Tuesday, June 28, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கடலூர் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் நிவாரணப் பணி

கடலூர் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் நிவாரணப் பணி

-

kurinjipadi flood (4)டலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் டிசம்பர் 12,13 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் அரங்கமங்கலம், சண்முகா நகர், மருவாய், கொளக்குடி, பாதிரிமேடு மற்றும் குண்டியமல்லூர், சிறுபாலையூர், மீனவர் கிராமங்கள் நஞ்சலிங்கம்பேட்டை, நாயக்கன் பேட்டை ஆகிய ஊர்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாவட்ட வழக்கறிஞர்கள், மற்றும் பெற்றோர் சங்கத்தை சார்ந்த நண்பர்கள், திரளான தோழர்கள் இந்த நிவாரணப் பணிகளில் கலந்து கொண்டனர். கனமழையாலும் பரவனாறு செங்கால் ஓடை சேதமடைந்ததாலும் நெய்வேலி நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டதாலும் ஆயிரக்கணக்கான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி கரையோர குடிசைகள் சேதமடைந்து மக்கள் வேலை வாய்ப்பின்றி இருந்தனர்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட ஊர்களில் நேரில் சென்று மக்கள் அதிகார தோழர்கள் குழுக்களாக பார்வையிட்டு அதிகாரிகளும் நிவாரணமும் போய் சேராத பகுதிகளை தேர்வு செய்து நிவாரணம் வழங்கினார்கள்.முதன் முதலில் நீங்கள்தான் எங்கள் ஊருக்கு வருகிறீர்கள் என மக்கள் சொன்னதிலிருந்து நிவாரண உதவி போய்ச் சேராத இடங்கள் நிறைய உள்ளன என்பதை உணர முடிந்தது.

பல ஊர்களில் மக்கள் 40 ஆண்டுகளாக குடியிருக்கிறோம் பட்டா வாங்கி கொடுங்கள் நாங்கள் மேடாக்கி வீடு கட்டி கொள்கிறோம் என்றனர். பல கிராம மக்கள் கூரை வீட்டை அகற்றி கல் வீடு கட்டித் தர சொல்லுங்கள் சிறியதாக இருந்தாலும் அரசே கட்டித் தரவேண்டும். கட்டிய சுனாமி, தொகுப்பு வீடுகளை பாருங்கள் ஒழுகுகிறது என காட்டினர். நிவாரணம் எங்களுக்கு தற்போது தேவைதான் அது நிரந்தரம் அல்ல. நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாப்பதுதான் முக்கியம் என கூறினர். கல்லணை ஆயிரம் வருடமாக இருக்கிறது. செங்கால் ஓடை போன மழைக்கு கரை அமைத்தார்கள், அடுத்த மழைக்கு கரைச்சிகிட்டு போயிட்டுது. அதிகாரிகள் வெள்ள நிவாரணத்தை கொள்ளையடிக்கதான் பார்க்கிறார்கள் தவிர பிரச்சினையை தீர்பப்தில்லலை எனக் கூறினர்.

வெள்ளப் பேரழிவிற்கு மழையா குற்றவாளி? மக்களை பிச்சைக்காரர்களாக, அடித்துப் பிடுங்கும் கிரிமினல்களாக, அவர்களின் சுயமரியாதையை மிதித்து நிவாரணம் வழங்கபட்டு வருகிறது. இதன் மூலம் வாழ்வாதார கோரிக்கை திசைதிருப்பப் படுகிறது. நிவாரணம் கொடுக்க உதவுகின்ற பிறபகுதி மக்களை எரிச்சலடைய செய்து மக்களுக்கிடையே சுயநலத்தை கிளறிவிடுவதுதான் தற்போது நடக்கிறது.

