Saturday, June 6, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க தூத்துக்குடி - கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள்

தூத்துக்குடி – கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள்

-

தூத்துக்குடி

க்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மக்கள் அதிகாரமும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியும் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி பகுதியில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டனர்.

tuticorin-flood-relief-04தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் நிவாரணப் பொருட்களை மக்களிடமிருந்து சேகரித்தோம். இப்பகுதியிலிருந்து கடலூருக்கும் பொருட்கள் அனுப்பப்பட்டன.

நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் வீடுகள் அதிகமாக சேதமடைந்த, அதிகாரிகளும் ஓட்டுக்கட்சியினரும் செல்லாமல் புறக்கணிக்கும் பகுதிக்கு முன்னுரிமை தந்தோம். அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டியுள்ள மாதவன் நகர், அந்தோனியார்புரம், முள்ளக்காடு பகுதியிலுள்ள கக்கன் நகர், நேரு நகர், பிச்சைமணி நகர், பார்வதிபுரம், சாமி நகர், பாலாஜி நகர், இந்திரா நகர் மற்றும் வீரநாயக்கன் தட்டு ஆகிய பகுதிகளில் தோழர்கள் நிவாரணப் பொருட்களை விநியோகித்தனர்.

tuticorin-flood-relief-05முதலில் வெளியூரிலிருந்து திரட்டி வந்த பொருட்களை குறிப்பாக துணிகளை வயதுக்கு ஏற்பவும், ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்பவும் வகைபிரித்து பண்டல்களாக்கினோம். இதன்மூலம் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் ? என்னென்ன வயது? ஆணா – பெண்ணா? என்று கேட்டு அதற்கேற்ப துணிகளையும், பால் ஊட்டும் பாட்டில், நிப்பிள், நேப்கின்களையும் விநியோகித்தோம்.

இந்த முயற்சியை பாராட்டிய பொதுமக்களையும், பாதிக்கப்பட்ட பகுதி இளைஞர்கள், பெண்களையும் இந்த பணியில் எங்களுடன் இணைத்துக் கொண்டு செயப்பட்டோம்.

இதில் கக்கன் நகர், அந்தோனியார்புரம், பிச்சைமணி நகர், பார்வதிபுரம் மக்கள் குறிப்பிடத்தகுந்த அளவு ஊக்கத்துடன் பங்கெடுத்தனர். தமது தெருவில் மட்டுமல்லாது அருகிலுள்ள பிற பகுதிக்கும் வந்து இரவு 9.00 வரை களத்தில் நின்றனர்.

பெரும்பாலும் உப்பள தொழிலாளிகளும் உதிரித்தொழிலாளிகளும் கொண்ட இப்பகுதி மாவட்ட நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. அதிலும் துப்புரவு பணியாளர்கள் உள்ள பாலாஜி நகர், இந்திரா நகர் பகுதிக்கு வெள்ளம் வந்து ஒருமாதமாகிய நிலையிலும் எங்களைத்தவிர யாரும் போகவில்லை. “இங்கு இந்து முன்னணி இருந்தும் எதையும் செய்யவில்லை. நீங்கதான் உதவறீங்க” என்று மக்கள் தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கக்கன் நகர் பகுதியில் வீடுவாரியாக கணக்கெடுத்து பொருட்களை தனித்தனி பைகளில் போட்டு மேலே பெயர் எழுதப்பட்டு டிரை சைக்கிள் மூலம் விநியோகிக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாதவன் நகரில் ஆதித்தமிழர் கட்சியினர் உதவிக்கு வந்தனர். அதிகம் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுத்து, அவர்களுக்கு முன்னுரிமை தந்து பொருட்களை தர உடனிருந்து செயல்பட்டனர்.

tuticorin-flood-relief-18ஒரு சுற்று நிவாரணப்பொருட்களை தந்து முடித்தவுடன் அடுத்து பிரச்சார சுற்றை தொடங்கினோம். நம் ஊருக்கு எதனால் வெள்ளம் வந்தது? ஓடைகளை யார் ஆகிரமித்தது? அரசு நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்துகொண்டிருந்தது? வானத்திலிருந்து பெருமழை ஏன் கொட்டியது? இதற்க்கு இயற்கைதான் காரணமா – இல்லை கார்ப்பரேட் முதலாளிகளா? என்று கேள்வியெழுப்பி புரியவைத்தோம். தெருமுனைப் பிரச்சாரம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடமும், பள்ளி மாணவர்களிடையேயும், தொழிலாளர் களிடையேயும் இதையே பிரசுரமாகவும் போட்டு விநியோகித்து வருகிறோம்.

