privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇந்த சேதாரத்தை வழங்கியோர் அதிகார வர்க்கம் + ஜெயா அரசு

இந்த சேதாரத்தை வழங்கியோர் அதிகார வர்க்கம் + ஜெயா அரசு

-

chennai floods people experience (2)மிழக மழை வெள்ள சேதத்திற்கு அரசு மற்றும் அரசாங்க கட்டமைப்பின் தோல்வி முக்கியமாக காரணமாகும். உணவு, உடை, இருப்பிடம், மின்சாரம், சாலைப் போக்குவரத்து, கல்வி, வேலை, மருத்துவம் என மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்கும் கடமையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவற்றைத் தனியார்களிடம் தாரை வார்த்துவிட்டு போலீசு, இராணுவம், சிறை, நீதித் துறை போன்ற குண்டாந்தடிகளை மட்டும் அரசு தன்வசம் வைத்துள்ளது. எனினும், இந்த துறைகளும் கூட ஒரு ஆபத்துக் காலத்தில் மக்களைக் காப்பாற்றும் திராணியற்று மொத்தமாய்க் குலைந்து நொறுங்கியதை வெள்ளத்திற்குப் பிந்தைய நாட்களில் நாம் கண்டோம்.

இத்துறைகளின் கடைமட்ட ஊழியர்கள் ஓரளவிற்கேனும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்பது உண்மை. ஆனால் அவர்களும் கூட மேலிருந்து எந்தவிதமான வழிகாட்டுதலோ, கட்டளைகளோ இன்றி சொந்த விருப்பத்தில் மட்டுமே செயல்பட்டுள்ளனர். இத்துறைகளின் உயரதிகாரிகளோ எதிர்வரும் ஆபத்தைக் குறித்தோ, ஆபத்து நேர்ந்த பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ கிஞ்சித்தும் அக்கறையின்றி இருந்துள்ளனர்.

ஃப்ரண்ட்லைன் பத்திரிகை அரசு இயந்திரம் பக்கவாதத்தால் முடமாகிக் கிடந்த நிலையை இவ்வாறு குறிப்பிடுகிறது – “ஒவ்வொருவரும் வேறு யாரோ ஒருவருடைய உத்தரவிற்குக் காத்திருந்தனர்”.

ஏன்?

கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்தில் கருவாகி காலனிய ஆட்சிக்காலத்தில் உருவாகி பின் போலி சுதந்திர இந்தியாவில் தனது முழு பரிமாணத்தை அடைந்த அரசு எந்திரம் மக்களுக்கு எந்த வகையிலும் என்றுமே கடமைப்பட்டதில்லை. அன்றாட சிவில் நிர்வாக பணிகள் மட்டுமின்றி, மக்களால் ’ஜனநாயக’ முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நிறைவேற்றும் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரமும் பல்வேறு துறைகளின் செயலாளர்களான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள், தாசில்தார்கள், மணியக்காரர்கள், காவல்துறை மற்றும் சிவில் நிர்வாகத்துறையின் அதிகார வர்க்க வலைப்பின்னலிடமே உள்ளது.

இந்த மொத்த நிர்வாக கட்டுமானமும், மக்களுக்கு பதிலளிக்கும் கடமையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதோடு (உங்களால் தவறிழைத்த ஒரு கலெக்ட்டரின் பதவியைப் பறிக்க முடியுமா?) மக்களுக்கு மேலானவர்களாக தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. எனவே, மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் தனது கடமையில் இருந்து தவறினாலும் கூட எவரும் தண்டிக்க மாட்டார்கள் என்கிற தடித்தனம் இவர்கள் இயல்பிலேயே உள்ளது.

bureaucracyஆனால், வெள்ள காலத்தில் இந்த நிர்வாக இயந்திரம் முற்றாகத் தோற்றுப் போனதற்கு இது மட்டுமே காரணமில்லை.

