அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படை ஜனநாயகக் கோட்பாட்டுக்கு எதிராக, இச்சட்டபூர்வ ஜனநாயக உரிமையைப் பறிக்கும் வகையில் அரியானா அரசு கொண்டுவந்துள்ள பஞ்சாயத்துத் தேர்தல் சட்டத் திருத்தத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் அங்கீகரித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இப்புதிய சட்டத் திருத்தத்தின்படி, பொதுத் தொகுதிகளில் கிராமப் பஞ்சாயத்துகளின் தலைவர், துணைத் தலைவர் அல்லது உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோர் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். தனித் தொகுதி எனில், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 8ஆம் வகுப்பு வரை ஆணும் பெண்ணும் படித்திருக்க வேண்டும். பஞ்சாயத்து உறுப்பினர் தகுதிக்கு, பெண்கள் அல்லது தாழ்த்தப்பட்டவராக இருந்தால் 5ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். இத்தகைய தகுதி இல்லாதவர்கள் தேர்தலில் நிற்கவே முடியாது.
இது தவிர, விவசாயக் கூட்டுறவு சங்கம், ஊரக வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் கடன் பாக்கி செலுத்தாதவர்கள், மின்சாரக் கட்டணம் கட்டாமல் பாக்கி வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும், பஞ்சாயத்துத் தேர்தல்களில் போட்டியிடும் அனைவரும் தங்களது வீடுகளில் செயல்படும் கழிப்பறையைக் கட்டியிருக்க வேண்டும். இல்லையேல், தேர்தலில் நிற்கும் தகுதியை அவர்கள் இழக்க நேரிடும்.

அரியானாவின் 2.53கோடி மக்கள் தொலையில் 58 சதவீதம் பேர் (ஏறத்தாழ ஒன்றரை கோடி பேர்) வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இவர்களில் 57 சத வீதம் பேர்தான் (ஏறத்தாழ 84லட்சம் பேர்) இப்புதிய சட்டப்படி தேர்தலில் நிற்கத் தகுதியுடைய குறைந்தபட்சக் கல்வி பெற்றவர்கள். எஞ்சிய 66 லட்சம் பேர் தேர்தலில் போட்டியிட முடியாது. தாழ்த்தப்பட்டோரில் 68 சதவீத பெண்களும் 41 சதவீத ஆண்களும்தேர்தலில் நிற்க முடியாது. மேலும், அம்மாநிலத்தின் ஒட்டுமொத்த பெண்களில் ஏறத்தாழ 50 சதவீதத்தினர் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட முடியாது.
பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள தால், பஞ்சாயத்து தேர்தல்கள் என்பது வேர்மட்ட ஜனநாயகம் என்று ஆட்சியாளர்களாலும் ஊடகங்களாலும் பெருமையாகப் பேசப்படுகிறது. ஆனால், உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இப்புதிய சட்டத் திருத்தத்தின் விளைவாக, பெரும்பான்மையான பெண்களும் ஏழை களும் தாழ்த்தப்பட்டோரும் பஞ்சாயத்துத் தேர்தலில்போட்டியிடவே முடியாதபடி ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.
2011ஆம் ஆண்டின் சமூகப் பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ பாதிக்கும் மேலான இந்தியாவின் கிராமப்புற மக்கள் கல்வியறிவற்றவர்களாக அல்லது அரைகுறை கல்வியறிவு கொண்டவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் குடிசைகளில் வாழும் நிலமற்ற கூலி ஏழைகளாக உள்ளனர். ஊரக மற்றும் கூட்டுறவு வங்கிக் கடன் பாக்கி இல்லாதவர்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற உத்தரவின் மூலம், இந்த ஏழை, நடுத்தர விவசாயிகளின் ஜனநாயக உரிமையை ஒரேயொரு வீச்சில் தட்டிப் பறிக்கத் துணிகிறது, உச்சநீதிமன்றம்.
நல்லது கெட்டது, சரி தவறுகளைப் புரிந்து கொள்ள கல்வியறிவு அவசியம் என்ற மேட்டுக்குடி வாதத்தை முன்வைக்கிறார்கள் உச்சநீதி மன்ற நீதிபதிகள். கல்வி யறிவற்றவர்கள் பணத்துக்கு விலை போகிறார்கள், எவ்வித அறநெறியுமின்றி ஊழல் மோசடி, கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்; படிப்பறிவில்லாத இந்த ஏழைகளால்தான் ஜனநாயகம் சீரழிகிறது; கழிப்பறைகூடக் கட்டிக் கொள்ளாத நாகரிகமில்லாத இவர்கள்தான் நாட்டை அசிங்கப்படுத்துகிறார்கள் என்ற ஆதிக்க சாதி ஆளும் வர்க்கத் திமிருடன் தீர்ப்பளிக்கின்றனர்.