இப்பிரச்சாரத்தின்போது  “உங்கள் வீட்டை அழித்த ஸ்டெர்லைட் போன்ற முதலாளிகள் நிவாரணம் தரும்போது பேசாமல் வாங்கிக்கொள்வது சரிதானா?” என்று சிந்திக்க தூண்டினோம்.

உப்பளத்து முதலாளி ஓடையை ஆக்கிரமித்ததால்தான் சாமி நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஊருக்குள் பாய்ந்தது, வடியாமல் நின்றது. பிச்சைமணி நகர் மக்கள்தான் 50 பேராக மண்வெட்டுயுடன் சென்று ஓடையை அகலப்படுத்தி வெள்ளத்தை ஓரளவு வடியவிட்டனர். அதிகாரிகள் சிறு துரும்பையும் எடுத்துப் போடவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இப்படி பாதிக்கப்பட்ட மக்களும் சில அமைப்புகளும்தாம் களத்தில் இறங்கி வேலைகளில் ஈடுபட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் செயலிழந்து தோற்றுவிட்டது. மக்களை அச்சுறுத்துவது, வழக்குபோடுவது என்பதைத் தாண்டி உருப்படியாக எதையும் திட்டமிடவோ செயல்படுத்தவோ வக்கற்றதாகி விட்டது. உழைக்கும் மக்களுக்கு இந்த அரசின் மீது மரியாதை துளியும் இல்லை. போலீசின் மீதான அச்சத்தையும் போக்கிவிட்டால் இந்த அரசு இனியும் நீடிக்க முடியாது என்பதையே களப்பணியில் கிடைத்த அனுபவங்கள் காட்டுகின்றன.

தகவல்
மக்கள் அதிகாரம்,
தூத்துக்குடி

கடலூர் மாவட்ட மீட்பு பணிகள் தோற்றுப் போன அரசு அதிகாரம்! தோள் கொடுக்குது மக்கள் அதிகாரம்!

டந்த மாத துவக்கத்தில் கடலூர் மாவட்டத்தையே உலுக்கி கெடுத்த கனமழை – பெருவெள்ளத்தில் சிக்கி உருக்குலைந்த வேலையில் கடலூர் நகரில் மையமாக பாதிக்கப்பட்ட புருஷோத்தம்மன் நகர் துவங்கி மேலிருப்பு, கீழிருப்பு, விசூர், பெரியகாட்டுப்பாளையம், சின்னக்காட்டுப்பாளையம், ஓணாங்குப்பம், கல்குணம், பீமாராவ் நகர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுடன் இணைந்து நிவாரண மீட்பு பணியில் ஈடுபட்டனர் மக்கள் அதிகார தொண்டர்கள். இந்நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட கனமழை பெருவெள்ளமானது தமிழகத்தையே முடக்கியது.  குறிப்பாக கடலூர், சென்னை, தூத்துக்குடி, மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்தது. மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

cuddalore-flood-relief-1212-34டி.விகளுக்கு போஸ் கொடுக்கும் வகையில் மடிப்புக்கலையாத மல்லுவேட்டி மைனர்களாக அம்மாவின் அடிமை விசுவாசிகள், அதிகாரிகள் பட்டாளம் நிவாரண பணிகளிலிருந்து மக்களை மீட்டு விட்டதாக பம்மாத்து காட்டியதை கண்டு ஆத்திரம் கொண்டு ஆங்காங்கே முற்றுகையிட்டனர். மற்ற கட்சிகளும் பெயரளவுக்கு நிவாரணம், துப்புரவு என நாடகங்களை நடத்திய வேலையில் அடுத்த சுற்று களம் இறங்கியது மக்கள் அதிகாரம்.

கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் நிவாரணம் உதவி என்ற பெயரில் சில தனி நபர்கள், அமைப்புகள் மனிதாபிமான உணர்வோடு பொருட்களை சேகரித்து தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்து உணர்வுபூர்வமாக உதவி செய்தனர். ஆனால் பல பகுதிகளில் பெரும்பான்மையான நிலைமை வேறுவகையாக இருந்தது.  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சாதி கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் என பலராலும் கொண்டு வரப்பட்ட பொருட்கள் வீதிகளில் நின்று மக்களை ஓடி வரவழைத்து நிவாரணங்களை வீசி எரிந்தனர். நேற்றுவரை 10 பேருக்கு சோறுபோட்ட இந்த உழைக்கும் கைகள் இன்று அனைத்தையும் பறிகொடுத்து குடிக்க தண்ணீரும், தின்னசோறுமின்றி தவியாய் தவிக்கிறது. இன்னொரு பக்கம் குவியும் நிவாரணப்பொருட்கள் வரும்வழியிலேயே அ.தி.மு.க.வினராலும், அதிகார திமிர்பிடித்த ரவுடிகளாலும் வழிமறிக்கப்பட்டு அ.தி.மு.க தான் நிவாரணம் கொடுப்பதுபோல் ஆங்காங்கே நாடகமும் அரங்கேறி கொண்டு இருந்தது. இந்த கேவலமான நிலையை கண்டு உதவி செய்ய வந்தவர்களும், மக்களும் இணைந்து கொண்டு அ.தி.மு.க-வினரை கேள்விகேட்டு மடக்கினார்கள், அறுவறுப்பாக பார்த்து ஆத்திரமடைந்து காறி துப்பினார்கள் மக்கள்.

உப்பு சப்பற்ற வெந்த சோத்தை மட்டுமே உணவு என்ற பெயரில்  தந்த அரசின் செலவு 40 கோடி ரூபாயாம்.  பல இடங்களில் தண்ணீரில் செல்ல முடியாமல் கால்வாய்கள் தூர்ந்து போய் நிரம்பி வழிந்து அரசின் செயல்பாடு அடியோடு முடங்கி துர்நாற்றம் அடித்தது, ஆங்காங்கே மக்களும் போராட துவங்கினார்கள்.  இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட நிர்வாகம் மாவட்ட எல்லையிலேயே போலீசை போட்டு நிவாரண வாகனங்களை மடக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று, இப்பொருட்கள் அ.தி.மு.க-வின் செல்வாக்கு பகுதிக்கு மட்டுமே கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பல இடங்களில் நிவாரண வாகனங்களை சூறையாடினார்கள், மிரட்டி பறித்தார்கள். ஆனால் இத்தகைய அனைத்து அச்சுறுத்தல்களையும், தடைகளையும், உடைத்தெறிந்து பு.ஜ.தொ.மு, பு.ம.இ.மு, மக்கள் அதிகார தோழர்களும், தொண்டர்களும், அதன் ஆதரவு நண்பர்களும், அறிவுஜீவிகளும், வணிகர்களும், தொழிலாளர்களும், மாணவர்களும் தமிழகம் எங்கும் நிவாரணப்பொருட்களை சேகரித்து தாங்களே சொந்த பொறுப்பில் வாகனம் வைத்து கொண்டு பொருட்களை எடுத்து வந்தனர்.

கடலூர் பெரியார் சிலை அருகில் நிவாரணம் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது.  நம்முடைய முகாம் அலுவலகத்தையோ, நிவாரணப்பொருட்களின் விநியோகத்தையோ ஒரு செய்தி ஊடகங்கள் கூட ஒளிபரப்ப மறுத்தது. ஆர்.எஸ்.எஸ்-ன் செய்திகளை மட்டுமே வாந்தி எடுத்தனர்.  தினமும் உளவுத்துறை போலிசின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தினர்.

நகரில் இரு இடங்களில் நிவாரணப்பொருட்கள் பிரிப்பு பணிகளும் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம், மக்கள் எண்ணிக்கை, தேவையின் விவரம் போன்றவை சேகரிக்கப்பட்டன.  இந்த அடிப்படையில் அந்தந்த பகுதிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இரவுபகலாக தோழர்கள் உழைத்தனர்.  ஆம்! கொட்டும் மழையிலும், உணவுக்கு வழியின்றியும், முகாமை துவங்கும்போது கையில் சல்லிகாசும் இல்லை, பொருளும் இல்லை.  மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமே தோழர்களை எரிசக்தியாய் இயக்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆய்வுக்கு சென்ற ஒவ்வொரு கிராமத்திலும் மாணவர்களும், இளைஞர்களும், “நீங்க டாஸ்மாக்குக்கு எதிரா பாட்டு பாடின இயக்கம்தானே, உங்க பாட்டு உண்மை நிலையை எடுத்து சொல்லிச்சு” என்று வரவேற்றனர்.  அறிமுகமானவர்கள் நண்பர்களானார்கள். அவர்களின் மூலமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தேவையின் அடிப்படையில் பாய், போர்வை, பிஸ்கட், உடைகள், வீட்டுச்சாமான்கள், ஸ்டவ் அடுப்புகள், மளிகைப்பொருட்கள் என தரம் பிரிக்கப்பட்டு கடலூர் புருஷோத்தம்மன் நகர், பீமாராவ் நகர், சுரேஷ் நகர், குறவன்குளம், மஞ்சக்குப்பம், ஓம் சக்தி நகர், ராணாகுப்பம், தீர்த்தனகிரி, புலியூர், பாரதி நகர், பூவாலை, குமரப்பன்நாயக்கன்பேட்டை, கரிசமங்களம், சேணாஞ்சாவடி, தானம் நகர், புதுக்குளம், தங்கலிக்குப்பம் சின்னஇருசலாம் பாளையம், பெரிய இருசலாம் பாளையம், சேத்தியார் தோப்பு, புதுச்சேரி நோனாங்குப்பம் என பல கிராமங்களில் விநியோகம் செய்யப்பட்டன.