தொண்ணூறுகளுக்கு பின் துரிதப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலான தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயமாக்கல் நடவடிக்கைகளுக்குத் தகுந்தவாறு மொத்த அரசு எந்திரமும் மீள்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைகளின் தலைமைச் செயலாளரும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் கையாளாக மறுவார்ப்பு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதவியே அந்நிய முதலாளிகளுக்கும் உள்நாட்டு தரகு வர்க்கத்திற்கும் சேவை செய்தற்கென மாற்றப்பட்டுள்ளது.

அடையாற்றின் கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட மியாட் மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்கள் செயலிழந்தன. இதன் காரணமாக 18 நோயாளிகள் படுகொலை செய்யப்பட்டனர். டிசம்பர் 4-ம் தேதி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த தலைமைச் செயலளர் ஞானதேசிகன், ”உங்களுக்கே தெரியும் மியாட் மருத்துவமனை தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. மியாட் போன்ற பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பு உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளைக் கைவிட்டுள்ளது. சட்டம் அதன் கடமையைச் செய்யும்” என்கிறார்.

நன்றாக கவனியுங்கள், இந்த பேட்டி வெளியானது டிசம்பர் 4. அதாவது வெள்ள பாதிப்புகள், மக்கள் படும் துன்பங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உண்டாக்கி விட்டிருந்த சமயத்தில் தான் மியாட் நிகழ்த்திய படுகொலைகள் பற்றிய தகவல்கள் கசிந்தன – தொடர்ந்து தலைமைச் செயலரின் பேட்டியும் வருகிறது.

அதே நாளில் ஞானதேசிகன் குறிப்பிட்ட் “சட்டத்தின் கடமையை” நிலைநாட்டும் அதிகாரம் கொண்ட சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனின் அறிக்கையும் வெளி வருகிறது. அதன்படி, சுகாதாரத் துறை நடத்திய ‘விரிவான’ விசாரணைகளின் படி, இறந்து போன நோயாளிகள் எவரும் பிராணவாயு சிலிண்டர்கள் இல்லாமலும், ஜெனரேட்டர்கள் செயலிழந்ததாலும் மரணிக்கவில்லை என்றும், அவர்கள் சில நாட்களுக்கு முன்பே வேறு மருத்துவ காரணங்களுக்காகவே இறந்தனர் என்றும் தெரிவிக்கிறது.

ஜெயா விடுதலைக்கு அடிமைகளின் நேர்த்திக் கடன்
ஜெயா விடுதலைக்கு அடிமைகளின் நேர்த்திக் கடன்

பத்திரிகை ஊடகங்கள், மக்களின் ஆவேசங்களுக்கு ஒரு பதில். அந்த பதிலுக்கு நேர் முரணாக மேற்கொண்டு இந்த கொலைகளை எப்படி ஊத்தி மூடப்படப் போகிறார்கள் என்பதற்கு ஒரு விசாரணை மற்றும் அறிக்கை.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த பெரும் விபத்துக்களையும், பேரிடர்களையும் அதனைத் தொடர்ந்து அந்த விவகாரம் எப்படி ஊத்தி மூடப்பட்டது என்பதையும் கவனித்துப் பாருங்கள். ஆந்திரத் கூலித் தொழிலாளிகளை பலிவாங்கிய மவுலிவாக்கம் கட்டிடம் கட்ட அனுமதியளித்தது அரசு நிர்வாகம் தான். தீயில் குழந்தைகளைக் கருக்கிய கும்பகோணம் பள்ளிக்கு விதிமுறைகளை மீறி அனுமதியளித்ததும் அதிகார வர்க்கம் தான்.

2012-ம் ஆண்டு இந்துப் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றின்படி (Our City, an illegal City) சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் 50 சதவீதமானவை விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டவை தாம். இவையனைத்திற்கும் சட்ட விதிமுறைகளை மீறி அனுமதியளித்தது சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகார வர்க்கம் தான்.

