privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்மாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி !

மாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி !

-

லாத்தூரின் “தண்ணீர் தூதுவன்” (ஜல்தூத்) குறித்த ஊடக பரபரப்பு அடங்கி விட்டது. மராத்வாடாவின் வறட்சியும், விவசாயிகள் தற்கொலைகளும் ஊடக விவாதங்களிலிருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன. ஓரு ஈசலின் ஆயுட் காலத்துக்குள் அடங்கிப் போன மகாராஷ்டிர மாநிலத்தின் வறட்சி குறித்த செய்திகளுக்குப் பின் கோடிக்கணக்கான தொண்டைக்குழிகள் தண்ணீருக்குத் தவித்துக் கிடக்கின்றன.

imagesகடந்தாண்டு பருவ மழை பொய்த்து விட்டதே மக்கள் தண்ணீருக்குக் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படக் காரணம் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள். காங்கிரசை பாரதிய ஜனதாவும், பாரதிய ஜனதாவைக் காங்கிரசும் மாற்றி மாற்றி விரல் நீட்டிக் கொள்கின்றன. சரியான நீர் மேலாண்மை செய்திருந்தால் பிரச்சினையைத் தவிர்த்திருக்கலாம் என்கின்றன என்.ஜி.ஓ மூளைகள். லாத்தூரின் தூர்ந்து போன மஞ்சீரா ஆற்றுப் படுகையை ஆழப்படுத்த மூன்று கோடி ரூபாய்களை வசூலித்து விட்டோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

நேச்சுரல் சுகர் மற்றும் அல்லைட் சுகர் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பெரும் சர்க்கரை ஆலைகளின் நிர்வாக இயக்குனராக இருக்கும் பி.பி. டோம்ப்ரே என்பவரை நிர்வாக டிரஸ்டியாக கொண்டிருக்கும் ஜல்யுக்த் லாத்தூர் டிரஸ்ட் என்கிற என்.ஜி.ஓ முன்னெடுத்திருக்கும் மஞ்சீரா ஆற்றுப்படுகையை அகழ்ந்தெடுக்கும் திட்டத்தில் கைகோர்த்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.

அவலச்சுவை நிறைந்த கருப்புத் திரைப்படம் போல் விவரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது மராத்வாடா மக்களின் வாழ்க்கை. கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 725 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயக் கடன்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அல்லாடுகின்றனர் மகாராஷ்டிர விவசாயிகள். ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஒவ்வொருவரும்

உண்மையான குற்றவாளிகள் யார்?

முதலில் சில புள்ளிவிவரங்களை பார்த்து விடுவோம் –

2015ம் ஆண்டு ஜூன் துவங்கி செப்டெம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் மகாராஷ்டிராவில் பெய்த மழையின் அளவு (இந்திய வானியல் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்)

பொழிவு, மில்லிமீட்டரில் (2015) கொங்கன் –கோவா விதர்பா மத்திய மகா மராத்வாடா
ஜூன் முந்தைய சராசரி 663 161 140 138
இந்தாண்டு 781 254 177 119
ஜூலை முந்தைய சராசரி 1147 318.9 247.8 192.5
இந்தாண்டு 581.5 137.8 111.7 26.8
ஆகஸ்ட் முந்தைய சராசரி 759.6 305.7 289.1 188.2
இந்தாண்டு 388.7 288.9 56 112.2
செப் முந்தைய சராசரி 344.7 169 152.4 164.2
இந்தாண்டு 253.8 167.5 143.4 154
பருவகாலம் முந்தைய சராசரி 2914.3 954.6 729.3 682.9
இந்தாண்டு 2005 848.2 488.1 412.4

புள்ளிவிவரங்களின் படியே சராசரியை விட இந்தாண்டு குறைவான அளவே மழை பெய்துள்ளது. எனினும் அதே ஆண்டில் மகாராஷ்டிரத்தை விட குறைந்த அளவில் (400மிமி) மழை பொழிவைப் பெற்ற ராஜஸ்தான் மாநிலம் தண்ணீருக்காக கையேந்தி நிலையை அடையவில்லை. கடந்தாண்டு தேசிய அளவில் வேறு பல மாநிலங்களிலும் பருவ மழை பொய்த்துள்ளதுள்ளது.

waterசரி, மகாராஷ்டிராவின் நீர் மேலாண்மை எப்படி இருக்கிறது?