ஆனால், உண்மையோ இதற்கு மாறானதாக இருக்கிறது. மெத்தப் படித்த பல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் பெருமளவில் ஊழல், மோசடி முதலான கிரி மினல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்பதை நாளும் அரங்கேறிவரும் ஊழல் கொள்ளைகள் நிரூபித்துக் காட்டுகின்றன. யோக்கிய சிகாமணிகளாக உபதேசம் செய்யும் நீதிபதிகளில் பலர் இலஞ்சத்தில் மூழ்கிக் குளிக்கும் பேர்வழிகள் என்பது ஊரறிந்த உண்மை.
ஆனால், பஞ்சாயத்து உறுப்பினராக உள்ள படிப்பறிவில்லாத ஏழைகள்தான், கிராமப்புற விளைநிலங்களைப் பறிக்கும் கார்ப்பரேட் கொள்ளையை எதிர்த்து தங்கள் பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்றி மக்களைத் திரட்டிப் போராடுகின்றனர். கடந்த 2005இல் பெண்களுக்கான தனித் தொகுதியாக ஒதுக்கப்பட்ட பெரோஸ்பூர் ஜிர்கா வட்டத்திலுள்ள நிம்கேடா கிராமப் பஞ்சாயத்தில் 7 பெண் உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் சூதாட்டம், சாராயம், பெண் குழந்தைகளைக் கருவிலேயே கொல்லுதல் முதலான சமூகக் கொடுமைகளை இக்கிராமத்தில் ஒழித்து முன்னுதாரமிக்க பஞ்சாயத்தாக மாற்றிக் காட்டினர். ஆனால், அந்த 7 பெண்களும் படிப்பறிவற்றவர்கள்.
இப்புதிய சட்டத்தின் விளைவாக, பெண்களுக்கான தனித்தொகுதியாக ஒதுக்கப்பட்டுள்ள பல கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தலில் நிறுத்த தகுதியான பெண்கள் யாருமே இல்லை. அரியானாவின் பல கிராமப் பஞ்சாயத்துகளில் தொடக்கப்பள்ளிகூட இல்லாத நிலையில், படிப்பறிவுக்கு எங்கே போவது? லாரி மூலம் காசு கொடுத்து குடிநீரைப் பெற வேண்டிய அவலத்தில் உள்ள கிராம மக்கள்,செப்டிக் டேங்க் கொண்ட கழிப்பறை கட்டுவதற்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் தண்ணீருக்கு எங்கே போவது?
இன்றைய அரசியலமைப்பு முறை தோல்வியடைந்து விட்டதையே நாட்டு மக்களின் தீராத வறுமையும், கல்வியறிவின்மையும், வீடுகளில் கழிப்பறை இல்லாமையும் மெய்ப்பித்துக் காட்டுகிறது. ஆனால், ஏழையாகவும், படிப்பறிவற்ற வராகவும், கடனாளியாக இருப்பதற்கும் காரணம் நீதான் என்று பழிபோட்டு, ஏழைகளைக் குற்றவாளியாக்கித் தண்டிக்கும் புதிய மனுநீதியைத்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே ஒலிபெருக்கி கூடாது, சுவரொட்டிசுவரெழுத்து கூடாது, ஊர்வலம் கூடாது என்று மக்களுக்கு நெருக்கமான, சாதாரண தேர்தல் பிரச்சார வடிங்களுக்குக்கூடத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்து, மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களையும் நடைமுறைகளையும் மாற்றி வருகிறது. இதன் மூலம் தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுக்குமளவிற்குப் பணம் வைத்திருக்கும் கட்சியும், கோடீசுவர வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளி, சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்தைப் பணநாயக மாக்கிவிட்டது. இதன் வழியாக, ஊரை அடித்து உலையில் போட்டவனும், ஊழல், கிரிமினல் பேர் வழிகளும் தேர்தலில் நிற்பதற்கும், அமைச்சர்களாவதற்கும் வாசலைத் திறந்துவைத்து விட்டு, வீட்டில் கக்கூசு கட்ட முடியாத ஏழைகள் தேர்தலில் நிற்க தடை விதிப்பதன் மூலம் இப்பணநாயகத்தைச் சட்டபூர்வமாக்கியிருக்கிறது, உச்சநீதிமன்றம். அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள 18 வயதான அனைத்து குடிமக்களும் வாக்களிக்கவும், தேர்தலில் நிற்கவுமான சட்டபூர்வ, சமத்துவ உரிமையை மயிரளவுக்குக்கூட மதிக்காமலும், அதனை ரத்து செய்யும் விதத்திலும் அளிக்கப்பட்டிருக்கும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு, சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. அரசியல் சாசனத்தைக் காப்பதாக உறுதியேற்றுப் பதவியில் அமர்ந்துள்ள நீதிபதிகள், அதற்கு நேர்எதிராகச் செயல்பட்டுள்ளனர்.
இன்றைய அரசமைப்பு சட்டரீதியாகவே மேட்டுக்குடிமேல் சாதியினருக்கான நாயகமாக, பணநாயகமாக மாறி நிற்பதையே இச்சட்டத் திருத்தமும் உச்சநீதி மன்றத் தீர்ப்பும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.
– குமார்
_______________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2016%0