privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்கேரளாவில் காவிகள் காலூன்றியது எப்படி ?

கேரளாவில் காவிகள் காலூன்றியது எப்படி ?

-

இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனால்…
– கேரளா உணர்த்தும் எதிர்மறை படிப்பினை!

டந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் கேரளா தவிர, இதர மாநிலங்களில் போலி கம்யூனிஸ்டுகள் படுதோல்வி அடைந்துள்ளனர். கேரளத்தில் பா.ஜ.க. கூட்டணி ஒரு இடத்திலும், போலி கம்யூனிஸ்டு ‘இடதுசாரி’ கூட்டணி 91 இடங்களிலும், காங்கிரசு கூட்டணி 47 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கேரளத்தில் ஒரு தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள போதிலும், கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது பல இடங்களில் இரு மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று அச்சுறுத்தும் அபாயமாக வளர்ந்துள்ளது. 2011-இல் 6.3 சதவீதமாக இருந்த பா.ஜ.க.வின் வாக்குகள் இப்போது 16 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளன. நீண்ட காலமாக இடதுசாரி அரசியல் செல்வாக்கு உள்ள கேரளத்தில் இந்துவெறி பாசிச சக்திகள் எப்படிக் காலூன்றி வளர முடிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதற்கான விதைகள் ஏற்கெனவே ஊன்றப்பட்டுவிட்டன.

கடந்த சில ஆண்டுகளாக இந்துமுனைவாக்கத்தைச் செயல்படுத்தும் திட்டத்துடன் ஐக்கிய வேதி,ஷேத்ர சம்ரக்ஷன சமிதி, பால சதானம், ஏகல்வ வித்யாலயா, அனுமன் சேனா முதலான புதிய அமைப்புகள் இந்துவெறியர்களால் உருவாக்கப்பட்டன. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வழக்கொழிந்துபோன “தேயம்” எனப்படும் பிற்போக்கான சடங்கை ஆதரித்து, அவர்களது நண்பனாகவும் புரவலனாகவும் ஷத்ர சம்ரக்ஷன சமிதி எனப்படும் கோயில் பாதுகாப்புக் கழகம் செயல்படத் தொடங்கியது. நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பதை எதிர்க்கும் இந்துத்துவ பரிவாரங்கள், கேரள மக்கள் மாட்டுக்கறி உண்பதை அம்மாநிலத்தின் கலாச்சாரம் என்று நயவஞ்சகமாகக் கூறிக்கொண்டு பழங்குடியினரையும் மிகவும் பிற்பட்ட – தாழ்த்தப்பட்ட சாதியினரையும் தன்பக்கம் இழுக்க முயற்சித்தது.

kerala-hindu-fnanaitics-win
பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் இந்து வெறியர்களின் ஊர்வலம்

கடந்த ஆண்டில் பிரபல இலக்கிய விமர்சகரான எம்.எம். பஷீர் “மாத்ருபூமி” நாளேட்டில் ராமாயணம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர் கட்டுரை எழுதி வந்தார். ராமாயணத்தைப் பற்றி ஒரு முஸ்லிம் எதையும் எழுதக் கூடாது என்று எச்சரித்து அத்தொடர் கட்டுரை வெளிவராமல் தடுத்து நிறுத்திய இந்துவெறியர்கள், பஷீருக்கும் கொலைமிரட்டல் விடுத்தனர். இவ்வாண்டு மார்ச் மாதத்தில் ‘’ஏசியா நெட்” தொலைக்காட்சியின் விவாத ஒருங்கிணைப்பாளரான சிந்து சூர்யகுமார், சூத்திரர்களின் கடவுளான மகிஷாசுரனை இந்து பெண் தெய்வமான துர்கை கொன்றதை, இது பார்ப்பன பாரம்பரியம் என்று அசுரர் பாரம்பரியத்தினரான சூத்திரர்கள் எதிர்ப்பதைப் பற்றிய ஒரு விவாதத்தை நடத்தியதற்காக இந்துவெறியர்களால் தாக்கப்பட்டார்.

ஈராண்டுகளுக்கு முன்பு பெரியாறு ஆற்றங்கரையிலுள்ள சிவன் கோயில் அருகே முஸ்லிம்களின் மாநாட்டை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று இந்துத்துவப் பரிவாரங்கள் ஆயுதமேந்திய பேரணியை நடத்தி இந்து முனைவாக்கத்தை தீவிரப்படுத்தின. பாரதப் பண்பாடு என்னும் பிற்போக்குத்தனத்தை நிலைநாட்ட அனுமன் சேனா என்ற அமைப்பு அம்மாநிலத்தின் கலாச்சார காவலான திடீர் அவதாரம் எடுத்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இத்தகைய இந்து முனைவாக்கத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, தாழ்த்தப்பட்ட ஈழவ சாதியினருக்காக நிற்பதாக காட்டிக் கொள்ளும் பாரத் தர்ம ஜன சேனா (பி.டி.ஜே.எஸ்.) என்ற பிழைப்புவாதக் கட்சியை வளைத்து இத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்டிக் கொண்டது.

