Tuesday, June 28, 2022

குரும்பை கனவு

-

சிவலிங்கத்தின் வயது ஐம்பது. தென்னை மரம் ஏறும் தொழிலாளி. சென்னை மாநகரின் விண்ணை முட்டும் கட்டிடங்களுக்கு மத்தியில் ஏதோ கொஞ்சம் தப்பி பிழைத்திருக்கும் தென்னை மரங்கள் பராமரிப்பு இன்றி சிக்கித் திணறும் வேளையில் இவரால் கொஞ்சம் பொலிவு பெறுவதுண்டு. தென்னை ஏறுவது அவரின் வயிற்றைக் கழுவ உதவுகின்றது என்கிற போதிலும், சிவலிங்கத்திற்கென்று ஒரு கனவு உண்டு. அவர் திரைத்துறையிலும் ஒரு காலை ஊன்றியிருக்கிறார். துணை நடிகர், டெக்னிசியன் ஒர்க்கர், செட் அமைக்க பளு தூக்கும் வேலை எனப் பல அவதாரங்கள்.

இடையில் சேர்ந்து கொண்ட லட்சியம் தான் சினிமா . படங்களில் பார்ப்பது போல் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என பாரதிராஜா காலத்தில் சென்னையை நோக்கிக் கிளம்பிய கிராமத்து இளைஞன் அல்ல சிவலிங்கம். லாரி ஓட்டுனர் ஆக வேண்டும் என்பது தான் அந்த நாட்களில் இருந்த லட்சியம். அந்தக் கனவுதான் அவரை சென்னை நோக்கி இழுத்து வந்தது.

சென்ற வாரம் அருகாமை வீட்டில் இருந்த தென்னை மரத்தின் மட்டைகளை வாங்க வந்திருந்தார்.

படம் : இணையம்

“மட்டை வெட்ட சொல்லொ அடி பாகம் காலு மேலேயே விழுந்து ஒராசி ரத்தம் கசியிது, கொஞ்சம் கிஷ்ணாயில் இருந்தா கொடுங்க மேடம். இதுல ஊத்துனா புண்ணாகாமெ காஞ்சுபுடும்.” மிக சாதாரணமாகச் சொன்னார்.

மரம் ஏறும் வயசா இது. வயதானவரிடம் இந்த வேலையை ஏன்தான் கேட்கிறார்களோ என்று அவரிடம் புகார் செய்தேன்.

“அதெல்லாம் ஒன்னுமில்லீங்கம்மா. நான் வயசுல ஏறாத மரமா. சொடுக்கு போட்ற நேரத்துல மரத்து மேல நின்னுகினுருப்பேன். நான் வயசா இருக்கசொல்லொ எங்கப்பா அரசாங்கத்தாண்ட கள்ளுக் கடையை ஏலத்துக்கு எடுத்திருந்தாரு. அப்ப இட்டுனு போயி மரம் ஏற பழக்கி விட்டாரு. மத்தாளு ஒத்த மரம் ஏறங்காட்டி நான் மூனு மரம் ஏறுவேன். இப்ப ஒடம்பு கனத்துப் புடுச்சு!”

கருத்த உடம்பில் தென்னம் பாளை தூசியும், குரும்பை ஓடுகளுமாய் வேற்க விருவிருக்க அவர் நின்றதைப் பார்க்க கரும்பு வயலில் ஆடை இல்லாமல் போய் வந்தால் உடம்பு முழுக்க எப்படி சிறாய்ப்பு இருக்குமோ அப்படி இருந்தது.

கிருஷ்ணாயில் வேண்டாம் மருந்து எடுத்து வருகிறேன் என்பதை மறுத்தவர்,

“நான் சினிமா சூட்டிங்குல வேலை செய்றவன். அடிபடாம வேலை செய்ய முடியாது. கிஷ்ணாயில் தான் மருந்து. சாரியாபூடும்.” என்றார். மரம் ஏறும் தொழிலாளிக்கு சினிமா துறையுடன் எப்படி சம்பந்தம் ஏற்பட்டது என்ற கேள்வியுடன் மருந்தை வலியுறுத்தி போடச் சொல்லிக் கொடுத்தேன்.

