privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !

மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !

-

மந்தைகள்!

புரட்சிகர அமைப்புகளில் நம்பிக்கை வைத்து இயங்கும் அணிகளுக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பட்டம் இது. ஒழுங்கு, கட்டுப்பாடு போன்ற பொருளற்ற கட்டுப்பெட்டித் தனங்களில் கட்டுண்டு கிடக்கும் உறுப்பினர்களுக்கு அவர்கள் கொடுத்த செல்லப் பெயர் இது. அவர்கள் மெத்தப்படித்தவர்கள் அந்தியமாதலைப் பற்றிக் கேளுங்கள் – அவர்கள் ஆர்வத்துடன் விளக்குவார்கள் ஸ்டாலினின் ரஷியாவைப் பற்றிக் கேளுங்கள் – நெருப்பைக் கக்குவார்கள்.

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட நக்சல்பாரி எழுச்சியில் பங்கேற்ற இளைஞர்கள்
மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த நக்சல்பாரி எழுச்சியில் பங்கேற்ற இளைஞர்கள்

ரோசா லக்சம்பர்க், அல்துசர், சார்த்ரே போன்ற பெயர்களைக் கேட்டு ’மந்தைகள்’ விழிக்கும்போது அவர்கள் ரகசியமாக குதுகலிப்பார்கள்.

அவர்கள் பாரம்பரியமிக்கவர்கள். பாட்டாளி வர்க்கக் கட்சியில் உண்மையிலேயே பாட்டாளிகள் இருக்க வேண்டும் என்று லெனின் சொன்னபோது கட்சியை மந்தையாக்க முயல்கிறீர்களா என்று ஆவேசப்பட்டவர்கள் அவர்கள்தான். கிரெம்ளின் அரண்மனையை புரட்சிச் சிப்பாய்கள் தாக்கியபோது பாரம்பரியச் செல்வங்கள் அழிக்கப்படுவது கண்டு துடித்துப் போனவர்கள் அவர்கள் தான். சீனத்துக் கலாச்சாரப் புரட்சியை முழுமூச்சாக எதிர்த்து நின்றவர்களும் அவர்கள் தான்.

அவர்கள் எச்சரிக்கை மிக்கவர்கள்; ஆழ்ந்து படித்து, சிந்தித்து, விவாதித்து மீண்டும் படித்து, விவாதித்து, சிந்தித்து….. முடிவுக்கு வர முயல்பவர்கள்.

அடிமைச் சமுதாயத்தின் அரசியல் முதல் கம்யூனிச சமுதாயத்தின் கலாச்சாரம் வரை அனைத்தையும் ஆய்ந்து தெளியாமல் அவர்கள் அடியெடுத்தும் வைக்க மாட்டார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம்.

தங்களைப் போன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க மறுக்கும் மந்தைகளுக்காக சிலர் அனுதாபப்படுவார்கள்.

தங்களை குறை கூற முற்படும் மந்தைகளைக் கண்டாலோ அவர்கள் ஆத்திரத்தால் முகம் சிவப்பார்கள்.

அவர்கள் கரையிலிருந்தே நீந்தக் கற்றுத்தருபவர்கள். அலை ஒயும் என்று காத்திருப்பவர்கள்.

அவர்கள் தான் அறிவு ஜீவிகள். நடுத்தர வர்க்க அறிவு ஜீவிகள்: நடுத்தர வர்க்கமாகவே நீடிக்க விரும்பும் அறிவு ஜீவிகள்.

நக்சல்பாரி இயக்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு, கட்சியில் சேர்ந்து, பின் அரசு அடக்குமுறையைக் கண்டு அஞ்சி விலகிப்போன ஒரு அறிவுஜீவியின் நேர்மையான சுயபரிசீலனை இது.

அறிவு ஜீவிகளுக்கும் அவர்தம் ஆராதகர்களுக்கும்…… மற்றும் ’மந்தைகளுக்கும்’ இதைச் சமர்ப்பிக்கிறோம்.

– ஆசிரியர் குழு, புதிய கலாச்சாரம்.