மகாராஷ்டிர மாநிலத்தில் தான் நாட்டிலேயே மிக அதிகளவில் பெரும் நீர்த்தேக்க அணைகள் கட்டப்பட்டுள்ளன. 60 மில்லியன் க்யூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட அல்லது பதினைந்து மீட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய அணைகளின் எண்ணிக்கை மட்டும் 1,845 ஆகும். இது தவிர பல்லாயிரக்கணக்கான சிறிய தடுப்பணைகளும் உள்ளன. 2013ம் ஆண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் செலவில் சுமார் 1,420 தடுப்பணைகள் கட்டப்பட்டன. 2014ம் ஆண்டில் சுமார் 8000 சிறிய தடுப்பணைகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அதில் பெருமளவு கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2001 – 2011 காலகட்டத்தில் மட்டும் சுமார் 70,000 கோடி ரூபாய்கள் நீர்மேலாண்மைத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கமுடியவில்லை என்பதோடு பாசன நிலத்தின் பரப்பளவு வெறும் 0.1 சதவீதமே அதிகரித்துள்ளது.

எங்கே போனது தண்ணீர்? எங்கே பாய்ந்தது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள்? மக்களின் தண்ணீரைக் கொள்ளையடித்தவர்கள் யார்?

இதைப் புரிந்து கொள்ள மகாராஷ்டிராவின் மிக முக்கியமான விவசாய உற்பத்திப் பொருட்களான கரும்பின் சாகுபடி முறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மகாராஷ்டிராவில் மொத்தாம் நான்கு வகையான கரும்பு சாகுபடி முறைகள் உள்ளன. அத்சாலி, முன் பருவ முறை, ரத்தூன் மற்றும் சுரூ என்று அழைக்கப்படும் முறைகளில் தண்ணீர் தேவை எப்படி உள்ளது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனை விளக்குகிறது.

Method % share Production(lakh T) Yield(t/ha) No.of std irrigations(7.5 cms) Water requirement’000 m3/ha % recovery rate Yield adjusted for recovery rate t/ha Crop duration, months Yield t/month adjusted for recovery rate
Adsali 10 122.64 120 32.5 24.38 12.30 161.14 17.00 9.48
Pre-seasonal 30 275.94 90 27.5 2063 12.00 117.9 14.50 8.13
Suru 20 143.08 70 22.5 16.88 11.45 87.50 12.00 7.29
Ratoon 40 276.94 65 22.5 16.88 10.50 74.51 11.00 6.77
Total/ weighted average 100 818.60 80.01 25 18.75 11.32 98.79 12.85 7.56

மத்திய விவசாய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விவரங்களின் படி, சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 18750 கன மீட்டர் தண்ணீர் செலவாகிறது. இதில் கரும்பு பயிர்கள் குடித்துத் தீர்த்தது போக சராசரியாக 11.32 சதவீத தண்ணீர் மட்டுமே மறுசுழற்சியாகிறது. மீதமுள்ள சுமார் 88 சதவீத நீரை கரும்புப் பயிர்கள் கபளீகரம் செய்கின்றன. மகாராஷ்டிராவின் மொத்தமுள்ள சாகுபடிப் பரப்பில் வெறும் 4 சதவீத நிலத்தில் பயிரிடப்படும் கரும்புப் பயிர்கள் மொத்த பாசன நீரில் 71.5 சதவீதத்தை அபகரித்துக் கொள்கின்றன.

