privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்எங்க மூணு பேருக்கும் விஷத்த கொடுத்துட்டாங்க அம்மா

எங்க மூணு பேருக்கும் விஷத்த கொடுத்துட்டாங்க அம்மா

-

மக்கள் அதிகாரத்தின் திருச்சி மாநாட்டில் கலந்து கொண்டு இரயிலில் திரும்பிய போது தோழர்கள் சிலர் களைத்துப் போயிருந்தாலும் அரசியல் விவாதங்கள், பிரச்சார அனுபவங்கள், தோழர்கள் ஆன கதை, உறவினர் எதிர்ப்பு என்று பல்வேறு அனுவபங்களை பகிர்ந்து கொண்டு வந்தனர்.

அரசியல் அறிமுகம், பாலியல் வன்முறை, திருமண முறை, சொந்த வாழ்க்கை என்றெல்லாம் பேசிய பெண் தோழர்களை மாநாட்டிற்கு புதிதாக வந்த ஒரு வந்த நண்பரின் மனைவி வியப்புடனும் விருப்பத்துடனும் பார்த்தார். தோழர் ஒருவர் மாநாட்டு அனுபவத்தையும் குறை நிறைகளையும் கேட்டுக்கொண்டு வந்தார். ஒவ்வொருவரும் தன் கருத்துக்களை பதிய வைக்கும் போது தற்செயலாக தோழர் கவியழகன் தனது அனுபவங்களை சொல்ல ஆரம்பித்தார். அது மாநாட்டிலிருந்து அவரது சொந்த கிராமத்திற்கு பயணித்தது.

sad kid 1
மாதிரிப் படம்…

மாநாட்டில் தொழிலாளி நாகராசுவின் வாழ்க்கை கதையை கேட்டு கூட்டத்தில் அழாதவர் யாரும் கிடையாது. கிராமத்துல நூறு வயசுல இறந்தாலும் துக்கத்துக்கு வர்ரவங்க துக்கம் தொண்டைய அடைக்க அழுவதைப் பார்த்திருப்போம். அது இறந்தவருக்கான கண்ணீர் மட்டும் கிடையாது. தன்னோட வாழ்க்கையில நடந்த வேதனையான சம்பவத்துக்காகவும் தான். அதுபோல மக்களின் அழுகையும் கண்ணிரும் திருப்பூர் அனுப்புராப்பாளையம் நாகராசுக்கு நடந்த கொடுமைக்காக மட்டும் அல்ல. மாநாட்டுக்கு வந்த அனைவர் வாழ்க்கையிலும் குடிபழக்கத்தால் ஏதோ ஒரு பாதிப்பு இருந்திருக்கும். அந்த உண்மையை சோகத்துடன் பகிர்கிறது தோழர் கவியழகனின் குடும்பக் கதை.

“மாநாட்டுல பேசின திருப்பூர் நாகராசு தொழிலாளியின் கதைக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை” என ஆரம்பித்தவர் தொடர்ந்து சொல்ல முடியாமல் சில கனம் அமைதியாக ரயில் ஓட்டத்தில் கடந்து செல்லும் மரங்களையே வெறிக்க பார்த்தார். கேட்டுக் கொண்டிருந்த தோழர்கள் அமைதியாகினர்.

“இந்த குடியினால எங்க குடும்பமே அழிஞ்சுருச்சு தோழர். நாகரசு மனைவி தீக்கி இறையாகினாங்க. எங்க அம்மா விஷத்த குடிச்சுட்டாங்க. அவங்க மட்டும் இல்லாம என்னையும் சேத்து எங்க அக்கா ரெண்டு பேருக்கும் குடுத்துட்டாங்க.”

ஒரு தோழர் அதிர்ச்சியில் சீட்டில் இருந்து எழுந்து விட்டார். யாருக்கும் மேற்கொண்டு பேச முடியவில்லை. குடியால் மக்கள் படும் துயரம் புரிந்துதான் போராட்டம். ஆனாலும் நெருப்பு சுடுமென்று தெரிவதற்கும் சுட்ட பிறகு வரும் வலியுடன் கூடிய வேதனைக்கும் உள்ள வேறுபாடு அப்போது உணரப்பட்டது. தோழர் கவியழகனோடு நெருக்கமாக பணியாற்றும் தோழர்களுக்கு கூட அந்தக் கதை தெரியாது.

“1992-வது வருசம் எனக்கு நாலு வயசு. எனக்கு மூத்தவங்க ரெண்டு அக்கா ஒரு அண்ணன், நான் கடைக்குட்டி. வாரிசு ஒருத்தராவது இருக்கணுமுன்னு அண்ணன மட்டும் உயிரோட விட்டுட்டு எங்க மூணு பேருக்கும் விஷத்த கொடுத்துட்டாங்க அம்மா. அக்கா ரெண்டு பேருக்கும் விஷமுன்னு தெரியும். எனக்கு என்னனு தெரியல கசந்துச்சு. குடிக்க முடியல. ஆனா அம்மா விடல வாய புடிச்சுகிட்டு ஊத்துனாங்க.”