மக்கள் அதிகாரம் தோழர்கள் பாதிக்கபட்ட கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்து நிவாரணம் கிடைக்காத பகுதியை கண்டறிந்து பிறகு கிராமத்திற்கு சென்று டோக்கன் வழங்குவது, தனித்தனியாக பார்சல் செய்வது தோழர்கள் ஆதரவாளர்கள் என 40 க்கு மேற்பட்டோர் குழுவாக நிவாரண பொருட்களை எடுத்துச் செல்வது ,அனைவரையும் ஒரு இடத்திற்கு வரவழைத்து நிவாரணம் வழங்குவது என திட்டமிட்டு செய்தனர். மக்களிடையே வெள்ளப்பேரழிவிற்கு காரணம் அதன் குற்றவாளிகள், நிரந்தர தீர்வு குறித்த உரையாடலையும் தோழர்கள் நடத்தினார்கள்.

நிவாரணம் வழங்கபடும் நடைமுறை……

தொண்டு நிறுவனத்திரும், பல்வேறு அமைப்பினரும், தனிநபர்களும் கடலூர் மாவட்டத்தில் அதிக வெள்ளம் பாதித்த கிராமம் எது என்று முகநூல், வாட்ஸ்அப், பத்திரிக்கை நண்பர்கள், வாயிலாக தெரிந்துக்கொள்கிறார்கள். தமிழகத்தில் பிற மாவட்டங்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் லாரிகளில் வருகிறார்கள். காவல் துறையால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நிவாரண பொருட்கள் அனைத்தும் கடலூரில் தனியார் கல்வி நிறுவனங்களில் இருப்பு வைக்கப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் ஆசைப்படி அவர்கள் உத்தரவுக்கிணங்க கிராம நிர்வாக அலுவலர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சொல்வார். பிறகு அனுப்பி வைக்கப்படும். ஆக மக்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்கள் அதிமுக-வின் நிவாரணமாகிவிடும் இது ஒருவகை.

லாரியில் நிவாரணப் பொருட்களுடன், தனி வேனில் 15 பேர்கள் வருவார்கள் கிராமத்திற்கு செல்வார்கள். லாரி முன்பாக மக்கள் கூட்டமாக முண்டியடித்து கைநீட்டி பொருட்களுக்கு அலை மோதுவார்கள். முதியவர்கள் பெண்கள் இளைஞர்கள் என நெருக்கியடித்து சச்சரவு எழும். நிவாரணம் வழங்குபவர்கள் முதலில் பொறுமையாக கொடுப்பார்கள் இறுதியில் எரிச்சலோடு தூக்கி வீசுவார்கள் மக்கள் பிடித்துக்கொள்ள வேண்டும். இது அடுத்த வகை

நிவாரணப் பொருட்கள் ஏற்றிய லாரியை கைநீட்டி மறித்து எங்களுக்கும் கொடுங்கள் என சாலையில் அமர்ந்திருப்பார்கள். பெரியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் 10 பேர் என நின்று கொண்டு வழி மறித்து கைநீட்டுவார்கள். ஏதாவது பொருளை கொடுத்தால் கூட்டம் சூழ்ந்து கொள்ளும் கட்டுப்படுத்த முடியாது.

இந்த சூழலை கிரிமினல் நடவடிக்கையாகக் கருதி காவல் துறையினர் நிவாரணப் பொருட்கள் வழியில் மக்கள் அடித்து பிடுங்குவார்கள் எனவே எங்களிடம் தகவல் சொல்லிய பிறகுதான் நிவாரண பொருளை எடுத்து செல்ல வேண்டும் என வழி மறிக்கின்றனர்.நமது நிவாரணப் பொருள் வந்த லாரியை காவல் துறை வேப்பூரில் மறித்தது. டி.எஸ்.பியிடம் பேசினோம் சார் நீங்கள் மேலதிகாரியிடம் பேசுங்கள். நாங்கள் விடமுடியாது. பிறகு விருத்தாசலம் ஆர்.டி.ஓவிடம் பேசினோம். சார் நாங்கள் மக்கள் அதிகாரம் சார்பில் கொடுக்க இருக்கிறோம். மக்கள் மறிப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதிமுக வினருக்காக காவல் துறை மறிப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றதுடன் சாலை மறியலுக்கு தயாரனதும் உடனே நமது லாரி விடப்பட்டது.

தகவல்:
மக்கள் அதிகாரம், கடலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க