privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு ! கசியாதது மலையளவு !!

பனாமா லீக்ஸ் : கசிந்தது கையளவு ! கசியாதது மலையளவு !!

-

னாமா நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற தரகு நிறுவனத்தின் ஆவணங்கள் மூலம் வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய கருப்புப்பணப் பட்டியல் வெளியாகி உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஹெச்.எஸ்.பி.சி. ஜெனிவா வங்கியில் 1,100 இந்தியர்கள் குவித்துள்ள கருப்புப்பண விவகாரம் அம்பலத்துக்கு வந்தது. அப்போது அது “ஜெனிவா லீக்ஸ்” எனப்பட்டது. இப்போது “பனாமா லீக்ஸ்” வெளிவந்துள்ளது.

panama-leaks-2இந்த தகவல்களில் உலகின் 140 அரசியல் தலைவர்கள், கணக்கற்ற பெருமுதலாளிகள், வர்த்தகச் சூதாடிகள், சினிமா- விளையாட்டு பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவைச் சேர்ந்த 500 கருப்புப்பணப் பேர்வழிகள் இப்பட்டியலில் உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ள போதிலும், நடிகர் அமிதாப்பச்சன், அவரது மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், டி.எல்.எஃப். நிறுவனத்தின் அதிபர் கே.பி.சிங், அதானி நிறுவனத்தின் அதிபர் வினோத் அதானி ஆகிய நான்கு பேரின் பெயர்கள் மட்டுமே வெளிவந்துள்ளன.

இது மட்டுமல்ல, தேசபக்தியின் அடையாளமாகச் சித்தரிக்கப்படும் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளும் இத்தகைய கருப்புபணப் பேர்வழிகள்தான் என்பதும் பனாமா லீக்ஸ் வழியாகக் கசிந்துள்ளது. டெல்லியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட அந்நிய ஆயுத விற்பனை நிறுவனங்களின் கிளைகள் இயங்கி வருகின்றன. இந்த கம்பெனிகள் பனாமாவிலுள்ள இடைத்தரகு நிறுவனங்களின் மூலமாகவே ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான தரகு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய இராணுவத்துக்கு 1996-இல் ராடார் கருவி, லேசர் கதிர்களை முன்னறிவிக்கும் கருவி மற்றும் ஏவுகணை எச்சரிக்கை கருவி முதலானவற்றை விற்றுள்ள இத்தாலியைச் சேர்ந்த “எலக்ட்ரானிக்கா எஸ்.பி.ஏ.” என்ற நிறுவனம், இந்திய இராணுவத்தின் மின்னணு உளவுக் கருவிகள் பராமரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றது. இதற்காக பனாமாவில் பதிவு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களான “இன்டர் டிரேட் எண்டர்பிரைசஸ்”, “இன்டர் டிரேட் ப்ராஜக்ட் கன்சல்டண்ட் லிமிடெட்” ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு – 2002 முதல் 2004 வரையிலான ஆண்டுகளில் – காங்கிரசு மற்றும் பா.ஜ.க. ஆட்சிக் காலங்களில் 17 சதவீதம் வரை கமிசன் கொடுத்துள்ள விவகாரம் பனாமா லீக்ஸ் வழியாகக் கசிந்துள்ளது.

முன்பு ஜெனிவா லீக்ஸ் விவகாரம் அம்பலமானபோது, வெளிநாடுகளில் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க வக்கற்ற ஆட்சி என்று அப்போதைய மன்மோகன் ஆட்சியை இந்துவெறி பா.ஜ.க. வெளிப்படையாகக் குற்றம் சாட்டியது. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்டுக் கொண்டு வருவோம்” என்று சவடால் அடித்தார் பா.ஜ.க.வின் ராஜ்நாத் சிங். “அப்படிக் கொண்டுவரப்படும் கருப்புப் பணத்திலிருந்து ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் பணத்தைப் போடுவோம்” என்று தேர்தல் வாக்குறுதியும் அளித்தது பா.ஜ.க.

