Wednesday, January 22, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க சென்னை மதுரவாயிலில் மாணவர்களின் நிவாரணப் பணி

சென்னை மதுரவாயிலில் மாணவர்களின் நிவாரணப் பணி

-

சென்னை பு.மா.இ.மு வின் நிவாரண பணிகள்:

people-power-chennai-flood-work-2டந்த இரண்டு நாட்களாக ஜெயா டிவியில் போர்க்கால நடவடிக்கை – மீண்டெழுந்தது தமிழகம் என்ற தலைப்பில் சில மேட்டுக்குடி மற்றும் பொறுக்கி கும்பலிடம் பேட்டி எடுத்து போர்க்கால நடவடிக்கையில் தமிழகமே மீண்டெழுந்தது என்றும் அம்மா அரசு பம்பரமாக சுழன்றியதாகவும் சீன் விடுகிறார்கள். போயஸ்கார்டன் தான் அதிமுகவுக்கு தமிழ்நாடு போலும். இந்த அரசின் நடவடிக்கையால் வெள்ளம் சிறிதும் வடியவில்லை. மாறாக இயற்கையே வடித்துக்கொண்டது. ஆனால் அதற்கு பிந்தைய மீட்பு பணிகளை மீண்டும் பல்வேறு அமைப்புக்களும் இளைஞர்களும்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அவ்வாறு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்கள் வெள்ளம் பாதித்தப் பகுதிகளுக்குச் சென்று அவர்களுக்கு உணவு , உடைகளை அளிப்பது மட்டுமல்ல; நம்முடைய வாழ்வை அழித்த, அழித்துக் கொண்டு இருக்கும் எதிர்நிலை சக்தியாக மாறிப் போய்விட்ட இந்த அரசு எந்திரத்தை நாம் ஏன் தூக்கி சுமக்க வேண்டும் என்பதையும் சொல்லப் போனார்கள். மக்களோ அதை நடைமுறையில் உணர்ந்து கொண்டிருந்தார்கள்.

மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெரு

people-power-chennai-flood-work-4கடந்த மாத வெள்ளத்திலேயே இப்பகுதியின் வீடுகள் எல்லாம் மூழ்கிப் போயிருந்தன. இம்மாதமோ கூரைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மதுரவாயல் பகுதிக்கு வருவதாகக் கூறினார்கள். அவர்களோ அருகில் இருந்த ஹோட்டலில் மூக்குப்பிடிக்க தின்று விட்டுப் போனார்கள். இந்நிலையில் டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் ஊரிலுள்ள ஜனநாயக சக்திகள்,இளைஞர்களுடன் ஒன்றிணைந்து உணவு தயாரித்து வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டது. அமைப்புடன் கருத்துவேறுபாடு கொண்டவர்களும் கூட “தம்பி நான் பணம் கொடுத்தடறேன் ஊர்காரங்களுக்கு நீங்களே சாப்பாடு செஞ்சு போடுங்க, அப்பத்தான் சரியா போய்ச்சேரும்” என்றார்கள்.

மதுரவாயல் பகுதி தண்ணீரில் மூழ்கியதைக் கேட்டு பலரும் லாரி, வேன் என ஊரில் இருந்து நிவாரணப்பொருட்களை கொண்டு வந்தனர். அவற்றில் பெரும்பாலானவற்றை போலீசே பறித்துக்கொண்டு காவல் நிலையத்தில் வைத்து அமைச்சர் கையால் தரவைக்க வேண்டும் என்று புழுக்க வைத்துக் கொண்டிருந்தது. சேலத்தில் இருந்து உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்திருந்தவர்களை வழக்கம் போல போலீசு மிரட்ட அவர்களோ “உங்ககிட்ட கொடுக்க முடியாது” என்று கூறி திருப்பி எடுத்துச் சென்றார்கள். போலீசின் தடைகளையும் மீறி பல ஊர்களில் இருந்து வரும் தன்னார்வலர்கள் கொடுக்கும் நிவாரண பொருட்களை மக்களுக்கு முறையாக பிரித்து அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி மோட்டர் ஏற்பாடு செய்து பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றுவதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் நம்முடைய பிரச்சினையை அரசோ அதிகாரிகளோ எள்ளளவும் தீர்க்கமாட்டார்கள் என்பதையும் அமைப்பாக இல்லாமல் இடர்களை தீர்க்க முடியாது என்பதையும் மக்கள் உணர்ந்துள்ளனர்.

