privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா ?

ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் ஆமீர்கான்கள் வாழ முடியுமா ?

-

aamir-indian-express-award-function
சகிப்பின்மை குறித்து ஆமீர் கான் பேசிய இந்தியன் எக்ஸ்பிரஸ் விருது நிகழ்ச்சி

கிப்புத்தன்மை என்றால் என்ன? காக்கி டவுசர்கள் உலகிற்குப் பாடம் நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக நாட்டில் நடந்து வரும் சில விசயங்களால் தான் அச்சப்படுவதாகவும் அதன் காரணமாக இந்த நாட்டை விட்டு நாம் வெளியேறினால் என்னவென்று மனைவி கிரண் ராவ் தன்னிடம் தெரிவித்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது என்று நடிகர் ஆமிர் கான் பேசியதே விவகாரத்தின் இந்த சகிப்புத்தன்மை அத்தியாத்திற்கான துவக்கம்.

கிரண் ராவ் ஒரு இந்து என்பதும், அவரது கருத்தால் ’அதிர்ச்சியடைந்த’ ஆமிர் கான் பிறப்பால் ஒரு முசுலீம் என்பதும் அனைவரும்
அறிந்தது தான். இதை இசுலாமிய மதவெறியர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில், தூய இசுலாமிய விழுமியங்களின் படி வாழாத ஆமிர் ஒரு பெயர் தாங்கி முசுலீம் என்பது அவர்களது தீர்ப்பு.

aamir-kiran-with-kid
கிரண் ராவ் மற்றும் அமீர் கான்

இப்படியிருக்க, ஆமீர் கான் ஒன்றும் இந்து பார்ப்பனிய தேசியத்தின் மனசாட்சியை அச்சுறுத்தும் ஆளுமை அல்ல. சொல்லப் போனால் இந்து பார்ப்பனிய தேசியத்தின் பாதந்தாங்கும் கருத்துக்கள் அவரிடம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது.’ரங் தே பசந்தியில்’ இருந்து ‘சத்ய மேவ ஜெயதே’ வரையிலான அவரது கடந்த கால திரைக்கதைத் தெரிவுகளில் இருந்தே இதை புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் இந்தியாவில் பிறப்பால் வாழும் பணக்கார – பாலிவுட் – தாராளவாத முஸ்லீம்கள் கூட இந்துமதவெறியின் பொதுப்புத்தி கட்டமைத்திருக்கும் வெறுப்புணர்வின் அடிப்படையில் பார்க்கப்படுகிறார்கள். இதனால் வெளியேற்றம் – அச்சம் குறித்து ஆமீர்கான் பேசியிருப்பது யதார்த்தமான உண்மை.

இந்தப் பின்னணியில் இருந்து அவர் சொன்னதாக (உண்மையில் அவர் சொல்லவில்லை ) சொல்லப்படும் இந்த வெளியேற்றக் கருத்தை முன்வைத்து நடக்கும் விவாதங்களை கவனிக்கலாம்.

முதலில், ஆமிர் கானின் ”கருத்தை” முன்வைத்து அகில இந்திய ஆங்கில ஊடங்களில் ‘விவாதங்கள்’ நடக்கின்றன; இரண்டாவதாக, பாரதிய ஜனதா ஆமிர் கானின் கருத்திற்குப் பின்னுள்ள காங்கிரஸ் சதியைக் ‘கண்டுபிடிக்கிறது’; மூன்றாவதாக, சமூக இணையதளங்களில் கூலிக்கு மாரடிக்கும் மோடி பக்தர்கள் களமிரங்கி ஆமிர் கானை பாகிஸ்தானுக்கு ஓடச் சொல்லி கூவுகின்றனர்; நான்காவதாக, இந்துத்துவ கும்பலின் ‘அதிதீவிர’ பிரிவினர் ஆமிர்கானின் கொடும்பாவிகளைக் கொளுத்தி செய்தியில் இடம் பிடித்துக் கொள்கின்றனர். ஐந்தாவதாக திரைத்துறை மற்றும் இலக்கியத்துறையைச் சார்ந்த நக்கிப்பிழைக்கும் சில ஜந்துகள் இந்தியா போன்ற ஒரு நாடு என்பதால் தானே ஆமிர் கான் பி.கே போன்ற படத்தில் நடிக்க முடிந்தது என்று இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு சான்றளிக்கின்றனர் – இறுதியில் ஆமிர் கானின் சுய விளக்கம்!
நானும் ரவுடி தாண்டா என்கிற வடிவேலுவின் அறிய தத்துவ தோசையை அப்படியே திருப்பிப் போட்டு “நாங்களும் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் தாண்டா” என்பதை நிரூபிக்க இந்துத்துவ கும்பல் கையாண்ட சகிப்புத்தன்மை மிக்க கொடும்பாவி கொளுத்துதல், பாகிஸ்தானுக்கு ஓடச் சொல்லுதல், முசுலீம் நடிகர்களை பாம்புகள் என்று இழிவு படுத்துவது இன்னபிற நடவடிக்கைகளை உலகமே எரிச்சலோடு பார்க்கிறது. அரசர் அம்மணக்கட்டையாக நிற்பதை யாராவது சொல்லித் தொலைத்திருக்கலாம்.