panama-leaks-5ஊழலோடு, கருப்புப்பண விவகாரத்தையும் தேர்தலில் முக்கியத் துருப்புச் சீட்டாக வைத்து ஆட்சியைப் பிடித்த மோடி கும்பல் இன்றுவரை வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்திலிருந்து ஒரு சல்லிக்காசைக்கூட மீட்டுவரவில்லை. அது மட்டுமல்ல, பல்வேறு நாடுகளுடன் செய்து கொண்டுள்ள இரட்டை வரித் தடுப்பு முறை காரணமாக வெளிநாடுகளில் கருப்புப்பணம் வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்க முடியாது; கருப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால், சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் இந்தியாவின் முதலீட்டு மதிப்பைக் குறைத்துவிடும் என்று உச்சநீதி மன்றத்தில் மோடி அரசு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்து அந்தர் பல்டியடித்தது.

அதன் பிறகு, “கருப்புப்பணத்தை மீட்பதற்கு ஏற்ப சட்டத் திருத்தங்களை மேற்கொள்வோம்” என்று நாடாளுமன்றத்தில் சவடால் அடித்த மோடி கும்பல், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தைக் (பி.எம்.எல்.ஏ.) கொண்டு வந்தது. இச்சட்டப்படி, கருப்புப்பணப் பேர்வழிகள் தாமாக முன்வந்து ஒப்புதல் அளிக்க 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், 638 பேர் மட்டுமே தம்மிடம் ரூ. 3,330 கோடி உள்ளதாக ஒப்புக் கொண்டனர். அவர்களின் பெயர்களைக்கூட வெளியிட மறுத்த மோடி அரசு, அந்தத் தொகைக்கு 30 சதவீத வரி, 30 சதவீத அபராதம் செலுத்த டிசம்பர் 31, 2015 வரை அவகாசம் அளித்தது. ஆனாலும் இந்தச் சட்டமும் திட்டமும் ஆமை வேகத்தில் கூட நகரவில்லை. கருப்புப்பண மீட்பு நாடகமாடிய இந்தப் பச்சையான அயோக்கியப் பேர்வழிகள்தான், இப்போது பனாமா லீக்ஸ் வெளியானதும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவோம் என்று மீண்டும் சவடால் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

***

மெரிக்காவின் வாஷிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் புலனாய்வு இதழியலாளர்களின் சர்வதேசக் கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalists) என்ற அமைப்பானது, பனாமா நாட்டில் இயங்கிவரும் சட்ட மற்றும் தரகு வேலைக்கான மொசாக் பொன்சேகா என்ற ஒரு லெட்டர் பேட் நிறுவனம் 1977 முதல் 2015 டிசம்பர் வரை செய்துள்ள தரகு வேலைகள் பற்றிய தகவல்களை – கணினி மொழியில் 2.6 டெரா பைட்டுகள் அளவுக்கு 11.5 மில்லியன் தகவல்களை இரகசியமாகத் திரட்டி, ஜெர்மானிய ஊடகத்துக்கு அனுப்பி, பின்னர் உலகின் பார்வைக்குக் கசியவிட்டுள்ளது. இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடும் இந்த இதழியலாளர்கள் கூட்டியக்கத்தில் இணைந்துள்ளது. ஒரேயொரு மொசாக் பொன்சேகா என்ற லெட்டர்பேடு நிறுவனத்தில் மட்டும் இத்தனை திருடர்கள் ஒளிந்து கொண்டுள்ளனர் என்றால், இன்னும் இதுபோல உலகிலுள்ள 90-க்கும் மேற்பட்ட வரி ஏய்ப்புச் சொர்க்கங்களில் எத்தனை கோடி திருடர்கள் ஒளிந்திருப்பார்கள் என்று தெரியவில்லை.

