Wednesday, January 20, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் கடலூர் பேரழிவு - நேரடி ரிப்போர்ட்

கடலூர் பேரழிவு – நேரடி ரிப்போர்ட்

-

கடலூர் வெள்ள பாதிப்பு: தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட பேரழிவு!

டலூர் மாவட்டம் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு ஆகிய தாலுக்காக்களைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வடகிழக்கு பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் அலட்சியத்தால் கடலூர் மாவட்டம் இது போன்ற இயற்கையின் சீரழிவிற்கு பலியாவது இது மூன்றாவது முறை.

cuddalore-floods-5கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலில் வீடுகளை இழந்து மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். அதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலால், பல இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி, பலா போன்றவை அடியோடு சாய்ந்தன. மக்கள், புயலோடு புயலாக தூக்கி வீசப்பட்டு வாழ்க்கையை இழந்தனர். அதன் இழப்புகளையே ஈடுகட்ட முடியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் கடலூர் மாவட்ட மக்கள்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் பெய்த கனமழைக்கு 160 மனித உயிர்கள், 200-க்கும் மேற்பட்ட மாடுகள், 2500-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள் காவு வாங்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல் விழுப்புரம், கடலூரில் 6,000 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. ஒன்றரை இலட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா சாகுபடியான நெல், வாழை, மரவள்ளி, உளுந்து போன்ற பயிர்கள் அனைத்தையும் இழந்து சொந்த மண்ணிலே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர், மக்கள்.

அதாவது மக்கள் தமது சேமிப்புகள் அனைத்தையும் இழந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். விவசாயம் செய்து பிழைப்பதற்கும் வழி இல்லாமல் விளைநிலங்கள் முழுவதும் மணல் குவியலாக காணப்படுகிறது. “அதனை அப்புறப்படுத்தவே ஏக்கருக்கு 3 லட்சம் செலவாகும். அதற்கு நாங்கள் எங்கே போவது?” என்று குமுறுகிறார்கள் விவசாயிகள்.

கடலூர் வெள்ள பாதிப்பு
சான்றிதழ்கள்

புத்தகங்கள், சான்றிதழ்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் புத்தகங்கள் இன்றி 50,000 மாணவர்கள் தவிக்கிறார்கள். இந்த வெள்ளத்தில் குடிசை வீடுகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் வீடுகளை இழந்தவர்களில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்…

தினம், தினம் கட்சித்தலைவர்களின் வருகை ஆறுதல்கள், ஆசை வார்த்தைகள், பாய், போர்வை, அரிசி போன்ற நிவாரணங்கள் அரசின் 5,000 ரூபாய் பணம் என்பதோடு மக்களை நிவாரணம் என்னும் ஆசை வலைக்குள் சிக்க வைத்து பேரழிவின் உண்மையான காரணத்திலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது, இந்த அரசு. இவை அனைத்தும் இழந்த நம் வாழ்க்கையை மீட்டு தருமா?

கடலூர் வெள்ள பாதிப்பு
பத்து பேர் அடித்து செல்லப்பட்ட ஒரே குடிசை- பெரியகாட்டுப்பாளையம்

இந்த வெள்ளத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளான  பகுதிகள் கடலூரில் புருஷோத்தமன் நகர், பண்ருட்டி தாலுகாவில் மேலிருப்பு, கீழிருப்பு, தாழம்பட்டு, கருக்கை, விசூர், பெரியகாட்டுப்பாளையம், மேல்காட்டுப்பாளையம் உள்ளிட்டவையும், குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் ஓணாங்குப்பம், கல்குணம், பூதம்பாடி, நெல்லைகுடி, மருவாய், குமிடிமலை, ராசாக்குப்பம், கிருஷ்ணாவரம், ஆலம்பாடி கரிமேடு உள்ளிட்ட கிராமங்கள் தான்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க வேண்டிய, அமைச்சர்களும், அதிகாரிகளும் தீபாவளிக்கு டாஸ்மாக் வருமானத்தை கூட்டவும், குடிகாரர்களின் எண்ணிக்கையை பெருக்கவும் தீவிரமாய் பணிபுரிந்தனர்.