***

ருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னே வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்டுக் கிளர்ந்தெழுந்தவர்களே! இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? ஒரு தீவு போல நான் விலகிவிட்டேன். என்னுடைய வாழ்க்கையின் குன்றிப்போன சோகத்திற்குள்ளே ஒடுங்கிப் போய்விட்டேன். என்னுடைய வாழ்க்கையில் போர்க்குணம் பொங்கும் வெற்றி நடை முடிந்துவிட்டது. கம்பீரமான செங்கொடியும், அறைகூவும் சர்வ தேசிய கீதமும் இன்று எனது வாழ்க்கையில் உணர்ச்சியற்ற சடங்குகளாய் மாறிவிட்டன.

CPI ன் மாணவர் பிரிவு 1962ல்  பங்கேற்ற டிராம்ப் எரிப்பு போராட்டம்.
1962 கொல்கத்தா: ட்ராம்ப் கட்டணம் உயர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 220 மாணவர்கள் காயமுற்றனர்.

நான் அவநம்பிக்கையின் உருவம் என்னுள்ளே கொப்புளித்த போர்க்குணம் இன்று அடங்கிவிட்டது. இருந்தும் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை நாடகத்தின் இறுதிக்காட்சிக்காகக் காத்திருக்கிறேன்.

கொந்தளிப்பு மிகுந்த 60ம் ஆண்டுகளில் நான் ஒரு கல்லூரி மாணவன். “புரட்சி தவிர்க்கவே இயலாதது” என்ற கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையின் ஆணித்தரமான வாசகம் என் மனதில் அழுத்தம் திருத்தமாகப் பதிந்துவிட்டது. மாவோவின் மூன்று புகழ்பெற்ற கட்டுரைகளை அன்று படிக்க நேர்ந்த போது நான் அடைந்த மகிழ்ச்சி. கடந்த காலத்தின் மங்கிய நினைவுகள் பளிச்சிடுகின்றன. சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. தோண்டி எடுக்கப்பட்ட குழிப் பிணத்தைப் போல காட்சிப் படிமங்கள் உருத்தெரியாமல் போய்விட்டன. காலத்தால் அரித்துத் தின்னப்பட்டுவிட்டன. கனவுகளில் தோன்றும் நிஜங்கள் கூட தம் நிறத்தை மாற்றிக் கொள்கின்றனவே! அன்று நான் எப்படி இருந்தேன்? என்னுடைய முகமே எனக்கு மறந்துவிட்டது. அனலில் பட்ட மெழுகாக அது கரைந்துவிட்டது. ஆனால் மிருத்தியுஞ்சயனின் முகம் மட்டும் என் நினைவிலிருந்து அழியாமல் என்னை அலைக்கழிக்கிறது.

அந்த நாட்களின் நினைவை முழுமையாக உங்களுக்குச் சொல்லிவிட முடியுமா? எனக்கென்னவோ சந்தேகமாகத்தான் இருக்கிறது. நான் கல்லூரியில் முதலாண்டு பொருளாதாரம் படித்துக் கொண்டிருந்தேன். மிருத்தியுஞ்சயன் அப்போதுதான் எனக்கு அறிமுகமானான். ஒரு சிலரைத் தவிர நாங்கள் அனைவருமே நகர்ப்புற இளைஞர்கள். மிருத்தியுஞ்சயன் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். இருபத்திநான்கு பர்கானா (தெற்கு) மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்தது அவன் குடும்பம். அவனது நடவடிக்கைகளில் ஒரு விவசாயிக்கே உரிய முரட்டுத்தனம் இருக்கும். நினைவுகூறத்தக்க மேற்கோள்களை உதிர்த்த வண்ணம் இருப்பதற்கோ, மழுப்பலாகப் பேகவதற்கோ அவனிடம் இருந்த முரட்டுத்தனம் அவனை அனுமதிக்கவில்லை. அவன் உரத்து சிந்தித்தான்; லட்சியத்தின் மீது இருந்த வெறியில் வாழ்ந்தான்.

