Tuesday, June 28, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க நெய்வேலி மக்களுக்கு தோள் கொடுக்கும் பு.ஜ.தொ.மு

நெய்வேலி மக்களுக்கு தோள் கொடுக்கும் பு.ஜ.தொ.மு

-

கடலூர்

டலூர் மாவட்டம் நெய்வேலி என்றாலே நினைவுக்கு வருவது மின்சாரம் தான். NLC என்று அழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு சொந்தமாகும்.. இது மினி ரத்னா என்று அழைக்கப்படுகிறது. வருடத்திற்கு 24 மில்லியன் டன் பழுப்பு எரிபொருள் உற்பத்தி செய்கிறது; இதன் மின்சார உற்பத்தி நிறுவு திறன் 2490 மெகா வாட். இதில் 1167 மெகா வாட் தமிழகத்திலும் எஞ்சியவை அண்டை மாநிலங்களாலும் பயன்படுத்தப்படுகிறது.

cuddalore-flood-relief-1இந்த பிரமாண்டத்திற்கு பின் பல ஆயிரம் தொழிலாளர்கள், மக்களின் வியர்வையும், கண்ணீரும் தான் உள்ளது. உதாரணமாக நிலக்கரி வெட்டி எடுக்க வேண்டும் என்பதற்காக பல நூற்றுக்கணக்கான கிராமங்களில் வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். குறிப்பாக 1955, 1990, 2015 ஆகிய ஆண்டுகளில் மூன்று கட்டங்களாக கிராம மக்களை வெளியேற்றி நிலக்கரி வெட்டி எடுக்கின்றனர். அதன் அடிப்படையில் 3 வது கட்டமாக கங்கைக்கொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வாழ்ந்து வந்த மக்களை வெளியேற்றி நெய்வேலி ஆர்ச.சி கேட் அருகில் மாற்று இடம் கொடுத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்..

cuddalore-flood-relief-5அவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்பொழுது வசித்து வரும் பகுதி தான் A பிளாக் மாற்று குடியிருப்பு பகுதி. இப்பகுதியில் கங்கைகொண்டான், சிரக்குப்பம், வானதாயபுரம், கல்லுக்குழி, மாதவராயபுரம், அத்திப்பட்டு, அம்பேத்கர் நகர், கத்தாழை, கரிவட்டி, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய ஒன்பது கிராம மக்கள் வசிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் பள்ளிக்கூடம் இல்லை, சாலை வசதிகள் கிடையாது, பல்வேறு குடிசை வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை, ஏதேனும் அவசரத்தேவை என்றால் கூட ஐந்து கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். தற்பொழுது தனித்து விடப்பட்ட தீவு போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வசித்து வருகின்றனர்.

cuddalore-flood-relief-2இங்கு வசிக்கும் மக்களுக்கு நிரந்தரமான வேலை எதுவும் இல்லை. இப்பகுதியில் சிலோன் குவாட்டர்ஸ் என்ற இடத்தில் மட்டும் ஒரு சிறிய ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது. “அங்கு சென்றால் எங்களுக்கு மருத்துவம் பார்ப்பது இல்லை. உங்கள் ஊருக்கு என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்” என்கிறார்கள். இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாடி வதங்கிக் கொண்டிருந்த மக்களை கடந்த மாதம் பெய்த கனமழையால் வீடு, உடைமைகள் என அனைத்தையும் இழந்து உண்ண உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.

ஏற்கனவே என்.எல்.சி நீரை வெளியேற்றியதன் மூலம் அந்தத் தண்ணீர் முத்தாண்டி குப்பம் வழியாக சென்று பல கிராமங்களை அழித்து வருகின்றது.

cuddalore-flood-relief-4மாற்று குடியிருப்பில் வசிக்கும் தினக்கூலி, சுரங்க வேலை என்று செய்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தற்போது வேலைக்கு போவதற்கு கூட வழி இல்லாமல் உள்ளனர்.

இதுவரை அரசின் நிவாரணமோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லவோ கூட அதிகாரிகள் செல்லவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள், அரசின் அலட்சியத்தையும், NLC-யின் துரோகத்தையும் கண்டித்து “A பிளாக்” மாற்று குடியிருப்பு மக்கள் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி சுவரொட்டி ஒட்டிய பின்னர் தான் அரசு உறுப்புகளும், என்.எல்.சி நிர்வாகமும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் கவனத்தை திரும்பியது. இவை அனைத்தும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அமைப்பு தோழர்களின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பிறகு நடைபெற்றவை.

cuddalore-flood-relief-6கடந்த இரண்டு நாட்களாக NLC நிர்வாகம் உணவு வழங்கி வருகிறது. அதுவும் ஒரு வீட்டிற்கு ஒரு கப் தான். அதையே அனைவரும் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். மேலும் அப்பகுதியில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்கு வாய்க்கால் வெட்டி விடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சில இஸ்லாமிய அமைப்புகளும் உணவு உள்ளீட்ட பொருட்களை வழங்கின.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி புதுச்சேரி சார்பாக, அரிசி, துவரம் பருப்பு, புளி, சேமியா, மிளகாய், என்ணெய் உள்ளிட்ட 12 வகையான சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