அக்டோபர் 20 முதல் துவங்கும் பருவ மழைக்கு முன்னரே வானிலை ஆய்வு மையம், மழை எச்சரிக்கை விடுத்தும் அரசு எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை; பாசிச ஜெயாவோ கொடநாட்டில் உல்லாசமாக ஓய்வு எடுத்துக்கொண்டு “இது மழைக்காலங்களில் நடக்கக் கூடிய ஒன்று தான், மூன்று மாதங்களில் பொழிய வேண்டிய மழை மூன்றே நாளில் பொழிந்தது தான் பாதிப்புக்கு காரணம்” என்று ஆணவமாக பேசுகிறார்.

cuddalore-floods-16ஜெயாவின் இந்த திமிர்த்தனமான பேச்சும், அலட்சியமும் கலெக்டர் முதல் VAO வரையிலான அதிகார வர்க்கத்தின் ஆளத்தகுதியிழந்த அரசுக்கட்டமைப்பை பிரதிபலிக்கிறது. இது தான் மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்ல காரணமாக அமைந்தது. முதலாளித்துவ ஊடகங்களோ கனமழைக்கு அணைகள் உடைந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று அபாண்டமாக புளுகுகின்றன. நிவாரணப்பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன என்று பச்சையாக புளுகிக்கொண்டும், எழுதித்கொண்டும் திரிகிறார்கள்..

உண்மையில் இந்த பாதிப்புக்கான காரணங்கள் :

1) வீராணம் ஏரியை நம்பி சுமார் 15,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய வறட்சியான காலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி ஒரு ஆண்டாக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்காமல், சென்னையில் உள்ள மேட்டுக்குடிகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக தண்ணீரை திறந்து விட மறுத்தது தமிழக அரசு. இந்த விஷயத்தில் கர்நாடக அரசின் நயவஞ்சகத்தையே ஜெயா அரசும் பின்பற்றுகிறது.

கடலூர் வெள்ள பாதிப்பு
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் கெடிலம் ஆறு.

தற்பொழுது பெய்த கனமழையில் வீராணம் ஏரியின் கொள்ளவான 45 அடி அளவை எட்டியதால் தண்ணீரை தேக்கி வைக்க போதிய வசதி இல்லாமல் நீரை திறந்து விட்டது அரசு. தண்ணீர் வரும் பாசன வாய்க்கால்கள், கண்மாய், கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாத நிலையிலும், ஆக்கிரமிப்பின் பிடியிலும் உள்ளதால் வெள்ளம் விளைநிலத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியது. ஆறு, குளம், ஏரிகளை முறையாக பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நீர் பாசனத்துறை ஆகிய துறைகள் அனைத்தும் இனி மக்களுக்கு பயன்படாத வேண்டாத சதைப்பிண்டமாகி விட்டன.

வீராணம் ஏரியை தூர்வார 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாம், 3 கடலூர் மாவட்ட நீர்நிலைகளை பாதுகாக்க 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாம். இதோ அதிகாரி ஆயவு செய்தார், மந்திரி பார்வையிட்டார் என்று டிவியிலும், பத்திரிகையிலும் வரும் செய்திகளை மட்டுமே உண்மை என நம்ப வைக்கிறார்கள். பருவமழைக்கு முன்பே ஆறு, குளம், ஏரிகள் தூர்வாரப்பட்டு இருந்தால் கடலில் கலந்த தண்ணீர் பாதுகாக்கப்பட்டு இருக்கும், எனவே இதை செய்யத் தவறிய இந்த அரசு ஒரு பயங்கரவாத, கொள்ளைக்கார, கொலைகார ஆளத்தகுதியிழந்த தோற்றுப்போன அரசு கட்டமைப்பு என்கிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

2) தென்பெண்ணையாற்றின் முக்கிய துணையாறான கெடிலம் ஆற்றில் இதற்கு முன்  1943-ல் பெருவெள்ளம் வந்துள்ளது. அதன் பின் 1972-ல் இன்னொருமுறை வந்துள்ளது. அப்போதெல்லாம் இதைபோன்ற சேதம் இல்லை. காரணம் அன்று நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டன. ஆறுகளும் அகன்று இருந்தன. இன்றோ, ரியல் எஸ்டேட் முதலாளிகள், மணல் மாஃபியாக்கள் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் ஓட்டல்கள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் கட்டப்பட்டுள்ளது.

கடலூர் வெள்ள பாதிப்புஅரசே பேருந்து நிலையம், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கட்டியுள்ளது. (சென்னை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, விழுப்புரம் பஸ் ஸ்டாண்டு , மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம், மதுரை மாட்டு தாவணி பஸ் ஸ்டாண்டும் ஏரி தான்)…. இவ்வாறு ஆறு குறுகிப்போனதின் விளைவாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி, மேடான நிலப்பகுதியில் இருந்து பள்ளத்தை நோக்கி ஒரு சுனாமிபோல அதிக அழுத்தத்துடனும், வேகத்துடனும் தண்ணீர் வந்ததின் விளைவுதான் இத்தனை உயிரிழப்புக்கும், பேரழிவுக்கும், பெருந்துயரத்திற்கும் காரணம்.

