privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா ?

சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா ?

-

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் படுகொலைகள் : சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா?

“யாராவது ஒருவர் அந்தக் கொலைகாரர்கள் மீது கல்லை விட்டெறிந்திருந்தால் கூட என் கணவனைக் காப்பாற்றியிருப்பேனே” என்று கதறினாள் உடுமலையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா. அந்த உடுமலை படுகொலைக் காட்சி, தமிழகத்தின் இன்றைய அரசியல் சமூக சூழ் நிலைக்கு ஒரு சாட்சி. கண் முன்னே நடக்கும் பல வகை அநீதிகளைக் கண்டும் காணாமலும், சகித்துக் கொண்டும், அங்கீகரித்துக் கொண்டும் செல்லப் பழகியிருக்கும் தமிழ்ச் சமூகம், கையில் வீச்சரிவாளேந்திய ரவுடிகள் கும்பலுக்கு எதிராக கல்லெறிந்திருக்குமா என்ன?

சங்கர்-கவுசல்யா
சாதி-தீண்டாமையை மறுத்துக் காதல் மணம் புரிந்துகொண்ட சங்கர்-கவுசல்யா தம்பதியினர் (கோப்புப் படம்)

ஒருவேளை, அது ஒரு இளம் காதல் தம்பதிகளுக்கு எதிரான சாதி ஆணவப் படுகொலை என்று தெரிந்திருந்தால், மக்கள் தலையிட்டிருப்பார்களோ என்று சிலருக்குத் தோன்றலாம். அப்படித் தெரிந்திருந்தால் நிச்சயமாகத் தலையிட்டிருக்க மாட்டார்கள் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. கோகுல் ராஜ் படுகொலை உள்ளிட்ட சாதி ஆணவப் படுகொலைகள் அனைத்திலும் இறுக்கமானதொரு மவுனம்தான் தமிழ்ச்மூகத்தின் எதிர்வினையாக இருந்து வருகிறது.

அந்தக் கண்காணிப்பு காமெராவில் படுகொலைக் காட்சி பதிவாகாமல் இருந்திருந்தால், ஒருவேளை அது ஒளிபரப்பப்படாமல் இருந்திருந்தால், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பார்களா என்பதும் கூட சந்தேகமே. இதுவரை நடந்துள்ள சாதி ஆணவக் கொலைகளில் குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீசு இத்தனை சுறுசுறுப்பைக் காட்டியதில்லை. பட்டப்பகலில் நகரின் நடுவே ஒரு படுகொலையை நடத்திவிட்டு, மிகவும் அலட்சியமாக அந்தக் கொலைகாரர்கள் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் காட்சி, போலீசின் அதிகாரத்தையும், ஜெ. அரசின் யோக்கியதையையும் எள்ளி நகையாடும் வித்தில் அமைந்து விட்டதால், தனது ‘கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத்தான் போலீசார் சுறுசுறுப்பு காட்டியுள்ளனர் என்பதே உண்மை.

தன்னுடைய தந்தையும், தாயும், பாட்டியும், தாய் மாமனும்தான் இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் என்றும், அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் கவுசல்யா. தருமபுரி இளவரசன், கோகுல்ராஜ் ஆகியோரைப் போல சங்கரும் கண் மறைவாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தாலோ, கவுசல்யா தைரியமாகவும் நேர்மையாகவும் குற்றவாளிகளை அடையாளம் காட்டாமல் இருந்திருந்தாலோ கதை வேறாக இருந்திருக்கும்.

கொலையாளிகள்
சங்கரையும், கவுசல்யாவையும் துடிதுடிக்க வெட்டிப் போட்டுவிட்டு குற்றவாளிகள் தப்பிச் செல்வதை பார்த்து நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் இழிந்த நிலை.