panama-leaks-3மொசாக் பொன்சேகா நிறுவனத்திடமிருந்து தகவல்களைத் திரட்டியுள்ள இதழியலாளர்கள் கூட்டியக்கத்தை உருவாக்கி, அதன் பின்னணியில் இருப்பது அமெரிக்காவிலுள்ள “பொதுத்துறை நேர்மைக்கான நிலையம்” என்றழைக்கப்படும் தன்னார்வ நிறுவனமாகும். இந்த நிறுவனம், அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்துக்கு முழுமையாக ஒத்துழைக்க மறுத்து முரண்படும் ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், சிரிய அதிபர் அல் அசாத் ஆகியோரைக் குறிவைத்தே பனாமா லீக்ஸ் விவகாரத்தைக் கசியவிட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய உலகின் அரசியல் தலைவர்களையும் கருப்புப்பணப் பேர்வழிகளையும் திட்டமிட்டே மூடிமறைத்துள்ளது. இருப்பினும், இந்தியா போன்ற நாடுகளின் கருப்புப்பணப் பேர்வழிகளைப் பற்றிய ஒருசில தகவல்களும் இதனூடாகத்தான் கசிந்துள்ளன.

வரி ஏய்ப்பு சொர்க்கம் என்றழைக்கப்படும் பனாமா நாடு, வட மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கும் வால் போன்ற பகுதியிலுள்ள சின்னஞ்சிறிய நாடு. கருப்புப்பண முதலாளிகளுக்குச் சேவை செய்துவரும் பனாமாவிலுள்ள மொசாக் பொன்சேகா நிறுவனம், பனாமாவில் ஒரு பெயர்ப்பலகை நிறுவனத்தைத் தொடங்கிக் கொடுக்கும். இந்த நிறுவனத்தின் மூலம் கருப்புப்பணப் பேர்வழிகள் தமது பணப் பரிவர்த்தனைகளை, வர்த்தக நடவடிக்கைகளைத் திரைமறைவாகச் செய்து கொள்ள முடியும். பல்வேறு வளரும் நாடுகளின் அரசுத்துறை ஒப்பந்தங்களைக் கைப்பற்றுவதற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட போலி கம்பெனிகளின் வழியாகத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இலஞ்சப் பணத்தைக் கைமாற்றுகின்றன. இதுபோல ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகங்களை வைத்துக் கொண்டு பொன்சேகா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தைப் போலவே நூற்றுக்கும் மேற்பட்ட கருப்புப்பண சேவை நிறுவனங்கள் பனாமாவில் இயங்கி வருகின்றன.

இந்தக் கருப்புப்பணம் கண்ணிமைக்கும் நேரத்தில் உலகின் பல நாடுகளுக்கும் முதலீடுகளாக வெள்ளமெனப் பாய்கிறது. அது மட்டுமின்றி, ஏகாதிபத்தியங்களின் பதிலிப் போர்களுக்கும், நிறவெறி -இனவெறித் தாக்குதல்களுக்கும், பாசிச கும்பல்களுக்கும் போதை மருந்து கடத்தலுக்கும் ஆயுத விற்பனைக்கும் இந்தக் கருப்புப்பணம் பயன்படுத்தப்படுகின்றன. 2015-ஆம் ஆண்டின் கணக்குப்படி, உலகப் பெருமுதலாளிகளின் செல்வத்தில் மூன்றிலொரு பங்குத் தொகையானது – ஏறத்தாழ 7.6 லட்சம் கோடி டாலர் பெறுமதியான நிதிச் செல்வமானது இத்தகைய வரிஏய்ப்பு சொர்க்க நாடுகளில் குவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவில் கருப்புணம் திரைமறைவாக ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், தனியார்மயம் – தாராளமயம் என்னும் திறந்த பொருளாதாரம் திணிக்கப்பட்ட பிறகு வரிஏய்ப்பும் கருப்புப்பணமும் மெல்ல மெல்ல சட்ட பூர்வமானதாகி வருகின்றன. தாராளமய – உலகமயமாக்கலுக்குப் பிறகு உலக முதலாளித்துவத்தின் விதிகளுக்கு ஏற்பவும், நிதிநிறுவனங்களின் கட்டளைக்கு ஏற்பவும் இந்தியாவில் அந்நிய முதலீட்டுக்கு ஏற்ப பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அந்நியச் செலாவணி முறைப்படுத்தல் சட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பங்கேற்புப் பத்திரம் (Participatory Note) என்ற வழிமுறையின் மூலம் இந்தியாவில் பங்குச்சந்தை முறைப்படுத்தல் நிறுவனமான செபி (குஉஆஐ)யில் தங்களுடைய அடையாளத்தை வெளியிடாமலேயே, பங்குச் சந்தையில் அந்நிய நிதி நிறுவன முதலீடு என்ற பெயரில் உள்நாட்டு, வெளிநாட்டு பெருமுதலாளிகளான கருப்புப்பணப் பேர்வழிகள் முதலீடு செய்ய முடியும். பங்குச் சந்தையில் சூதாடி வருவாய் ஈட்ட முடியும்.

