privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கம.க.இ.கவிற்கும் நக்சல் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு ?

ம.க.இ.கவிற்கும் நக்சல் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு ?

-

slider 1பத்திரிகையாளர் அருள் எழிலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையனோடு நடத்தும் நேர்காணல் – இரண்டாம் பாகம்

கேள்வி: தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்பைச் சார்ந்தவர்கள்தான், இந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர். கோவன் எல்லாம் அதே குரூப்பைச் சேர்ந்தவர்தான் அப்படிங்கிறதுதான், உங்கள் மீதான பிரதான குற்றச்சாட்டு. இதை நீங்க எப்படி பார்க்கறீங்க?

பதில்: இந்தப் ‘பிரதான’ குற்றச்சாட்டு எனப்படுவது தொலைக்காட்சி ஊடகங்களில் அ.தி.மு.க.வினர், பா.ஜ.க.வினர் சொல்வது.

கேள்வி: இல்லை. பாட்டு பாடியிருக்கீங்களே… மடியாது மறையாது,,, நக்சல்பரின்னு…

பதில்: ஆமாம். பாடியிருக்கிறோம். அதை நாங்களே ஒலிப்பேழையா வெளியிட்டிருக்கிறோம். அதை மறுக்கப்போவதில்லை. ஆனால், எதற்காக கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார்? மறையாது, மடியாது நக்சல்பரின்னு அவர் பாட்டு எழுதினார். அதற்காகத்தான் கைது என்று சொன்னால் அதைப் பேசுவோம்.

ஆனால் கைது எதற்காக? மூடு டாஸ்மாக்கை, என்ற பாடலுக்காக. அல்லது ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயசில உல்லாசம் என்று எழுதியிருப்பதற்காகத்தான் கைது. இதற்குப் போட்டிருக்கிற செக்சன் என்ன? ராஜத்துரோகம். இந்த அரசை கவிழ்க்க, தூக்கியெறிய சதி. இரண்டு பிரிவினரிடையே மோதலை உருவாக்க முயற்சி செய்தார். மூன்றாவதாக, வன்முறையைத் தூண்டினார். இதுதான் அதில் இருக்கின்ற குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டுக்கு கேள்வி கேட்டால், பதில் சொல்லலாம்.

இந்த மூன்று குற்றங்களும் வராது. என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலில் இருந்து நீதிபதி கட்ஜூ வரையில், இந்து பத்திரிக்கை வரையில் அத்தனை பேரும் எழுதிவிட்டார்கள். இப்போ ஒரு நபரைக் கைது செய்து வைத்துக் கொண்டு, அவர் மீது புதிய குற்றங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் நீங்கள் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று கூறுவது. அப்படி குற்றம் சாட்டுங்கள். பதில் சொல்கிறோம். நக்சல்பாரி இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் என்பதே ஒரு அவதூறு.

கேள்வி: இந்தியாவில ரெட் காரிடார் அப்படின்னு சொல்லக்கூடிய, மாவோயிஸ்டு, நக்சலைட் எல்லாத்தையும் ஒண்ணாத்தானே பார்க்குது அரசு?

பதில்: தடைசெய்யப்பட்ட இயக்கம் நக்சலைட் இயக்கம் என்பதைக் குற்றமாக ஊடகங்களில் பேசுபவர்கள் ரெண்டே பேர்தான். ஒண்ணு பா.ஜ.க., இன்னொண்ணு அ.தி.மு.க. இவங்க ரெண்டு பேர மதித்து இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது.

ஆனால், இந்தப் பாடலை ஆதரிக்கின்ற லட்சக்கணக்கான கோடிக்கணக்கான இளைஞர்கள், மக்கள் இருக்கிறார்கள். அவர்களிடையே ஒரு அச்சத்தை உருவாக்குவதற்கு, பீதியை உருவாக்குவதற்கு திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. அந்தப் பொய்யில் முதல் அம்சம் நக்சலைட் இயக்கம் என்பது தடை செய்யப்பட்ட இயக்கம் என்று கூறுவது. இது கலப்படமில்லாத பொய். இதப் புரிஞ்சிக்கணும். நக்சல்பாரி இயக்க வரலாறு என்ன என்று கொஞ்சம் தெரிஞ்சிக்கணும்.

கேள்வி: இன்னிக்கு இருக்கக்கூடிய மாவோயிஸ்டுகள் தடைசெய்யப்பட்ட இயக்கமா இருக்காங்க. அவங்கதானே..! நக்சலைட், மாவோயிஸ்டு எல்லாம் ஒண்ணுதானே?