“16 வயதினிலிலே படம் தான் நான் அறிமுகம் ஆனது. அப்ப எனக்கு சம்பளம் சாப்பாடு போக ஒரு நாளைக்கி பத்து ரூபா தருவாங்க. சூட்டிங்கு இல்லன்னா வவுரு காஞ்சுபுடும். டிரைவர் வேலைக்கின்னு தான் வந்தேன். ஆனா கிடைக்கல. சினிமா வேல தான் கெடச்சிது.. இந்த வேலை தான் பசி ஆத்தினிச்சி. அப்டியே சினிமாலதான் நமக்கு பொழப்புன்னு ஆயிப்போச்சு. இருந்தாலும் குலத்தொழில விட முடியல. சனி ஞாயிறு வீட்டாண்ட குந்திகினு இல்லாம நாலு தெருவ சுத்தி ரெண்டு மரம் ஏறுவேன்”

“மெட்ராசுக்கு வந்து இன்னா பண்றது. டிரைவர் வேலைக்கி யாராண்ட கேக்கறதுன்னு புரியாம ஒரு மாச காலம் சுத்திகினு இருந்தேன். பெறவு வேளச்சேரியான்ட ஒரு லாரி செட்டுல விசாரிச்சு அங்க இருந்த டிரைவராண்ட தாசா பண்ணி கிளினரு வேலைக்கி சேந்தேன். ரெண்டு மாசம் நல்லாதான் ஓடிச்சு. ஒருநா லாரில பாரம் எறக்கத் தெரியாம கையில போட்டுகினேன். சோத்தாங்கையில ரெண்டு வெரலும் தகடையா நசுங்கி போச்சு. சோலி தெரியாதவனெ எதுக்கு வேலைக்கி இட்டாந்தேன்னு டிரைவராண்ட சண்ட வலிச்சாரு மொதலாளி. அம்பது ரூவா பணத்த குடுத்து வைத்தியம் பாத்துக்க இனிமே வேலைக்கி வர வேண்டாம்னு வீட்டுக்கு அனுப்பிட்டாரு.”

“பொறவு கோடம்பாக்கத்துல ஆண்டாள் லாரி சர்வீஸ் ப்ளாட் பாரத்தாண்ட படுத்துகினு கெடப்பேன். ஒரு நா அந்த மொதலாளி பாத்துட்டு விசாரிச்சு கிளினரா இரு, ஒரு நாளைக்கி 5 ரூபா சம்பளம் சேந்துகிரியா அப்புடின்னாரு. அய்யா நீங்க சம்பளம் கூட தர வேண்டாம். டைவரு வேலை கத்துகினா போதுமின்னு சேந்துகினேன்.”

“சினிமா காரங்களுக்குதான் வாடகைக்கு லாரி ஓடும். சூட்டிங்குக்கு தேவையான சாமானுங்கள ஏத்திகினு போறது. லாங்குல போகாம இன்னத்த டைவர் வேலை கத்துகின முடியும். அந்த டைவரு வேற கை மாத்தி விடவே மாட்டாரு. மத்த எல்லா வேலையும் கொடுப்பாரு. ஸ்டேரிங்க தொட விட மாட்டாரு. நான் இன்னாதான் தாசா பன்னி நடந்துகினாலும் அவரு மொறச்சுகினுதான் இருப்பாரு.”

மாதம் 15 நாள் வேலை தினமும் 5 ரூபா கூலி. வயிராற சாப்பிடக் கூடிய இளமை பருவத்தில் கால் வயிறும் அரை வயிறுமாக பட்டினி கிடக்க முடியவில்லை சிவலிங்கத்துக்கு. முதலாளியின் அனுமதியோடு சூட்டிங் ஸ்பாட்டில் சாப்பாட்டுக்காக எடுபிடி வேலை செய்துள்ளார். அவர் உடல் வாகை பார்த்து, செட் அமைக்கும் ஆர்ட் டிரைட்டர் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

“நாலு வருசமா செட்டுல கூலி வேலை பார்த்த பொறது ஒரு நா சந்தோசமா லாரிய எடுத்தேன். ஸ்டேரிங்க திருப்ப முடியல. கையில பெலமே இல்ல. உச்சி முடிய இஸ்த்துகினா போல வலி. முன்ன வேல பாத்த லாரியில அடிப்படச்சோல்ல ரெண்டு வெரலும் முறுக்கிகினு போச்சுங்கற வெவரம் அப்பதான் தெரிஞ்சுகினேன்.”

அடியாள், போலீசு, பஞ்சாயத்து தலைவர் போன்ற உதிரி வேடங்களுக்குப் பொருந்தும் உறுதியான உடல் வாகு சிவலிங்கத்திற்கு இருந்தது. தவிர சூட்டிங்கில் பளு தூக்குவது செட் அமைப்பது போன்ற வேலைகளையும் ஏற்றுக் கொண்டார். உடலை உருக்கி உழைத்துள்ளார். டிரைவர் கனவு கருவிலேயே சிதைந்து விட்ட நிலையில் கிடைத்த வேலையை செய்ய தொடங்கியுள்ளார் சிவலிங்கம்.

