Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகொத்தடிமைகளாக கல்லூரி விரிவுரையாளர்கள்

கொத்தடிமைகளாக கல்லூரி விரிவுரையாளர்கள்

-

teacher-4கெளரவ விரிவுரையாளர்களை கொத்தடிமைகளாக நடத்தும் தமிழக அரசு உயர்கல்வித் துறையில் நடக்கும் ஊழல், இலஞ்சம், முறைகேடு, மனித உரிமை மீறல் ஆகியவற்றை வேரறுக்க வேண்டி தமிழகத்தின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் அனுப்பிய கடிதம்.

அனுப்புநர்,

கெளரவ விரிவுரையாளர்கள்,
சுழற்சி I மற்றும் II,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,
உயர்கல்வித்துறை,
தமிழகம், இந்தியா.

பெறுநர்,

  1. மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர், புது தில்லி.
  2. செயலர், குடியரசுத் தலைமை அலுவலகம், புது தில்லி.
  3. மேதகு இந்திய பிரதமர்.
  4. மேதகு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், புது தில்லி.
  5. தலைவர், பல்கலைகழக மானியக்குழு, புது தில்லி.
  6. மாண்புமிகு தமிழக முதல்வர் (தனிபிரிவு).
  7. தேசிய மனித உரிமை ஆணையம்.
  8. செய்தி மற்றும் ஊடகத்துறை.

பொருள் :

கெளரவ விரிவுரையாளர்களை கொத்தடிமைகளாக நடத்தும் தமிழக அரசு உயர்கல்வித் துறையில் நடக்கும் ஊழல், இலஞ்சம், முறைகேடு, மனித உரிமை மீறல் ஆகியவற்றை வேரறுக்க வேண்டுதல்.

ஐயா,

வணக்கம்,

தமிழக – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையின் காரணமாக யூ.ஜி.சி விதி முறைகளுக்கு உட்பட்டு பி.எச்.டி, எம்.ஃபில் வித் நெட் தகுதி உடைய கல்வியாளர்களை, அறிஞர்களை அனைத்து துறைகளிலும் பணியமர்த்தி உள்ளனர். ஏறக்குறைய 3000 பேருக்கு மேல் சுழற்சி (I, II) பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குத் தொகுப்பு ஊதியமாக 10 மாதங்கள் மட்டுமே ரூபாய் 10,000/- வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வூதியம் உரிய தேதிக்கு வழங்கப்படுவதில்லை. ஏப்ரல் -2014, 2015 ஆகிய இரண்டு மாதங்களும் வேலையை மட்டும் வாங்கிக்கொண்டு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை

அந்நியர்களின் அடக்குமுறையினாலும், ஒடுக்குமுறையினாலும் “சுதந்திரமின்றி சுயமரியாதையின்றி, சமநீதி, சமத்துவம், மனிதநேயம், பேச்சுரிமை, பணி பாதுகாப்பு, வாழ்க்கை வளர்ச்சி, எதிர்காலம் இவை எதுவுமே இன்றி அடிமாடுகளாய், கொத்தடிமைகளாய், மன உளைச்சலோடும், அவமதிப்போடும், கண்ணீரோடும், போராடி வாழ்ந்த நிலைமாறி, எங்களுடைய சொந்த நாட்டிலேயே எங்களைப்பேணி பாதுகாக்க வேண்டிய அரசிடமே இத்தகைய கொடுமைகளை அனுபவிப்பது எத்தனை கொடுமையானது.

இது கொலைபாதகச் செயலைவிடவும் மேலான மிகவும் துன்பம் தரக்கூடிய வன்செயலாகும். தமிழக உயர்கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை, போக்குவரத்துத்துறை, வருவாய்துறை போன்ற அனைத்துத்துறைகளிலும் பணியாற்றி வரும் அனைத்துத் தற்காலிகப்பணியாளர்களும் பணிப்பாதுகாப்பும், சமநீதியும், சம உரிமையும், உழைப்புக்கேற்ற ஊதியமும் இன்றி கொத்தடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.

