privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு மக்கள் அதிகாரம்தான் !

அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு மக்கள் அதிகாரம்தான் !

-

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ன்புடையீர், வணக்கம்!

மதுவிலக்கை அமல்படுத்தவே முடியாது என சாராய மந்திரி நத்தம் விசுவநாதன் கொக்கரித்தார். சசிபெருமாள் மரணத்தைக் கொச்சைப்படுத்தியது, ஜெயா அரசு. பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அடித்து நொறுக்கியது. கோவனை, தேசத்துரோக வழக்கில் கைது செய்தது. மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு, போராடியவர்களுக்கு பிணை வழங்காமல் ஒரு மாதம் சிறை.

kovan-arrest-people-power-virudai-notice-2
கோப்புப்படம்

தமிழகத்தில் குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்தாலும், எத்தனை தாய்மார்கள் தாலி அறுத்து விதவைகளானாலும், மூட முடியாது என சாராய ஆலை முதலாளிகளின் லாபத்திற்காக டாஸ்மாக் விற்பனையை இலக்கு வைத்து நடத்தினார், ஜெயா.

எல்லாம் அம்மாமயம் என அமைச்சர்களும், அ.தி.மு.க.வினரும் அதிகாரிகளும் தனது காலடியில் என்ற திமிரோடு, கொள்ளையடித்த பணத்தை வாரியிறைத்து எப்படியும் ஜெயித்து விடலாம் என்ற இறுமாப்போடு இருந்த ஜெயலலிதா, இன்று தேர்தல் பிரச்சாரத்தில், படிப்படியாக டாஸ்மாக்கை மூடுகிறேன் என மக்களிடம் கூழைக்கும்பிடு போட்டுச் சொல்கிறாரே, இலவசத் திட்டங்களை அள்ளி வீசுகிறாரே, ஜெயலலிதாவைப் பணியவைத்தது எது?

டாஸ்மாக்கை முற்றுகையிட்டு, போலீசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு கைது, சிறை, ரத்தம் சிந்தியது, லாக் அப் சித்திரவதை, உயிர்பலி என அர்ப்பணிப்போடு நடந்த மக்கள் போராட்டம்தான் ஜெயலலிதாவைப் பணிய வைத்தது. அனைத்துக் கட்சிகளையும் மதுவிலக்கு பற்றி உறுதியாகப் பேச வைத்தது. மக்கள் நிர்ப்பந்தித்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு டாஸ்மாக் போராட்டம் ஒரு நிரூபணம்.

டாஸ்மாக்கைப் போலவே மக்களை பாதிக்கும் எண்ணற்ற பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் இருக்கின்றன.

சிந்தித்துப் பாருங்கள்! பெண்கள் மீதான தொடரும் பாலியல் வன்முறைகள், அதிகரிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், தொடரும் கனிமவளக் கொள்ளைகள், கோவில் வாசலில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் வழக்கில் எதிரிக்குத் தண்டனை இல்லை, சாதி மாறிக் காதலித்ததால் இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என்று தொடரும் ஆணவப் படுகொலைகள், ஊழலுக்கு அடிபணிய மறுத்து நேர்மையாகப் பணிபுரிந்து முத்துக்குமாரசாமி, டி.எஸ்.பி விஷ்ணு பிரியாவின் மரணம், இவை எதையும் நீதிமன்றத்தால், அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

கொல்லப்பட்ட எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள்
கொல்லப்பட்ட எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் (கோப்புப்படம்)

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவர்கள் படுகொலைக்குக் காரணமானவர்கள், அனுமதி வழங்கிய துணைவேந்தர், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், இவர்களை எப்படித் தண்டிப்பது? கல்லூரி மீது போடப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம், சுயநிதி கல்லூரிகளின் துன்புறுத்தலால் தொடர்கிறது மாணவர்களின் தற்கொலை.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டம், விவசாயிகளின் நிலங்களைப் பறித்து எரிவாயு குழாய் பதிக்கும் பனானட்டு கம்பெனி, கெயில் நிறுவனம், விவசாய நிலங்களை நாசமாக்கும் ஷேல் கேஸ் திட்டம் இவற்றுக்குத் எதிராக தொடர்ந்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கிறது.

ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் ஆகிய கனிமவளக் கொள்ளைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் போடப்பட்டன. ஆனால், கொள்ளைகள் தடுக்கப்படவும் இல்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இல்லை. கிரானைட் கொள்ளை தொடர்பாக விசாரித்த சகாயம் குழு அறிக்கை, தாதுமணல் கொள்ளை தொடர்பாக விசாரித்த ககன்தீப்சிங் பேடி அறிக்கை மீது அரசும் நீதிமன்றமும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

ஆற்றுமணல் கொள்ளையர்க்கு எதிரான போராட்டம்
ஆற்றுமணல் கொள்ளையர்க்கு எதிரான போராட்டம் (கோப்புப்படம்)

பெப்சி, கோக் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆறுகள், ஏரிகள் தாரைவார்க்கப்பட்டு, குடிநீர் பாட்டில் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மக்கள் ஆடு மாடுகளைப் போல் தண்ணீருக்கு அலைகிறார்கள். ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர்நிலை ஆதாரங்களை தூர்வாரி பராமரித்து பாதுகாக்காமல் சாக்கடைக் கழிவுகளும், சாயப்பட்டறைக் கழிவுகளும், தோல் தொழிற்சாலைக் கழிவுகளும் கலக்கப்படுகின்றன. ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் ஆக்கிரமிப்பால் வெள்ளப் பேரழிவு ஏற்படுகிறது. தீர்வு என்ன?

ஆற்று மணல் கொள்ளைக்கு பொதுப்பணித்துறை மட்டுமல்ல, உடந்தையான மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி, காவல்துறை அதிகாரிகள் என அனைவரும் ஈடுபடுகின்றனர். தடுக்கும் நேர்மையான தாசில்தாரோ, காவல் துறையினரோ, கொலை செய்யப்படுகின்றனர். யாரிடம் மனு கொடுத்து யாரை தண்டிப்பது? அரசும் அதிகார வர்க்கமும் கிரிமினல்மயமாக மாறி மக்கள் விரோதமாகி விட்டது.

கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், குறைந்தபட்ச ஊதியம், விலைவாசி குறைப்பு, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள், பணிப்பாதுகாப்பு என எதையும் அரசால் உத்தரவாதம் செய்ய முடியவில்லை. தங்கள் வாழ்வாதாரங்களை, வாழ்வுரிமைகளை பாதுகாக்கப் போராடும் மக்களை அடக்கி ஒடுக்கும் இந்த அரசு உறுப்புகள் அனைத்தும் மக்கள் விரோதமாக மாறி விட்டன.

அரசுக் கட்டமைப்பு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விட்டது. மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வளிக்கும் ஆற்றலை இழந்து விட்டது. மொத்தத்தில் இந்த அரசு நம்மை ஆளும் அருகதை இழந்து விட்டது. சட்டத்தின் ஆட்சி, மக்கள் நல அரசு என்பதை அவர்களே பின்பற்ற முடியாமல் கழிப்பறை காகிதமாக மாற்றிய பிறகு மக்கள் எதற்கு அதன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்?

மக்களின் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு தனித்தனி போராட்டங்கள் சாத்தியம் இல்லாதது மட்டுமல்ல தீர்வும் அளிக்காது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமான இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியில் நின்று போராட வேண்டும். இரத்தம் சிந்தாமல், சிறை செல்லாமல், உயிர்த் தியாகம் இல்லாமல் எந்தப் போராட்ட வெற்றியும் சாத்தியம் இல்லை.

தேர்தலில் வெற்றி பெறும் கட்சி மாற்று அல்ல. மக்கள் அதிகாரம்தான் மாற்று. அரசு நிர்வாகத்தை தாங்களே ஆள்வதும், நேரடியாகக் கண்காணித்து, தவறு செய்பவர்களை மக்களை விசாரித்துத் தண்டிக்கும் முறை வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம்.

மனிதகுலம் கடந்து வந்த வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள், சாத்தியமா என அவநம்பிக்கை அடையவோ, அச்சப்படவோ அவசியமில்லை.

அனைத்து மக்களுக்குமான மாற்றை அனைவரும் சேர்ந்து அமைப்போம்.

வாருங்கள்….

மக்கள் அதிகாரத்தில் இணையுங்கள்!

மக்கள் அதிகாரம்,
சென்னை, 9176801656