“சினிமாதான் பொழப்புன்னு ஆயிப்போச்சு. கும்பலா வர்ர சீனுல சேத்துப்பாங்க. போலீசு, அடியாளு இதுபோல இருந்தாலும் ஏஜெண்ட் இட்டுனு போவாரு. அப்போ காசு ரொம்ப கம்மி. இப்ப மெம்பரா இருக்கதால 1000 குடுத்துருவாங்க. ஒன்னு மட்டும் பிரிஞ்சுகிட்டேன் காசு இல்லாங்காட்டி அடிமை வேலை செஞ்சுதான் ஆகனும்.”

“ரஜினி கமலு எல்லார் படத்துலயும் ஏதோ ஒரு வேலை பாத்துக்கிறேன். அவங்களுக்கு ஆண்டவன் நல்லெழுத்து எழுந்திருக்கான் எங்கயோ போய்ட்டாங்க. ஆனா எனக்கு புள்ள விசயத்துல கூட சாமி கண்ண தொறக்க மாட்டேங்குது.”

25 வருட தாம்பத்திய வாழ்க்கையில் சிவலிங்கத்துக்கு குழந்தை இல்லை. மருத்துவ காரணம் தெரிய வில்லை. கை நிறைய ஏதேதோ முடிகயிறுகளை நம்பிக்கையோடு கட்டியிருக்கிறார். குழந்தை இல்லா குறையை சரி செய்வது ஒரு புறம் இருக்கட்டும். குறை என்ன என்று தெரிந்து கொள்ளச் செலவு செய்வதற்குக் கூட சிவலிங்கத்தின் உழைப்பில் சேரும் சொற்ப காசுகளால் முடியவில்லை என்பதுதான் எதார்த்தம்.

வட தமிழ் நாட்டின் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான சிவலிங்கத்திற்கு பிரம்மாண்டமான அந்தப் பெரிய வாகனத்தை இயக்குவது தனது வாழ்நாள் லட்சியம். அதற்காக மனதெல்லாம் டிரைவர் கனவை சுமந்து கொண்டு, அவரது அண்ணன் ஏதோ கோபத்தில் அடித்ததை சாக்காக வைத்து சென்னைக்கு வந்துள்ளார். தென்னை மரத்தில் பாலை விட்டு பூப்பூத்து காய் பிடித்து இளநீராக பருவம் வரும் முன் உதிர்ந்து போகும் குரும்பை போலானது சிவலிங்கத்தின் கனவு.

ஒருவேளை அந்தக் கனவு பலித்திருந்தாலும் அவரது தற்போதைய வாழ்க்கை நிலைக்கும் அதற்கும் பெரியளவில் எந்த மாற்றமும் இருந்திருக்கப் போவதில்லை. யாருக்கோ உழைத்து, இளமையை இழந்து, இறுதியில் முகவரியற்றுப் போக வேண்டும் என்பது தான் சிவலிங்கத்தைப் போன்ற கிராமத்துக் குரும்பைகளுக்கு விதிக்கப்பட்ட எதார்த்தமா? தனது 35 வருட வாழ்க்கையில் 2500 ரூபாய் வாடகையில் ஒரு ஓலை குடிசையைதான் அவரால் எட்டிப் பிடிக்க முடிந்துள்ளது.

நகரங்கள் சிவலிங்கங்களால் ஆனவை. இதன் பளபளக்கும் ஒவ்வொரு கட்டிடத்தின் அஸ்திவாரமாகவும் சிவலிங்கங்கள் உள்ளனர். எங்கோ ஒரு கூவத்தின் கரையிலோ, அடையாற்றின் கரையிலோ உள்ள ஓட்டைக் குடிசையில் தான் அவர்களின் இரவுகள் கழிகின்றது. இதோ வெள்ளம் வந்து சிவலிங்கங்களின் பல பத்தாண்டு உழைப்பைத் தின்று போய் விட்டது. இனி நகரத்தை அழகு படுத்த வருவார்கள். வெள்ளத்திற்கு தப்பிய அந்தக் குடிசைகளின் எஞ்சிய செத்தைகளை (கீற்றுக் கொட்டகை) இரக்கமற்ற முறையில் அள்ளிச் செல்ல அதிகாரிகள் வருவார்கள்.

குரும்பைகள் உதிர்ந்து மண்ணில் புதைந்து தான் வளர்ந்த அதே மரத்திற்கு உரமாகி அதன் வளர்ச்சிக்கு உதவும். அந்த மரத்தின் சுவையான இளநீர், யாரோ ஒருவரின் தொப்பையைக் கரைக்க பலியாகும். உதிர்ந்த குரும்பைகளை யார் தான் நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள்?

அட, மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் வேறுபாடுகளே இல்லையா என்ன? நீங்கள் சொல்லுங்கள்..

-சரசம்மா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க