சாதி ஆணவக் கொலையாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் 2011-ல் வழங்கிய ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பு, உயர்நீதி மன்றங்களுக்கும் கீழமை நீதிமன்றங்களுக்கும் வழிகாட்டியது. இருப்பினும் மத்திய சட்டக் கமிசன் அமைத்த குழு இதனை ஏற்கவில்லை. திருமணங்களைத் தடுக்கும் நோக்கத்துக்காகக் கூட்டப்படும் காப் பஞ்சாயத்துக்களைத் தடுப்பது குறித்து மட்டுமே அது பேசியது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் ஆணவக்கொலை குறித்த விவரங்களை அனுப்பக் கோரியது இந்தக் கமிசன். 22 மாநிலங்கள் அனுப்பி விட்டன. ஆனால் ஜெ. அரசு மட்டும் இதுவரை தமிழகத்தின் ஆணவக் கொலை குறித்த விவரங்களை அனுப்பவில்லை.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்றுள்ள ஆணவக்கொலைகள் 81. கொல்லப்பட்டோரில் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் காதலித்த ஆதிக்க சாதிப் பெண்கள் என்று கூறியிருக்கிறார், எவிடென்ஸ் கதிர். இது மட்டுமல்ல; ஆண்டுக்கு சுமார் 1000 பெண்கள் தமிழகத்தில் கொலை செய்யப்படுவதாகவும், இவர்களில் 17% பேர் காதலித்த குற்றத்துக்காக கொலை செய்யப்படுகின்றனர் என்றும் அவர் கூறுகிறார். ஆண்டொன்றுக்கு தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 7000. அவர்களில் 28% பேர் காதல் தொடர்பான பிரச்சினையால் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் அவர் கூறுகிறார். (https://minnambalam.com/k/1458000002)

இத்தகைய கொலைகள் சாதிக்காரர்கள் மற்றும் உறவினர்களால்தான் செய்யப்படுகின்றன என்பதால், இவற்றுக்கு சாட்சி சொல்ல யாரும் வருதில்லை. இது தீண்டாமைக் கொலைதான் என்ற போதிலும், கொல்லப்படும் பெண்கள் ஆதிக்க சாதியில் பிறந்தவர்கள் என்பதால், பதிவாகும் வழக்குகளும் தீண்டாமைக் குற்றத்தின் கீழ் கொண்டு வரப்படுவதில்லை. தலித் இளைஞர்கள் கொல்லப்படும்போது அதை எதிர்த்து தலித் அமைப்புகள் குரல் கொடுப்பதால், அந்த அநீதி வெளியே தெரியவாவது செய்கிறது. பரிதாபத்துக்குரிய இந்தப் பெண்களின் கொலைகளைக் கேட்பாரில்லை என்று இந்த அநீதியின் கொடிய பரிமாணத்தை சுட்டிக்காட்டுகிறார் கதிர்.

கவுசல்யா
சாவின் பிடியிலிருந்து தப்பிப் பிழைத்த கவுசல்யா, சாதி ஆணவக் கொலைகாரர்களைத் துணிவோடு அடையாளம் காட்டியிருக்கிறார்.

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிக்க அதிகரிக்க அவற்றுக்கெதிரான அறிக்கைகள் கூட அடங்கி, மவுனம் வலுப்பெறத் தொடங்கி விட்டது. அ.தி.மு.க. நேரடியாகவே சாதி ஆதிக்க சக்திகளுக்குத் துணை நிற்கிறது. தி.மு.க. எச்சரிக்கையாக கொலையை மட்டும் கண்டிக்கிறது. பெரியார் இயக்க வாசனையைக்கூட தமிழ் மண்ணிலிருந்து ஒழிக்கும் பொருட்டு, சாதிச் சங்கங்களை கூர் தீட்டி விடுகிறது பா.ஜ.க.

இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோரது கொலைகளில் வன்னியர், கவுண்டர், தேவர் என்ற தமிழகத்தின் மூன்று பெரும் ஆதிக்க சாதிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று சாதிகள் மட்டுமின்றி, பொதுவில் எல்லா ஆதிக்க சாதிகளுமே தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான மனோபாவத்தில் ஒன்றுபட்டிருக்கின்றனர் என்பதே உண்மை. ஆகையினால், சாதி கூடாது என்று தனிப்பட்ட முறையில் கருத்து கூறுவோர் கூட, சாதி ஒழிப்பைப் பேசுவதற்கான தைரியம் இல்லாமல், காதலை மதிக்குமாறு சாதி வெறியர்களிடம் ஈன சுரத்தில் வேண்டுகோள் விடுகின்றனர். ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனக் கோருகின்றனர்.