தொழிலாளர் கூட்டமைப்புகளும், உயர்கல்வித்துறை பேராசிரியர்களும், மன்றம், கழகம் சார்ந்த பொறுப்பாளர்களும் பலமுறை போராடியும், தமிழக அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு நீதியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்கள் வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

”சட்டத்தின் முன் எல்லோரும் சமம்” என்று சொல்லும் இந்திய அரசியல் சட்டம், நீதித்துறை, நீதியரசர்கள், யூ.ஜி.சி, மனித வளத்துறை அமைச்சகம், மத்திய, மாநில அரசுத்தலைவர்கள், மனிதநேய சிந்தனையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் எங்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும்.

நிரந்தர பேராசிரியர்களுக்கு நிகரான கல்வித்தகுதியும் திறமையும் பெற்று, அவர்கள் செய்யும் அதே பணிகளைச் செய்தும் வருகின்றோம். ஆனாலும், சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. இந்நிலை எங்கள் வாழ்க்கையையும், வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் சீரழிக்கும் நோக்கம் கொண்டதாக அமைந்துள்ளது. பொதுவாக, அரசின் விதி என்பது தன் நாட்டு குடிமக்களின் சம உரிமை, சமநீதி, பணிபாதுகாப்பு, வாழ்க்கை, வளர்ச்சி, எதிர்காலம், சுதந்திரம், சுய மரியாதை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டும். மாறாக, இவை எதுவுமே இன்றி தன் நாட்டுக் குடிமக்களைக் கல்வியாளர்களை அறிஞர்களை தமிழக உயர்கல்வித் துறை கொத்தடிமைகளாக நடத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வி துறையில் பணியாற்றும் ஒரு பேராசிரியர்க்குரிய எந்த ஒரு உரிமையும் சலுகையும் பணிப்பாதுகாப்பும் சமத்துவமும்  கெளரவ விரிவுரையாளர்களுக்கு இல்லை என்பது தான் உயர்கல்வித் துறை வகுத்து வைத்த விதி. இதில் மனித நேயம் என்பது இருக்கிறதா? இது மனித உரிமைக்கு ஏற்ற செயலா?என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

இக்காலப் பொருளாதாரச் சூழலில், கடைநிலை ஊழியர்களுக்கும் மிகவும் குறைவாக வழங்கப்படும் மாதத்தொகுப்பூதியம் ரூ 10,000/-ஐ வைத்து

  • எங்கள் குடும்பங்களை நடத்தவும்,
  • அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவும்,
  • குழந்தைகளைப் படிக்க வைக்கவும் பராமரிக்கவும் இயலவில்லை.

இந்நிலை உயர்கல்வித்துறையில் சக ஊழியர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும், சமூகத்தில் பொருளாதார சமத்துவமற்ற, மனிதநேயமற்ற ஏற்றத்தாழ்வுகளையும், அவமானத்தையும், மன உளைச்சலையும் எங்களுக்கு ஏற்படுத்துகின்றது.

எங்களுக்குரிய பணி பாதுகாப்பையும், உரிமைகளையும் சலுகைகளையும் கேட்டால் கெளரவ விரிவுரையாளர்களுக்கு என்று எந்த ஒரு உரிமையும், சலுகையும் கிடையாது என்றும், எந்தவித முகாந்திரமும், விசாரணையும் இல்லாமல் உங்களைப் பணிநீக்கம் செய்துவிடுவோம் என்றும் உங்கள் எதிர்காலத்தையே சீரழித்து விடுவோம் என்றும் அச்சுறுத்துகின்றனர். இச்செயல் கெளரவ விரிவுரையாளர்களின் உழைப்பை மட்டும் வாங்கிக்கொண்டு கொத்தடிமைகளாய் நடத்தும் போக்கை வெளிப்படுத்துகின்றது.

ஆகவே, எங்களுக்குரிய பணிப்பாதுகாப்பும், சமஉரிமையும், சமநீதியும் கிடைக்க வழிவகை செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள
கெளரவ விரிவுரையாளர்கள்
அரசு கல்லூரிக் கல்வித்துறை
தமிழகம், இந்தியா