”வாழ்த்துக்கள், முகநூல் அதிர்ஷ்ட குலுக்கலின் மூலம் நீங்கள் 4,000,000 பிரிட்டன் பவுண்டுகளை வென்றுள்ளீர்கள்” என்றது அந்த மின்னஞ்சல். அந்த தொகையைப் பெற என்னுடைய வங்கி கணக்கு விவரங்களையும், செயலாக்க கட்டணமாக 150 பிரிட்டன் பவுண்டுகளையும் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒருவருக்கு கொடுக்க வேண்டிய சில்லரை வேலை மட்டும் பாக்கி. அதைச் செய்ய முடியும் என்று தான் நினைக்கிறேன்.
இணைய லாட்டரிகளை நான் எப்போதும் விரும்புவேன். ஏனென்றால் நீங்கள் அதில் எப்போதும் கெலித்துக் கொண்டே இருக்கலாம். எனது மின்னஞ்சல் நிரம்பி வழிந்து, மாதா மாதம் அதிக சேமிப்பிடத்திற்காக கூகிள் நிறுவனத்திற்கு 2 டாலர் கொடுக்குமளவிற்கு நான் இணைய லாட்டரிகளில் ஜெயித்துக் கொண்டே இருக்கிறேன் என்றால் பாருங்களேன்.
இப்படி நான் லாட்டரியில் ஜெயித்துக் கொண்டேயிருப்பதால் எனது மொத்த சொத்து மதிப்பு இப்போது 82.3 ட்ரில்லியன் டாலர். என்னிடம் உள்ள விவரங்கள் சரியென்றால், இது ஒட்டுமொத்த உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட கொஞ்சம் அதிகமானது. பல கோடீஸ்வரர்களையும், பில் கேட்ஸ் மற்றும் வாரன் ப்ஃபெட் போன்றவர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களை விட நான் பணக்காரனாக செய்ய வேண்டியதெல்லாம் எனது வங்கிக் கணக்கையும், செயலாக்க கட்டணத்தையும் ஆம்ஸ்டர்டாம், லாகோஸ், லிச்ரென்ஸ்டீன், பெனின் அல்லது வேறு அழகான நகரங்களில் இருக்கும் நல்ல உள்ளங்களுக்கு கொடுத்தால் போதும்.
சரி விடுங்க.. நான் இன்னும் அந்த பரிசுத் தொகைகளை எல்லாம் வாங்கவில்லை. நேரமில்லாதது தான் காரணம். ஆனா பாருங்க, அந்த மாதிரி மின்னஞ்சல்கள் என்னை சந்தோஷமா வைத்திருப்பதோடு, எனக்குத் தேவையான பாதுகாப்புணர்ச்சியையும் கொடுக்கிறது. ஆப்பிரிக்காவின் செத்துப்போன சர்வாதிகாரிகளின் விதவைகளிடமிருந்து தமது அறக்கட்டளையில் பங்காளியாக சேர்ந்து அதன் சொத்துக்களை சேர்ந்தே அனுபவிக்க அழைப்பு விடுத்து வரும் மின்னஞ்சல்கள் கூட இந்தப் பாதுகாப்புணர்ச்சியை தருவதில்லை.
இந்த மாதிரி பெரிய எண்களோடு மல்லுக்கட்டும் போது நாம் கொஞ்சம் எச்சரிக்கை ஆகிவிடுவதும் உண்டு. ஒரு சர்வாதிகாரி சுமார் 200 விதவைகளை விட்டுட்டு போயிருக்கார் – அத்தனை பேரும் எனக்கு மட்டுமின்றி வேறு சில லட்சக்கணக்கானவர்களுக்கும் சோக நயத்தோடு அன்பரே என்று விளிக்கும் மடல்களை கணக்கு வழக்கில்லாமல் அனுப்பியிருக்காங்க.. ஆனா, லாட்டரிகள் எப்போதும் சந்தோஷமானவை. அவை உங்களுக்கு ஒரு விசேஷமான உணர்வை அளிக்கின்றன – லாட்டரிகளால் நீங்கள் எப்போதும் தோற்பதேயில்லை.