பதில்: எல்லாம் ஒண்ணுதானே, அப்படிங்கிற வாதத்துக்கு பதில் சொல்லணும்னாலே, இதன் வரலாறு பத்தி சுருக்கமா தெரிஞ்சிக்கணும். அதாவது, 67 ல நக்சல்பாரி எழுச்சி. அந்த நக்சல்பாரி எழுச்சிங்கிறது, நக்சல்பாரி என்ற மேற்கு வங்கத்துல இருக்கிற கிராமத்துல நடந்த ஒரு விவசாயிகளின் எழுச்சி. அந்த எழுச்சியைத் தொடர்ந்து, சி.பி.எம் கட்சியில ஒரு பிளவு ஏற்பட்டு, அந்தக் கட்சியில இருந்து, கம்யூனிஸ்டு இயக்கத்தில இருந்து, கணிசமானவர்கள் வெளியேறி, சி.பி.ஐ.(எம்-எல்) என்ற புதிய கட்சியை உருவாக்குகிறார்கள். அதனுடைய கேந்திரமான ஒரு விசயம் என்னவென்றால், தேர்தலில் நின்று ஓட்டு வாங்குவது, தொகுதிப் பங்கீடு, கூட்டணி வைக்கிறது, இப்படியே நாம் வீணாப்போயிட்டோம். மக்களைத் திரட்டி புரட்சி செய்வதுதான் கம்யூனிஸ்டுகளோட வேலை. அந்த வேலையைப் பார்ப்போம் என்பதுதான். இது நக்சல்பாரி எழுச்சியிலிருந்து இந்தக் கட்சியினர் எடுத்துக்கொண்ட படிப்பினை.

அதற்குப் பின்னர் பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. உருண்டோடிய இந்த காலத்தில நக்சல்பாரி இயக்கம் என்பது பல பத்து குழுக்களாக இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. அனைத்தும் நக்சல்பாரி குழுக்கள் என்றே அறியப்படுகிறது. இதில் தேர்தலில் நிற்பவர்கள் இருக்கிறாங்க. உதாரணமா, இப்போ பீகார் தேர்தல் நடந்தது. அதுல சி.பி.ஐ.எம்.எல். லிபரேசன் மூன்று தொகுதியில ஜெயிச்சிருக்காங்க. அவங்க நக்சல்பாரி மரபுன்னு சொல்லிக்கிறவங்க. ஆந்திராவில சி.பி.ஐ.எம்.எல். நியூ டெமாக்ரசினு இருக்கிறாங்க. அவங்களுக்கு எம்.எல்.ஏ. எல்லாம் இருக்கிறாங்க. தொழிற்சங்கம் இருக்கு. விவசாய சங்கம் இருக்கு. அவங்க நக்சல்பாரி மூவ்மென்ட்னு சொல்லிக்கிறாங்க. கேரளாவில ரெட்ஃபிளாக்னு ஒரு குழு இருக்கு., அவங்க சொல்லிக்கிறாங்க. தமிழ்நாட்டுல சி.பி.ஐ.எம்.எல். எஸ்.ஓ.சி.னு இருக்குது. அவங்க தேர்தலில் நிற்பதில்லை. நாங்க நக்சல்பாரி மரபுன்னு சொல்லிக்கிறாங்க. நீங்க சொன்ன மாவோயிஸ்டு அமைப்பு இருக்குது. அவங்களும் நக்சல்பாரி மரபுன்னு சொல்லிக்கிறாங்க. அவங்க ஆயுதப்போராட்டம் மட்டும்தான் நமது பாதை. கொரில்லாக் குழுக்களைக் கட்ட வேண்டும் என்கிறார்கள். இப்படி பல ஸ்டிரீம், பல நீரோடைகள் இதுல இருக்குது. இதை எல்லாம் பொதுவாக்கி நக்சல்பாரி அமைப்பு தடை செய்யப்பட்டது. என்று சொல்வது உண்மைக்கு மாறானது.

கேள்வி: நீங்க தேர்தல் பாதை திருடர்பாதை அப்படின்னு சொல்றீங்க… அப்படி சொல்லும்போது, தேர்தல் பாதை இல்லைன்னா உங்க பாதை எது?

பதில்: தேர்தல் பாதை இல்லைன்னா எது உங்க பாதை. அந்தப் பாதையை எப்படி செய்யப்போறீங்க? என்பது தனி ஒரு விவாதம். ஆனா, நீங்கள் தடை செய்யப்பட்ட இயக்கம் அப்படின்னு சொன்னால், அதற்கு பதில் சொல்லனும்.

இப்போ நீங்கள் கேட்ட மாவோயிஸ்டு இயக்கமே, என்றென்றைக்கும் தடை செய்யப்பட்ட இயக்கமா இருந்ததில்லை. 1990 இல் ஆந்திராவில சென்னாரெட்டி (காங்கிரசு) ஏற்கெனவே தெலுங்குதேசக் கட்சி அரசால் விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுகிறார். ஆனால் ஆயுதப்போராட்டம்தான் தங்களது கொள்கை என்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கவில்லை. அன்று மாவோயிஸ்டுகளுக்கு சி.பி.ஐ.எம்.எல். பீப்பிள்ஸ் வார் என்று பெயர். அதற்குப் பிறகு மறுபடியும் சந்திரபாபு நாயுடு ஆட்சி. மீண்டும் தடை விதிக்கப்படுகிறது. அப்பறும் ஒய்.எஸ்.ஆர், அதாவது காங்கிரசு கட்சியின் ராஜசேகர ரெட்டி, தடையை அகற்றுகிறார். இதுக்கு முன்னால என்.டி.ராமாராவ் தடையை அகற்றியிருக்கிறார்.