sugarcaneசர்க்கரை உற்பத்தியைப் பொறுத்தளவில் மகாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், உத்திரப்பிரதேசம் முதலாம் இடத்திலும் உள்ளன. உத்திரப்பிரதேசம், தனது பாசனத் தேவைகளுக்காக வற்றாத ஜீவ நதிகளை எதிர்பார்த்தும் மகாராஷ்டிரம் பருவ மழையை எதிர்பார்த்தும் உள்ளன. உத்திரபிரதேசத்தில் பின்பற்றப்படும் கரும்பு சாகுபடி முறைகளின் படி ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1,044 லிட்டர் தண்ணீர் செலவாகும் அதே நேரம், மாராஷ்டிராவிலோ ஒரு கிலோ சர்க்கரை உற்பத்திக்கு 2,068 லிட்டர் தண்ணீர் செலவாகிறது . அணைகள், ஆறுகள் மற்றும் மக்களுக்கான தெற்காசிய வலைப்பின்னல் (South Asia Network on Dams, Rivers and People (SANDRP) என்கிற தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நீரியல் ஆய்வாளர் பர்நீதா தண்டேகர் செய்துள்ள இந்தக் கணக்கீட்டில் ஆலைகளில் கரும்பிலிருந்து சர்க்கரையை உற்பத்தி செய்ய செலவாகும் தண்ணீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, மகாராஷ்டிராவின் பெரும்பான்மையான கரும்பு சாகுபடியானது தற்போது வறட்சியின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் மராத்வாடா பிராந்தியத்திலேயே நடக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 205 கூட்டுறவு ஆலைகளும் 80 தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் சர்க்கரை முதலைகளே. 2012 – 2013 நிதியாண்டில் மராத்வாடாவில் மட்டும் சுமார் 20 தனியார் சர்க்கரை ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் என்று சொல்லப்படுவதிலும், அரசியல் செல்வாக்குள்ள தனியார் முதலைகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.

1960 ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மாறி மாறி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஓட்டுக்கட்சிகள், தமது விவசாயக் கொள்கைகளையும், நீர் மேலாண்மைத் திட்டங்களையும், சர்க்கரை முதலைகளின் நலன்களுக்கு உட்பட்டே வகுத்து வந்துள்ளனர். மாநில விவசாயத் துறையே திட்டமிட்டு சர்க்கரை சாகுபடியை முன் தள்ளுகின்றது. பாசனக் கால்வாய்களில் நீர் திறந்து விடுவதும் கூட இந்த அடிப்படையிலேயே நடகின்றது.

ஜல்யுக்த் லாத்தூர் டிரஸ்ட்
ஜல்யுக்த் லாத்தூர் டிரஸ்ட்

சர்க்கரை சாகுபடியானது மறுசுழற்சியாகும் நீரின் அளவை பெருமளவு குறைத்து விடுவதால், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு விழுந்துள்ளது. லாத்தூர் பகுதியில் சாதாரணமாக நிலத்தடி நீரின் மட்டம் 900 அடிகளுக்கு வீழ்ந்துள்ளது. பெய்யும் மழை நீரை மொத்தமாக குடித்துத் தீர்க்கும் கரும்புப் பயிர்கள் அதுவும் போதாமல் மேலும் மேலும் நீரைக் கோருவதால் விவசாயிகள் ஆழ்துளாய்க் கிணறுகளை நாடுகின்றனர். நீர்பாசன நிபுணர் புரந்தரே என்பவரின் கணக்கீட்டின் படி மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த விவசாய சாகுபடி நிலங்களில் 71 சதவீதம் ஆழ்துளாய்க் கிணறுகளின் மூலமாகவே நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது.

மகாராஷ்டிராவின் மொத்த நீர் பயன்பாட்டில் 75 சதவீதம் விவசாயத்திற்கும், 15 சதவீதம் தொழிற்சாலைகளுக்கும், 10 சதவீதம் மக்களின் பயன்பாட்டுக்கும் செலவாகிறது என்கிறது அம்மாநில அரசு. விவசாயத்திற்கான 75 ஒதுக்கீட்டில் பருவ மழை மற்றும் ஆழ்துளாய்க் கிணறுகளை ஆதாரமாக கொண்ட நீரைப் பெரும்பகுதி கரும்புப் பயிர்களே குடித்துத் தீர்க்கின்றன. அகோரப் பசியோடு உறிஞ்சுவதால் ஆழ்துளாய்க் கிணறுகள் வெகு சீக்கிரம் வற்றித் தூர்ந்து விடுகின்றன. மீண்டும் வேறு இடத்தில் ஆழ்துளாய்க் கிணறு அமைக்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக செலவாகிறது. அப்படிச் செலவு செய்து துளையிட்டாலும் நீர் இருக்குமா என்பது சந்தேகமே.