கடலூரில் அ.தி.மு.க.வின் நகரமன்ற துணைத்தலைவர் குமாருக்கு (முன்னாள் பரோட்டா மாஸ்டர், சேவல் குமார் என்கிற உஜாலாகுமார்) சொந்தமான கம்மியம்பேட்டை பாலம் அருகில் உள்ள ஓட்டல், பஸ் கம்பெனி இடம் ஆகியவையும், கே.வி டெக்ஸ் எதிரில் உள்ள கோகுலம் லாட்ஜும் கெடிலம் ஆற்றை வளைத்து போட்டு கட்டியது தான். கடலூர் திருவந்திபுரம் முதல் பெரும்பகுதி கெடிலம் ஆறு ஆக்கிரமிப்பில் தான் உள்ளது. இது ஒரு சாம்பிள் தான்.

கடலூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் சுமார் பத்தாயிரம் ஏரிகள் உட்பட ஆற்று புறம்போக்கு, வாய்க்கால் புறம்போக்கு என அனைத்து வகை புறம்போக்குகளையும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போலிசு அதிகாரிகளின் செல்வாக்குடன் சூறையாடி வருகின்றனர். கரை வேட்டி வி.ஐ.பிக்கள் இதனை கைப்பற்றியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் கெடிலம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் நிலவுடைமையாளர்கள் கரைகளை சுருக்கி அதில் சவுக்கை உள்ளிட்டவை பயிரிட்டுள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும், குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் உள்ள செங்கால் ஆணை, பரவனாறு ஆணை ஆகியவை உடைப்பு ஏற்பட்டு ஓணாங்குப்பம், கல்குணம், பூதம்பாடி உள்ளீட்ட பல கிராமங்கள் நீரில் மூழ்கின. அதற்கு முக்கிய காரணம் தண்ணீர் போகும் அளவிற்கு அணை இல்லாததும், இருக்கும் அணைகளை முறையாக பராமரித்து தூர்வாராததும் தான்.

கடலூர் வெள்ள பாதிப்புமுக்கியமாக, “NLC நிறுவனத்தில் இருந்து நீரை வெளியேற்றி அணையில் விட்டனர். அதனால் தான் அணைகள் உடைந்தது.” என்றார் ஓணாங்குப்பத்தை சார்ந்த விவசாயி ஒருவர்.

“சில சமயம் NLC நீரை விவசாயத்திற்கு பயன்படுத்தியதும் உண்டு. ஆனால் வாழ்வை அழித்ததும் NLC தான்” என்றார் கல்குணத்தை சார்ந்த 65 வயது முதியவர் ஒருவர்.

நீர்வழித்தடங்களை இயற்கையின் போக்கில் பராமரிப்பது தான் அறிவியல் பூர்வமாக நாம் செய்ய வேண்டிய உடனடி எதிர்கால மக்கள் பணி. இதை செய்ய தவறிய அரசுக்கட்டமைப்பு ஆளத் தகுதியிழந்து தோற்றுப்போய்விட்டது என்பது நிரூபணமாகிறது

3) தென்பெண்ணையாறு கர்நாடகா மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து திருக்கோவிலூர், பேரங்கியூர் வழியாக கடலூர் வந்து வங்கக்கடலில் கலக்கிறது. இந்த பெண்ணையாற்றின் துணை ஆறு தான் கெடிலம் ஆறு என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் வெள்ள பாதிப்பு
தடுப்பணை கட்டும் ஒப்பந்த தொழிலாளிகள்

பெண்ணையாற்றில் கடந்த ஜனவரி முதல் பிடாகம், கண்டரக்கோட்டை அருகே மணல் குவாரி அமைத்து பல்லாயிரக்கணக்கான டன் மணலை கொள்ளையடித்து வருகின்றனர். இந்த மணல் மாபியாக்களின் கொள்ளை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக திட்டமிட்டே நீரை கெடிலம் ஆற்றின் வழியாகவும், தென்பெண்ணையின் மற்றொரு கிளை ஆறான மலட்டாற்றில் நீரை திறந்து விட்டதும் தான் மிக முக்கியமான காரணம். கெடிலம் ஆறும், மலட்டாரும் திருவாமூர் என்ற ஊரில் இணைந்து நீர் கடலை நோக்கி பாய்கின்றன,

மேலும் இந்த மழை அறிவிக்கப்பட்ட அக்டோபர் 4-ம் தேதிக்கு பிறகு 6, 7, ஆகிய தேதிகளில் பெண்ணையாற்றின் கண்டரக்கோட்டை பாலம் அருகே ஆற்றின் குறுக்கே 3 அடி உயரம் 20 அடி அகலத்தில் சுமார் 250 மீட்டர் அளவிற்கு தண்ணீர் உள்ளே புகாத அளவிற்கு மணலால் தடுப்பு அணை கட்டியுள்ளனர்.