இதே காரணத்திற்காகத் தான் நமது பிரதமரையும் எனக்குப் பிடித்துப் போயிருக்கிறது என்பதை அவரது கடைசி மூன்று வெளிநாட்டு பயணங்களுக்குப் பின் தான் நான் உணார்ந்தேன். நரேந்திர மோடியால் நாம் எப்போதும் ஏராளமான பணத்தை கெலிக்கலாம். ஆம்ஸ்டர்டாம், பெனின் மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டே இருக்கும் (இதற்காகத் தானே மோடி நிறைய சுற்றுப் பயணங்கள் போகிறார்). 2014 தேர்தலுக்கு முன்னும் சரி, பின்னும் சரி – பணத்திற்கான உத்திரவாதத்தைப் பொறுத்தளவில் அவர் எப்போதும் பேச்சு மாறுவதில்லை.
தேர்தலுக்கு முன் அவரும் அவரது கட்சிக்காரர்களும் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கொடுப்பதாக உறுதியளித்திருந்தனர். ஏனென்றால், இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் மொத்த கருப்புப் பணத்தை இந்திய மக்கள் தொகையால் வகுத்தால் வரும் தொகை 15 லட்சம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள், உங்களுக்காக கடைசி சுவிஸ் ப்ராங்க் வரை பீறாய்ந்து வந்து விடுவோம் என்றார். அப்புறமென்ன, நாமெல்லாம் வெற்றியாளர்கள் தானே. அதுவும் சமமான வெற்றியாளர்கள். (ஆனா, இதுல ஒரு சின்ன சிக்கல். அதாவது, தேர்தலுக்கு முன்பாக பீகாரிகளுக்கு நிறைய செய்வதாக சொல்லி வந்தார். 1.25 லட்சம் கோடிகள் பீகாரிகளுக்காம். சிலர் இதெல்லாம் சும்மா பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக அடிக்கும் உட்டாலக்கடி வேலை என்றார்கள் – சரி, இதையெல்லாம் லூஸ்ல விடுங்க.. இப்படி எடக்கு மடக்கா பேசறவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்)
நமது பிரதமர் ஆம்ஸ்டர்டாம், அசெர்பெய்ஜான் பேர்வழிகளை விட பல படிகள் மேலே போய் இன்ப அதிர்ச்சியும் அளித்தார் – அட அவரு நம்ம வங்கிக் கணக்கு விவரங்களை கேட்கலை; அதையும் அவரே உருவாக்கி கொடுத்து விட்டார். போன சுதந்திரதின உரையில் தனது அரசாங்கம் மொத்தம் 17 கோடி வங்கி கணக்குகளை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் மோடி. இவை எல்லாம் இது வரை வங்கிக் கணக்கையையே கண்டிராத ஏழை இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டவை. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், இந்தக் கணக்கை ரூபாய் இருப்பு இல்லாமலே கூட பராமரிக்க முடியும். ஐம்பது சதவீதத்திற்கும் மேலான வங்கிக் கணக்குகளில் பூஜ்ஜியம் ரூபாய்கள் தான் இருக்கின்றது என்பது தனிக் கதை.
அடடா, பூஜ்ஜிய இருப்பு…! யோசித்துப் பாருங்களேன், கோடிக்கணக்கான தூய்மை இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் துடைத்து வைத்தது போல் துட்டே இல்லாமல் தூய்மையாக இருக்கும். இதற்கு செயலாக்க கட்டணமாக நைஜீரிய லாட்டரியைப் போல 150 பவுண்டுகள் கேட்க மாட்டார்கள். நைஜீரியா, பெனின், லிச்டென்ஸ்டீன்… இனி உங்கள் சேவை எங்களுக்குத் தேவையில்லை – உங்க திசைக்கே ஒரு பெரிய கும்பிடு. பொதுத்துறை வங்கிகள் இப்படி லட்சக்கணக்கான வங்கிக் கணக்குகளை ரூபாய் இருப்பு இல்லாமல் பராமரிக்க 2,000 கோடிகள் தண்டமாக செலவாகும் என்று புலம்புகின்றன – அவர்களை விடுங்கள், வங்கிகள் என்றாலே இப்படித்தானே புலம்புவார்கள்.