கடன்வாங்கி ஆழ்துளாய்க் கிணறுகள் அமைக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது போனால் கடனைத் திருப்பிச் செலுத்த வேறு வழிகளும் இருப்பதில்லை. கந்து வட்டி குண்டர்களும், வங்கிகளின் வசூல் ராஜாக்களும் அளிக்கும் சித்திரவதைகளுக்கு அஞ்சி தற்கொலையை நாடுகின்றனர். இன்னொரு புறம், அரசின் விவசாய திட்டங்கள், விவசாயத் தொழில், பாசனத் திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மை கொள்கைகள் அனைத்தும் சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு சார்பாகவே இருக்கின்றன. சர்க்கரையின் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவது, சர்க்கரைக்கான ஏற்றுமதி வரியைக் குறைப்பது என்று தொடர்ந்து முதலாளிகளுக்கே சேவையாற்றுகிறது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள்.

drought1இந்திய சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் (ISMA) கணக்கீட்டின் படி இந்தியாவில் 2015-16 காலகட்டத்தில் 53.58 லட்சம் ஹெக்டேர்களில் கரும்பு பயிரடப்பட்டு அதிலிருந்து 280 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் உள்நாட்டுத் தேவையான 250 லட்சம் டன்களைக் கழித்து விட்டால், சுமார் முப்பது டன்கள் சர்க்கரை மிகையாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி நிலவரப்படி கையிருப்பில் சுமார் 102 லட்சம் டன் சர்க்கரை தேங்கிக் கிடக்கிறது. ஆக மொத்தம் 132 லட்சம் டன் சர்க்கரை நமது தேவைக்கும் அதிகமாக கையிருப்பில் உள்ளது. 2015-16 நிதியாண்டில் மட்டும் சர்க்கரை ஏற்றுமதிக்கான அளவை 40 லட்சம் டன்களாக உயர்த்தியிருக்கும் மத்திய அரசு, அதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 195 சர்க்கரை ஆலைகளுக்கான அதிகபட்ச அளவை 13 லட்சம் டன்களாக நிர்ணயித்துள்ளது.

சர்வதேச சந்தையில் இந்திய சர்க்கரைக்கான விலை ஒரு டன்னுக்கு 415 டாலர்களாகும். ஆக, 13 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியின் மூலம் மட்டுமே சுமார் 3500 கோடி லாபத்தைக் குவிக்கவுள்ளனர் மகாராஷ்டிர சர்க்கரை ஆலை முதலைகள். ஏற்கனவே கையிருப்பில் உள்ள சர்க்கரையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், இந்தாண்டு மட்டுமே சுமார் 97 லட்சம் டன் சர்க்கரையை மகாராஷ்டிரா உற்பத்தி செய்யவுள்ளது. உள்நாட்டுச் சந்தையிலும் சர்க்கரையின் விலை கூடியுள்ள நிலையில் உள்நாட்டிலிருந்து குவிக்கவுள்ள லாபத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இப்படி ஒரு புறம் கொழுத்த லாபத்தைக் குவிக்கும் முதலாளிகள் மறுபுறம் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். உள்நாட்டு சர்க்கரை நுகர்வை கணக்கிலெடுக்கவில்லை என்றாலும், 13 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியின் மூலம் மகாராஷ்டிராவிலிருந்து மட்டும் சுமார் 269 கோடி லிட்டர் நீர் மறைமுகமாக ஏற்றுமதியாகிறது. நீர் வளத்தைக் கபளீகரம் செய்வதோடு நமது விவசாயிகளின் உழைப்பையும் சுரண்டி அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளும் இந்தத் தரகு முதலாளிகளும் அவர்களுக்கு சேவையாற்றும் ஆளும் வர்க்கமுமே வரட்சிக்கும், விவசாயிகள் தற்கொலைக்கும் பிரதானமான காரணம்.

ஆளும் வர்க்க கைக்கூலிகளான என்.ஜி.ஓக்களோ, பழியை இயற்கையின் மீது போடுகின்றன. ஆர்.எஸ்.எஸ் கும்பலோ நேரடியாக சர்க்கரை ஆலை முதலைகளோடு கைகோர்த்துக் கொண்டு ஆற்றைத் தூர்வாறுவது, பசுமாட்டிற்கு தண்ணீர் காட்டுவது என்று பித்தலாட்டமான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. இந்த துரோகிகள் தண்டிக்கப்படாத வரை வறட்சியிலிருந்து மக்களுக்கும் நாட்டிற்கும் விடுதலையில்லை.

– தமிழரசன்.