privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன ?

தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன ?

-

சொத்துக்குவிப்பு வழக்கிலும், டான்சி நில ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட்டவர் ஜெயா என்ற போதும், இந்த இரண்டு வழக்குகளிலும் அவர் விடுதலையை வாங்கியது சட்டத்திற்குப் புறம்பானது என்ற போதும், அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, 2ஜி வழக்கு விசாரணை முடிவதற்கு முன்பே தி.மு.க.வையும் கருணாநிதியையும் மன்னிக்கவே முடியாத குற்றவாளியென மக்களின் மனதில் பதிய வைப்பதில் ஜெயா, துக்ளக் சோ, பா.ஜ.க., உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் வெற்றி பெற்றுவிட்டது.

2ஜி விற்பனையில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தணிக்கைத் துறையின் அனுமானம்தான். அந்த இழப்பு குறித்து இந்தத் தொகையைவிடக் குறைவான அனுமானங்களையும் முன்வைத்திருக்கிறது தணிக்கைத் துறை. அவ்விற்பனையில் விதிமுறையை மீறி நடந்துகொண்டு, சில நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதுதான் ஆ.ராசா மீதான வழக்கு; அதற்காக, கலைஞர் டி.வி.க்கு இருநூறு கோடி ரூபாய் இலஞ்சமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கொள்ளையோ தி.மு.க. மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி ஊழலைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமானது.

சமச்சீர் கல்வி போராட்டம்
பதவியேற்றவுடனேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்த பார்ப்பன ஜெயா அரசைக் கண்டித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளை அணிதிரட்டி நடத்திய சாலை மறியல் போராட்டம் (கோப்புப் படம்)

2ஜி ஊழல் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் விவாதிக்கப்பட்ட அளவிற்கு அம்மா அடித்திருக்கும் இந்தக் கொள்ளை பேசப்படவில்லை. அப்படி விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போதெல்லாம், “தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் ஊறிய கட்சிகள், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளை வீழ்த்தினால்தான் தமிழகம் உருப்படும்” என சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் ஒரு நரித்தனமான வாதத்தைக் கிளப்பி அதற்குள் புகுந்து கொண்டு, பார்ப்பன ஜெயாவைப் பாதுகாக்கிறது. பார்ப்பனக் கும்பலின் இந்தக் கிரிமினல்தனத்தை ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., நாம் தமிழர் கட்சிகள் மட்டுமின்றி, போலி கம்யூனிஸ்டுகளும் இந்தத் தேர்தலில் வழிமொழிந்து வருகின்றனர்.

அரைகுறையாகவாவது சமச்சீர் கல்விச் சட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க.வையும், அக்கல்வித் திட்டத்தைப் பதவியேற்றவுடனேயே குழிதோண்டிப் புதைக்க முயற்சி செய்த ஜெயாவின் அ.தி.மு.க.வையும்; அனைத்துச் சாதியினரும் அரச்சகராகும் சட்டத்தைக் கொண்டுவந்த தி.மு.க.வையும், அரசியல் தரகன் பார்ப்பன சு.சாமியோடு கைகோர்த்துக்கொண்டு அச்சட்டத்தை வேரறுத்த அ.தி.மு.க.வையும்; மோடி அரசின் இந்தி, சம்ஸ்கிருத திணிப்புகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் தி.மு.க.வையும், அத்திணிப்புகளை மௌனமாக இருந்து அங்கீகரித்து வரும் அ.தி.மு.க.வையும்; ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.-மோடியின் இயற்கை கூட்டாளியான ஜெயாவையும்; பதவி, அதிகாரம் என்ற பிழைப்புவாத நோக்கில் பா.ஜ.க.வோடு தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட தி.மு.க.வையும் ஒன்று என சாதிப்பதும், ஊழலைச் சாக்காக வைத்துக் கொண்டு அவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே வேறுபாடே கிடையாது என வாதிடுவதும் நரித்தனமானது.

