privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் கொள்ளையர் உருவாக்கிய கடலூர் வெள்ளம்

மணல் கொள்ளையர் உருவாக்கிய கடலூர் வெள்ளம்

-

டலூர் மாவட்டத்தில் கடந்த 2015 நவம்பர் 9,10 ம் தேதி அன்று மிக அதிகமாக பெய்த கனமழையையொட்டி கடலூர் முழுவதும் தண்ணீரில் தத்தளித்தது. இதற்கு மூன்று முக்கிய காரணங்களை ஏற்கனவே 24.112015 அன்று வெளிவந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.

அதில் முக்கிய காரணம் பெண்ணையாற்றில் மணல் அள்ளுவதற்க்காகவே பெண்ணை ஆற்றின் போக்கையே திசை திருப்பி நீரை கெடிலம் ஆற்றுக்கு திருப்பி விட்டது ஒரு முக்கியமான காரணம். பெண்ணையாற்றில் மணல் கொள்ளை நடக்கிறது என்று ஏற்கனவே அந்த கட்டுரையில் எழுதியுள்ளோம். விழுப்புரத்துக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் இடையே ஆற்றில் மணல் குவாரி அமைத்து கொள்ளை அடித்து கொண்டு இருந்தனர் மணல் கொள்ளையர்கள்.

அங்கு செயல்பட்ட அரசு மணல் குவாரி இடம் பெயர்ந்து கோலியனூருக்கும் பண்ருட்டிக்கும் இடையில் கண்டரக்கோட்டை என்ற இடத்தில் மணல் குவாரி அமைத்துள்ளனர். அடுத்த குவாரி மேல்குமாரமங்கலத்தில் அமைத்து கொண்டு இருக்கின்றனர்.

அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகளுக்கு புறம்பாக சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான டன் மணல் கொள்ளையடிக்கப்படுகின்றன என்ற உண்மை ஒருபுறமிருக்க மணல் கொள்ளைக்கு சாதகமாக பெண்ணையாற்றில் தண்ணீர் வர விடாமல் தடுத்து நிறுத்தும் குற்றத்தையும் செய்துள்ளார்கள்.

தென்பெண்ணையாறு கர்நாடகா மாநிலம் நந்தி துர்கா என்ற இடத்தில் தொடங்கி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டம் வழியாக விழுப்புரம் வந்து கடலூர் சென்று கடலில் கலக்கிறது. இதன் நீளம் 391 கிலோ மீட்டர் தூரம். இந்த பெண்ணையாறு தான் ஐந்து மாவட்டங்களின் நீர் ஆதாரமாக உள்ளது. கிருஷ்ணகிரியில் 38,000 ஏக்கர், தர்மபுரியில் 6250 ஏக்கர், திருவண்ணாமலையில் 17,980 ஏக்கர், விழுப்புரத்தில் 25,000 ஏக்கரும் கடலூரிலும் கணிசமான அளவில் பாசனத்திற்கான பெண்ணையாற்று நீர் பயன்படுகிறது. எனவே தான் இந்த ஐந்து மாவட்டங்களும் ஆற்று பாசன பகுதி என்று அழைக்கப்படுகின்றது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையில் தான் இந்த ஆற்றில் தண்ணீர் வருகிறது.. அதற்கு காரணம் சாத்தனூர் ஆணை நிரம்பினால் தான் பெண்ணையாற்றில் தண்ணீர் வரும்.இந்த தென்பெண்ணையாறு சாத்தனூர் அணைக்கு மேலேயே அதாவது கிருஷ்ணகிரியிலேயே வடபெண்ணையாறு, தென்பெண்ணையாறு என்று இரண்டாக பிரிந்து விடுகிறது. எனவே சாத்தனூர் ஆணை நிரம்பினால் தான் பெண்ணையாற்றில் தண்ணீர் வரும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஓடைகள் இவையெல்லாம் பெண்ணையாறு நீரை தான் ஆதாரமாக கொண்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்துக்கு தேவையான நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதும் பெண்ணையாறுதான். இந்த தென்பெண்ணையாற்றின் மூலம் ஐந்து மாவட்ட மக்கள் பயன்பெறுகிறார்கள். இதில் வரைமுறை இல்லாமல் மணல் அள்ளுகிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆற்றின் போக்கையே திசை திருப்பி மணல் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

cuddalore-floods-1இதே நந்தி மலையில் இருந்து உருவாகக்கூடிய பாலாற்றில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்பொழுது தான் தண்ணீர் போகிறது என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. ஏன் இந்த பத்தாண்டுகளில் பாலாற்றில் தண்ணீர் போகவில்லை என்றால், கர்நாடகாவில் இருந்து போகக்கூடிய ஆறுகளில் தண்ணீர் போகவில்லை என்பது ஒருபுறமிருக்க , குறிப்பாக பாலாற்றில் இருக்க கூடிய மணலை, மணல் கொள்ளையர்கள் ஏறக்குறைய சுத்தமாக கொள்ளையடித்து விட்டார்கள் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பாலாறு பாதுகாப்பு இயக்கம் போன்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். தற்பொழுது பாலாற்றில் மணலே இல்லை. இதே போன்ற நிலையை தான் பெண்ணையாற்றிலும் உருவாக்கிக்கொண்டு இருக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