இத்தகைய வழிமுறைகளில் அந்நிய முதலீடு என்ற பெயரில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கருப்புப் பணம் இந்தியாவில் குவிகிறது. இந்த முதலீடானது சட்டபூர்வமானதாக ஏற்கப்படுவதால், கருப்புப் பணம் வெள்ளையாகிறது. இந்தியப் பங்குச் சந்தையை ஆக்கிரமித்திருக்கும் நிதி மூலதனத்தில் ஏறத்தாழ 50 சதவீதத்துக்கும் மேலானவை இத்தகைய வழிகளில் வந்தவைதாம்.

இந்தியப் பொருளாதாரமே இத்தகைய கருப்புப் பணத்தின் வழியாகத்தான் ‘வளர்ந்து’ கொண்டிருக்கிறது. பனாமா போன்ற நாடுகளிலுள்ள போலி நிறுவனங்கள் வழியாக உலகின் பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளுக்குள் நுழைந்து வெளியேறும் நிதிமூலதனத்தின் அளவைக் காட்டி, இதுதான் ‘வளர்ச்சியின் அறிகுறி’ என்று முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர். இத்தகைய கருப்புப் பண முதலீடுகளை வரவேற்கும் ஆட்சியாளர்கள் அதற்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். அதாவது, சட்டபூர்வ வணிக பரிவர்த்தனைக்குள்தான் கருப்புப் பணத்தின் பெரும்பகுதி ஒளிந்து கொண்டிருக்கிறது. எது முறைகேடானதாகக் கருதப்பட்டதோ, அதுவே இன்று சட்டபூர்வ கொள்கையாக மாறிவிட்டது.

இன்று உலகளாவிய அளவில் கருப்புப்பணம் வெள்ளையாக அங்கீகரிக்கப்பட்டு, கருப்புப்பணம்தான் உலகப் பொருளாதாரத்தையே இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரமே கருப்புப் பணத்தை அச்சாணியாகக் கொண்டு இயங்கி வருவதால், கருப்புப் பணத்தை மீட்பது என்பதே கேலிக்குரியதாகிவிட்டது. இந்தியாவின் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் மட்டுமல்ல; ரஜினி, கமல், ஷாருக்கான், அதானி, அம்பானி, டாடா, பிர்லா, டெண்டுல்கர், தோனி – என எல்லா வகையான பிரபலங்களையும் கீறிப் பார்த்தால், அவர்களுக்குள் கருப்புப் பணப் பேர்வழிகள் இருக்கும் உண்மை புலப்படும்.

இந்த லட்சணத்தில்தான் கார்ப்பரேட் முதலாளிகளின் ரூ. 10,000 கோடி கருப்புப் பணத்தால் பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள மோடி கும்பல், கருப்புப் பணத்துக்கு எதிராக சினிமா பாணி பஞ்ச் டயலாக்குகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரசை விஞ்சிய கடைந்தெடுத்த கயவாளிகள் கூட்டம்தான் மோடி கும்பல் என்பதை அதன் வெற்றுச் சவடால்களும் அந்தர் பல்டிகளும் நிரூபித்துக் காட்டவில்லையா?

– பாலன்
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________