privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மழை வெள்ளம் : தமிழக அரசுதான் குற்றவாளி - மக்கள் அதிகாரம்

மழை வெள்ளம் : தமிழக அரசுதான் குற்றவாளி – மக்கள் அதிகாரம்

-

மக்கள் அதிகாரம் தமிழ்நாடு
நெ.5/9, எஃப்.எம் பிளாசா, 3-வது மாடி, பேக்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 01

10.12.2015

பத்திரிக்கைச் செய்தி

Jpegடந்த நவம்பர் மாதம் தொடங்கி இரண்டு மாதங்களாகத் தமிழகத்தை உருக்குலைத்து, தமிழக மக்களது வாழ்வுக்குச் சர்வநாசம் விளைவித்தது இயற்கைப்பேரிடரால் நேர்ந்தவை அல்ல. இவை ஆட்சியாளர்களே விளைவித்த பேரிடர், பேரழிவுகள்தாம். இவை குறித்து, “மக்கள் அதிகாரம்” அமைப்புக்கான கொள்கை அறிக்கையில் சொல்லியுள்ளவாறு “இயற்கைப் பேரிடர், பேரழிவுக்கு வழிவகுக்கும் சுற்றுச்சூழல் நாசம்” மட்டுமல்ல, நிவாரணங்கள் என்ற பெயரில் உள்ளிட்டு நடப்பவை எல்லாம் நமது நாட்டின் அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பில் நேர்ந்துள்ள நெருக்கடியைக் குறிப்பவைதாம்.

இவை நாட்டின் கட்டமைப்புத் தோல்வியைக் குறிப்பதாக விவரம் புரிந்த பலரும் சொல்லுகிறார்கள். எதிர்பாராது, தற்செயலாக இயற்கையாக ஏற்பட்ட விபத்துக்கள் அல்ல. இலாப வெறிபிடித்த கொள்ளையர்கள் விளைவிக்கும் விபத்துக்கள், உயிர்ப் பலிகள்தாம். இவ்வாறு நடக்கும் பெருநாசங்கள் நாளும் பெருகி வருகின்றன. இனியும் இவைபோன்ற பேரழிவுகள் நிகழாமல் தடுப்பதற்குரிய ஏற்பாடுகள், வழிவகைகள், அதற்கான அறிகுறிகள்கூட ஏதும் இல்லை. இம்மாதிரியான குற்றங்கள் மீதான விசாரணைகள், வாதப்பிரதிவாதங்கள், பரிசீலனைகள் எல்லாமுமே முட்டுச்சந்துக்குப்போய் மோதி நின்று விடுகின்றன.

இவை, அரசியல் கட்சிகளும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் ஆளத் தகுதி இழந்து விட்ட நிலையையும், அரசின் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து, எதிர்நிலைச் சக்திகளாக மாறிவிட்ட நிலையையும் நிரூபிக்கின்றன. இப்போது தமது வாழ்வாதாரங்களையும் உற்றார் உறவினர்களையும் இழந்து தவிக்கும் மக்கள், தொலைக்காட்சிக் காமிரா முன்பு கதறுவது இதற்குச் சாட்சியமாக விளங்குகின்றன.

வளர்ச்சி, முன்னேற்றம் என்று என்னதான் ஆட்சியாளர்கள் ஒருபுறம் கூச்சல் போட்டாலும் அதில் ஆங்கிலேயக் காலனியவாதிகள் கொஞ்சமாவது காட்டிய, மேற்கொண்ட நீண்டகாலதொலைநோக்குப் பார்வை, பொதுநல-மக்கள் நலக் கண்ணோட்டம் கூட இவர்களிடம் கிடையாது. விஷன் 2023 போன்ற திட்டங்கள் எல்லாம் அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களின் கொள்ளைக்காகவே வகுக்கப்பட்டு நீர், நில, இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன.

தமது நலன்களின் தேவைக்கான அடிப்படைக் கட்டுமானங்களை ஆங்கிலேயக் காலனியவாதிகள் நிறுவியபோதுகூட அதற்காக அவர்கள் திரட்டி வைத்திருந்த இயற்கை, நீர், நில அமைப்பு குறித்த அடிப்படை விவரங்கள், அவற்றின் மேலாண்மைக்காக வகுக்கப்பட்ட முந்தைய திட்டங்கள் எல்லாம் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக சிதைக்கப்பட்டன. புதிய நிலைமைகள், தேவைக்காக வகுக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் பொதுநல-மக்கள்நல மற்றும் நீண்டகால-தொலைநோக்குப் பார்வையிலானவை அல்ல. குறுகிய காலக் கொள்ளையைக் குறிவைத்து, அவையும் அராஜகமான முறையில் அமலாக்கப்படுகின்றன.

கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி, தண்ணீர் பயிர்களோடு, விவசாய நிலங்களையும் அடியோடு அடித்துக் கொண்டுபோனது. மேலும் கொட்டித் தீர்த்த மழை மணற் கொள்ளையர்களால் சூறையாடப்பட்ட வெள்ளாறு, கெடிலம், பரவலாறு ஆறுகளினூடே பெருவெள்ளமாக ஓடி, அம்மாவட்ட விவசாயிகளோடு கிராமங்களையே அடித்துக் கொண்டு போனது. அதன் கோரத் தாண்டவம் இன்னமும் அடங்கவில்லை.

தூத்துக்குடிக்குள் பாய்ந்த காட்டாற்று வெள்ளம், இப்போதும் மேற்குத் தொடர்ச்சி மலையில் விடாது பெய்யும் பேய் மழையால் அங்குள்ள அணைகள் தாங்காது குமரி, நெல்லை மாவட்டங்களில் தாமிரவருணி முதலிய ஆறுகளின் பெருவெள்ளம் மக்கள் வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழையால் விளைந்து நின்ற பயிர்கள் பாழாகி விட்டன.

நெடுங்காலமாக சென்னையின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்குவன செங்குன்றம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள்தாம்; வரம்புக்குட்பட்ட புதிய வீராணம் திட்டம் மற்றும் கிருஷ்ணா நீர் திட்டங்கள். கடந்த கோடையில் அவையும் வறண்டுபோய்விட்டன. அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மட்டுமே முக்கிய மழைநீர் மற்றும் சாக்கடை வடிகால் வழித் தடங்கள். புதிய நீர் ஆதாரங்களோ, மழைநீர் மற்றும் சாக்கடை வடிகால் வழித் தடங்களோ ஏற்படுத்தப்படவேயில்லை.

ஆலோசனைகள், ஆய்வுகள், திட்டங்கள் வகுக்கப்பட்டும், 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிட்டும் கிடப்பிலேயே கிடக்கின்றன. இருக்கின்ற குடிநீர் ஆதாரங்களும் கார்ப்பரேட் தொழில் நிறுவன, வீடு-விட்டுமனை, கல்விக் கொள்ளையர்கள் அரசு-ஆளுங் கடசி ஆக்கிரமிப்பாளர்களாலும் வளைத்துப் போடப்பட்டு விட்டன. எஞ்சிய பகுதிகள் துர்வாராமல், மேடுதட்டி,முள்காடுகளாகிப் போயிருந்தன.

ஆகவே, பருவ மழை தொடங்கிய இருவாரத்திலேயே, சென்னைக் குடிநீருக்காக வழக்கமாகத் தேக்கிவைக்கும் அளவை ஏரிகள் அடைந்து விட்டன. கடும் மழைக்கான வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது; குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் சென்னைக் குடிநீருக்காக வழக்கமாகத் தேக்கிவைக்கும் அளவை விரைவில் எட்டிவிடும் என்று கணித்த பொதுப்பணித் துறை பொறியாளர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீரைத் திறந்து விடுவதற்கு பரிந்துரைக்கும் கோப்பை நவம்பர் 17 அன்று தலைமைச் செயலருக்கு அனுப்பியுள்ளார். அடுத்தடுத்து நினைவூட்டலும் அனுப்பினார். வழக்கம்போல புரட்சித்தலைவி அம்மாவின் உத்திரவுக்குக்காக தலைமைச் செயலரின் மேசையில் அந்தக் கோப்பு காத்துக்கிடந்தது.