மகாமக பலிகள்
1992-ம் ஆண்டு நடந்த கும்பகோணம் மகாமகத்தின்போது, ஜெயாவும் சசியும் புனித நீராடுவதற்காகப் பலியிடப்பட்ட அப்பாவி பக்தர்கள் (நன்றி : ஜூனியர் விகடன்)

மார்க்சிஸ்டுகள் தலைமையில் மேற்கு வங்கத்தில் நடந்துவந்த இடதுசாரி கூட்டணி ஆட்சியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி சிங்கூரில் தரகு முதலாளி டாடாவின் நானோ கார் திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; நந்திகிராமத்தில் இந்தோனேஷிய பெருந்தொழில் நிறுவனமான சலீம் குழுமத்திற்காக நிலங்கள் பறிக்கப்பட்டன. இதனாலேயே,போலி கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் ஒன்றுதான் எனக் கூறினால், அதனைப் போலி கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வார்களா?

தி.மு.க.வும் இலஞ்சம், ஊழல், அதிகார முறைகேடுகளில் ஊறிப்போன கட்சிதான். ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளைகள் தி.மு.க. ஆட்சியிலும் தடையின்றி நடந்திருப்பதையும், அதற்குரிய பங்கை தி.மு.க. பெற்றிருப்பதையும் மறுக்க முடியாதுதான். தினகரன் பத்திரிகை அலுவலகம் மீதான தாக்குதல், திருமங்கலம் ஃபார்முலா என தி.மு.க.விற்கு இருண்ட பக்கங்கள் இருப்பதும் உண்மைதான். இவை போல இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் தி.மு.க. மீது சுமத்த முடியுமென்றாலும், பார்ப்பன-பாசிசத்தைத் தனது கொள்கையாகவே கொண்டிருக்கும் அ.தி.மு.க.வும், பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, சுயமரியாதை, தமிழ், தமிழினம் என்ற திராவிடக் கொள்கைகளின் வாசம் வீசுகின்ற – அது காலிப் பெருங்காய டப்பாவாக இருந்தபோதும் – தி.மு.க.வையும் ஒரேவிதமாக மதிப்பிடுவது அறியாமை அல்ல, கபடத்தனம்.

dmk-admk-caption-1பகுத்தறிவு, சுயமரியாதை உள்ளிட்ட திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொண்டர்களை அடித்தளமாகக் கொண்டிருந்த தி.மு.க., தேர்தல் அரசியலின் ஊடாக பிழைப்புவாதக் கட்சியாகச் சீரழிந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வோ சினிமா கவர்ச்சியையும், அவரது ரசிகர்களான உதிரித் தொழிலாளர்களையும் அடித்தளமாகக் கொண்டு உருவானது. தனது பிறப்பிலேயே எந்தக் கொள்கையும் இன்றி, பிழைப்புவாதத்தையும் அடிமைத்தனத்தையும் மட்டுமே கொண்ட கட்சியாக உருவெடுத்து, அதனின் பரிணாம வளர்ச்சியில், ஜெயாவின் தலைமையில் பார்ப்பன-பாசிசக் கட்சியாக உருமாறி நிற்கிறது.

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டுமே தேர்தலின்பொழுது பணப்பட்டுவாடாவில் இறங்கக்கூடிய கட்சிகள் என்றாலும், அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடா ஒப்பாரும் மிக்காரும் இல்லாதது. இலஞ்சம், ஊழல், அதிகார முறைகேடுகள், பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது ஆகிய வழிகளின் மூலம் கோடிகோடியாகக் கொள்ளையடிப்பது, அதில் ஒரு சிறுபகுதியை வீசியெறிந்து ஓட்டுக்களை விலைக்கு வாங்குவது, இதன் மூலம் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக நீடிப்பது என்பதுதான் ஜெயலலிதாவின் அரசியல். கடத்தல், கொலை, விபச்சாரம் போன்ற அனைத்து கிரிமினல்தனங்களையும் ஒரு தொழிலாக நடத்திக் கொண்டே, ஒரு கொடை வள்ளலைப் போல ஏழை மக்களுக்குக் காசை அள்ளி இறைப்பதன் மூலம் அவர்களுடைய ஆதரவைத் திரட்டிக் கொள்வதுடன், அவர்களையும் ஊழல்படுத்தி, அவர்களையே தனது கூலிப்படையாக மாற்றி வைத்துக் கொள்வதைப் போன்றது இந்த அரசியல்.

அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடாவிற்குத் தேர்தல் ஆணையமே துணை நின்ற அநீதியைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது தமிழகம் கண்டது. 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்பொழுது, தேர்தல் விதிமுறைகளை மீறி நான்கு தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர் ஜெயா. இம்முறைகேடு தொடர்பாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக இழுவையில் இருக்கிறது. இவ்வழக்கை இழுத்தடிப்பதன் மூலமே ஊத்தி மூடிவிட எண்ணும் ஜெயாவின் சதிக்குத் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் கைக்கூலிகளாகச் செயல்படுகின்றன. பார்ப்பன ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட இந்த ‘வீட்டோ’ அதிகாரம் கருணாநிதி உள்ளிட்ட வேறு யாருக்கும் ஓட்டுக்கட்சி அரசியலில் வழங்கப்படவில்லை.

அம்மா பக்தர்கள் யாகம்
பார்ப்பன மூடநம்பிக்கை: அம்மாவின் நலன் வேண்டி, அம்மாவின் அடிமைகளான தமிழக அமைச்சர்களால் கோயம்புத்தூர் சுகுணாபுரத்திலுள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் 17 நாட்கள் நடத்தப்பட்ட அஸ்வருதா தேவி மகா யாகம் (கோப்புப் படம்)

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது, அத்தேர்தல் பிரச்சாரங்களில் எவ்விதத் தடையுமின்றி ஜெயா ஈடுபடுவதற்கும், அத்தேர்தல் முடிந்த பிறகு நடைபெறக்கூடிய பேரங்களில் அவர் பங்கு பெறுவதற்கும் ஏற்ப அச்சமயத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது, உச்சநீதி மன்றம். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயாவிற்கு சட்டத்தை மீறி சலுகை அளித்துப் பிணை வழங்கியது, அவருக்குச் சாதகமாக அவ்வழக்கை விரைந்து முடிந்து கொடுக்க ஏற்பாடு செய்தது, கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடந்த அம்மேல்முறையீட்டு வழக்கில் காணப்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக தி.மு.க.வின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பூசிமெழுகியும், இரண்டுங் கெட்டான்தனமாகவும் தீர்ப்புகளை அளித்தன நீதிமன்றங்கள். தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தி.மு.க. தரப்புக்கு மட்டும் வாதிடுவதற்கான அனுமதியை மறுத்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனுமதி மறுப்பதாக வெட்கமே இல்லாமல் கூறுகிறார்கள். ஜெயலலிதாவுக்கு நீதிமன்றங்கள் வழங்கி வரும் இத்தகைய சலுகைகள், வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியாவில் வழங்கப்பட்டதேயில்லை என்பதே உண்மை.

கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் கடன் சுமை ஒரு இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததையும், அப்பொழுது நிலவிய மின் தட்டுப்பாட்டையும் காட்டி கருணாநிதியை நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சராகப் பார்ப்பனக் கும்பலும், ஊடகங்களும் குற்றஞ்சாட்டின. கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியிலோ தமிழக அரசின் கடன் சுமை மேலும் 1,40,000 கோடி ரூபாய் அதிகரித்து, 2,47,031 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றிவிட்டதாக ஜெயா அடித்துவரும் தம்பட்டம் கடைந்தெடுத்த மோசடி என்பதைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அம்பலப்படுத்துகிறது. ஆனாலும், எந்தவொரு ‘நடுநிலை’ ஊடகமும் ஜெயாவின் நிர்வாகத் திறமையைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை. மாறாக, அவர் அடிமுட்டாள்தனமாகவும் அடாவடித்தனமாகவும் எடுக்கும் முடிவுகளைக் காட்டி, அவரைத் தைரியலட்சுமி எனத் துதிபாடி வருகின்றன.