ஸ்ரீலட்சுமி நகர், பகுதிக்கு சென்று அங்கிருந்த மக்களிடம் விசாரித்ததில் நிவாரணம் கொடுப்பவர்கள் எல்லாரும் தண்ணீரில் இறங்காமல் வெளியில் மட்டுமே நிவாரணம் கொடுத்திருக்கின்றனர். இதனால் குழந்தைகள், வயதனவர்கள், பெண்கள், ஊனமுற்றவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேராமல் இருந்தது. இதை அறிந்து புமாஇமு தோழர்கள் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து தண்ணீரில் இறங்கி தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று போர்வை,பிரட்,பிஸ்கட்,துணி போன்றவற்றை கொடுத்தோம். ” இதுவரைக்கும் 3 நாட்களாக அரசு அதிகாரியும் சரி ஓட்டு வாங்கிக்கிட்டு போனவனும் சரி வந்து பார்க்கவே இல்லை, இந்த பகுதியில் இருக்கிற இளைஞர்கள்தான் எங்களுக்கு உதவிகள் செய்தார்கள். நீங்கள் யாரு வீட்டு பிள்ளையோ எங்களுக்கு உதவி செய்ய வந்துள்ளீர்கள்.நீங்கள் நல்லா இருக்கனும்பா” என்று வாழ்த்துக் கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.

அமைந்தகரை, அப்பாராவ் கார்டன்:

RSYF-chnnai-flood-works-1கடந்த வாரம் கூவத்தை ஒட்டிய இந்த பகுதியில் நிவாரண பணிகளை தோழர்கள் மேற்கொண்டனர். கூவத்தை ஒட்டிய பகுதி என்பதால் இங்கு பெரும்பாலான வீடுகளில் சேறு புகுந்து முழுவதுமாக சேதமடைந்து வாழ லாயக்கற்றதாக மாறியுள்ளது. “நிவாரண பொருட்களை கொடுக்க வருபவர்கள் சேற்றில் இறங்காமல் மேலே நின்று கொடுக்கிறார்களே தவிர, தாழ்வான பகுதியில் வசிக்கும் எங்களை யாரும் கண்டு கொள்வதில்லை” என்ற மக்கள் நாம் சென்றபோது மிகவும் எதிர்பார்ப்போடு கூறினார்கள்.

நமது அமைப்பை அறிமுகப்படுத்தி பேசியவுடன் “டாஸ்மாக் போராட்டம் நடத்தியது நீங்கள் தானே” என்று கேட்டனர். DYFI லிருந்து வெளியேறிய ஒரு இளைஞர், “உங்க டாஸ்மாக் போராட்டத்தை மீடியாவில் பார்த்தேன். பல அமைப்புகள பார்த்து இருக்கிறேன். ஆனால் அரசை பற்றி யாரு பேசுவது இல்லை. நீங்கள் தான் சரியாக பேசுகிறீர்கள். உங்களை பார்க்கும் போதும் நீங்கள் பேசுவதை கேட்கும் போதும் நீங்கள் சொல்வதுதான் சரி நானும் உங்களுடன் இணைந்து வேலை செய்வதாக” கூறினார். அதே பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலரும் கடைசி வரை நம்முடன் இருந்து வேலைகளில் ஆர்வமாக வீடுகளில் இருந்த சேற்றினை அகற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சாந்தி காலனி மற்றும் மஞ்ச கொல்லை பகுதி:

10-12-2015, 11-12-2015 மற்றும்12-12-2015 ஆகிய 3 நாட்கள் இந்த இரு பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். இந்த பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக கால் வைக்க கூட இடம் இல்லாத இடத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் சாக்கடை புகுந்துள்ளதால் பல வீடுகள் நாசமடைந்துள்ளன. வீடுகளிலுள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருந்தன. ”திடீர்னு வெள்ளம் வந்த உடனே உயிரை காப்பாற்றிக்கொள்ள பொருட்களை எல்லாம் அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டோம். இப்ப தங்க இடமில்லாமல் நடுரோட்டிலும், ஸ்கூலிலேயும் இருக்கிறோம். ஆனால் எங்களை நாய விரட்டர மாதிரி பள்ளி கூடத்த விட்டு விரட்டுறானுங்க, நாங்க எங்க போவோம்” என கண்ணீர் விட்டு அழுது கொட்டித் தீர்த்தார்கள் அந்த பகுதி பெண்கள்.