இது தவிர பொருளாதார வளர்ச்சி என்கிற மந்திர மாங்காயை தரவல்லதாக சொல்லப்படும் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் சென்னை நகருக்கு உள்ளும் அதைச் சுற்றிய புறநகர்ப் பகுதிகளிலும் ஏராளமான நிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்தப் பன்னாட்டுத் தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஒருபக்கம் என்றால், இந்த நிறுவனங்களில் அநேகமானவை நீர் நிலைகளின் ஆக்கிரமித்தும், சதுப்பு நிலங்களின் மீதுமே அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச் சூழல் விதிமுறைகள், கட்டுமான விதிமுறைகள், கழிவு நீர் மேலாண்மை தொடர்பான விதிமுறைகள் என்று சகலத்தையும் காற்றில் பறக்கவிட்டு இவற்றுக்கான அனுமதியை அளித்துள்ளது அதிகார வர்க்கம். பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்ளையர்களுக்கும் சுரண்டல்வாதிகளுக்கும் சேவை செய்வது மட்டுமின்றி – அதை மக்கள் எதிர்த்தால் களத்திலிறங்கி அவர்களை ஒடுக்கும் வேலையையும் அதிகார வர்க்கமே செய்கிறது.

ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என்று இயற்கை வளங்களையும், நதிநீர்ப் படுகைகளையும் கொள்ளையர்கள் சுரண்டித் தீர்ப்பதை எதிர்த்து மக்கள் போராடினால் வருவாய்த் துறை அதிகாரிகளும் காவல்துறை குண்டாந்தடிகளும் மக்கள் எதிர்ப்பை நசுக்கி தங்கள் எஜமானர்கள் யார் என்பதை உணர்த்துகின்றனர். ஆக, மொத்த அரசு எந்திரமும் மக்கள் சேவைக்கென இல்லாமல் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களின் கைக்கூலிப் பட்டாளமாக மாற்றப்பட்டுள்ளது.

வட தமிழகமும் குறிப்பாக சென்னையும் சந்தித்த இயற்கைப் பேரழிவுக்கு அரசு எந்திரம் ஒருமுனையில் காரணமாக உள்ளது என்றால், இன்னொரு முனையில் அந்த எந்திரத்தை ‘வேலை’ வாங்கும் பொறுப்பில் தற்போது இருக்கும் ஜெயா தலைமையிலான அரசின் கையாலாகத்தனமும் உள்ளது.

stickerசமீபத்தில் (வெள்ளத்திற்குப் பின்) ஜெயலலிதாவின் பாதுகாவலுக்குப் பொறுப்பான இராண்டு போலீஸ் உயரதிகாரிகள் மாற்றப்பட்டனர். ஏன் மாற்றப்பட்டனர் என்பது பற்றி பத்திரிகைகள் தெரிவிக்கப்பட்ட காரணத்தை கவனியுங்கள் – அதாவது, பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகளைக் காண சென்னை வந்த போது அவரை வரவேற்க ஜெயலலிதா சென்றுள்ளார். அப்போது அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பை நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை புகைப்படக் கலைஞர் படமெடுக்க இந்த அதிகாரிகள் தடுத்து மறித்துள்ளனராம். எனவே அந்த அதிகாரிகளை ஜெயா பந்தாடினாராம். இது தான் ஜெயலலிதா.

ஒரு அதிகாரியோ அமைச்சரோ நிர்வாகத் திறமையில்லாத காரணத்திற்காக ஆட்சித் தலைமை மாற்றுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஜெயாவைப் பொறுத்தவரை எந்தக் காரணமும் தேவையில்லை. தன் முன்னே குனியாமல் நின்றார், மீசை ரெண்டு இன்சுக்கு மேலே முறுக்கிவிடப்பட்டிருந்தது, சட்டைப் பையில் வெளியே தெரியும் படி தனது படம் இல்லை போன்ற சல்லித் தனமான சில்லறைக் காரணங்களே ஒரு அமைச்சரையோ அதிகாரியையோ பந்தாடப் போதுமானது. இப்படித்தான் கெடா மீசை ஐ.பி.எஸ் நடராஜன் ஆள் மாறாட்ட படத்திற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சேர்க்கப்பட்டார். இத்தகைய கூத்துக்கள் உலகில் எங்கேயாவது உண்டா?