14 நாட்களுக்குப் பிறகு, ஒரேநாளில், 45 செ. மீக்கு மேல் பேய்மழை பெய்ததில் திடீரென்று விழித்துக்கொண்ட அரசும் ஆட்சியாளர்களும் டிசம்பர்-1ஆம் தேதி, நள்ளிரவில் முன்னறிப்பின்றி, அவசர அவசரமாக இரவோடு இரவாக செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டார்கள். அரசும் அதிகாரிகளும் அறிவித்ததைவிட இரண்டு, மூன்று மடங்கு தண்ணீர் திறந்து விட்டார்கள். ஏரித் தண்ணிரைத் திறந்துவிட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட கொஞ்ச நேரத்தில், இரவில் திடீர் காட்டாறாக மாறி சென்னைக்குள் பாய்ந்தது. தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள பதறியடித்து கொண்டு மக்கள் ஒட, திடீர் வெள்ளம் அவர்களின் கொஞ்ச நஞ்ச வாழ்வுடைமைகளோடு கரையோரக் குடிசைகளை அடித்துக் கொண்டுபோனது. கரைகளைத் தாண்டி, நான்கைந்து கி.மீட்டர் வரை ஒடிய அந்தப் பெருவெள்ளம் குடிசைகளையும் சிறுவிடுகளையும் சாலைகளையும் மூழ்கடித்தது. அடுக்கு மாடி வீடுகளின் இரண்டாம் தளங்களை எட்டியது.

சென்னை நகருக்குள் காம்பவுண்டுகள் பங்களாக்களையும் அடுக்குமாடி வீடுகளையும் கட்டிக்கொண்டு பாதுகாப்பாக வாழ்ந்தவர்களைப் பெருமழை விட்டு வைக்கவில்லை. காம்பவுண்டு சமூகம் என்று பெருமை பீற்றிக்கொண்ட அவர்கள் தமது சொந்த வாழ்வு, வசதி மீது மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள். பெய்யும் மழை நீரோ, சாக்கடையோ வடிவதற்கான, நல்ல சாலைகள் போடுவதற்கான பொதுச் சேவைகள், அதற்கான அரசின் ஏற்பாடுகள் குறித்துக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளவில்லை. இத்தகை பொதுச் சேவைகளுக்கான நிதியைக் கொள்ளையடிப்பதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருந்தார்கள். எனவேதான், அவர்களின் காம்பவுண்டுக்குள்ளும் சாலையிலும் கொட்டிய பெருமழையே அவற்றைத் தண்ணீர் சமாதிகளாக்கிப் போனது. சாலைகள் மரணக் குழிகளாகிப் போயின.

கோடிக்கணக்கான மக்கள் வாழும் இவ்வளவு பெரிய சென்னைக்கு, அதன் தோற்ற காலம் முதல் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய மூன்று மட்டுமே, வடிகால் வழித் தடங்களாக உள்ளன. புதிதாக வடிகால் வழித் தடங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவே இல்லை. சென்னையைச் சுற்றியிருந்த முந்நூறுக்கும் மேற்பட்ட ஏரிகள் அரசாளும் ஆட்சியாளர்களாலும் கார்ப்பரேட் நிறுவனங்களாலும் வீடு-வீட்டுமைைன, மற்றும் கல்விக் கொள்ளையர்களாலும் ஆக்கிமிக்கப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய ஏரிகளும் பராமரிப்பில்லாமல் கொட்டித்தீர்த்த பெருமழை முழுவதுமாக கரைகளை உடைத்துக்கொண்டு சென்னையின் புறநகருக்குள் பாய்ந்து வெள்ளக் காடாக மாற்றியது. மழைநீர் மற்றும் சாக்கடை வடிகால் வழித் தடங்களைத் துர்வாருவதற்கும் அடைப்புகள் நீக்குவதற்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஆளுவோர் விழுங்கி ஏப்பம் விட்டிருந்தனர்.

சர்வதேசத் தரத்திலானவை என்று கூறிக்கொண்ட கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்குள் வெள்ளம் பாய்ந்து, மின் சேவைகள் இல்லாது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த, நோயாளிகள், அடுக்கு மாடிவீடுகளில் தினசரி சிறுநீர் கழிக்க முடியாத நோயாளிகள், மருத்துவ வசதியற்ற முதியவர்கள், குடிக்கப் பாலும் உணவும் இல்லாத குழந்தைகள் என அனைவரும் இறந்துபோனார்கள். சுடுகாடுகளும் இடுகாடுகளும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்க இறந்தவர்களின் பிணங்கள் மரங்களின் கிளைகளில் கட்டித் தொங்க விடப்பட்டன. உயிர் தப்பிப் பிழைத்திருந்தவர்கள், குடிதண்ணிரையும் உணவையும் தேடி அலைந்த மக்கள் மழைநீரும் கழிவறை-சாக்கடையும் கலந்த வெள்ளத்தில் கூடவே பிணங்களும் மிதப்பதைக் கண்டார்கள். கார்ப்பரேட் மருத்துவ மனைகளில் மாண்டுபோனவர்களின் பிணங்களைக் கொண்டுவந்து அரசு மருத்துவ மனைகளில் போட்டுவிட்டு ஒடிப்போனார்கள்.

தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை பலவும் இருந்த போதும் கோரியபேதும் தமிழத்தில் நேரிட்டதை தேசியப் பேரிடராக அறிவிக்கவும் போதிய நிதியும் பொருட்களும் தர மறுத்ததோடு, இலட்சக்கணக்கான மக்களை மீட்க சில நூறுபேரை மட்டுமே மீட்புப் பணிக்காக அனுப்புகிறது மத்திய அரசு. மாநில அரசோ பரிதவிக்கும் மக்களை மீட்கவும் தப்பிப் பிழைத்தவர்களுக்கு குடிதண்ணர், பால், பாய், போர்வை, மருந்து முதலிய அடிப்படைத் தேவைகளை வழங்கவும் இல்லை; பலநாட்களாகத் தேங்கி கிடக்கும் கழுத்தளவு வெள்ள-சாக்கடை நீரையும், நாசமாகிப்போய், மலையாகக் குவிந்து கிடக்கும் பொருட்களை அகற்றவில்லை.

உள்ளூர் இளைஞர்களும் அவசரமாகத் தோன்றிய அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் சில அரசியல் எதிர்க் கட்சிகளும் மட்டுமே இப்பணிகளைச் செய்கிறார்கள். அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு நிவாரணப் பொருட்களையும் நிதியையும் கொள்ளையடிப்பதில் ஆளும்கட்சிக்கு ரெளடிகள் இறங்கியுள்ளனர். இது அம்பலமாகிப்போனபோது அரசு அதிகாரிகளே மாவட்ட எல்லைகளில் போலீசுச் சாவடிகள் அமைத்து, நிவாரணப் பொருட்களைப் பறித்துக் கொள்கிறார்கள். அவற்றின் மீது அம்மா விளம்பரங்களை ஒட்டி, ஆளும்கட்சி ரெளடிகள் மூலம் விநியோகிக்கின்றனர்.

பெருமழை, பெருவெள்ளத்தால் தமிழக மக்கள் இழந்ததோ பல லட்சம் கோடிரூபாய்கள்! ஆனால், கோழிக்கு நூறு என்று தொடங்கி ஆடு, மாடு, குடிசை மனித உயிருக்கு நான்கு லட்சம் என்று வைத்து நிவாரணம் என்ற பெயரில் ஏலம் போடுகிறது, அரசு. அதையும் கணக்கு-வழக்கு, தணிக்கை என்று எதுவுமில்லாமல், ஜெயா-சசி கும்பலின் தேர்தலுக்கான பணப்பட்டுவடாவாக்கி தனது அடிமை ரெளடிகள் மூலம் செய்கிறது. தமிழகத்தைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கும் ஜெயா-சசி கும்பலின் ஆட்சிக்கு மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வும் பார்ப்பன மற்றும் விலைபோன ஊடகங்களும் துணை நிற்கின்றன.

ஆகவே, நேரிட்டது மத்திய அரசு ஒப்புக்கொள்ளவும் அறிவிக்கவும் மறுத்தாலும், அளவிலும் வீச்சிலும், இழப்பிலும் “தேசியப் பேரிடர்தான்”, ஆனால், இயற்கைப் பேரிடர் அல்ல. மனிதப் பேரிடர். ஜெயலலிதா தலைமையிலான அரசும் அதிகாரிகளுமே இதற்குக் காரணமானவர்கள். இதற்குப் பலியான மக்கள் கோரவேண்டியது உடனடி, நீண்டகால நிவாரணங்கள் மட்டுமல்ல. இந்தக் கிரிமினல் குற்றத்துக்காக அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதற்காக வழக்கம்பேல மக்கள் அடுத்த தேர்தலுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. எழுச்சிப் போரட்டங்களில் குதிக்க வேண்டும்.

– ஒருங்கிணைப்பாளருக்காக, மக்கள் அதிகாரம்

தமிழ்நாடு