நக்சல் பாரி கிராமம்
மேற்கு வங்கத்தில் இருக்கும் நக்சல்பாரி கிராமம்

முன்னேறிச் செல்லும் இடதுசாரி இயக்கம் தோற்றுவித்த உற்சாகம் ததும்பும் நாட்களில் நாங்கள் வளர்ந்தோம். கிளர்ந்தெழுந்த அந்த அறுபதுகளில் எங்கள் தலைமுறை தோழர் மாவோவின் நிழலில் வளர்த்தெடுக்கப்பட்டது. அனல்பறக்கும் விவாதங்களிலிருந்தும், அரசியலிலிருந்தும் யாரும் – யாருமே – ஒதுங்கமுடியாது. எங்களுடைய அரசியல் கருத்துக்கள் துரித கதியில் உருமாறிக் கொண்டிருந்தன. காண்போர் கையில் எல்லாம் சிவப்புப் புத்தகங்கள். காற்றிலோ ரெஜிஸ் டெப்ரேயின் சாகசம்; ருடி டட்கேயின் இளமை ததும்பும் மூர்க்கத்தனம் எங்களை அள்ளிக்கொண்டு சென்றது. அவை தியாகம் ததும்பும் நாட்கள்; விசுவாசமிக்க நாட்கள்; நெஞ்சைக் கொள்ளை கொண்ட நாட்கள்.

கோட்பாட்டுத் துறையிலும் கலாச்சாரத் துறையிலும் இதுவரை வந்துள்ள அனைத்தும் துண்டுதுண்டாகவும், தாறுமாறாகவும், தனிநபர் மனோபாவத்துக்கேற்பவும் விவாதிக்கப்பட்டன. ஆனால் இந்திய அரசைப் பற்றியும், இந்திய சமூகத்தைப் பற்றியும் புதிய கேள்விகளை எழுப்புவதற்கு அவை அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. பற்றுறுதி வாய்ந்த இளைஞர்களை பல்வேறு புரட்சிக் குழுக்களுக்கு அனுப்பி வைக்கும் மூலாதாரமாக அவை இருந்தன. ஆய்வுத்திறன் மிக்கவை, கூர்மையானவை, விமரிசனப் பூர்வமானவை, சுடர்விடுபவை, ஆரவாரமானவை, துடிப்புமிக்கவை, முரட்டுத்தனமானவை, துணிச்சல் மிக்கவை – என எத்தனை வகை சிந்தனைகள் அன்றைய இயக்கத்தில்!

எழுந்தது நக்சல்பாரி! இசை நிகழ்ச்சி ஒன்றினிடையே கிளம்பிய காதைக் கிழிக்கும் வேட்டுச் சத்தமாக, இனிமையான வாழ்க்கையில் மிதந்து கொண்டிருந்தவர்களுக்கு அபகரமாக முகம் திருப்பிக் கொண்டவர்களின் முகவாயைப் பிடித்துத் திருப்பி என்னைப் பார் என்று நிர்ப்பந்தித்த நக்சல்பாரி வந்தது. இன்றோ, நாளையோ நாங்கள் போர்க்களம் புகுந்தாக வேண்டும் என்று அது அறைகூவியது. புரட்சிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்த இளைஞர்களோ இந்தக்கணமே விவசாயப் புரட்சி என்ற கனவுக்காக வாதாடினர்; நாளை அல்ல, இன்று-இந்தக் கணமே களம் புகுந்தாகவேண்டும். எங்களிடம் கவர்ச்சிமயக்கம் இருந்தது ஆனால் மிருத்தியுஞ்சயனிடம் வர்க்கம் இருந்தது.

கடினமான நாட்கள் வந்தன. அச்சம் தனக்கேயுரிய முறையில் தன் செல்வாக்கைக் காட்டியது. எங்கும் நிறைந்திருந்த வெள்ளைப் பயங்கரமும், சிவப்புப் பயங்கரமும் தோற்றுவித்த வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க நாங்கள் பின்வாங்கினோம். வெறிகொண்ட மிருகமாக வெள்ளைப்பயங்கரம் பாய்ந்தது; நரகங்கள் எங்களுக்காகத் தயார்நிலையில் வாய்பிளந்து நின்றன. நக்சல்பாரி எனும் சொல்லை, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஆயுதமாக மாற்றின அரசும், போலீசும்.