ஏற்கெனவே தீண்டாமைக் குற்றங்களுக்காகப் பதியப்படும் வழக்குகளில் 10% கூட தண்டிக்கப்படுவதில்லை. தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, வன்கொடுமைச் சட்டத்தில் புதிய பிரிவுகள் சேர்க்கப்படுகின்றனவேயன்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. காரணம், ஓட்டுக் கட்சிகள் மட்டுமின்றி, அதிகார வர்க்கமும் நீதித்துறையும் சாதிவெறியர்களுக்குத் துணை நிற்கின்றன. கயர்லாஞ்சி படுகொலை வழக்கில் கீழ்நிலையிலிருந்து மேல்நிலை வரையிலான போலீசு அதிகாரிகள் தலித்துகளாக இருந்தபோதிலும், குற்றவாளிகள் தப்புவிக்கப்பட்ட கொடுமையை ஆனந்த் தெல்தும்ப்டே அம்பலப்படுத்தியிருக்கிறார். நேர்மையான அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் விஷ்ணுப்பிரியாவுக்கு நேர்ந்த கதிதான் அவர்களுக்கு நேர்கிறது.

ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அதிகாரிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பிற்படுத்தப்பட்டோர் என்ற பெயரில் இட ஒதுக்கீடு பெற்று போலீசு மற்றும் அரசு பதவிகளில் அமர்கின்றவர்கள், தமக்குக் கிடைத்த அதிகாரத்தை சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவும் தலித் மக்களுக்கு எதிராகவும்தான் பயன்படுத்துகிறார்கள். இது மறுக்கவியலாத உண்மை. அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்குவதை சாதி ஒழிப்புக்கான வழியாக முன்வைத்துப் பேசுபவர்கள், இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

இளவரசன்-திவ்யா அல்லது சங்கர்-கவுசல்யா போன்ற எண்ணற்ற காதலர்கள், சாதி தமது வாழ்க்கைக்குப் பொருத்தமற்றது என்று நிராகரிக்கிறார்கள். அதாவது, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ‘கீழே’ சாதி மெல்ல மெல்ல அழியத்தான் செய்கிறது. இட ஒதுக்கீட்டின் மூலம் டாக்டர், வக்கீல், பொறியாளர், பேராசிரியர் என்ற பதவிகளைப் பெற்றவர்களும், ஓட்டுக்கட்சித் தலைவர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும், ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வி வள்ளல்கள் போன்றவர்களும்தான் ‘மேலிருந்து’ சாதியை நிலைநாட்ட வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.

இட ஒதுக்கீட்டின் காரணமாக கல்வி – வேலைவாய்ப்பினைப் பெற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர் தாங்கள் சாதிவெறியர்களில்லை என்பது போல நடிக்கின்றனர். சாதிவெறிக் கொலைகாரர்களை, மூடநம்பிக்கைக்குப் பலியான முட்டாள்களாகக் கருதி அனுதாபத்துடன் அறிவுரை கூறுகின்றனர். தமிழினவாதிகளோ, இதனை இரண்டு தமிழ்ச்சாதிகளுக்கு இடையிலான மோதல் என்பதாக திசை திருப்புகின்றனர். சமூகரீதியில் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய சாதி என்று சொல்லி இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டு, அதன் மூலம் கிடைத்த அதிகாரத்தையும் சமூகத் தகுதியையும், தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கப் பயன்படுத்துவதென்பது கீழ்த்தரமானதொரு கிரிமினல் குற்றம் என்று, இந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பிறந்த ‘நல்லவர்கள் எனப்படுவோர் கூட கருதுவதில்லை. இதுதான் ஆதிக்க சாதி மனசாட்சியின் யோக்கியதை! அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளின் சமூக அடித்தளம் இதுதான்.