அரசு நினைத்தால் மக்களுக்கான தேவைகள் அனைத்தையும் செய்ய முடியும். ஆனால், செய்யவில்லை. செய்யவும் மறுக்கிறது. செய்பவர்களையும் தடுத்து நிறுத்துவதோடு மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. எனவே இந்த அரசிடம் நிவாரணம் எதிர்பார்க்க முடியாது. இது செயலிழந்து விட்டது. இனி இந்த அரசு என்பது மக்களுக்கானது அல்ல. இதனை வீழ்த்தி விட்டு மக்களே அதிகாரத்தை கையில் எடுப்பது தான் தீர்வு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டிய தருணம் இது……

தகவல்:

வினவு செய்தியாளர்,
கடலூர் மாவட்டம்.

சென்னை PRPC

flood-relief-chennai-prpc-5சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என பல மாவட்டங்களில் பெய்த  தொடர் மழையால் மக்கள் தங்கள் வீடுகளை, உடைமைகளை, உறவுகளை இழந்து தவிக்கிறார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறுக, சிறுக சேமித்த குறைந்த பட்ச செல்வங்கள் உட்பட அனைத்தையும் தொலைத்துவிட்டு சொந்த ஊரிலேயே அகதிகளாக பள்ளிக்கூடங்களிலும், திருமண மண்டபங்களிலும் அடைக்கலமாகியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு நிர்வாகம் எப்பொழுதும் போல தன் குணம் மாறாமல் அலட்சியமாக செயல்படுகிறது. மக்களின் இழப்புகளை, இறப்புகளை குறைத்து காண்பிப்பதில் தனது மொத்த கவனத்தையும் செலுத்துகிறது.

ஒவ்வொரு பகுதியிலும் பகுதி இளைஞர்களும், மக்களும் தான் எல்லா வகைகளிலும் உதவுகிறார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள், மக்களுக்கு உதவுவது நமது கடமை என்ற உணர்வுள்ளவர்கள், புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள், ஜனநாயக சக்திகள் தம்மால் இயன்றதை விடவும் அதிகம் சேகரித்து துன்பபடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தவிக்கும் மக்களுக்கு உதவ களத்தில் இறங்கியது.  கெல்லீஸ் பகுதியில் உள்ள லாக்மா நகரில் தரைத் தளத்தில் உள்ள பல வீடுகளுக்குள்ளும் இடுப்புக்கு மேலே வெள்ள நீரும் சாக்கடை நீரும் கலந்து உள்ளே புகுந்ததால், தங்கள் வீடுகளை விட்டு, அருகில் உள்ள ஒரு சர்ச்சில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை சந்தித்து பேசியதில், உணவும் நீரும் பலரும் விநியோகிக்கிறார்கள்.  போர்வை, பாய் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என நம்மிடம் தெரிவித்தார்கள்.

தருகிற போர்வை பயன்படும் வகையில் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் கோஆப் டெக்ஸ்-ல் கொள்முதல் செய்தோம்.  நிவாரண பொருட்கள் தருபவர்கள் பகுதியில் முன்னாடி இருக்கும் சில வீடுகளுக்கு கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள். பலருக்கு கிடைப்பதில்லை என நம்மிடம் தெரிவித்ததின் அடிப்படையில்,  நமது அமைப்பு தோழர்கள் வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்ட வீடுகளை கண்டறிந்து டோக்கனை விநியோகித்தார்கள். அப்படி விநியோகிக்கும் பொழுது தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். கையில் உள்ள போர்வைகள் போதாது என்பதை உணர்ந்தோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சமூக அக்கறை கொண்ட நபர்கள் சிலரும் உதவ நிறைய போர்வைகள் வாங்கினோம்.

நேற்று அடாத மழையிலும் டோக்கன் தரப்பட்டவர்களுக்கும், மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கும் போர்வைகளை முறையாக விநியோகித்தோம்.

ஒரு அபார்ட்மெண்டில் வேலை செய்யும் ஒரு காவலாளி தனக்கும் ஒரு போர்வை வேண்டும் என கோரினார்.  ”வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கிறோம். நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள். தருகிறோம்.  நாங்கள் சொல்வதில் ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள்” என்றோம். “நீங்கள் செய்வது தான் சரி! நான் கேட்டது தான் தவறு” என்றார் ஒரு தொழிலாளிக்கே உள்ள நேர்மையுடன்!

நன்கொடை தந்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, இன்னும் சில நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டிருக்கின்றனர். நாம் இன்னொரு பகுதிக்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருக்கிறோம்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை
தொடர்பு கொள்ள : 9094666320

தஞ்சை நிவாரண முகாம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க