protest-against-aamir-khan_2
ஆமீர் கானுக்கு எதிரான் இந்து மதவெறியர்களின் போராட்டம்

மேற்படி விவாதங்களின் ஊடே, ஆமிர் கான் ஒரு முசுலீமே அல்ல, அவரது கருத்தை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று சில சமூக வலைத்தள வஹாபி வெறியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இடங்களுக்கெல்லாம் தவறாமல் ஆஜராகும் காக்கி டவுசர்கள் மேற்படி கருத்தையும், கருத்து தெரிவித்தவர்களையும் ஆதரிக்கின்றனர். பக்தியிலேயே ஆக கழிசடையான மோடி பக்தி எந்தளவுக்கு மூளையை மழுங்கடிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஆமிர் கானை வஹாபிகள் கண்டிப்பதன் அடிப்படை என்னவென்பதைக் கூட இவர்கள் கவனிக்கவில்லை. இறுதியில் இசுலாமிய மதவெறியர்களும் இந்துமதவெறியர்களும் ஓரணியில் திரள்கின்றனர். இசுலாமிய மக்களோடு இந்த இரண்டு வெறியர்களின் அச்சுறுத்தலில் காலம் தள்ளுகிறார்கள்.

அடுத்து ஆமிர் கானை பாகிஸ்தானுக்கு ஏன் போகச் சொல்கிறார்கள்? இந்த விவாதங்களில் மட்டுமல்ல, வேறு சந்தர்பங்களிலும் பார்ப்பனியத்தை கேள்விக்குட்படுத்துபவர்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவதில் காக்கி டவுசர்கள் குறிப்பாக இருப்பதை கவனித்திருப்போம். ஏன்? பாகிஸ்தானில் கருத்து சுதந்திரத்திற்கு கடுமையான தடை இருப்பதால் அங்கே போனால் இந்தியாவின் அருமையை உணர்ந்து கொள்வார்கள் என்பது இவர்களின் தர்க்கம். அதாவது, ஒப்பிடுவதற்குக் கூட தன்னிலும் மோசமானவனைக் காட்டுவது. “அந்தக் குடிகாரப்பய டெய்லி மூணு ஃபுல்லு அடிப்பான்; நானெல்லாம் ஒன்றரை ஃபுல்லு தானாக்கும்; அதானால் நான் எப்போதும் ஸ்டெடி தான்” என்ற இந்தக் கோட்பாட்டின் காப்புரிமைக்குச் சொந்தக்காரர்கள் டாஸ்மாக் வாசலில் மலந்து கிடக்கிறார்கள் என்பது வேறு விசயம்.

இன்னொரு பக்கம் ஆமிர்கானை முன்வைத்து “சகிப்புத்தன்மை” குறித்து கேள்வி எழுப்புவதே இந்தியாவுக்கு எதிரானது –
பாகிஸ்தானுக்கு ஆதரவானது என்கிற கோணத்தில் இந்துத்துவ கும்பல் திசை திருப்பிக் கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மற்றும் மோடி அரசின் மேல் விமரிசனங்கள் வைப்பதையே இந்தியாவுக்கு எதிரானது என்கிறார்கள். இந்த தர்க்கத்தின் படி, இசுலாமியர்கள் கொல்லப்பட்டாலோ, தலித்துகள் ஒடுக்கப்பட்டாலோ, பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டாலோ, போலிச் சாமியார்கள் நீலப்படங்களில் தோன்றி அருளினாலோ, இன்னும் விலைவாசி உயர்வு, பொதுத்துறையை தாரை வார்ப்பது, லஞ்சம் ஊழல் என்று நாட்டில் காவி பயங்கரவாதிகள் பங்கேற்கும் எந்தக் காரியத்தையும் எவரும் விமரிசிக்க கூடாது – விமர்சித்தால் அது இந்தியாவுக்கு எதிரான சதியாகி விடும்.