மக்கள் அதிகாரத்தின் விநியோக முறை என்பது மற்றவர்களைவிட அடிப்படையில் வேறுபட்டதாக இருந்தது ஒவ்வொரு வீட்டிலும் முன்கூட்டியே பாதிப்புகளை கண்டறிந்து டோக்கன் வழங்கப்பட்டது.  டோக்கன் பெற்ற அனைவரையும் ஊரின் மைய இடத்தில் வரவழைத்து அங்கே வெள்ளம் ஏற்படுத்திய சேதத்திறகு யார் குற்றவாளிகள் என்று பேசப்பட்டது.

“மக்களே இது மாணவர்கள், தொழிலாளர்களால் தங்கள் உழைப்பின் மூலம் திரட்டப்பட்ட பொருட்கள் நாங்கள் கொடுக்கும் இந்த நிவாரணம் உண்மையில் இழந்துபோன உங்கள் வாழ்க்கையை முழுமையாக மீட்காது. நிவாரணம் என்பது தீர்வு அல்ல, நம் வாழ்வை பறித்ததற்கான காரணத்தை அறிந்து அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும், பாதுகாக்க தவறிய அரசமைப்பையும் அம்பலப்படுத்தி போராட வேண்டும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த நாட்டின் காட்டையும், மலைகளையும், கனிம வளங்களையும் சூறையாடியது இந்த முதலாளி வர்க்கம், அவர்களுக்கு எடுபிடி வேலைசெய்து ஆறு, குளம், ஏரிகளை தூர்வாராமல் நம்மை இந்த துயரத்திற்கு தள்ளி வாழ்வை பறித்தது மக்களை பாதுகாக்க வக்கற்று தோற்று போன இந்த அரசு அதிகாரம். கனமழை, பெருவெள்ளம் இருக்குமென வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்த பின்னும் இத்தகைய இயற்கை பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க தவறிய இந்த அரசு செயலிழந்து போனதே காரணம். இனி அரசு அதிகாரிகளையும், ஆளும் கட்சியினரையும், இதர அரசியல் கட்சிகளையும் நம்பி கெஞ்சிகேட்டு, மண்டியிட்டு, மனுகொடுத்து மாற்றம் வராது. எனவே நம்வாழ்வை, நம் மக்களை, நம் கிராமத்தை, நம் நகரத்தை பாதுகாக்க நாம் அதிகாரத்தை கையிலெடுப்பதே தீர்வு. அதற்கு எங்கள் அமைப்புகளும், மக்கள் அதிகாரமும் உங்களுடன் என்றும் துணை நிற்கும்” என்ற பிரச்சாரத்தை மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதை பார்த்த ஒவ்வொரு பெண்களும், “தம்பி யார் வந்தாலும் ஊர்முனையில் நின்று கொண்டு எங்களை நாயா போயா அலைய விடுவாங்க கிடைக்குமோ, கிடைக்காதோ என்று மக்களும் முண்டி அடித்து முட்டி மோதிக்கொண்டு சண்டை சச்சரவுகள் ஆகும். இது எங்களுக்குள்ளேயே பிரச்சனையை உருவாக்கி விடும். ஆனால் நீங்க நிவாரணம் கொடுக்கும் முறை உண்மையிலேயே எங்களை புரிந்துகொண்டு செய்கிறீர்கள்” என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தோழர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று உணவு கொடுத்து உபசரித்தார்கள்.  தோழர்களோ மக்களுக்கு புரட்சிகர உணர்வூட்டி வருகிறார்கள்.

ஆம்! இதோ அரசு அதிகாரம் உதிர தொடங்கி விட்டது.  மக்கள் அதிகாரம் மக்களின் வாழ்வாக மலர்ந்து வருகிறது.

இவன்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி
கடலூர் மாவட்டம். செல்: 7200037204

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க