அந்த பகுதியில் நாம் மக்களுடன் இணைந்து வேலை செய்வதை பார்த்த உள்ளூரிலே இருக்கிற அம்மாவின் விசுவாசிகளின் சிலர் தங்களின் பெயர் மக்களிடம் டேமேஜ் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் தெருவில் இறங்கி சாக்கடையை சுத்தம் செய்தனர். அந்த பகுதியில் உள்ள மக்கள் ”நீங்கள் வந்ததால அவனுங்க குப்பையில் இறங்கி வேலை செய்யறானுங்க, அவனுங்க சும்மா நடிக்கிறானுங்கப்பா” என கூறினார்கள்.

மறுநாள் அதற்கு அருகில் உள்ள பகுதியில் வேலை செய்ய போன போது அந்த பகுதி கவுன்சிலர் வந்து நாம் வேலை செய்வதை பார்த்து விட்டு ”இதுல்லாம் ஏன் நீங்கள் செய்யறீங்க அவங்களே செய்வாங்கனு” என்று சொல்லி நம்மை அங்கிருந்து வெளியேற்ற பார்த்தார். ஆனால் மக்களுடன் சேற்றில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணோ கவுன்சிலரை பார்த்து ”வாங்க அக்கா, அப்போ நீங்க உள்ள வாங்க” என கூப்பிட்ட உடன் சேறும் சகதியுமாக இருந்த வீட்டை பார்த்த உடன் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டார். அதன் பிறகு ”அவங்கள்ளாம் உள்ளே வரமாட்டங்கனு எனக்கு தெரியும்பா, அதை தெரிஞ்சுதான் கூப்பிட்டேன்” அப்படின்னு சொல்லி “இவங்க எல்லாம் மக்கள் காப்பத்த போராங்களாம்” என்று நக்கலடித்து சிரித்தார். இவ்வழியாக சென்ற அமைச்சர் கோகுல இந்திராவை, “இப்பகுதி எப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று வந்து பாருங்கள்” என மக்கள் அழைத்து இருக்கிறார்கள். அவரோ “என்னால அங்கேயெல்லாம் வரமுடியாது” என்றிருக்கிறார். அ.தி.மு.கவினரோ “ஆக்கிரமிப்புன்னு சொல்லி இன்னமும் ரெண்டு நாளைல உங்க வீட்டையே இடிச்சுருவோம், வந்து என்னாவ போகுது” என்று கூறி இருக்கின்றனர். எல்லோரும் கைவிட்ட நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறார்கள் மக்கள்.

பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் என பு.மா.இ.மு. தோழர்கள் உற்சாகத்துடனும், உணர்வுபூர்வமாகவும் சாக்கடையாக இருந்த வீட்டை சுத்தம் செய்வதை பார்த்த மக்கள், இதை நம்மால் செய்ய முடியுமா என்று ஒதுங்கி இருந்த பலரும் நம்முடன் இறங்கி வேலைசெய்தனர். ”எவனாவது இனிமே ஓட்டுக்கேக்கறதுக்கு வந்தானுங்க, எல்லாத்தையும் ஓடவுடணும்பா” என்றார் ஒருவர்.

வேண்டாத சதைப் பிண்டமாகிப்போன அரசு இற்றுப்போய் இருப்பது மட்டுமல்ல; எதிர்நிலைசக்தியாக மாறிப்போயிருப்பதையும் மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இப்போது இருக்கிற பிரச்சினை, யார் முதலில் கல்லெடுப்பது என்பதுதான்.

 

 தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை, 9445112675

விழுப்புரம் மாவட்டம்

திருவெண்ணெய் நல்லூர் பகுதியில் மக்கள் அதிகார அமைப்பின் மூலம் மழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து 12,13 தேதிகளில் ஆனத்தூர், பொய்கை அரசூர் இரண்டு கிராமங்களில் மக்கள் அதிகார தோழர்களோடு ஒருங்கிணைப்பாளர் தோழர் ஏழுமலை தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்கள் 250 பாய் அரிசி, துணிகள். பிஸ்கட் மற்றும் மருந்து பொருள்கள் உட்பட மக்களுக்கு வழங்கப்பட்டன.

– மக்கள் அதிகாரம், விழுப்புரம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க