குழந்தைகள் பொம்மைகளை அடித்து உருட்டி விளையாடுவதைப் போல் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மட்டுமல்ல – மக்களையும் நடத்த தயங்காதவர் ஜெயலலிதா. ஒரே கையெழுத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வீட்டுக்கனுப்புவதோ, பத்தாயிரம் சாலைப் பணியாளர்களைத் தெருவில் நிறுத்துவதோ, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அடித்துத் துவைத்து ஊருக்கு வெளியே வீசிவிட்டு வருவதோ அவர்கள் பழக்கமில்லாத சாலையில் அவர்கள் தடுமாறுவதோ ஜெயலலிதாவின் மனதில் சிறு சலனத்தையும் கூட ஏற்படுத்தியிருக்காது.

அதனால், தான் வெள்ளத்தால் சகலத்தையும் இழந்து நின்ற மக்களைப் பார்த்து கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி “வாக்காளப் பெருமக்களே” என்று அவரால் விளிக்க முடிகிறது. அதனால் தான் இத்தனை மக்களின் வாழ்வும் பொருளாதாரமும் அழிந்து எல்லோரும் தெருவில் நிற்கும் போது மிருக காட்சி சாலையில் பிறந்த புலிக் குட்டிகளுக்கு நியூமராலஜி படி பெயர் சூட்டி மகிழ முடிகிறது. இனி ரோம் எரியும் போது பிடில் வாசித்தான் நீரோ என்ற பழமொழியில் ஜெயாதான் போட்டியின்றி உட்கார்வார்.

போனபார்டிஸ்டுதனமான அல்லது முகமது பின் துக்ளக் தனமான அல்லது பாசிஸ்டுதனமான இந்த கோமாளித்தனங்களைத் தான் பார்ப்பன அறிவுஜீவிகளும், ஊடகங்களும் நிர்வாகத் திறமை என்றனர். அம்மாவின் முன் அடிமைகளைப் போல் மந்திரிப் பிரதானிகள் விழுந்து கிடந்த காட்சியைக் கண்டு உலகமே காறித் துப்பிய போது இவர்கள் அதையெல்லாம் ஜெயலலிதாவின் அசைக்க முடியாத அதிகாரத்தின் அடையாளங்கள் என்று துதி பாடினர். மூன்று மாதங்களுக்கும் ஆறு மாதங்களுக்கும் ஒரு அமைச்சர் பந்தாடப்படும் நிலையில் அவரால் தனது துறையைப் பற்றி எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

car jayaபொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் வெளியிட்ட லஞ்சப் பட்டியலின் படி, ஒவ்வொரு பொதுப்பணித் துறை ஒப்பந்தத்திற்கும் கீழிருந்து மேல் வரை யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்க வேண்டும் அந்த லஞ்சப் பணம் கீழிருந்து மேல் நோக்கி எப்படி பாய்கிறது என்பது அம்பலமானது. கும்பினி ஆட்சிக் காலத்தில் ஜமீந்தார்களும், குறுநில மன்னர்களும் மக்களிடம் அடித்துப் பறித்து கும்பினிக்கு கப்பம் கட்டியதைப் போறே அமைச்சர்களும் போயஸ் தோட்டத்திற்கு கட்ட வேண்டிய கப்பத்தை வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர். அமைச்சர்களின் செயல்பாடுகள் வட துருவத்திலும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் தென் துருவத்திலும் நிறுத்தப்பட்டன.

தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் அதிகாரிகளோ அமைச்சர்களோ தமது துறை சார்ந்து திறம்படச் செயல்பட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அவர்கள் அம்மாவின் மனதைக் குளிர வைத்து விட்டாலே போதுமானது. அதனால் தான் ஜெயா கர்நாடக சிறையில் இருந்த போது மொத்த அமைச்சரவையும் பால்காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, மண்சோறு சாப்பிடுவது, மொட்டை அடித்துக் கொள்வது, தாடியை மழிக்காமல் பரதேசிகளைப் போல் திரிவது என்று கோமாளிகளைப் போல் அலைந்தார்கள்.

