Monday, June 17, 2024
முகப்புஉலகம்அமெரிக்காபாலஸ்தீனப் பிணங்களை தின்னும் இசுரேல் !

பாலஸ்தீனப் பிணங்களை தின்னும் இசுரேல் !

-

நாம் எப்பொழுதுமே இசுரேலிடம் பாலஸ்தீனிய அரசியல் கைதிகளை  விடுதலைச் செய்யச் சொல்லி போராடி வந்தோம். தற்போது இறந்த உடல்களைக் கொடுக்குமாறு எங்களைப் போராட செய்வது என்பதைக் கற்பனைச் செய்து கூட பார்க்க முடியாது என்று கூறுகிறார் ஹசன் மனஸ்ராவின் தந்தையான காலத் மன்ஸ்ரா. ஹசன் மன்ஸ்ராவின் உடல் கடந்த அக்டோபரில் இருந்து இசுரேலின் பிணவறையில் தான் உள்ளது.

இசுரேலின் ஆதிக்கத்துக்கு எதிராக போராடி தமது இன்னுயிரை ஈந்திருக்கும் போராளிகளின் உறவினர்கள் தொடர்ச்சியாக இறந்த உடல்களை ஒப்படைக்க கோரி போராடி வருகின்றன.

அகமது இன்னமும் இசுரேலிய சிறைக் கம்பிகளின் பின் தான் இருக்கிறான்.
அகமது இன்னமும் இசுரேலிய சிறைக் கம்பிகளின் பின் தான் இருக்கிறான்.

15 வயது ஹசன் மன்ஸ்ராவும் அவனது உறவுக்காரப் பையனான அகமது மன்ஸ்ராவும் சேர்ந்து இசுரேலியச் சிறுவர்களை அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுப் பின் இசுரேலிய போலீசால் ஹசன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டான். அகமது இன்னமும் இசுரேலிய சிறைக் கம்பிகளின் பின் தான் இருக்கிறான்.

தனது மகனைப் படுகொலை செய்த இசுரேலியப் போலிசுக்கு எதிரான எந்த விசாரணையையும் விட காலத் மன்ஸ்ராவிற்கு அவரது மகனின் இறந்த உடல் தான் தேவைப்படுகிறது. அவனது இறுதிச் சடங்கிற்கான மரியாதையாவது அமைதியான முறையில் எந்த தடங்களும் இல்லாமல் நடத்த வேண்டுமே என்பது தான் அவரது கவலை. ஒருவேளை இசுரேலிய நீதிமன்றத்திற்கு நீதியைப் பற்றிய பிரஞ்ஞை இருந்தால் தனது மகனின் இறந்த உடலைத் மீட்டுத் தர உத்தரவு இட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

கடந்த மாதத்தில் இசுரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதான்யஹு தகுந்த தகவல் வரும் வரை உடல்களை ஒப்படைக்க வேண்டாம் என்று இரக்கமின்றி கூறிவிட்டார். இசுரேலிய நீதிமன்றம் பஸ்கா விடுமுறை முடியும் வரை தீர்ப்பை ஒத்தி வைத்து நாடகமாடுகிறது.

கடந்த அக்டோபர் முதல் இது வரை கிட்டத்தட்ட 209 பாலஸ்தீனியர்களை இசுரேலிய போலிசு சுட்டுக் கொன்று உள்ளது. 29 இசுரேலியர்களைப் பாலஸ்தீனியர்கள் கொன்றுள்ளதாக இசுரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது. இசுரேலியர்களை தாக்குவதன் எதிர்வினை போல இதை அவர்கள் இட்டுக் கட்டினாலும்  புள்ளி விவரங்களின் இடைவெளி அந்த போலியானக் குற்றசாட்டுகளை புறம் தள்ளகிறது.

பாலஸ்தீனம் என்னவோ இசுரேலிய மக்களை கொல்வதாகவும் பதிலுக்கு இசுரேல்  திருப்பித் தாக்குகிறது என்று நடுநிலைமை வேடம் போடும் கபடதாரிகளுக்கு பதிலாக புள்ளி விவரங்கள் ஏராளமாக இருக்கின்றன.

133 இஸ்ரேல் குழந்தைகள் பாலஸ்தீனர்களால் கொல்லப்பட்டுள்ளனர். 2,089 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலியர்களால்கொல்லப்பட்டுள்ளனர்.
133 இஸ்ரேல் குழந்தைகள் பாலஸ்தீனர்களால் கொல்லப்பட்டுள்ளனர். 2,089 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் படுகொலைகளாகட்டும், அரசியல் கைதுகளாகட்டும், பிணவறையில் அடைபட்டுக் கிடக்கும் உடல்களாகட்டும், ஐக்கிய நாடுகளின் சபையின் கண்டனங்ககளாகட்டும் இசுரேல் எண்ணிறந்த வகையில் பாலஸ்தீனத்தால் எட்ட இயலாத உயரத்தில் இருக்கிறது.

சமீப காலங்களில் கிட்டத்தட்ட 268  பாலஸ்தீனியப் போராளிகளது உடல்களை எண்களின் கல்லறை(Cemetery of Number) என்ற பெயரில் புதைத்து உள்ளது இசுரேல்.  புதைக்கப்பட்ட உடல்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இறந்த உடலைத திருப்பிக் கொடுத்து இறுதிச் சடங்கை செய்ய விடாமல் தடுப்பது இரண்டாவது முறை படுகொலை செய்ததற்கு ஒப்பாகும் என்று “இறந்த உடல்களை மீட்பதற்கான பாலஸ்தீனிய தேசியப் பிரச்சார குழு” வின் ஒருங்கினைப்பாளரான சல்வா ஹம்மது கூறுகிறார்.