அ.தி.மு.க அடிமைத்தனம்
நாயினும் கீழாகத் தாழ்ந்து… அடிமைத்தனத்தின் மறுபெயர் அ.தி.மு.க

ஜெயா-சசி கும்பலால் வளைத்துப் போடப்பட்ட லக்ஸ் தியேட்டர், இந்த ஐந்தாண்டுகளில் அக்கும்பல் நடத்திவரும் சொத்துக்குவிப்பு கிரிமினல்தனங்களை எடுத்துக்காட்டும் துவக்கப் புள்ளியாக அமைந்தது. இதனையடுத்து, ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் மிகப்பெரும் பொருளாதாரக் குற்றங்களிலும், கிரிமினல் சதி வேலைகளிலும் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி வருகிறது. எனினும், அந்த அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்படவில்லை. மாறாக, அவர்களது ஆதரவாளர்களைக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலக்கப்படுவதே தண்டனையாகக் காட்டப்படுகிறது.

80 விழுக்காடு அமைச்சர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் பாதிப்பேர் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு துறையின் அமைச்சர் எனப்படுபவருக்கு அந்தத் துறையைக் கொள்ளையடிக்கும் உரிமை அவுட்சோர்ஸ் செய்யப்பட்டிருக்கிறது என்பதும், அடித்த கொள்ளையின் உண்மையான கணக்கை ஒப்படைக்காத நேர்மையற்ற அமைச்சர்கள்தான் நீக்கப்பட்டுப் பின்னர் மீண்டும் சேர்க்கப்படுகிறார்கள் என்பதும் உலகறிந்த உண்மை.

சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து, அந்த மகன் தனக்குத் தெரியாமல் பதுக்கி வைத்திருந்த திருட்டுச் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காக அந்த மகன் மீது கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிய வரலாற்றுப் பெருமை கொண்டவர் ஜெயா. இப்பொழுது ஐவரணி கூட்டாளிகளுள் ஒரு சிலரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, வன்கொடுமைத் தடைச் சட்டத்தையும் எள்ளி நகையாடியிருக்கிறார்.

இதற்கும் மேலாக, அமைச்சர்களை போயசு தோட்டத்திற்கு வரவழைத்து, மிரட்டி, வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கி, அவர்கள் சட்டவிரோதமாகக் குவித்து வைத்திருக்கும் சொத்துக்களைத் தனது பெயரில் பட்டா போட்டு வருகிறது, ஜெயா-சசி கும்பல். அரசின் கஜானாவிற்குப் போகவேண்டிய சொத்துக்கள் போயசு தோட்டத்தில் பதுக்கப்படுகின்றன. திருடர்களிடமிருந்து கைப்பற்றப்படும் திருட்டு நகை, பணம் ஆகியவற்றில் பெரும்பகுதியைச் சுருட்டிக் கொண்டு, கொஞ்சத்தை திருடனுக்கும், மிச்சத்தைப் பறிகொடுத்தவனுக்கும் பிரித்துக் கொடுக்கும் கிரைம் பிராஞ்சு போலீசின் நேர்மைகூட ஜெயாவிடம் இல்லை.

ஜெயா கிரிமினல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டால், அவரது விசுவாச ரவுடிக் கூட்டம் தமிழகத்தையே ரணகளமாக்கத் துணிகிறது. மூன்று மாணவிகளை உயிரோடு எரித்து சிவில் சமூகத்தைப் பீதிக்குள்ளாக்குகிறது. இன்னொருபுறமோ, இலஞ்சம், ஊழல், அதிகாரமுறைகேடுகள், காமக் களியாட்டங்கள் உள்ளிட்ட கிரிமினல் குற்றங்களைப் புரியும் தனது அமைச்சர்களைத் தண்டிக்கும் உரிமையைச் சட்டத்திடம் விட மறுத்து, அவர்களின் தலைவி என்ற மமதையோடு அதனைத் தானே எடுத்துக் கொள்கிறார். மக்கள் நலப் பணியாளர், நடைபாதைகளில் பேனர்கள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தனது அரசுக்கு எதிராக நீதிமன்றம் இடும் உத்தரவுகளை அமல்படுத்த மறுக்கிறார். நீதிபதிகளை விலைக்கு வாங்குவதன் மூலம் அல்லது மிரட்டுவதன் மூலம் தனக்குச் சாதகமான உத்தரவுகளைப் பெறுகிறார். இதன் வழியாக, சட்டத்திற்கு மேலான சர்வ வல்லமை பொருந்திய சர்வாதிகாரியாக, அரசியல் கட்சித் தலைவர்களிலேயே தனிச் சலுகை படைத்தவராகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார், ஜெயலலிதா.