அதிகாரிகளும் சளைத்தவர்கள் இல்லை. ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போதும், சிறீரங்கம் இடைத்தேர்தலின் போதும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக இருந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் போன்றே செயல்பட்டனர். நவம்பர் மாத மழையைக் குறித்து பேசிய சேலம் மாவட்ட ஆட்சியாளர், “புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க பெய்த மழை” என்று குறிப்பிடுகிறார். உண்மையில், கடுமையாக கண்டிக்க வேண்டிய இந்த கோமாளித்தனத்தை ஊடகங்கள் கேலி செய்து அந்த ஆட்சியர் பேசியதன் பின்னிருந்த அடிமைத்தனத்தைக் கண்டிப்பதில் இருந்து தவறினர்.

ஒருபக்கம் உலகமயமயமாக்கலுக்கு சேவை செய்வதற்கு தகுந்தாற்போல் ஏகாதிபத்திய சேவைக்கென கைக்கூலிகளாக வார்த்தெடுக்கப்பட்ட அதிகார வர்க்கமும், இன்னொரு பக்கம் தன்னியல்பிலேயே அரசியல் போனபார்டிஸ்ட்டான ஜெயலலிதாவும் கச்சிதமாக பொருந்திப் போனார்கள். இன்று சென்னை மற்றும் வட தமிழகத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் துன்ப துயரங்களுக்கும் இந்தக் கேடு கெட்ட கூட்டணியே காரணம்.

cuddalore-flood-relief-pp-posterஏரி குளங்களை ஆக்கிரமித்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்ப்பது, மணல் கொள்ளைக்கு ஆறுகளைத் திறந்து விடுவது, தாதுமணல் கொள்ளைக்கு விளக்குப் பிடிப்பது, கிராணைட் கொள்ளைக்கு துணை போவது, ஆறு குளங்களை கோக் பெப்சிக்கு சல்லிசான விலைக்கு பட்டா போட்டுக் கொடுப்பது போன்ற “வளர்ச்சித்” திட்டங்களை கொஞ்சமும் மனச்சலனமோ கருணையோ இன்றி செயல்படுத்த தயங்காதவர் என்பதால் தான் திறமையான நிர்வாகியாக ஜெயா முன்னிறுத்தப்படுகிறார். இதேகாரணங்களுக்காகத் தான் மோடியும் “வளர்ச்சி” நாயகனாக முன்னிறுத்தப்படுகிறார்.

ஜெயா ஒரு சேலை கட்டிய மோடி; மோடி வேட்டி கட்டிய ஜெயலலிதா.

அதிகாரிகளும், அமைச்சர்களும், அரசு எந்திரமும், அரசாங்க பிரதிநிதிகளும் தகுதியற்ற அடிமைக் கும்பலாக சீரழிந்து போனதன் ஒரு சுருக்கமான சித்திரம் இது தான். இவ்வாறாக தமிழக அரசு நிர்வாக ரீதியில் முற்றாகத் தோல்வியுற்ற நிலையில் தான் பெருமழை வந்து சேர்ந்தது. மக்களின் வாழ்வை மழை அழித்து விட்டது. இதை இயற்கை மனிதனுக்கு வழங்கிய தண்டனை என்று அரசியலற்ற முறையில் புலம்புகின்றனர் சில அறிஞர்கள். ஆனால், அழியத் தயாரான கொலை நிலமாக தமிழகத்தை மாற்றி வைத்தவர்களை யார் தண்டிக்கப்பது?

இப்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையில், முட்டையில் பேன் பார்க்கும் வேலையைத் துவங்கியுள்ள முதலாளிய ஊடகங்கள் “ஆக்கிரமிப்புகள்” பற்றிப் பேசத் துவங்கியுள்ளன. ஆனால், இந்த அக்கறையின் இலக்கெல்லாம் அடையாறு கூவம் நதியோரங்களில் குடிசை போட்டு பிழைப்பு நடத்தும் ஏழைகளை நோக்கியே இருக்கிறது.

உண்மையில் சென்னை வெள்ளத்திற்கு குடிசைகளின் ஆக்கிரமிப்பு தான் காரணமா?

– தொடரும்

  • தமிழரசன்