தாம் மிகவும் நேசித்த உறவுகளுக்கு கடைசி முறையாக பிரியா விடைக் கொடுக்க விரும்பும் அவர்களின் மன உளைச்சலின் அளவை யாரும் மிகைப் படுத்த முடியாது. இறந்த உடல்களை ஒப்படைக்காமல் இருப்பது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

இசுரேல் மற்றும் பாலஸ்தீனப் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பிறகு தான் அதன் தீவிரம் காட்டுத்தனமாக அதிகரித்து. மத்திய கிழக்கில் தமது மேலாண்மையை நிலை நிறுத்தும் நோக்கில் பாலஸ்தீனத்தை துண்டாடியது. ஒருபுறம் பலஸ்தீனம்-இசுரேலின் ஒற்றுமைக்கு பாடுபடுவதாக கூறிக் கொண்டு மறுபுறம் இசுரேலுக்கு பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிதி மற்றும் ஆயுத உதவிகள் செய்து வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.

“நான் இன்னும் அவனுக்கு கடைசி முத்தம் தரக் காத்திருக்கிறேன். எந்த அளவிற்கு அவனை நாங்கள் இழந்து தவிக்கிறோம் என்று கூறவும், அரவணைப்புக் கொடுக்கவும் காத்திருக்கிறோம்” என்று கதறுகிறார் அப்துல் மாலிக் அபு காரௌபின் தாயார் ஹனான் அபு காரௌப்.சென்ற அக்டோபரில் இசுரேலின் பாதுகாப்புத் துறை பாலஸ்தீன போராளிகளின் வீடுகளை தாக்கி அழிப்பதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்காக தனது ஒப்புதலை அளித்து உள்ளது.  சில பத்தாண்டுகள் முன்பு தொடங்கி 2004-ல் காலாவதியாகி போன இந்த  அரசியல் நடவடிக்கையினை மீண்டும் இது தொடர்வதாக உள்ளது.

குபிர் ஆகப் (Kufr Aqab) பகுதியை சேர்ந்த அப்துல் மாலிக் பிளம்பராக வேலை பார்த்து பின்னர் சட்டம் படிக்க வேண்டும் என்று திட்டமிட்டுக்  கொண்டு இருந்தவரை இசுரேலிய இராணுவ வீரரை சுட்டதாக பொய் புகாரின் பெயரில் கொல்லப்பட்டுள்ளார். தந்தையும் வக்கீலுமான முஹம்மது ஆல்யன், “இசுரேலிய நீதித்துறையை நம்பி நாங்கள் இந்த மனுவை அளிக்கவில்லை மாறாக உலக அளவில் கவனத்தை ஈர்க்கவே நாங்கள் இதை செய்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

முஹம்மது ஆல்யன்
முஹம்மது ஆல்யன்

ஆல்யனுடைய மகனான பஹா கடந்த அக்டோபர் 13-ம் தேதி அன்று இசுரேலிய போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் ஒரு பகுதியான ஜாபல் முகாபர் என்ற இடத்தில ஒரு பேருந்தில் அவர் தாக்குதல் நடத்தியதான குற்றசாட்டின் பேரில் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். அதற்க்கான எந்த சான்றும் இசுரேலிய போலீஸ் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரைகலை(Graphics)  வடிவமைப்பாளராகவும் உள்ளூரில் ஒரு சாரணர் இயக்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்த பஹா ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீன மக்களை ஒன்று திரட்டியும், அவர்களது கலாச்சார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தியும் பாலஸ்தீன அடையாளத்தை மீட்டுருவாக்கவும் தொடர்ந்துப் போராடி வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இசுரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் அவரது வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர். இது அவரது செயல்பாட்டை முடக்கும் நோக்கிலான ஒரு முயற்சியாக இருந்த போதிலும் அது அவரது செயற்பாட்டை முற்றாக முடக்காததால் இறுதியில் அவரை படுகொலை செய்தும் உள்ளனர். அவரது உடல் இன்னும்  இசுரேலின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

ஆல்யன் அவரது மகனின் இறுதி சடங்கை செய்வதற்கு மிகுந்த ஆர்வமாக இருந்த போதிலும் அதற்கு இசுரேல் விதிக்கும் கட்டுப்பாடுகளை கிஞ்சித்தும் ஏற்கவில்லை. இறுதி சடங்கில் சிலர் மட்டுமே கலந்து கொள்ள விதிக்கப்பட்ட கட்டுபாட்டை நிராகரித்த அவர்  தனது மகனின் இறுதிச் சடங்கை பட்டப் பகலில் நடத்த போவது மட்டுமல்லாமல் அவரது மகனின் உடலில் பிரேத பரிசோதனை நடத்த போவதாகவும் கூறியுள்ளார்.

ஒருபுறம் இசுரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் படுகொலைகள் மறுபுறம் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் நிலைமைகளை முற்றாக நிராகரிக்கும் பாலஸ்தீன அதிகாரிகள் என்று பாலஸ்தீன மக்களின் நிலையை நினைத்து மிகுந்த கவலைபடுகிறார் ஆல்யன்.

இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து பாலஸ்தீன மக்களுக்காக இறந்தவர்களின் உடல்கள் இசுரேலின் பிணவறையில் ஆக்கிரமிக்கப்பட்டு கிடப்பது அந்த குடும்பங்களின் தனிப்பட்ட பிரச்சினையல்ல என்று கூறும் அவர் தமது இந்த  போராட்டத்தில்  உறுதிபாடு உடையவர்களாய் இருக்க அனைத்து தரப்பு பாலஸ்தீன மக்களின் ஆதரவைக் கோருகிறார்.

மேலும் படிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க