Friday, October 18, 2019
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஆபாசம் - அராஜகம் - ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி !

ஆபாசம் – அராஜகம் – ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி !

-

“ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பது நின்றும், நீடித்தும் பெருமழை தரக்கூடியது” என வரையறுக்கிறது வானிலை அறிவியல். “இதனைப் பாமர மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் கனமழை பெய்யும் என்று தாம் அறிவித்ததாகவும், கனமழை என்ற வார்த்தையைத் தமது துறை சாதாரணமாகப் பயன்படுத்துவதில்லை” என்றும் விளக்கம் அளித்தார், வானிலை இயக்குநர் ரமணன்.

ஜெயா வக்கிரம்
ஏ.சி வேனுக்குள் அமர்ந்து கொண்டு சென்னை – ஆர்.கே. நகர் தொகுதியைப் பார்வையிடும் ஜெயா: இது அக்கறையா? வக்கிரமா?

இதற்கு அப்பால், “புவி வெப்பம் அதிகரித்து வருவதன் காரணமாக, வடகிழக்குப் பருவ மழையின் தன்மை மாறிவிட்டதாகவும், கடந்த பத்தாண்டுகளில் அப்பருவ மழை பெய்யும் காலஅளவு குறைந்துவிட்டதோடு, ஓரிரு நாட்களில் புயல் மூலம் பெருமழையைப் பொழியும்படி அதன் போக்கு காணப்படுவதாகவும்” சுற்றுச்சூழல் நிபுணர்களும் ஆர்வலர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

ஜெயா அரசு இவற்றுள் ஒன்றைக்கூடப் புரிந்து கொள்ளவுமில்லை; காதில் போட்டுக் கொள்ளவுமில்லை என்பதோடு, இப்பருவ மழையை எதிர்கொள்வதிலும் ஏரிகளிலிருந்து நீரைத் திறந்துவிடுவதிலும் அலட்சியமாகவும் ஆணவமாகவும் நடந்துகொண்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 207 பேரை (அரசின் கணக்குப்படியே) பலியிட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை வழக்கமாக அக்.20 போல் தமிழகத்தில் தொடங்கும். இந்த முறை எட்டு நாட்கள் தாமதமாக அக்.28-ல் பருவ மழை தொடங்குமென அறிவித்தது, வானிலை ஆய்வு மையம். இந்த நேரத்தில் தலைநகரில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஜெயா, கோடநாட்டில், தனது எஸ்டேட் பங்களாவில் 28 நாட்கள் ஓய்வில் இருந்தார்.

தமிழகக் கடலோர மாவட்டங்களைப் புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த பிறகும்கூட மலையில் இருந்து கீழே இறங்காத ஜெயா, தீபாவளிப் பண்டிகையைத் தனது போயசு பங்களாவில் கொண்டாடுவதற்காக, தீபாவளிக்கு முதல்நாள் சென்னைக்கு வந்தார்.

சுத்தம் செய்யப்படும் சாலைகள்.
“மகாராணி” ஆர்.கே. நகருக்குச் செல்ல முடிவு செய்தவுடனேயே, அவர் செல்லும் வழி குப்பை, கூளம், தூசு தும்பின்றி சுத்தம் செய்யப்பட்டது.

காற்றழுத்த தாழ்வின் காரணமாக அடைமழை பெய்து சென்னையிலும், கடலூரிலும், காஞ்சிபுரத்திலும், தமிழகத்தின் இன்ன பிற பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பிணங்கள் விழுந்த பிறகு, நவம்பர் 12 அன்று கோட்டைக்குச் சென்று ஒரேயொரு மணி நேரம் அதிகாரிகளோடு உட்கார்ந்து இருந்துவிட்டு வந்ததை, வெள்ள நிவாரண ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாக அறிவிக்கச் செய்தார்.

அதற்கும் ஒரு வாரம் கழித்துத் தன்னைத் தேர்ந்தெடுத்த ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இரண்டு தெருக்களைக் கால்விரல் நுனிகூட நனையாமல், ஏ.சி. வேனில் அமர்ந்தபடியே எட்டிப் பார்த்துவிட்டுப் போனார். டிசம்பர் 3 அன்று ஹெலிகாப்டரில் இருந்தபடியே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட்ட அதிசயம், “மேலிருந்து பார்த்தால் எங்க அவதி தெரியுமா மேடம்?” என “பார்ப்பன தினமலர்”கூட நக்கல் அடிக்கும் அளவிற்கு நடந்தது.