அப்புறம், இந்த வருட “அதிரும் குஜராத்” (Vibrant Gujrat) வைபவத்தில் மோடி தனது முந்தைய சாதனைகளைத் தானே தாண்டிச் சென்றார். ஜனவரி 11லிருந்து 13 வரை வெறும் 24 வேலை மணி நேரத்தில் மோடியின் உதாரண மாநிலம் 2.1 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான சுமார் 21000 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. சராசரியாக கணக்கிட்டால் ஒரு நிமிடத்திற்கு 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அல்லது நான்கு நொடிகளுக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கணக்காகிறது.
உசேன் போல்ட்டே பொறாமைப் படும் வேகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் படித்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் ஒவ்வொரு நொடிக்கும் ஆறு வங்கிக்கணக்குகள் மேனிக்கு 17 கோடி வங்கிக் கணக்குகளைத் திறந்த சாதனையின் முன் இதெல்லாம் சும்மா கொசு தான். ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் படிக்க வேண்டிய பக்கங்களை வைத்துப் பார்த்தால் இதுவும் ஒரு சாதனை தான். பூஜ்ஜிய இருப்பு வங்கிக் கணக்கில் படிக்க என்ன இருக்கிறது சொல்லுங்கள்? ஒரு பூஜ்ஜியத்தைப் படித்தால் எல்லா பூஜ்ஜியத்தையும் படித்த மாதிரி தானே? இதில் இன்னொரு தொழில் ரகசியமும் இருக்கிறது – அதிரும் குஜராதின் நேயர்கள் அந்த 150 பவுண்டு செயலாக்க கட்டணத்தை எந்த வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்ற விவரம் வழங்கப்படவில்லை.
இப்போதைக்கு சீனத் துயரத்திலிருந்து நமக்கு வேண்டிய மட்டும் உருவிக் கொள்வது என்பதை மட்டும் மோடி விளக்கி இருக்கிறார். இதற்காக தொழில் துறையைச் சேர்ந்த 40 மந்த புத்திக்காரர்களை தன் முன்னே ஆஜராகச் சொல்லியும் இருக்கிறார். சீனச் சந்தை நெருக்கடி நமக்கு பாதிப்பு ஏற்படுதும் என்ற அச்சத்தைக் பிரதமரும் அவரது ஆலோசகர்களும் கிண்டலடித்துள்ளனர். (பெரும்பாலான யோசனைகளை அவர்கள் கிண்டலடிப்பார்கள் என்றாலும், இதில் ஒரு அர்த்தம் இருக்கிறது).
நமது பொருளாதார அடிப்படைகள் 2014-ம் ஆண்டு மே மாதத்தின் ஒரு நள்ளிரவில் ஒரேயடியாக வலுப்பெற்று விட்டதால், முதலாளித்துவமே நமது நாட்டில் வேறு மாதிரி தான் வேலை செய்கிறது. ’பக்கத்து வீட்டிலிருப்பது பிச்சைக்காரன்’ என்ற தனது ஆரோக்கியமான – போட்டிப் பொருளாதார தத்துவத்தின் அடிப்படையில் ஒரு தேசிய அம்சத்தைப் பொருளாதாரத்தோடு கோர்த்து விட்டுள்ளார் மோடி. சீனர்கள் வெறும் சீனர்கள் தானே? அவர்களிடம் புராண காலத்தில் முன்னும் பின்னும் பறக்கும் விமானங்கள் இருந்ததா என்ன?
அந்த நாட்டுக்குச் சென்ற போது பத்து பில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஒப்பந்தங்களை மோடி செய்துள்ளார் என்பதையும் நாம் மறக்க கூடாது. இதில் எதும் நடக்கவில்லையென்றால் அதற்கு கன்பூஷிய சோம்பேறுத்தனத்தில் ஊறிய ஜி ஜின்பிங்கும் அவரது கும்பலும் தேவையான நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களையும், செயலாக்க கட்டணத்தையும் வழங்காதது தான் காரணமாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் அந்த பத்து பில்லியன் என்பது நமக்கெல்லாம் மோடி தருவதாக சொல்லி இருக்கும் ஒரு ட்ரில்லியன் டாலரில் ஒரு சதவீதம் தானே?