“கொஞ்சம் முழுங்கிருப்பேன்னு நினைக்கிறேன். அம்மாவ தள்ளி விட்டுட்டு பக்கத்து வீட்டுக்கு ஓடிட்டேன். மருத்துவமனைக்கி தூக்கிட்டு போற வழியிலேய ஒரு அக்கா இறந்துருச்சு. அம்மாவும் இன்னொரு அக்காவும் மருத்துவமனையில சேத்தப்புறம் இறந்துட்டாங்க. நான் மட்டும் பொழைச்சிகிட்டேன்” என்று கூறிக்கொண்டிருந்தவர் விளையாடி கொண்டிருந்த ஒரு குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி அமைதியானார்.

“எங்க அப்பா படிச்சு உத்தியோகத்துல உள்ளவரு. விவசாய நிலமும் இருந்துச்சு. ஆனா எந்நேரமும் குடிச்சுகிட்டேதான் இருப்பாரு. போதை இல்லாம அவர பாக்க முடியாது. கள்ளச் சாராயம் காச்சுற எடத்துல கண்டிப்பா எங்க அப்பா இருப்பாரு. பானையில சாராயம் வடிய வடிய இவரு வயித்துக்குள்ள எறங்கிட்டு இருக்குமாம். அப்புறம் பாட்டில் சாராயம் வந்ததும் அதுக்கு மாறிட்டாரு. எங்க அம்மா என்ன செய்வாங்க? பாவம் நாலு பிள்ளைகள வச்சுகிட்டு எவ்வளவு கஷ்டத்த அனுபவிச்சுருப்பாங்க. நெனச்சே பாக்க முடியல.”

sad kid 1
மாதிரிப் படம்…

“அப்பாவுக்கு என்னையும் அண்ணனையும் அனாதையா ஆக்கிட்டோமுங்கற கவலையை விட அம்மாவ கொன்னுட்டொமுங்கற குற்ற உணர்வுதான் அதிகமா இருந்துச்சு. முன்னயை விட மொடா குடிகாரனா மாறினாரு. சாராய கடைக்கு தான் போனது போக எங்களையும் அனுப்பி வாங்கி வரச்சொல்லி குடிக்க ஆரம்பிச்சாரு.”

“அப்ப எனக்கு விவரம் தெரியாத வயசு. அப்பா சாராயம் வாங்கிட்டு வர சொல்லுவாரு வாங்கி கொடுப்பேன். எனக்கு கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பாரு. சாராயத்த வாங்கிக் கொடுக்குறதுக்காக அப்பாவ யூஸ் பன்னிக்க ஆரம்பிச்சேன். சாராயம் வாங்கி வரசொல்லி கொடுக்கும் காசுல மிச்சத்தை எதாவது வாங்கித் திங்கிறதுக்கு உதவும்கிறதுதான் அப்ப என்னோட கனவு”.

“அண்ணன் கொஞ்சம் வெவரம் தெரிஞ்ச வயசுல இருந்ததால ரொம்பவும் பாதிக்கப்பட்டான். அம்மா, அக்காங்க நெனப்புல அவனால இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியல. படிப்புல கவனம் செலுத்த முடியல, சேர்க்கை சரியில்ல, அவனும் ஒரு குடிகார தொழிலாளியா இன்னைக்கி அத்தன செறமபட்டுட்டு இருக்கான். அண்ணன் உடம்புல இல்லாத நோயே கிடையாது. அப்பா எடத்துல இன்னைக்கி அண்ணன். எல்லா வகையிலயும். குடிகாரனால் வரும் பாதிப்புல இதுதான் பெருசுன்னு தோணுது. குடும்பத்தோட அழகா கட்டுமானம் இப்படி மூர்க்கமா கொலைஞ்சு போனா அந்த வீடு கண்டிப்பா ஒரு மனநோயாளி இல்லேன்னா பைத்தியக்கார குடும்பமாத்தான் இருக்கும். வாழ்க்கையில இதுக்கு மேல சோகத்தை பாக்க முடியாதுங்கிறது இப்பத்தான் எனக்கு தோணுது”.

கதையை முடித்ததும் அவர் ஒரு கணம் கண்களை மூடினார். காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடிய ரயிலின் சடசடப்பு சத்தத்தை மீறி ஒரு அமைதி அங்கே குடிகொண்டிருந்தது.

– சரசம்மா

(உண்மைச் சம்பவம், பெயர் – அடையாளம் மாற்றப்படிருக்கிறது.)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க