இவற்றின் மூலம் தனக்கு நிகரான ஆணவமும் அலட்சியமும் நிறைந்த ஆட்சியாளர்கள் முன்பும் இருந்தது கிடையாது, இனியும் வரப்போவது கிடையாது எனச் சவால் விட்டிருக்கிறார், ஜெயா.

இது அதீதமான மதிப்பீடு என்று கருதுபவர்கள், வெள்ளத்தில் உடைமைகளை இழந்து, உறவினர்களை இழந்து வேதனையாலும், எதிர்காலம் குறித்த அச்சத்தாலும் கதறிக் கொண்டிருக்கும் மக்களைப் பார்த்து, வாக்காளப் பெருமக்களே” என ஜெயா அழைத்ததை நினைவில் கொள்ள வேண்டும். “இப்படி மழை கொட்டித் தீர்க்கும்பொழுது அரசாங்கத்தால் மட்டும் என்ன செய்துவிட முடியும்?” எனத் தமக்குத் தாமே சமாதானம் செய்து கொள்ளும் அப்பாவிகளும் இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 • ஆணவத்திலும் அலட்சியத்திலும் அம்மா எட்டடி பாந்தால், அவரது குட்டிகள் பதினாறு அடி பாய்கின்றன.
 • இந்தத் தகவல்-தொழில்நுட்ப காலத்தில் நேரடியாக ஆர்.கே.நகர் சென்று வெள்ளச் சேதத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் அம்மாவுக்கு இல்லை.
 • கடலூரில் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன.
 • மழை பெய்யும் என்றுதான் வானிலை அறிவிப்பு செய்தார்களே தவிர, 20 செ.மீ., 30 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்று சொல்லவில்லை.
 • மழை பெய்வதற்கு முன்பே எங்களை ஆயில் மோட்டாரைத் தூக்கிக்கொண்டு போய் தண்ணீரை உறிஞ்சச் சொல்கிறீர்களா?
 • அம்மாவின் திறமையால் இத்துணை பாதிப்போடு நின்றுவிட்டது. இதற்காக சென்னை, கடலூர் மக்கள் அம்மாவுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்.

– இவையெல்லாம் அ.தி.மு.க. தலைவியை நத்திப் பிழைக்கும் நாஞ்சில் சம்பத்தும், சி.ஆர். சரசுவதியும் தொலைக்காட்சி விவாதங்களில், பாதிப்புக்குள்ளான மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களே என்ற கூச்சமோ, அச்சமோ இன்றி உதிர்த்த வார்த்தைகள். வார்த்தைகளில் மட்டுமல்ல, நாஞ்சில் சம்பத்தின் உடல் மொழியிலும் ஆணவமும் அலட்சியமும் நிறைந்திருந்தது.

நிவாரணம் என்ற பெயரில் நடந்த அசிங்கம்

ஸ்டிக்கர் ஆட்சி
“ஸ்டிக்கர் ஆட்சி” : நிவாரணப் பொருட்களில் ‘அம்மா’ படத்தை ஒட்டும் வக்கிரக் கூத்து.

பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதில் சொல்ல மறுக்கும் ஜெயா அரசு, “நிவாரண நடவடிக்கைகளைப் பாருங்கள் – கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்திற்கு ஆறு அமைச்சர்கள்; ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி என அரசாங்கம் செய்யக்கூடிய அனைத்தையும் அம்மா செய்கிறார்” எனக் கூறித் தப்பித்துக் கொள்கிறது.

“டிசம்பர் 1-ஆம் தேதி இரவில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னெச்சரிக்கை செய்யாமல் திறந்துவிட்டார்கள்; முறையான எச்சரிக்கை செய்திருந்தால், குறைந்தபட்சம் ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கியமான சான்றிதழ்களைக் காப்பாற்றிக் கொண்டு மேடான பகுதிக்குச் சென்றிருப்போம்” எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், சென்னை நகரவாசிகள்.