இந்த அணையை அமைச்சர்கள் சம்பத் மற்றும் பன்னீர்செல்வம் தலைமையிலான மணல் மாபியாக்கள், ஓட்டுக்கட்சி பொறுக்கிகள், கலெக்டர் தலைமையிலான அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் கட்டப்பட்டது. மணல்கொள்ளைக்காகவும், சுக போக வாழ்க்கைக்காகவும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அழித்து வீடுகளற்ற அகதிகளாய் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களுடைய வாழ்க்கையும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது என்பதே நிதர்சன உண்மை….

கடலூர் மாவட்ட வெள்ள நிவாரணப்பணி தீவிரம் என முதலாளித்துவ ஆளும் வர்க்க ஊடகங்களால் முழங்கப்படும் யோக்கிதை:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மணல் மாபியாகளின் தளபதியான அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆறு பேர் அடங்கிய அமைச்சர்கள் குழு மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட போது மத்திய அரசு ஒதுக்கிய நிதியை சுருட்டியதாக கூறப்பட்ட சூப்பர் சீனியரான ககன் தீப்சிங் பேடியை சிறப்பு அதிகாரியாக நியமித்தது தமிழக அரசு. அதனையொட்டி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு ஒரு வீட்டிற்கு தலா ரூ.5,000, இலவசமாக மண்ணெண்ணெய், உணவு, ஜமுக்காளம் ஆகியவற்றை வழங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இது போக சில தொண்டு நிறுவங்களும் பிஸ்கட், போர்வை வழங்கி விட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றனர். அனைத்து ஓட்டுக்கட்சி தலைவர்களும் வந்தனர். ஆனால் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் தீர்க்க வரவில்லை. 2016 சட்டமன்ற தேர்தலில் ஒட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவே வந்து போனார்கள்.

கனமழையின் பாதிப்பையொட்டி தந்தி டிவியில் நடந்த விவாதம் ஒன்றில் பேசிய அ.தி.மு.க-வின் அடிமைப்பெண்ணான சி.ஆர். சரஸ்வதி, “அம்மா அவர்கள் நியமித்த ஆய்வு குழு கடந்த பத்து நாட்களாக சிறப்பாக பணியாற்றி வருகிறது” என்றார்..

அந்த குழுவின் லட்சணம் கடந்த 17-11-2015 அன்று ஓணாங்குப்பம் பகுதிக்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், சிறப்பு அதிகாரி ககன் தீப்சிங் பேடி, மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் உடைந்த ஏரியை மட்டும் பார்த்து விட்டு பாதியிலேயே திரும்பி ஓடிவிட்டனர். மக்கள் அவர்களின் வருகையை எதிபார்த்து ஏமாற்றத்துடன் திரும்பியதோடு அவார்களின் யோக்கியதையையும் வசைபாடி காரி உமிழ்ந்தார்கள்.

19-11-2015. அன்று கல்குணம் கிராமத்திற்கு வந்த வந்த அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சம்பத் மக்களை சந்திக்காமல் உடைந்த ஏரியை மட்டும் பார்த்துவிட்டு போய்விட்டார்கள்.

நிவாரணம் வழங்குவதில் முறைகேடு, பாரபட்சம், ஊழல், இலவச மண்ணெண்ணெய்க்கு காசு வாங்குகிறார்கள் என்றெல்லாம் கூறி பாதிக்கப்பட்ட மக்கள் எல்லா இடங்களிலும் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள், சாலை மறியல் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் மீது காட்டுமிராண்டித் தனமாக தடியடி நடத்துகிறது அம்மாவின் போலிசு படை.

மக்களை ஆளத் தகுதியற்றது மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிராக வன்முறையை ஏவி விடுவதோடு பாசிச ஒடுக்கு முறையை கையாள்கிறது, அரசு. மக்களுக்கு உதவாது தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பை இனிமேலும் நாம் தூக்கி சுமப்பதில் பலன் இல்லை.

இதற்கு மாற்று மக்கள் அதிகாரம் தான் என்ற அடிப்படையில் கடந்த 7 நாட்களாக மக்கள் அதிகாரம் அமைப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிந்து தரைமட்டமான வீடுகளை பிரித்து அதில் உள்ள பொருட்களை மீட்டு கொடுப்பது, வீட்டில் உள்ள சேற்றினை அகற்றுவது, பண்ட பாத்திரங்களை கழுவுவது, சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கு செய்து கொடுத்தது.உடனடியாக அவர்களை வீடுகளில் குடியமர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் அதிகாரத்தின் இந்த பணியை பார்த்த மக்கள், இந்த அரசு நமக்கு உதவப்போவது இல்லை. நாமே அதிகாரத்தை கையில் எடுப்பது தான் நமது பிரச்னைக்கு தீர்வு என்பதை நடைமுறையில் உணர்ந்துள்ளனர். மக்களின் எழுச்சியில் இந்த அரசும் ஓர் நாள் அடித்து செல்லப்படும். அதற்க்கான நாள் வெகு தொலைவில் இல்லை…

புதிய ஜனநாயகம் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க