privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககடலூர் மக்களுக்கு தேவையான நிவாரணம் எது ?

கடலூர் மக்களுக்கு தேவையான நிவாரணம் எது ?

-

டலூர் மாவட்டத்தில் 2015 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதனையொட்டி கேட்கக்கூடிய நிவாரணம் என்பது பொதுவாக எப்படி பார்க்கப்படுகிறது? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பதாக ஊடகங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரப்படுகிறது.

Jpegஇந்த நிவாரணத்தை பொறுத்த வரை இரண்டு வகையாக பிரிக்கலாம்.

ஒன்று மக்களுக்கு உடனடியாக செல்லக்கூடிய உதவிகள், அதாவது வீடுகளை இழந்து, வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து உடமைகளை இழந்து நிற்கக் கூடிய , முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக தேவை என்பது மூன்று வேளை உணவு , பாதுகாக்கப்பட்ட குடிநீர், குழந்தைகளுக்கு பால், முதியோர்களுக்கு மருந்துகள், குளிருக்கு போர்வை போன்றவை தான் உடனடியாக தேவை. ஆனால் சில அறிஞர்கள், “இது போன்ற உதவிகளை எல்லோரும் செய்கிறார்கள், தேவை அதுவல்ல நிரந்தர தீர்வு தான் வேண்டும்” என்று பேசுகிறார்கள்.

தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்ப்பது தான் நிரந்தரமான தீர்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. ஆனால், நிரந்தர தீர்வை பற்றி பேசும் போதே உடனடி தீர்வான வேளைகளில் ஈடுபட்டுக்கொண்டே அதனை உத்தரவாதப்படுத்துவது என்பது தான் இன்றைக்கு அவசியமான வேலையாக உள்ளது.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தவை. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு தான் விழுப்புரம் தனியாக பிரிக்கப்பட்டது. கடலூரை பொறுத்த வரை ஒவ்வொரு மழையின் போதும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. ஏனென்றால் கடலூர் ஒரு வடிகால் மாவட்டம். குறிப்பாக சேலம், கரூர்,பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து பாயும் தண்ணீர் இந்த மாவட்டத்தின் வழியாக தான் சென்று கடலில் கலக்கிறது.

Jpegகாவிரியில் நீர் வரத்து அதிகமானால் அவை கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலூர் வந்து கடலில் கலந்து விடும். ஆகவே இந்த மாவட்டம் வடிகால் பிரதேசமாக இருப்பதால் நிரந்தரமாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மேலும், இந்த மாவட்டத்தில் ஐந்து முக்கியமான ஆறுகள் ஓடுகின்றன. வெள்ளாறு, பரவனாறு, மணிமுக்தாறு, கெடிலம், பெண்ணையாறு ஆகியவை இம்மாவட்ட்டத்தின் வழியாக ஓடுவதனால் மழைக்காலங்களில் 100 டி.எம்.சி தண்ணீர் இவ்வழியாக செல்ல வேண்டி இருக்கிறது. எனவே அனைத்து நீர்நிலைகளும் பராமரித்து பாதுகாக்கப்பட்டு வந்தால் தான் மக்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு செய்வது தான் நிரந்தர தீர்வாகவும், நிரந்தர பணியாகவும் இருக்க முடியும்.

இதில் என்ன தவறு நடந்துள்ளது என்றால் கடந்த 15 ஆண்டுகளாக இங்கு உள்ள நீர்நிலைகள் எதுவும் தூர்வாரப்படவில்லை. அதனால் தான் 2000-க்கு பிறகு இது மூன்றாவதாக மிகப்பெரிய இழப்பாக ஏற்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் மட்டும் நிவாரணம் பற்றி பேசுவது மற்றபடி மழை விட்ட பிறகு பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவது என்ற வேலையை தான் அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

Jpegசில அறிஞர்கள் சொல்வது போல் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றால் இந்த சூழலில் யாராவது முன் வருவார்களா? நிரந்தர தீர்வை யார் செய்ய வேண்டும் என்றால் அரசு தான் செய்ய வேண்டும். ஆனால் செய்ய வேண்டிய அரசோ குற்றவாளியாக உள்ளது. நீர்நிலைகள், குளம் குட்டைகள், ஏரிகள், என அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்வதற்கு காரணமாக இருப்பவர்கள் இந்த அதிகாரிகள் தான் எனும் போது அவர்கள் இந்த வேலையை செய்வார்களா என்றால் செய்ய மாட்டார்கள். ஆக அரசு செய்ய மறுப்பதை மக்களே செய்ய வேண்டும்.