“டிசம்பர் 1-க்குச் சற்று முன்பாக அடுத்த இரு தினங்களில் சென்னையில் 500 மி.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்று பி.பி.சி. சேவை எச்சரித்தது. அதன் பின்னரும் மழை வெள்ள நீர் சூழும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டு, மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்கு உணவு, உறைவிடத்தை வழங்க அரசு தவறிவிட்டது” எனக் குறிப்பிடுகிறது, ஜூ.வி. (9.12.15).

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் வீட்டை இழந்துவிட்டு அநாதரவாக நின்ற மக்களிடம் அரிசியையும் பருப்பையும் கொடுத்து சமைத்து சாப்பிடச் சொல்லியிருக்கிறார்கள், அதிகாரிகள்.

“வக்கத்து நிக்கிறோம். மூவாயிரத்து ஐநூறு ரூவா நிவாரண உதவி கொடுக்குது அரசாங்கம். அதுவும் எல்லாருக்கும் கிடைக்கல. ரேசன் கார்டு இல்லாட்டினா இல்லங்குறாங்க அதிகாரிங்க. வூட்டையே வெள்ளம் அடிச்சிட்டுப் போயிட்டு. ரேசன் கார்டுக்கு எங்கயா போவோம்?” எனக் குமுறுகிறார்கள் வெள்ளம் துடைத்துப் போட்ட பூதம்பாடி கிராம மக்கள். (இந்து, நவ.29, பக்.9)

சிதம்பரம் அருகே நிவாரண உதவிகள் கேட்டும், குடிதண்ணீர் கேட்டும் சாலை மறியல் செய்த தாழ்த்தப்பட்டோர் மீது போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒரு பெண்ணின் முதுகெலும்பு உடைந்து போனது; கொடுங்காயம் அடைந்த பாக்கியராஜ் என்ற மாற்றுத் திறனாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவசர ஊர்திகள்
ஜெயாவின் மூஞ்சி போட்ட பேனர்களைக் கட்டுவதற்காகப் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவ அவசர ஊர்திகள்.

“ஆங்காங்கே பிரசவ வலி, காய்ச்சல்னு ஏகப்பட்ட வேதனைகள். அவசர உதவிக்கு கூப்பிடுங்கனு மாவட்ட நிர்வாகம் கொடுத்த நம்பருக்குக் கூப்பிட்டா, வந்து பாக்குறோம்னு சொல்லிட்டு ஃபோனை வெச்சிடுறாங்க” எனக் கூறுகிறார், கடலூர் தவளை நகரைச் சேர்ந்த நடராசன். (ஜூ.வி.9.12.15)

அமைச்சர் கோகுல இந்திரா சென்னையின் அரும்பாக்கம் பகுதியில் நடைபெறும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட வந்தபொழுது, அங்குள்ள இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த முதியவர், “பத்து நாளா வீட்டுக்கள் புகுந்த வெள்ள நீரோடு வாழ்ந்துகிட்டிருப்பதாக”ப் புகார் தெரிவித்தார். அதற்கு அமைச்சர், “தண்ணீர் எடுக்க மோட்டார் வாகனம் வந்ததே” எனப் ‘பொறுப்பாக’ப் பதில் அளிக்க, “அந்த வாகனம் தெருமுனையோட திரும்பிப் போயிடுச்சு” என அந்த முதியவர் நிலைமையை அமைச்சருக்குப் புரிய வைத்தார்.

இந்திரா காந்தி தெருவில் தேங்கி நிற்கும் தண்ணீரைக் காட்டி அமைச்சர் கேள்வி கேட்க, கவுன்சிலர், “போன ஆட்சியில எதுவும் செய்யல மேடம். நாம வந்துதான் இந்த மழைநீர் வெளியேற வடிகால் அமைச்சிருக்கோம்” என்று தூர்ந்துபோன துளையைக் காட்ட, அருகில் நின்றிருந்த அப்பகுதி மக்கள், “அதில் தண்ணீர் போகவே மாட்டேங்குது” என உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்கள்.

மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நிவாரண உதவிகளுக்காகக் காத்துக்கிடந்த வேளையிலும், நிவாரணப் பொருட்களில் அம்மா படத்தை ஒட்டித்தான் கொடுக்க வேண்டும், அவற்றை அம்மாவின் படத்தை முன்னே வைத்து அமைச்சர்களின் கையால்தான் வழங்க வேண்டும் என்பதற்காக அவ்வுதவிகளை உடனடியாக வழங்காமல் தாமதப்படுத்தியிருக்கிறது, அ.தி.மு.க. கும்பல்.