விழுப்புரம், கடலூரில் இருக்க கூடிய ஆற்று பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவு மணல் அள்ளி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ஏற்கனவே கூறியது போல ஆயிரக்கணக்கான டன் மணல் கொள்ளையடிக்க பட்டிருக்கிறது.இந்த மணல் கொள்ளைக்கு அக்கம் பக்கமாக சில தவறுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உதாரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஆலைகள், கர்நாடகாவில் உள்ள ஆலைகள், இந்த ஆலைகளின் கழிவுகள் எல்லாம் இந்த பெண்ணையாற்றில் தான் விடப்படுகிறது. இந்த ஆலைக்கழிவுகள் நீரோடு கலந்து வரும் பொழுது இந்த ஆற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்கள், அதில் பயிரிடக்கூடிய நெற்பயிர்கள், காய்கறிகள், பல விதமான விவசாய பொருட்கள் என்று அந்த பொருட்களில் எல்லாம் ஆலைககழிவுகளின் தாக்கம் உள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தற்பொழுது கண்டரக்கோட்டை ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ளும்பொழுது பின்பற்ற வேண்டிய பல்வேறு சட்டப்பிரிவுகள் உள்ளது. அந்த சட்டங்களில் உள்ள எந்த பிரிவையும் இந்த மணல் கொள்ளையர்கள் கடைபிடிக்கவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.

1. முதல் விதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தான் மணல் அள்ள வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் இந்த விதிமுறையை யாரும் பின்பற்றவில்லை என்பது அவ்வழியாக போகும் பயணிகள், கிராம மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். 24 மணி நேரமும் தீவிரமாக மணல் அள்ளிக்கொண்டு இருக்கின்றார்கள். எவ்வளவு மணல் தான் ஒரு நாளைக்கு அள்ள வேண்டும் என்று அரசு துறையில் உள்ளவர்களிடம் கேட்டால் RTI யில் போட்டு கேளுங்கள் அல்லது வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்று சொல்வது போல் கூறுகின்றனர். நேரடியாக கொள்ளை நடப்பது கண்முன் தெரிகிறது. ஆனால் இப்படி ஒரு பதிலை அதிகாரிகள் கூறுகிறார்கள். இதுவே ஒரு சட்டவிரோத செயல்.

2. ஆற்றில் மணல் அள்ளும் பொழுது இரண்டு இயந்திரம் தான் பயன்படுத்த வேண்டும், மனித உழைப்பை பயன்படுத்தி தான் மணல் அள்ள வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் ஒரு குவாரியில் பதினோரு அதிநவீன JCB இயந்திரங்கள் , அதுவும் cuddalore-floods-25acre-sand-quarry, மற்றொரு குவாரியில் ஆறு இயந்திரங்கள் உள்ளது. இது எல்லாம் சட்டத்துக்கு புறம்பானது. பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள யார்டில் இந்த எந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது மழை பெய்து சாத்தனூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதால் மணல் அள்ள முடியவில்லை. அதனால் தான் JCB இயந்திரங்கள் அனைத்தும் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கின்றன. கண் முன்னாடி இவ்வளவு சாட்சியங்கள் உள்ளது. கிட்டத்தட்ட 20 JCB இயந்திரங்கள் உள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளை கேட்டால் எதுவும் தெரியாதது போல் நாடகமாடுகிறார்கள். இந்த மணல் கொள்ளை திட்டமிட்டு பகிரங்கமாக நடத்தப்படுகிறது. இந்த அரசு அதிகாரிகளும் அரசின் அனைத்து உறுப்புகளும் பொதுப்பணித்துறை , நீர்பாசனத்துறை, கனிமவளத்துறை , கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி கலக்டர் வரை அனைவரும் இதற்கு துணையாக இருக்கின்றனர் என்பதை தான் நிருபிக்கிறது.