அரசு என்பதை தனது அந்தப்புரமாகவும், போலீசை அங்கு காவலிருக்கும் திருநங்கைகளாகவும், அமைச்சர்களைக் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் காவலர்களாகவும் கருதி நடத்துகிறார் ஜெயலலிதா. இப்படிபட்ட ஒரு அரசு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தனிச்சலுகை வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. காரணம், தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு அரசியல் மரபை வேரடி மண்ணோடு ஒழித்துக்கட்ட வந்த அவதாரமாக ஜெயலலிதாவைக் கருதுகிறது பார்ப்பன-பனியா ஆளும் கும்பல்.

பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, இந்தி-சமஸ்கிருத திணிப்புக்கு எதிர்ப்பு ஆகிய திராவிடக் கருத்தாக்கங்கள் தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருவதற்கு கருணாநிதியையும், தி.மு.க..வையும் காரணமாகக் கருதி வருகிறது, பார்ப்பனக் கும்பல். அதனால்தான் தி.மு.க. தீயசக்தி என அவாள்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது. தி.மு.க.வை அடுத்தடுத்த தேர்தல்களில் தோற்கடிப்பதன் மூலம், வழக்குகளை ஏவி நிலைகுலையச் செய்வதன் மூலம், இதனையும் கருணாநிதி உயிரோடு இருக்கும்பொழுதே செய்து முடிப்பதன் மூலம், அக்கட்சிக்கு மங்களம் பாடித் தமிழகத்தை மீண்டும் பார்ப்பன தேசியத்திற்குள் முழுவதுமாக மூழ்கடித்துவிடலாம் என முனைந்து வருகிறது, அக்கும்பல். கருணாநிதி எத்தனை அரசியல் சமரசங்களைச் செய்து கொண்டு இந்திய தேசியத்திற்கும், பார்ப்பனக் கும்பலுக்கும் விசுவாசமிக்கவராக நடந்து கொண்டாலும், பார்ப்பன பாசிசக் கும்பல் எதையும் பொருட்படுத்துவதில்லை.

இந்த நோக்கத்துக்காகப் பல்வேறு திசைகளிலும் காய்கள் நகர்த்தப்படுகின்றன. துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி, “அ.தி.மு.க. அரசு வந்ததால்தான் ஒரு குடும்ப ஆட்சி போனது. குடும்ப ஆட்சி திரும்ப வந்துவிட நமது ஓட்டு பயன்பட்டுவிடக் கூடாது” என தி.மு.க.விற்கு எதிராகப் பார்ப்பன ஜெயாவை ஆதரித்து வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்கிறார். “தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் ஊழலில் ஊறிப் போன ஒரேமாதிரியான கட்சிகள்” எனச் சமப்படுத்தும் மக்கள் நலக் கூட்டணியும்; “திராவிடக் கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்துவிட்டதாக”ப் பழிபோடும் பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சியும் ஆழ்வார்கள் வேலையில் இறங்கியிருக்கின்றன.

தேர்தல் அரசியலுக்கு வெளியேதான், மக்கள் விடுதலைக்கும் அதிகாரத்துக்குமான தீர்வு இருக்கிறது என்று நாம் கூறுவதனாலேயே, தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகள் அனைத்தும் சமமானவை என்று பொருளல்ல. பாரதிய ஜனதா, காங்கிரசு முதலான ஆளும் வர்க்கக் கட்சிகளாகட்டும், போலி கம்யூனிஸ்டுகள், தலித் கட்சிகள் போன்றவைகளாகட்டும், அவை ஒவ்வொன்றின் தன்மையையும் பிரித்துப் புரிந்து கொள்வது அவசியம்.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சமம் எனப் பார்ப்பனக் கும்பல் முன்வைக்கும் வாதம், அதற்கு வால்பிடிக்கும் மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளின் அரசியல் போக்கு தமிழகத்தைப் பார்ப்பன பாசிசத்திற்கு முற்றும் முழுதாக அடிமைப்படுத்தும் தீய உள்நோக்கம் கொண்டது.

– செல்வம்
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

 

inner_design400x300