02-amma-stickersகுறிப்பாக, மூன்று கப்பல்களில் வந்த நிவாரணப் பொருட்களில் அம்மா படத்தை ஒட்ட முடியாது என்பதற்காகவே அப்பொருட்களைப் பெற்று விநியோகிப்பதைத் தாமதப்படுத்தியிருக்கிறது, தமிழக அரசு. “இதனால் ஒருநாள் முழுக்க தேவையில்லாமல் காத்திருக்க வேண்டியிருந்ததாக” கடற்படை குற்றஞ்சுமத்துகிறது.

“நாங்கள் எங்கெல்லாம் சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும்; எந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்று சரிவர வழிகாட்டுதல்கள் இல்லை” என மீட்பு பணிக்கு வந்த இராணுவ மீட்புக் குழுவே குற்றஞ்சுமத்தும் அளவிற்கு ‘பொறுப்போடு’ நடந்துகொண்டிருக்கிறது, அம்மா அரசு.

இவற்றுக்கெல்லாம் மேலாக, சென்னையில் பல இடங்களில் நிவாரண உதவிகளைச் செய்த தன்னார்வத் தொண்டர்களைத் தாக்கி, அவர்களிடமிருந்த உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அடித்துப் பிடுங்கும் அராஜகமும் ரவுடித்தனமும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தலைமையில் நடந்தது.

இந்த அட்டூழியங்களைப் பார்த்து நொந்துபோன தனது நண்பர் தனபால், “எல்லாம் முடிந்த பின் வந்து பார்வையிடும் கடவுளாக மட்டுமே அவர்கள் காட்சியளிக்கின்றனர். அந்த தரிசனத்திற்கு ஏங்கும் நாங்கள், இழிபிறவிகள் ஆனோம்” என்று முகநூலில் பதிவிட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறார், மறைந்த அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ். (தினமலர், 4.12.2015, பக்.2)

திட்டங்கள்: பலன் யாருக்கு, பாதிப்பு யாருக்கு?

“இது எதிர்பாராமல் பெய்த மழை” என வாய்கூசாமல் சொல்லும் ஜெயாதான், சட்டசபையில் சென்னையின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக 110-ம் விதியின் கீழ் அறிவித்தார். இதோடு அமைச்சர்கள் தெரிவித்துள்ள திட்டங்களையெல்லாம் கணக்கில் கொண்டால் சென்னையின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மட்டும் இந்த ஆட்சியில் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகக் கணக்கு வருகிறது என்கிறார், தி.மு.க.வின் பொருளாளர் ஸ்டாலின். சென்னை முழுவதும் இருக்கக்கூடிய கழிவு நீர் குழாய்களை அகற்றி, பெரிதுபடுத்தி புதிய குழாய்கள் பதிக்க 1,500 கோடி ஒதுக்கி 2 ஆண்டு ஆகிறது. அது என்ன ஆனது எனக் கேள்வி எழுப்புகிறார், மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சவுந்திரராஜன். இவையெல்லாம் காகித அறிவிப்புகளா அல்லது ஒதுக்கப்பட்ட பணம் வேறு வழியில் கரைந்து போனதா என்ற கேள்விக்கெல்லாம் பதிலே இல்லை.

கடலூர் ஆர்ப்பாட்டம்
“அ.தி.மு.க.விற்கு ஓட்டுப் போடுவோம்” என்று சத்தியம் வாங்கிக் கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கும் அ.தி.மு.க-வின் கயமைத்தனத்தை கண்டித்து கடலூரில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

சென்னையில் மட்டும்தான் என்றில்லை, வெள்ளக்காடான பகுதிகள் ஒவ்வொன்றிலும் நீர் மேலாண்மை குறித்து அம்மா ஆட்சியின் அறிவிப்புகளும், நிறைவேற்றப்பட்ட திட்டங்களும் பல்லிளித்து நிற்கின்றன.