இந்தத் தருணத்தில் நாம் உடனடியாக செய்ய வேண்டியது வேலை என்னவென்றால் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பார்த்து ஆறுதல் சொல்வது, “நீங்கள் தனி ஆட்கள் இல்லை. உங்களை பாதுகாக்க பல்வேறு மாவட்ட மக்கள் இருக்கிறார்கள், உங்களை பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை” என்று ஆறுதல் கூற வேண்டும். இந்த ஆறுதல் சொல்லக்கூடியவர்கள் வெறும் கையோடு போக மாட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். அவ்வாறு போகக்கூடியவர்களை முறைபடுத்தி கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் தான் உள்ளது.

Jpegஆனால் எந்த பொறுப்பும் இல்லாமல் அமைச்சர்கள், அதிகாரிகள் ‘அம்மாவின் ஆட்சியில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது’ என்று கணக்கு காட்டும் வேலையை மட்டும் செய்கின்றனர்.

எங்கிருந்தோ கொண்டு வரும் நிவாரண பொருட்களை கூட வழி மறித்து கலெக்டர் அலுவலகத்துக்கு கடத்தி சென்று அம்மாவின் முகம் ஒட்டி அனுப்பும் வேலை நடக்கிறது. இதற்கு அவர்கள் கூறும் காரணம், ‘தன்னார்வலர்கள் கொடுப்பதை மக்களே வழிமறித்து பிடுங்கிக் கொள்கிறார்கள். எனவே அலுவலகத்தில் இருந்து நிவாரணத்தை முறையாக வழங்குவோம்’ என்கிறார்கள்.

ஏற்கனவே நவம்பரில் பெய்த மழை விட்டு கிட்ட தட்ட இரண்டு வார காலம் ஆகிவிட்டது. இது டிசம்பரில் பெய்த இரண்டாவது மழை. “இது வரையிலும் அதிகாரிகள் வரவில்லை, கணக்கு எடுக்கவில்லை” என்பதே மக்களின் குமுறலாக இருக்கிறது. இனிமேல் எப்ப கணக்கு எடுத்து எப்ப நிவாரணம் கொடுப்பார்கள் என்பதற்கு ஏதாவது உத்திரவாதம் இருக்கிறதா என்றால் இல்லை.

Jpegஇன்று மக்கள் பசியில் இருக்கிறார்கள், உணவு இல்லை, குழந்தை பாலுக்கு அழுவுகிறது, மருத்துவ ரீதியாக ஜுரம்,காய்ச்சல் தலைவலி என்று பல பிரச்சனைகள் பல இருக்கின்றன. இதற்குத் தீர்வு இல்லை. பிறகு கணக்கெடுத்து கொடுப்போம் என்பதெல்லாம் பச்சை அயோக்கியத்தனம். இந்த அயோக்கியத்தனத்தை முதலில் நாம் தட்டி கேட்க வேண்டும் தடுத்து நிறுத்த வேண்டும்.

நிவாரணம் கொடுக்க வருபவர்கள் மக்கள் தவிக்கிறார்களே என்று தான் கொண்டு வருகிறார்கள். அதையும் பிடுங்கி கொண்டு பின்னாடி தருவோம் என்பது இந்த மாவட்ட நிர்வாகத்தின் கையாலாகாதனத்தை தான் காட்டுகிறது. முதலில் இந்த மாவட்ட நிர்வாகம், தான் ஆளத் தகுதியிழந்து விட்டதை ஒப்புக்கொண்டு விலக வேண்டும். மக்களே ஆங்காங்கு ஒருங்கிணைந்து கொண்டு நிவாரணப் பொருட்களை முறையாக விநியோகிக்க முடியும். அதற்கு பல்வேறு ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு அமைப்புக்கள் துணை நிற்கும்.