எதற்காக இவர்களெல்லாம் தடையை அகற்றியிருக்கிறார்கள்? ஏனென்றால், மாவோயிஸ்டுகள் அல்லது முன்னாள் மக்கள் யுத்தக்குழுவினர் மீது விதிக்கப்பட்ட தடையை, தொடுக்கப்படுகிற தாக்குதலை மக்கள் விரும்பவில்லை. இந்தத்தடையை நீக்கினால்தான் நமக்கு ஓட்டு கிடைக்கும் என்ற ஒரு காரணத்துக்காகத்தான் அவர்கள் தடையை நீக்குகிறார்கள்.

எதற்காகத் தடையை நீக்கினார்கள், எதற்காக தடையை கொண்டு வருகிறார்கள்? இவர்கள் தடை விதிக்கிறார்கள், நீக்குகிறார்கள் என்பதிலிருந்து ஒரு இயக்கத்தினுடைய கொள்கையை சரி அல்லது தவறு என்று முடிவு செய்ய முடியாது. புலிகள் இயக்கமே இல்லை. ஆனால் புலிகள் இயக்கத்துக்கு இன்னும் தடை விதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கோமாளித்தனம் இல்லையா? இந்தத் தடைக்கெல்லாம் பயந்து பதில் சொல்ல முடியாது. இந்தத் தடை என்பது, பி.ஜே.பி.யும், அ.தி.மு.க.வும் உருவாக்குகின்ற ஒரு பூச்சாண்டி. அதற்கு மேல இதில் விசயமில்லை.

இந்த தடையைப் பற்றி பேசும்போது நாம் ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தடையை பற்றி பேசுகிறவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பி.ஜே.பி. பேசுகிறது. ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட அமைப்பு – காந்தி கொலையின் போது, பாபர் மசூதி இடிப்பின் போது! பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து விசுவ இந்து பரிஷத் தடை செய்யப்பட்டது. பஜ்ரங்தள் தடை செய்யப்பட்டது. இதையெல்லாம் ஆதரித்து இவர்கள் குரல் கொடுத்தார்களா இல்லையா? இவர்களெல்லாம் பயங்கரவாத அமைப்பா இல்லையா? அவர்கள் பயங்கரவாத குற்றங்கள் செய்கிறார்களா இல்லையா? இவர்களுக்கு தடையைப் பற்றி பேசுவதற்கு என்ன அருகை இருக்கிறது? இதை யோசிக்க வேண்டும். தடை தடை என்ற பூச்சாண்டியைக் கண்டு பயந்து விடக்கூடாது.

கேள்வி: அப்போ நீங்க மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறீங்களா?

பதில்: மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறீங்கள, இல்லையா என்ற கேள்வியே இந்த வழக்கிற்கு சற்றும் தொடர்பற்ற கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லத் தயங்கி, விலகியதாக கருதக்கூடாது, என்பதனால் இதற்குப் பதில் சொல்றேன்.

மாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டப் பாதையை முன்னிறுத்தி, காடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். அப்படி புரட்சி செய்து விட முடியும்னு அவங்க நினைக்கிறாங்க. நாங்கள் அதை நிராகரிக்கிறோம். நாட்டில் விவசாயிகளும் தொழிலாளர்களும் மாணவர்களும் ஏராளமான உழைக்கும் மக்களும் அன்றாடம் எண்ணற்ற போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். மோடியினுடைய நிலப்பறிச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடக்குது. தொழிலாளர்கள் பொதுத்துறையைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராகப போராடுகிறார்கள். பழங்குடியின மக்கள், காடுகளிலிருந்து வெளியேற்றப் படுவதெற்கெதிராகப் போராடுகிறார்கள். இப்படிப்பட்ட எண்ணற்ற போராட்டங்களின் ஊடாக, ஒரு புரட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பது எங்களுடைய பாதை. இது ஒரு எளிய விளக்கம்.

மற்றபடி, நக்சல்பாரி இயக்கத்துக்கும் உங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று அவர்கள் கேட்பது ஒரு கோமாளித்தனமானக் கேள்வி. நக்சல்பாரி இயக்கத்தின் முப்பதாவது ஆண்டுவிழாவை மக்கள் கலை இலக்கியக் கழகமும் எங்களது தோழமை அமைப்புகளும் மேடைபோட்டு ஊர் ஊராக நடத்தியிருக்கிறோம். இதே சென்னை மாநகரத்தில், நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் போராட்டம் வெற்றிபெற்றபோது, அதற்கு ஆதரவா பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறோம். சென்ற யு.பி.ஏ. கவர்மென்ட் ஆட்சியின்போது, ஆபரேசன் கிரீன்ஹண்ட் என்று மாவோயிஸ்டுகளுக்கு எதிராக வன்முறைக் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அதற்கு எதிராக சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறோம். ஆகையினால், நாங்கள் நக்சல்பாரி இயக்கத்தை ஆதரிக்கிறோமா என்பதை கோவனை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்துக் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. இதோ இப்ப நான் சொல்கிறேனே. அதுபற்றிய நிலை உலகறிந்தது. அது எங்கள் பாடல்களிலும் இருக்கிறது.