privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க‘அம்மா’: தமிழகத்தின் பேரிடர்!

‘அம்மா’: தமிழகத்தின் பேரிடர்!

-

ந்த மழையும் வெள்ளமும் ஜெயலலிதா அரசைப் பற்றி இதுகாறும் நாம் அறிந்திராத பரிமாணம் எதையாவது காட்டியிருக்கின்றதா? இல்லை. ஜெ.அரசு என்று அழைக்கப்படும் இந்தக் கொள்ளைக்கூட்டம், ஆபாசம், வக்கிரம், ஆணவம், பித்தலாட்டம், செயலின்மை ஆகிய அனைத்தையும் தனது பிறவிக் குணங்களாகவே கொண்டிருந்த போதிலும், இதனைக் காணத்தவறியவர்களுக்கும் காண மறுத்தவர்களுக்கும் அதன் கோர முகத்தை அம்பலப்படுத்திக் காட்டியிருக்கிறது. சினிமா நடனத்தின் ஆபாசத்தை மேலும் விகாரமாகக் காட்டும் மழைக்காட்சியைப் போன்றது இது.

02-flood-victimsநடிப்புக்காகக் கூட கருணையைக் கண்களில் வரவழைக்க இயலாத அம்மா”, பருவ மழையின் சீற்றம் தொடங்கிய பின்னர் வேறு வழியின்றி மலையிலிருந்து இறங்கினார். மூன்று மாத மழை ஒரே நாளில் பெய்து விட்டதாகக் கூறி, கடலூர் மக்களைக் காட்டாற்று வெள்ளத்துக்குக் காவு கொடுத்த தனது அரசின் தடித்தனத்தை நியாயப்படுத்தினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் அலட்சியம் செய்தார். பின்னர், எதிர்க்கட்சிகளின் விமரிசனத்துக்குப் பயந்து, கண்ணாடிக் கூண்டு வண்டிக்குள்ளிருந்தபடி விஜயம் செய்தார். டிசம்பர் துவக்கத்தில் சென்னையே மூழ்கிய பின்னரும், போயஸ் தோட்டத்தை விட்டு அசைய மறுத்தார். மோடியின் விளம்பர விஜயம் பற்றி அறிந்தவுடனே பீதியுற்று, ஹெலிகாப்டரில் பறந்தார். “பத்து இலட்சத்து மூவாயிரத்து மூணு தயிர்சாதம், மூவாயிரத்து நாலு சாம்பார் சாதம்” என்று அதிகாரவர்க்கம் எழுதிக் கொடுத்த புள்ளி விவரத்தை வெள்ள நிவாரணம் என்ற பெயரில் வாசித்தார் -இதுதான் ஜெயலலிதா.

எதைத் திருடுவது என்பதை மட்டுமே ஒவ்வொரு நொடியும் சிந்திக்கும் கும்பலாக ஒரு கட்சி; மக்கள் மீது அக்கறையோ, பொறுப்போ, நிர்வாகத் திறமையோ, அறிவோ, சுயமரியாதையோ இல்லாத, அடிமைத்தனத்தையும் களவாணித்தனத்தையும் மட்டுமே தமது முழுமுதல் தகுதியாகக் கொண்ட அமைச்சர்கள்; அம்மா ஆணையிடும் குற்றச்செயல்களைக் கூச்சமில்லாமல் செய்து முடிக்கும் கூலிப்படையாக சிறப்பு ஆலோசகர்கள், தலைமைச் செயலர், உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட விசுவாச அதிகார வர்க்கம்; இந்தக் கேவலங்கள் அனைத்தையும் சீவிச் சிங்காரிக்கவும், குற்றங்களை நியாயப்படுத்தவும், திசை திருப்பவும் தொழில் முறையில் பயிற்சி பெற்ற, பார்ப்பன, கார்ப்பரேட் ஊடகங்கள் – இதுதான் ஜெயலலிதா ஆட்சி.

இதுதான் தமிழக மக்களுக்கு எதிரான பேரிடர். இந்தப் பேரிடர் அகற்றப்படாமல் நீடிப்பதன் விளைவுதான் வெள்ளப் பேரழிவு. செம்பரம்பாக்கம் ஏரியின் நீரைச் சிறிதுச் சிறிதாக வெளியேற்ற வேண்டுமென்ற பொறியாளரின் எச்சரிக்கையைப் பொதுப்பணித்துறை செயலரும், தலைமைச் செயலரும் ஐந்து நாட்கள் கிடப்பில் போட்டனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி டிசம்பர் முதல் நாள் நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரித் திறக்கப்பட்டுஒரு இலட்சம் கன அடிக்கு மேற்பட்ட தண்ணீர் சுனாமியைப் போல எழுந்து வந்து இலட்சக்கணக்கான வீடுகளை மூழ்கடித்து, நூற்றுக்கணக்கான மக்களைக் கொலை செய்தது. அவர்கள் சிறுகச் சிறுக கட்டியெழுப்பிய வாழ்க்கையை கண நேரத்தில் அழித்து அநாதைகளாக்கியது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதும், உணவு – தண்ணீர் வழங்கிக் காப்பாற்றியதும், நிவாரணம் வழங்கியதும் மக்களேயன்றி, இந்த அரசு அல்ல. பேரழிவைப் பரிசாகத் தந்திருக்கும் ஒரு வளர்ச்சிப் பாதை, தோற்று நிலைகுலைந்துவிட்ட ஒரு அரசமைப்பு, இவற்றால் சீரழிக்கப்பட்ட மக்கள் மீது பிணந்தின்னிகளைப் போல மொய்க்கும் அ.தி.மு.க. கும்பல் – இதுதான் வெள்ளச் சேதத்தின் வழியே விளக்கம் பெறும் அரசியல். அழிவிலிருந்து மீட்கும் முயற்சியாக மக்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களின் மீது “அசிங்கத்தை ஒட்டு” என்று மிரட்டுகின்றனர் அ.தி.மு.க. காலிகள். அழிவைக் காட்டிலும் கொடியது இந்த அவமானம். தமிழ் மக்களின் தலையில் ஒட்டிக் கொண்டுவிட்ட அவமானத்தை, தமிழ்ச் சமூகத்தை மறித்து நிற்கும் இந்தப் பேரிடரைத் துடைத்தெறிவதற்கான வாய்ப்பை இந்த வெள்ளப் பேரழிவு வழங்கியிருக்கிறது.

______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2015
______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க