நக்சல்பரி கிராமத்தில் அமைந்துள்ள தோழர்களின் சிலைகள்
நக்சல்பரி கிராமத்தில் அமைந்துள்ள தியாகிகளின் நினைவுச் சின்னம்

’தலைமறைவு வாழ்க்கை’ – பேசும்போது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் அதற்கான தருணம் வந்து கதவைத் தட்டியபோதோ நாங்கள் தலைமறைவாக முயலவில்லை. வெளிப்படையாகத் தான் இருந்தோம். வெளிப்படையான ஊமைகளாக, வெறும் பார்வையாளர்களாக. எங்களது மவுனம் எங்களது செவிப்பறைகளையே கிழித்தது.

அன்றைய எங்களது மவுனம் அனைத்தையும் சீர்குலைத்தது. சாவது உறுதி என்று தெரிந்தால் கூட வீரத்தின் சாயல்கூட இல்லாத கடைந்தெடுத்த கோழைகளாக சிலர் இருந்தோம். உறுதியின்மை, போலிப்பகட்டு, தற்புகழ்ச்சி. ஊசலாட்டம்- இவைதான் எங்கள் குணாதிசயங்கள்.

ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதென்னவோ அற்புதமான விஷயம்தான். ஆனால் அது பல தலைவலிகளைத் தோற்றுவிக்கிறது. இந்தத் தலைவலிகளை மாத்திரைகளால் குணப்படுத்த இயலாது. மாறாக, சிலநேரங்களில் தலையையே இழக்க வேண்டியிருக்கும். நாங்களோ மனவுறுதி குலைந்த நடுத்தர வர்க்கத்தின் வாரிசுகள் – அறிவுபூர்வமாக மட்டும் மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்களால் இந்த நெருக்கடியை எப்படிச் சமாளிக்க முடியும்?

நாங்களோ தெளிவும், உறுதியுமற்ற ஊசலாட்டப் பேர்வழிகளை – ஹாம்லெட்டுகளை – வழிபடுபவர்கள் அல்லது அவர்களுக்காக அனுதாபப்படுபவர்கள். ஆனால் மிருத்தியுஞ்சயன் மேட்டுக்குடிக் குலக்கொழுந்தல்லவே! அவன் ஒரு முட்டாள். அதனால் தான் அவன் இறந்துவிட்டான்.

லெனின், மாவோ, ஹோ-சி-மின் ஆகியோர் தாங்கள் விரும்பிய உலகைக் காண முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வெற்றி பெற்றது தான்.

என் நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா என்ற சந்தேகத்துடன் நான் சொல்லத் தொடங்கினேன். இப்போது நான் உங்களுக்குச் சொல்லியே தீரவேண்டும். மிருத்தியுஞ்சயன் ஒரு புரட்சியாளன் வீரம் செறிந்த இளைஞன் அனைத்திற்கும் மேலாக அவன் ஒரு கம்யூனிஸ்டு தியாகி.

கதை இத்துடன் முடிந்துவிட்டது. ஆனால் நான் முடிக்கவிரும்பவில்லை. ஒரு படி மேலே எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

செருக்கு பிடித்து உப்பிப்போன எங்களது அகம்பாவத்தில் தைத்துவிட்ட முள்ளாக உறுத்துகிறான் மிருத்தியுஞ்சயன். ஆம் என் சிந்தனையில் ஓயாமல் வட்டமிட்டு என்னை அவன் அலைக்கழிக்கிறான்.

குறிப்பு: மிருத்தியுஞ்ஜயன் என்ற வடமொழிச் சொல்லின் பொருள் மரணத்தை வென்றவன்.

– புதில் பட்டாச்சாரியா, ஃபிராண்டியர் வார ஏட்டிலிருந்து மொழியாக்கம்
புதிய கலாச்சாரம் (நவ, டிச 1989, ஜன 1990).