ஆமிர் கானின் மனைவி சொல்லி அதிர்ச்சியடைந்ததாக ஆமிர் கான் தெரிவித்திருப்பது தேசதுரோகம் என்று சொல்லி அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் தேச துரோக வழக்குத் தொடர்ந்துள்ளார் ஒரு வழக்கறிஞர். அதிர்ச்சியடைந்த ஆமிர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

protest-against-aamir-khan_1
ஆமீர் கானுக்கு எதிரான் இந்து மதவெறியர்களின் போராட்டம்

ஊடகங்களை எப்படிக் கையாள்வது, கருத்துருவாக்கம் செய்வது எப்படி என்பதில் எல்லாம் தேர்ந்தவர்களான இந்துத்துவ கும்பல் அடுத்த சுற்றுக்குத் தயாராகி இருக்கும். இந்த சுற்றில் தேசபக்திக்கும் தேச துரோகத்திற்கும் ஒரு எல்லைக் கோட்டை வகுத்துள்ளதால் அடுத்த சுற்றில் தம்மை விமர்சிக்கும் ஜனநாயக குரல்களை தேசதுரோகிகள் என்கிற எல்லைக்குள் தள்ள தயாராக இருக்கிறார்கள். பாசிஸ்டுகளின் பார்வையில் கேள்வி கேட்பதே தேசதுரோகம் என்றால் – நாம் தேசத்தைக் காக்க தேசத்துரோகிகள் ஆவதைத் தவிற வேறு வழியில்லை.

இறுதியாக இந்தப் பிரச்சினை “சகிப்புத் தன்மை”யின் பேரில் நடந்தாலும் உண்மையில் இந்துமதவெறியர்களே சகிப்புத் தன்மை அற்று இருப்பதால் அவர்களது கருத்துக்கள் சேம் சைடு கோலாகவே இருக்கிறது. வீட்டில் இறைச்சி வைத்திருந்ததற்காக ஒரு முசுலீம் கொல்லப்படும் நாட்டில் முசுலீம் மக்கள் அச்சத்துடன் வாழாமல் ஆனந்தமாகவா வாழ முடியும்?

ஆமீர் கானின் மனைவி கிரண் பிறப்பால் இந்துவென்றாலும் அவர்களது வாரிசுகள் முசுலீம் மத அடையாளத்துடன் பார்க்கப்படும்
என்பதாலேயே அவரது வெளியேற்றம் குறித்த அச்சம் வெளிப்படுகிறது. சிங்கள இனவெறியின் பிடியில் பீதியுற்று புலம் பெயரும் ஈழத்தமிழர்களைப் போல இந்திய முசுலீம்கள் மட்டுமல்ல, தலித்துகள், பழங்குடி மக்கள் அனைவரும் பார்ப்பன இந்துமதவெறியின் கொடுங்கரங்களில் இருந்து வெளியேறும் விருப்பத்தைக் கொண்டிருந்தால் அதில் என்ன தவறு?

இப்படி ஒருநாட்டின் குடிமக்கள் வெளியேறுவதோ, வெளியேறும் விருப்பத்தை கொண்டிருப்பதோ அந்த நாட்டில் வெளிறுபவர்களை வெறியோடு வதைக்கும் மதவெறியர்களின் குற்றம் மட்டுமே. அந்த வெறியர்களை வாயளவில் கூட தண்டிக்காமல் அவர்களோடு சுமூகமாக வாழும் இதர குடிமக்கள்தான் இந்த வெளியேற்றம் குறித்து வெட்கப்படவேண்டும், குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும்.

மாறாக குற்றவாளிகளே நீதிபதிகளாவும், தேசபக்தர்களாகவும் உலா வந்தால் எதைக் கொண்ட அடிப்பது?

– தமிழரசன்