 • வேதாரண்யத்தில் உள்ள வெள்ளப்பள்ளம் ஏரி 640 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படும் எனக் கடந்த ஆண்டு 110-ஆம் விதியின் கீழ் அறிவித்தார், ஜெயா. இந்த அறிவிப்பு காற்றோடு போனதால், வெள்ளப்பள்ளம் ஏரியில் சேமித்திருக்க வேண்டிய நீர் உபரியாக வெளியேறி, 3,000 ஏக்கர் நிலத்தை மூழ்கடித்துவிட்டது. இதனால் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
 • சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லிக்கு அருகேயுள்ள நேமத்தில் ஒரு டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கும் அளவிற்கு 80 கோடி ரூபாய் செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. ஆனால், இத்தேக்கம் திறப்புவிழா காண்பதற்கு முன்பே, அதன் மதகுகளிலும் கரைகளிலும் விரிசல் விட்டு நின்றதால், மழை நீரைத் தேக்க இயலாமல் அந்த ஏரியில் சேமிக்க வேண்டிய நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்குத் திறந்துவிடப்பட்டது.
 • நீர்வள-நிலவளத் திட்டத்தின் கீழ் 83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 364 ஏரிகள் சீரமைக்கப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டியிருக்கிறது, அம்மா அரசு. அப்படிச் சீரமைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஏரிகள் அனைத்தும் இந்த வெள்ளத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் உடைந்து போ நிற்கின்றன. (இந்து, டிச.8)
 • செம்பரம்பாக்கம் ஏரியை ஆழப்படுத்தும் திட்டத்தில் 30 சதவீதப் பணிகள்கூட நிறைவேற்றப்படவில்லை. இதனால், டிசம்பர் 1 அன்று நள்ளிரவில் அந்த ஏரியிலிருந்து 18,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்துகூட இவ்வளவு தண்ணீரை ஒரே சமயத்தில் வெளியேற்ற மாட்டார்கள். செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் குடியிருப்புகளின் வழியேதான் கடலுக்குள் செல்லும் எனத் தெரிந்தும் இவ்வளவு தண்ணீரைத் திறந்துவிட்டது கொலைக்குற்றத்துக்கு ஒப்பானது.
 • பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 33 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை ஏனோதானோவென்று கட்டப்பட்டதால், வெள்ளத்தின் சீற்றத்தைத் தாங்கும் திறன் இன்றி உடைந்துபோனது.

05-jaya-govt-plansதமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில் மதுராந்தகம் ஏரியைத் தூர்வாருவேன் என ஜெயா அளித்த வாக்குறுதி காற்றோடு போனதால், அந்த ஏரியிலிருந்து பல ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

 • ஆரணியாறு, திருவள்ளூர் கொசஸ்தலை ஆறு மற்றும் காஞ்சிபுரத்திலுள்ள நீர்நிலைகளைச் சீர்படுத்த தலா இரண்டே கால் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அப்பணிகள் இப்பொழுதுதான் தொடங்கப்பட்டுள்ளன. அப்பணிகளை செப்டம்பருக்கு முன்பு முடிக்கத் திட்டமிட்டிருந்தால், சென்னை இந்தளவிற்கு மிதந்திருக்காது.
 • தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விருகம்பாக்கம் கால்வாயைக் கூவத்தில் இணைப்பது, வீராங்கல் ஓடையை பக்கிங்காம் கால்வாயுடன் இணைப்பது மற்றும் புதிய மழைநீர் வடிகால்களை உருவாக்குவது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது உள்ளிட்டவற்றுக்காக 1,448 கோடி ரூபாய்க்குத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அவை 25 சதவீதம் முடிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள பணிகளை தி.மு.க.வைத் தொடர்ந்து பதவியேற்ற அ.தி.மு.க. அரசு இரண்டு ஆண்டுகளில் முடித்திருந்தால் இந்தளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது எனக் குற்றஞ்சாட்டுகிறார், சென்னை நகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.
  இக்குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில், வேளச்சேரி, தரமணி பகுதிகளில் பாதாள மழைநீர் வடிகால் வசதி அமைக்கும் வகையில் விஜயநகர் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் முடிக்கப்படவில்லை எனக் கூறுகிறார், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்.
 • மாநகராட்சியின் பரப்பளவு 174 சதுர கிலோமீட்டரில் இருந்து 426 சதுர கிலோமீட்டராக அதிகரித்த பிறகு, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் சாலை, தெருவிளக்கு, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பணிகள் இதுவரை எந்தப் பகுதியிலும் முடிந்தபாடில்லை எனக் குற்றஞ்சாட்டுகிறார்கள், சென்னை புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள். (தினகரன்,21.11.2015, பக்.15)