இந்த நிவாரணம் கோரக்கூடியவர்களை மூன்று வகையாக எடுத்துக் கொள்ளலாம்.

Jpeg1. கடலூர் மாவட்டத்தில் 1.70 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வகையான பயிர்களும் நாசமாகியுள்ளது. எனவே நிலத்தை சரி செய்ய வேண்டும், தண்ணீரை வெளியேற்ற வேண்டும், நிலங்களில் உள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும். மீண்டும் விவசாயம் செய்வதற்கு உகந்தவாறு அதை முறைபடுத்தி கொடுக்க வேண்டும் . அதற்கு லட்சக் கணக்கில் செலவாகும். அப்படிப்பட்ட நிவாரணம் ஒருவகை.

2. வீடுகளை இழந்தும், உயிர்களை, உடமைகளை இழந்தும், கால்நடைகளை இழந்தும் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை கட்டித்தர வேண்டும். வீடு கட்டி தருவது என்பது உடனடியாக சாத்தியமில்லை. எனவே பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தையும் உடனடியாக கணக்கெடுத்து அவற்றுக்கு எத்தனை கோடிகள் செலவாகுமோ அதனை உடனடியாக ஒதுக்க வேண்டும்.

இடிந்த வீடுகளுக்கு மட்டும் தான் பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்று அரசு அறிவித்திருப்பதே முதலில் அயோக்கியத்தனம். கட்டிட வீடாக இருந்தாலும் அதற்குள் தண்ணீர் புகுந்து விட்டால் அதன் தன்மையே மாறி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. அதன் தாங்கும் திறன் எல்லாம் தளர்ந்திருக்கும். அதனால் கட்டிட வீடாக இருந்தாலும், வீடு இடிந்திருந்தாலும், கூரை வீடாக இருந்தாலும் அதற்குரிய தொகையை வழங்க வேண்டும்.

Jpegகூரை வீடுகள் அனைத்தையும் கட்டிட வீடாக கட்டித்தர வேண்டும். கூரை வீடு இருந்தால் அது அப்படியே தான் இருக்க வேண்டுமா? கூரை வீடு தான் அரசின் கொள்கையா? தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற போகிறோம் தொலை நோக்கு திட்டம் உள்ளது என்பதெல்லாம் என்ன ஏமாற்று தானா… ஆகவே கூரை வீடுகள் இருந்தால் அதனை கட்டிடமாக மாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு.

ஆனால், நவம்பரில் மழை பெய்தது வீடுகள் சேதமடைந்து விட்டது. தற்பொழுது சென்று பார்க்கும் அதிகாரிகள் எதுவும் ஆகவில்லை. எனவே உங்களுக்கு நிவாரணம் இல்லை என்று கூறுகிறார்கள். அதிகாரிகள் கூறுவதை போலவே நிவாரணம் வழங்க நினைப்பவர்களும் கூறுகிறார்கள்.

எப்பொழுது பாதிப்படைந்ததோ அப்பொழுது வரவில்லை. அதன் பிறகு ஒருவாரம் கழித்து வந்து பார்த்தால் அது வரைக்கும் தண்ணீர் வடியாமல் இருக்கனுமா? வீடு விழுந்திருந்தால் அதைத் தூக்கி நிறுத்த மாட்டார்களா? தன்னை பாதுகாக்க வேண்டும், தொடர்ந்து மழை பெய்து வருகிறது, கூரை வீட்டில் வசிப்பவார்கள் எங்கு போவார்கள். இருப்பதோ ஒரு அறைதான். அங்கேயே படுக்க வேண்டும், தூங்க வேண்டும். அதற்காக தான் மக்களே சரி செய்து கொள்கிறார்கள்.

