவல் இடுகிறான் அதிகார வெறி பிடித்தவன் அங்கே.
    அது என்ன துரோகம் என்று தெரியவில்ல்லை. இங்கே ‘மூடு டாஸ்மாக்கை’…விளங்குமா இந்த ..என்றநாட்டுப் புறச் சொல் தேசத் துரோகம் என்றால்…மனோகரா! …”பொறுத்தது போதும்” பொங்கி எழு, என்ற வசனம்தான் எனக்கு நினைவில் வருகிறது.நல்ல தலையங்கம், வரவேற்கிறோம்.

  2. சாதாரண விமர்சனத்தையே பொறுத்துக்கொள்ள அல்லது எதிர்கொள்ள திராணியில்லாத அழுமூஞ்சிகள் தங்களை மாபெரும் தலைவர்களாக சித்தரித்துக்கொள்வதுடன், அடைமொழிகளுக்கும் அல்லக்கைகளின் புகழ்ச்சிக்கும் மட்டுமே ஏங்கிக்கொண்டு மிகச்சரியான விமர்சணங்களை கண்டு அஞ்சுவதன் எதிர் வினைகளே நாம் தற்போது கானும் தோழரின் கைது நடவடிக்கை. நம்மை விட மிகச் சிற்ப்பாக தோழரின் பாடல்களை மக்களிடம் கொண்டு சென்றமைக்காக பாசிசப்பேய்க்கு ஒரு நன்றி சொல்லிடுவோம்.

  3. அதிமுக கட்சிகார்கள், ஆசிட் குடித்தநிலையில் இருக்கிரார்கள் முறையான விமர்சனத்தை தாங்கிக்கொல்ல முடீயாதவர்கள்,விமர்சனத்திர்க்கு பதிலடி கொடுக்க தெரியதவர்கலள்,ஜனநாயமுரையை விட்டு சர்வாதிகார் முரையில் செயல்பட இவர்களுக்கு, ஜனநாயகநாட்டில் அனுமதி எங்கிறுந்து வந்தது, இவர்கள் ஜனநாயகத்தை கேள்விக்கு உள்ளாக்குவதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் தமிழகமக்கள்.

  4. கோவன் கைது பற்றி மலையாள மனோரமா செய்தி சேனலில் வந்த செய்திக் குறிப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க