privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்குல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு - காவிகள் கொண்டாட்டம்

குல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு – காவிகள் கொண்டாட்டம்

-

படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட முஸ்லீம் குழந்தைகள்
படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட முஸ்லீம் குழந்தைகள்

குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கின் தீர்ப்பினை அறிவித்துள்ளது அகமதாபாத் சிறப்பு செசன்ஸ் நீதிமன்றம். இதில் பி.ஜே.பி உள்ளூர் தலைவன் பிபின் படேல் உள்ளிட்ட 36 பேரை விடுவித்துள்ள நீதிமன்றம் 24 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. இப்படுகொலை திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்றும் கூறியிருக்கிறது.

2002 குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் – வி.எச்.பி-பா.ஜ.க தலைமையில் இந்துமத வெறியர்கள் நிகழ்த்திய  இஸ்லாமிய படுகொலையில்  குல்பர்க் சொசைட்டி எனப்படும் இஸ்லாமிய குடியிருப்பில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் முக்கியமானதாகும். முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான இசான் ஜாஃப்ரி, அவரது குடும்பத்தினர் கண் முன்னாலேயே வெட்டப்பட்டு எரிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரோடு சேர்த்து 69 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். உள்புறம் பூட்டிக்கொண்டு பதுங்கியிருந்தவர்களின் வீடுகளுக்குள் பெட்ரோல் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டனர்.

குஜராத்தின் தலைநகர் அகமதாபாத்தின் மையப்பகுதியில் நடந்த இப்படுகொலைகளை தடுக்க போலீஸ் படை அனுப்பப்படவில்லை. இத்தனைக்கும் முன்னால் எம்.பி-யான இசான் ஜாஃப்ரி அப்போதைய முதலமைச்சரான மோடி, மற்றும் அரசுத்துறையின் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தபோதும் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த காவல் நிலையத்திலிருந்து எவரும் பாதுகாப்புக்கு வரவில்லை. இந்த படுகொலைகளைத்தான் திட்டமிட்ட ஒன்றல்ல என்று குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது நீதிமன்றம். இதன் மூலம் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் மேல் முறையீட்டில் குறைந்தபட்ச தண்டனை அல்லது விடுதலை கிடைக்கும் வகையில் இத்தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது.

பட்
சஞ்சீவ் பட்

குஜராத் அரசின் ஒத்துழைப்போடு நடந்த படுகொலை என்பதாலும், குஜராத் அதிகார  மட்டங்களிலும் காவல்துறையிலும் நிரம்பி வழியும் காவிகளின் செல்வாக்கினாலும் இவ்வழக்குகள் ஆரம்பம் முதலே முடக்கப்பட்டிருந்தது. இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள் என தங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் சாட்சியம் கூறினார். தனது கணவர் பல முறை மோடியை தொடர்பு கொன்ட பிறகும் கூட யாரும் உதவிக்கு வரவில்லை அனைத்தும் மோடிக்கு தெரிந்துதான் நடந்திருக்கிறது என்று ஆதாரபூர்வமாக ஜாகியா ஜாஃப்ரி குற்றம் சாட்டினார்.

உச்ச நீதிமன்றம் நீதிமன்ற நண்பனாக நியமித்த ராஜு ராமச்சந்திரன்  சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை சரியில்லை என்றும் மோடி குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரம் இருக்கிறது எனவும் குற்றம் சாட்டியிருந்தார். ஆயினும் இவர்களது வாதத்தை மறுத்து மோடியை நிரபராதி என்று தீர்ப்பு கூறியது நீதிமன்றம்.  அகமதாபாத் நகரிலுள்ள நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் பகுதிகளில் நடந்த படுகொலைகளுக்கு எம்.கே.டாண்டன், பி.பி. கோந்தியா என்ற இரு போலீசு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, அக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினாலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் வழக்குத் தொடரப் பரிந்துரைக்காமல், துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் எனக் கூறிவிட்டது.

குற்றத்தின் சூத்திரதாரிகளையே நிரபராதியாக்கி நாட்டின் பிரதமராக்கும் போது இவ்வழக்குகளில் நீதி கிடைக்கும் என்று யாரும் நம்ப முடியாது. ஆயினும் கொல்லப்பட்ட இசான் ஜாஃப்ரியின் மனைவியும், தீஸ்தா சேதல்வாத் போன்றவர்களும் விடாப்பிடியாக போராடி கொண்டிருக்கிறார்கள்.

தீஸ்தா சேதல்வாத் மற்றும் ஜாஃப்ரி
ஜாகியா ஜாஃப்ரி மற்றும் தீஸ்தா சேதல்வாத்

இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாகியா ஜாஃப்ரி தன் மனம் உடைந்துவிட்டதாக கூறியிருக்கிறார். இத்தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர், அக்கம் பக்கத்தினரால் ஈவு இரக்கமில்லாமல் தனது கணவர் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்திருக்கிறார். வெறும் 24 பேர் தண்டிக்கப்பட்டுள்ள இக்குற்றத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில் காவி பயங்கரவாதிகள் பங்கு பெற்றதை பதிவு செய்துள்ளார். தன் கடைசி மூச்சு உள்ளவரை போராடப்போவதாகவும் அறிவித்துள்ளார். இவரது மகன் தன்வீர் “இது திட்டமிடப்பட்ட  படுகொலை இல்லை என்றால் அகமதாபாத்திலிருக்கும் இக்குடியிருப்புக்கு  போலீஸ் வந்து சேரவே ஏன் 10 மணிநேரம் தேவைப்பட்டது ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடிக்கு எதிரான போராட்டங்கள்
மோடிக்கு எதிரான போராட்டங்கள்

தீஸ்தா சேதல்வாத்தை முடக்க சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது மோடி அரசு. இத்தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் மற்றொரு செய்தியும் வெளியாகி இருக்கிறது. சஞ்சீவ் பட் மற்றும் தீஸ்தா சேதல்வாத் வழக்குகளில் ஆஜராகி வாதாடி வரும் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கின் தன்னார்வ நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது மத்திய அரசு.

ஆந்திர சுண்டூரில்  தலித்களை படுகொலை செய்த வழக்கு, பீகார் பதனிடோலா வழக்கு, கீழ்வெண்மணி வழக்கு, கயர்லாஞ்சி வழக்கு என ஆயிரக்கணக்கான வழக்குகளில் நீதிமன்றங்களின் யோக்கியதை என்ன என்பதை பார்த்துவிட்டோம். இந்த நீதிமன்றங்கள் பார்ப்பன பனியா கார்ப்பரேட் கும்பலுக்கானது. அதில் நீதி கிடைக்கபோவதில்லை.

இப்படியான படுகொலைகளும், அநீதியான தீர்ப்புகளும் இஸ்லாமிய இளைஞர்களை தனிநபர் பங்கரவாதத்தை நோக்கி தள்ளுகின்றன. அதை காரணம் காட்டியும் பூச்சாண்டி காட்டியும் இஸ்லாமிய சமூகம் மேலும் தனிமைக்குள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், தலித்துகள், பழங்குடியினர் , தொழிலாளர்கள் என நாட்டின் பல தரப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினரும் நீதிமன்றத்தாலும், பார்ப்பன கொடுங்கோன்மையினாலும் அரசு அதிகாரத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களோடு கைகோர்த்து  பிற ஒடுக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து அநீதியான இந்த நீதிமன்றங்களை அம்பலப்படுத்தும் போது குற்றவாளிகள் தண்டிப்பது எப்படி என்ற கேள்வி வரும்.

– ரவி