சங்கர் ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் மகன். முதல் தலைமுறைப் பட்டதாரி. தனது வாழ்க்கையையே அடமானம் வைத்துக் கடன் வாங்கி, பிள்ளையைப் படிக்க வைத்த அந்தக் குடும்பத்தின் ஏக்கம், எதிர்பார்ப்பு ஆகிய அனைத்தையும், அந்த இளம் தம்பதியின் காதலையும் வெட்டி வீழ்த்தி விட்டு வீரநடை போட்டிருக்கிறது தேவர் (அகமுடையார்) சாதி வெறி. கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசில் சரணடைவதற்கு ஒரு மாவீரனைப்போல அழைத்துவரப்பட்டான் யுவராஜ். இளவரசனைக் காவு கொடுத்த ‘அன்பு’மணியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

இந்தச் சாதிகளில் பிறந்த எத்தனை பேர், தத்தம் சாதிகளைச் சேர்ந்த வெறியர்களை எதிர்த்து வெளிப்படையாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்? அவ்வாறு பேச மறுக்கும் யோக்கியர்களுக்கும் தன்னை யோக்கியன் என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க.காரனுக்கும் என்ன வேறுபாடு? முத்துக்குமாரசாமி மரணத்துக்குக் காரணமான குற்றவாளி தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி மட்டும்தானா? ‘பிழைக்கத் தெரியாத’ அந்த மனிதனின் மரணத்தை இயல்பாக எடுத்துக்கொண்ட பிழைக்கத் தெரிந்த அரசு ஊழியர்களுக்கு அந்தக் கொலைக் குற்றத்தில் பங்கில்லையா? ஆணவக் கொலைகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் இந்தச் சமூகம் ஜெயலலிதாவின் ஆணவத்திற்குப் பணிந்து கிடப்பதில் வியப்பென்ன?

சாதி என்பது தன் இயல்பிலேயே ஒழுக்கக்கேடான, ஜனநாயக விரோதமான ஒரு நிறுவனம். சாதி வெறி தாழ்த்தப்பட்டோரை மட்டும்தான் பதம் பார்ப்பதில்லை. அரியானா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஜாட் சாதியினர் நிகழ்த்தும் வன்முறை என்பது அங்கே அன்றாட நடப்பு. லவ் ஜிகாத் என்ற பெயரில் அந்த சாதிவெறியை இந்துவெறியாக மாற்றி முஸ்லீம்களுக்கு எதிராகத் திருப்பியது பாரதிய ஜனதா. விளைவு – முசாபர்பூர் கலவரம். அதே ஜாட் சாதியினர் தங்களை பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவிக்க கோரி சமீபத்தில் நடத்திய போராட்டத்தில், அரியானா மாநிலமெங்கும் ஜாட் அல்லாத 30-க்கும் மேற்பட்ட மற்ற சாதியினரின் கடைகள், சொத்துகள் சூறையாடப்பட்டன.

இந்தப் போராட்டத்தின்போது, டில்லி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த பல இளம் தம்பதிகளைக் கடத்திச் சென்று, கணவனின் கண் முன்னாலேயே மனைவியை வல்லுறவு செய்தனர் ஜாட் சாதிவெறியர்கள். வல்லுறவுக்கு ஆளான பெண்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். சாதிவெறிக் காலிகள் பெண்களைக் கடத்திச் செல்லும் காட்சி, உடுமலை கொலையைப் போல, நெடுஞ்சாலைக் கண்காணிப்பு காமெராக்களில் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. கண்ணால் கண்ட சாட்சியாக கணவனும் இருக்கிறான். ஆனால் ஜாட் சாதி வெறியர்களுக்கு எதிராகப் புகார் கொடுக்கும் துணிவு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இல்லை.

இப்படி அரியானாவின் சமூகத்தையே அச்சுறுத்தும் ஜாட் சாதியை சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவிக்க இருக்கிறது அம்மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி. இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

– சூரியன்
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

inner_design2