Jpegமக்களே தங்கள் முயற்சியில் செய்து கொள்வதை கூட அதிகாரிகள் இது எல்லாம் நன்றாக உள்ளது. வீடுகள் விழவில்லை என்று நிவாரணம் வழங்க மறுப்பது எல்லாம் பச்சை அய்யோக்கியத்தனம்.

3. இந்த மாவட்டத்தை பொறுத்த வரை பெரும்பாலான மக்கள் கூலி விவசாயிகள் . அதுவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை பொறுத்த வரை விவசாய கூலிகள். கொத்தனார், பெயிண்டர் போன்ற அடிக்கட்டுமான வேலையில் இருப்பவர்கள். மழைக்காலத்தை பொறுத்தவரை வேலையின்மை என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. கட்டிட வீடாக இருந்தாலும், தண்ணீர் மட்டும் புகுந்து வடிந்தவையாக இருந்தாலும் அந்த மக்களுக்கு உட்பட அனைவருக்குமே நிவாரணம் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் தான் நிவாரணம். வீடு இடிந்தால் நான்காயிரம், சுவர் விழுந்தால் மூவாயிரம் என்பதெல்லாம் ஏமாற்று தான். ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே.

Jpegநிவாரணம் என்பதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், மக்கள் செலுத்தக் கூடிய வரியில் இருந்து தான் அரசு இயங்குகிறது. நாம் வாங்கக்கூடிய ஒவ்வொரு பொருளிலும் வரி கட்டுகிறோம். கிராம நிர்வாக அலுவலர் முதல் கலெக்டர், அமைச்சர்கள் , முதலமைச்சர்கள் வரை வாங்கும் சம்பளம் அனைத்தும் மக்கள் தான் கொடுக்கிறார்கள். அந்த மக்கள் வீடிழந்து வாழ்க்கையை இழந்து துயரத்தில் இருக்கும் போது மக்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

நிவாரணம் என்பது பிச்சை கிடையாது. அரசு மக்களுக்கு செய்தே ஆக வேண்டிய பொறுப்பு உள்ளது. அந்த வகையில் தான் நிவாரணத்தை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ “அம்மா கொடுத்துட்டாங்க கிடைத்ததை வாங்கிகொள்ளுங்கள் , அல்லது எப்ப கொடுக்கிறார்களோ அப்ப வாங்கிகொள்ளுங்கள்” என்று அதிகாரிகள் சொல்வது கண்டிக்கத்தக்கது. ஆட்சியதிகாரத்தில் அமர்த்திய இந்த மக்களை ஏமாற்றும் ஒரு துரோக நடவடிக்கையே.

ஆகவே நிவாரணம் தர நினைக்கும் மக்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு போய் சேரவேண்டும் என்ற உங்களுடைய உணர்வு சரியானது. குறிப்பாக கடலூர் மாவட்டம் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இது மூன்றாவது மிகப்பெரிய பாதிப்பு இதற்கு உதவ வேண்டும் என்று நினைக்க கூடிய மக்களுக்கு கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மற்றும் வி.வி.மு, பு.மா.இ.மு, புஜதொமு சார்பாக நாங்கள் தெரிவித்து கொள்வது என்னவென்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிவாரணம் என்பதை இதன் அடிப்படையில் புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம்….

கடலூர் மாவட்டத்தில் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் எண்:

தோழர் து. பாலு,
எண்: 6, கருமாரப்பேட்டை,
மஞ்சக்குப்பம், கடலூர்,
தொலைபேசி எண்: 8110815963

தோழர் பழனிச்சாமி,
எண்: 5, காட்டாமணிக்குப்பம் வீதி,
முத்தியால்பேட்டை, புதுச்சேரி – 3,
தொலைபேசி 9597789801

சென்னையில் உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:

தோழர் வெற்றில்வேல் செழியன்,
மக்கள் அதிகாரம் சென்னை வட்டார ஒருங்கிணைப்பாளர்,
தொலைபேசி எண்: 9176801656

– வினவு செய்தியாளர்.
கடலூர்.