செயலும் செயலாற்றுதலும் மிக்க ஒருவர் கிடைத்தால் நமது எதிர்பார்ப்புகள் அதிகமாவது இயற்கை தானே. எனவே அழுத்தம் அதிகமாகத் தான் உள்ளது. 17 கோடி வங்கிக் கணக்குகள் எதையாவது எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. இதில் தங்கள் பேரிலும் ஒரு வங்கிக் கணக்கு உள்ளதென்பதை பலர் அறிய வரும் போது அழுத்தம் இன்னும் அதிகரிக்கும். இப்போதைக்கு வங்கிக் கணக்குகளை மின்னல் வேகத்தில் திறப்பதில் தான் கவனம் காட்டப்பட்டுள்ளது. தங்கள் பேரில் வங்கிக் கணாக்கு துவங்கப்பட்டுள்ளது என்பதை இன்னமும் அறியாமல் இருப்பவர்களுக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். அந்தப் பதினைந்து லட்சத்தில் முதல் தவணை வந்து சேரும் போது கூட இந்த தகவல் சென்று சேரலாம்.
குழப்பமே தேவையில்லை, துட்டு வந்து கொண்டே இருக்கிறது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தில் இருந்து மட்டுமில்லை – ஏராளமான முதலீடுகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. நமக்கு வர வேண்டிய முதலீடுகளின் ஒரு சிறிய பட்டியலைப் பாருங்கள் – ஐக்கிய அரபு நாட்டில் 75-லிருந்து 100 பில்லியன் டாலர், அமெரிக்காவிலிருந்து 45 பில்லியன் டாலர், பிரான்சிலிருந்து 2 பில்லியன் யூரோ, ஜப்பானிலிருந்து 3.5 ட்ரில்லியன் யென் (33.5 பில்லியன் டாலர்), தென் கொரியாவில் இருந்து 10 பில்லியன் டாலர்.
இந்த பிரம்மாண்டமான வரவுகளுக்கு இடையில் சில சில்லறைச் செலவுகளும் இருக்கின்றன. குறுந்தொழில்கள் துவங்க பிஜி தீவுகளுக்கு வழங்கப்பட்ட 5 மில்லியன் டாலர் மற்றும் பூட்டானியர்கள் இந்தியா வழங்கிய நீர்மின் திட்ட பொம்மையோடு விளையாட செய்யப்பட்ட கொசுறு செலவும் உண்டு. அப்புறம் நாடோடி மங்கோலியர்கள் நவீன முதலாளித்துவம் வழங்கும் சந்தோஷங்களை அறிந்து கொள்ள வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டாலர் கடனும் இந்தப் பட்டியலில் உண்டு.
இதெல்லாம் ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களில் சாதிக்கப்பட்டவைகள்.
இனிமேல் நைஜீரிய சீமாட்டி மேடம் அபாச்சே தனது செத்துப் போன சர்வாதிகாரி கணவன் விட்டுச் சென்ற மில்லியன் டாலர் சொத்துக்களை இணைந்து அனுபவிக்க அழைப்பு விடுத்து அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு நாம் மறுப்புத் தெரிவித்து பதில் எழுத வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அதற்கு பதில் நமது வங்கிக் கணக்கு விவரங்களையும் செயலாக்க கட்டணத்தையும் நாம் தில்லிக்கு அனுப்பலாம்.. நிறைய நல்ல நாட்கள் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றன… சரி, வெறும் நாட்கள் என்று கூட வைத்துக் கொள்ளுங்களேன்.
(பி. சாய்நாத் எழுதி அவுட்லுக்கில் வெளியான The Lord Of The Lottery Rings மூலக் கட்டுரையிலிருந்து தழுவி எழுதப்பட்டது)
– தமிழரசன்
ஏன் அய்யா டீ ஆத்தறவன் கிட்ட பொருளாதாரம் பேசுரீங்க…அவனுக்கு தெரிந்தது தமிழ் இன அழிப்பு…
மிகவும் யோசிக்க வைத்த கட்டுரை….