நாலரை ஆண்டுகால அம்மா ஆட்சியின் குறுக்குவெட்டுத் தோற்றம் இது. இந்த அலட்சியத்தால் சென்னையில் மட்டும் கடலுக்குள் அனுப்பிவிட்டு இழந்த நீரின் அளவு 10 டி.எம்.சி. (1000 கோடி கன அடி) எனக் கூறப்படுகிறது. இதற்கு இணையான வெள்ளம் சென்னை நகரமெங்கும் தேங்கி நிற்கிறது. அ.தி.மு.க. தலைவியால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஏன் நடைமுறைக்கு வரவில்லை; திட்டங்கள் ஏன் மந்தமாக நடைபெறுகின்றன; நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏன் பல்லிளித்துவிட்டன என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த அரசு பதில் சொல்ல மறுக்கிறது; வெள்ளம் குறித்து விவாதங்களை நடத்தும் தொலைக்காட்சிகளும் இந்தக் குறிப்பான விவரங்களுக்குள் செல்ல மறுக்கின்றன. அ.தி.மு.க. அரசின் இந்த அலட்சியம் முதன்மையாக விவாதிக்கப்பட்டிருந்தால், அம்மா ஆட்சி என்பது கமிசன் ஆட்சி என்பது மீண்டும் அம்பலமாகியிருக்கும்.

இது மொட்டையான குற்றச்சாட்டு அல்ல. அ.தி.மு.க.வின் கீழுள்ள சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால்களை அமைப்பதற்கு 22 காண்டிராக்டுகளும், ரோடு போடுவதற்கு 21 காண்டிராக்டுகளும் வெளிப்படைத் தன்மையின்றி மேஜை தீர்மானங்களாக (ஜெயா அறிவிக்கும் 110 விதி திட்டங்கள் போல) கொடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மண்டல நீர்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளராக இருந்த அதிகாரி கடந்த மே 31 அன்று ஓய்வு பெற்றதால், அதற்கு முன்பே இலஞ்சத்திற்கு ஆசைப்பட்டு கூவம் சீரமைப்புப் பணிக்காக 60 கோடி ரூபாய் பெறுமான டெண்டரை முடித்திருக்கிறார். இந்தப் பணம் முழுவதும் வீணாகிவிட்டதாகவும், இதில் முக்கிய பிரமுகரின் மகனும் சம்பந்தப்பட்டிருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் எழுதுகிறது, தினகரன். (23.11.2015, பக்.15)

வெள்ள நிவாரணப் பணிகள் போன்ற அவசர கால உதவிகளுக்காக அரசால் செலவிடப்படும் தொகை தணிக்கை செய்யப்படாது என்பதால், 23,000 பேர் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டிருப்பதாக கணக்கு எழுதிவிட்டு, 15,000 பேரை மட்டும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஈடுபடுத்துவதாகவும்; 2,000 ரூபாய் கூலியாகக் கொடுக்க வேண்டிய பணியாளர்களுக்கு ஐநூறு ரூபாயும், பிரியாணி பொட்டலமும், குவார்ட்டர் பாட்டிலும் வாங்கிக் கொடுத்துவிட்டு மீதியை கமிசனாக அடித்துக் கொள்வதாகவும்; தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்யும் பணிகளைக்கூட மாநகராட்சி செயதது போல கணக்குக் காட்டுவதாகவும் தினகரன் நாளிதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இவையெல்லாம், “ஒரு நல்ல வறட்சியை அனைவரும் வரவேற்கிறார்கள்” எனப் பத்திரிகையாளர் சாய்நாத் குறிப்பிட்டதை நினைவுபடுத்துகின்றன. வறட்சிக்குப் பொருந்துவது அ.தி.மு.க.வின் வெள்ள நிவாரணத்துக்குப் பொருந்தாதா?

மு திப்பு

______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2015
______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க