3. மணல் அள்ளினால் நிலத்தடி நீர் பாதிக்கபடுமா? அனுமதிக்கலாம? வேண்டாமா? என்று சென்னையில் உள்ள சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த விதியே கேலிக்கூத்தாக உள்ளது. ஒரு அரசாங்கம் அதன் இன்னொரு உறுப்பிடம் அனுமதி வாங்குவது என்பது பித்தலாட்டம். இது மக்களை ஏமாற்றுவதற்க்கான கண்துடைப்பு நடவடிக்கை. அதாவது அரசாங்கம் எதையும் முறையாக தான் செய்யும் என்று வெள்ளைக்காரன் சொல்வது போல் “ ஒரு நாயை சுடுவதாக இருந்தால் கூட விசாரணை நடத்தி தான் சுடுவோம் என்பது போல் உள்ளது.

4. சுற்றுச்சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற்று விட்டால் கூட மூன்று அடி உயரம், மூன்று அடி அகலம் தான் அள்ள வேண்டும் என்று விதியில் உள்ளது. மூன்று அடி ஏன் சொல்கிறார்கள் என்றால், அள்ளப்படுள்ள மணல்கள் மழைக்காலத்தில் திரும்ப வந்து சேர்ந்து விடும். எப்போதுமே ஆற்றில் மணல் இருக்கும் என்பதற்காக தான். அந்த மணல் தான் நீரை பஞ்சு போல் தேக்கி வைக்கும் வறட்சியான காலங்களில் பயன்படும் என்பதால் தான் மூன்று அடி அதுவும் கையால் தான் அள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் வாரியத்திடம் அனுமதி வாங்கி வந்துவிட்டு விதிகளை மீறி மணல் உள்ளவரை வெறியோடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளிவிடுகிறார்கள்.

உதாரணமாக விழுப்புரம் பக்கத்தில் நடந்த மணல் கொள்ளையின் பொழுது மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் சென்று ஆய்வு செய்தனர். அதனை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு அந்த மணல் கொள்ளையர்கள் வீடு கட்டி தருவது, கோவில் கட்டி தருவது, வீட்டுக்கு வீடு பணம் கொடுப்பது, தீபாவளி, பொங்கல் போன்ற காலங்களில் பணம் அதிகமாக கொடுப்பது, போன்ற செயல்களால் மக்களையே ஊழல் படுத்தி வைத்துள்ளார்கள் என்று தெரிய வந்தது. இன்று மக்களிடம் பணம் இல்லாததால் மணல் கொள்ளையர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்கிறார்கள். நாளை எதிர்காலம் என்ன, நிலத்தடி நீர் இருக்குமா? என்பது பற்றி மக்கள் யோசிப்பது இல்லை. ஆனால் வெள்ளாற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டம் பற்றி பெண்ணையாற்றில் விளக்கி கூறும் பொழுது , ஆற்றை சுற்றியுள்ள 25 கிராம மக்களிடம் எதிர்ப்பு எதுவுமில்லை. இது போல் மக்கள் மவுனமாக இருப்பது, புரிந்து கொள்ளாமல் இருப்பதை பயன்படுத்தி கொண்டு மூன்று அடிக்கு மூன்று அடி மணல் அள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் அதனை தூக்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வெறி கொண்ட அளவிற்கு அள்ளுகிறார்கள்.

இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்று சொன்னால் பெண்ணையாற்றில் 200 அடி மணல் உள்ளது என்று “ஜியாலஜிக்கள் சர்வே” கூறுகின்றது. அதன் படி தற்பொழுது நூறு அடி மணல் அள்ளியிருப்பார்கள். இதனை அனுமதி வாங்கிக்கொண்டு செய்கிறார்கள் என்பது கேலிக்கூத்து. அனுமதி வாங்கினாலும் வாங்கவில்லை என்றாலும் இந்த கொள்ளை நடக்கும். காரணம், ஒரு மீட்டர் அள்ளினால் குவாரி வைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. இது ஆற்றோர கிராம மக்கள் பயன்பாட்டுக்கு தான் பொருந்தும். எனவே தான் வரைமுறையின்றி கொள்ளையடிக்கின்றனர். ஆக மொத்தம் சட்டத்தை மீறினால் தான் மணல் கொள்ளை நடத்த முடியும். மணலை வியாபாரம் செய்ய முடியும் என்பது தெளிவாகிறது.

5. ஆற்றின் இரு கரையோரம் தான் மணல் அல்ல வேண்டும். நடுவில் அல்ல கூடாது என்று விதி உள்ளது. ஆனால் ஆற்றின் கரையோரம் தான் சாலை அமைத்து உள்ளார்கள். cuddalore-floods-roadin-riverஆற்றின் அருகே கும்பகோணம் – சென்னை மெயின் ரோடு உள்ளது. அது மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் ஆற்றினுள் ஆயிரக்கணக்கான லாரி செல்வதற்கு சாலை தரமாக உள்ளது. ஆற்றினுள் சாலை போட வேண்டிய அவசியம் என்ன? காரணம், நடுவில் மணல் அள்ளுவதனால் தான் கரையோரம் சாலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மணல் அள்ளுவதற்க்கான சட்டங்கள் எல்லாம் அரசு சரியாக இருக்கிறது என்று மக்களை ஏமாற்றுவதற்கு தான் பேப்பரில் இருக்கிறதேயொழிய நடைமுறையில் அந்த விதிகள் அனைத்தும் மீறப்படுகிறது.

6. உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு, நிலத்தடி நீர், சாலை போன்றவைகள் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்று கூறுகிறது. ஆனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கண்டரக்கோட்டையில் மணல் குவாரி அமைப்பதற்கு முன்னரே அதன் பாதிப்புகளை விளக்கி வி.வி.மு, பு.மா.இ.மு உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதனை பார்த்த சில சாதிய அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.ஆனால் தற்பொழுது நீர் பற்றாக்குறை வந்துள்ளது. 250 அடி ஆழத்திற்கு கீழே நீர் சென்றுள்ளது என்று அப்பகுதி மக்களே கூறுகின்றனர். . குறிப்பாக புதிதாக பைப் போட்டு அதன் ஆழத்தை அதிகபடுத்தினால் தான் தண்ணீர் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள்.ஆக நிலத்தடி நீர் என்பது மணல் அள்ளப்பட்ட இந்த பதினோரு மாதத்தில் கீழே சென்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக சாலை வசதி என்று கூறுகிறார்கள், கண்டரக்கோட்டையில் ஆரம்பித்து சின்னக்கல்லிப்பட்டு வரை கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழக நெடுஞ்சாலை நாசமாக உள்ளது என்பது அதிகாரிகளுக்கும் தெரியும். இந்த கட்டுரையை படிப்பவர்கள் சென்று பாருங்கள், மனிதர்கள் செல்வதற்கு லாயக்கற்றதாக உள்ளது. இது ஒரு கிராமத்திற்கு செல்லும் சாலை அல்ல. ஆயிரக்கணக்கான லாரிகள்,ஆயிரக்கணக்கான பேருந்துகள் , இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலை. சாலைகள் பாதிப்படையக்கூடாது என்ற விதியை இந்த மணல் கொள்ளையர்கள் துளியளவும் மதிக்கவில்லை.

இந்த அளவிற்கு சட்டங்களை தனக்கு சாதகமாக்கி, அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு, மழைக்காலத்தில் மணலை கொள்ளையடிப்பதற்கென்றே திட்டமிட்டே ஆற்றின் நீர் போக்கை திசை திருப்பி விட்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக மழை பெய்து முடிந்த 18 ம் தேதி வரை இந்த பெண்ணையாற்றில் தண்ணியே போகவில்லை. அன்று மாலை தான் ஆற்றில் தண்ணீர் வந்தது. மழை ஆரம்பிப்பதற்கு முன்பு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினார்கள், சித்தலிங்க மடத்தில் இருந்து கெடிலம் ஆற்றுக்கு நீர் போகும் படி மலட்டாற்றில் தண்ணீரை திறந்து விட்டார்கள். அது நிரம்பியதும் பம்பையாற்றின் வழியாக நீரை திறந்து விட்டார்கள். கடைசியாக சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 117 அடியை எட்டியதும் அதனை தேக்குவதற்கு வேறு வழி இல்லாமல் தான் பெண்ணையாற்றில் திறந்து விட்டிருக்கிறார்கள். அந்த தண்ணீர் தான் தற்பொழுது ஓடக்கூடிய நீர்.

ஆக கடலூரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு முழுக்காரணமும் பெண்ணையாற்றில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை தான் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. குறிப்பாக இந்த குவாரிகள் அனைத்தும் அரசு நடத்துவதாக சொல்கிறார்கள். இல்லை. அமைச்சர் M.C.சம்பத் தான் நடத்துகிறார் என்று அப்பகுதி கிராம மக்கள், வியாபாரிகள் கூறுகின்றனர். அதிமுக, திமுக என்று அனைத்து கட்சிகளும் கொள்ளையடிக்கின்றனர். திமுக ஆட்சியில் மணல் கொள்ளையை எதிர்த்த சம்பந்தம் என்பவர் தான் தற்பொழுது குவாரிக்கு பொறுப்பாக இருக்கிறார் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகளான கிராம நிர்வாக அலுவலர் முதல் கலெக்டர் வரை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதோடு இந்த அரசுக்கட்டமைப்பு முற்றிலும் தோற்றுப்போய் விட்டது என்பது தான் நிரூபணமாகிறது.

-புதிய ஜனநாயகம், செய்தியாளர்.