இடதுசாரி சக்திகள் செல்வாக்கு பெற்றுள்ளதைப் போலவே கேரளத்தில் இந்து, முஸ்லிம் மற்றும் கிறித்துவ வலதுசாரி பிற்போக்கு சக்திகளும் காங்கிரசு தலைமையில் வலுவாகவே இருந்தன. இந்து மதத்தை எதிர்க்காமல், அதனுடன் சமரசமாகப் போவதும், மத நல்லிணக்கம் பேசுவதும்தான் காந்தி – காங்கிரசின் உத்தியாக இருந்தது. இதே உத்தியை போலி கம்யூனிஸ்டுகளும் பின்பற்றியதால், காங்கிரசு கூட்டணிக்கும் இடதுசாரி கூட்டணிக்கும் இந்து மதம் குறித்த அணுகுமுறையில் வேறுபாடில்லாமல் போனது.

தமிழகத்தைப் போல பார்ப்பன எதிர்ப்பு – இந்துத்துவ எதிர்ப்பு மரபு கேரளத்தில் இல்லாத நிலையில், அத்தகையதொரு மரபை உருவாக்க வேண்டிய பொறுப்பையும் கடமையையும் போலி கம்யூனிஸ்டுகள் தெரிந்தே புறக்கணித்தார்கள். இந்து மதத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக ஏற்கெனவே நாராயண குரு, அய்யன்காளி போன்றோர் தொடங்கி வைத்த சீர்திருத்தங்களைக்கூட இப்போலி கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்துச் செல்லவில்லை. மாறாக, அரசியல் – சித்தாந்த ரீதியாகவே இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனார்கள்.

keranal-cpm-surrender
ஓணம் பண்டிகையையொட்டி குழந்தைக்கு மாவலி மன்னன் வேடமிட்டு, பகத்சிங் படங்களுடன் சி.பி.எம். கட்சியினர் நடத்தும் ஊர்வலம்.

மாதொரு பாகன் விவகாரத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறி ஆதிக்கத்தை எதிர்க்க முன்வராமல், இது எழுத்தாளரின் கருத்துரிமையைப் பறிக்கும் செயல் என்று நழுவிக் கொண்டதைப்போலத்தான், இந்து மதத்தின் மையமான பார்ப்பனியத்தை எதிர்க்காமல் கேரள போலி கம்யூனிஸ்டுகள் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொள்கிறார்கள். “பால கோகுலம்” என்ற அமைப்பின் பெயரால் குழந்தைகளுக்குக் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு இந்துவெறியர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலம் நடத்துகிறார்கள் என்றால், அதற்குப் போட்டியாக “பால சங்கம்” என்ற அமைப்பின் பெயரால் அதேபோல கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலத்தை போலி கம்யூனிஸ்டுகள் நடத்துகிறார்கள். ஓணம் பண்டிகையின் போது குழந்தைகளுக்கு மாவலி மன்னன் வேடமிட்டு கார்ல் மார்க்ஸ், பகத்சிங் படங்களுடன் சி.பி.எம். கட்சி ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறது. சபரிமலையின் மகரஜோதி அதிசயம் என்பது கேரள மின்வாரியம், போலீசு மற்றும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு ஆகியன இணைந்து நடத்தும் நாடகம் என்பது ஏற்கெனவே அம்பலமாகியுள்ள போதிலும், இந்த மூட நம்பிக்கைக்கும் மோசடிக்கும் எதிராக வாய் திறக்காமல், அரசு அதிகாரத்தில் இருந்த சமயத்திலும்கூட இதனை அங்கீரித்து போலி கம்யூனிஸ்டுகள் சந்தர்ப்பவாதமாகவே நடந்து கொள்கின்றனர். தேர்தல் வெற்றிக்காக சாதி-மதவாத பிற்போக்கு சக்திகளுடன் சந்தர்ப்பவாதமாகக் கூட்டணி சேர்வது, இந்து மனப்பான்மைக்கு ஏற்ப நெளிவுசுழிவாக நடந்து கொள்வது என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் நடைமுறையாக இருக்கிறது.

வேதங்களின் நாடாக இந்திய வரலாற்றைப் பார்த்தார், கேரளத்தின் முதலாவது போலி கம்யூனிஸ்டு முதல்வரும் சி.பி.எம்.கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும் அதன் சித்தாந்த குருவுமாகிய இ.எம்.எஸ். நம்பூதிரிபாட். அவரது சீடர்கள் இதனை நியாயப்படுத்தி உரை எழுதியதோடு, இந்துத்துவத்துடன் இசைந்து நின்றார்கள். இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போகும் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல் – சித்தாந்த பலவீனத்தையும், சந்தர்ப்பவாத நடைமுறையையும் சாதகமாக்கிக் கொண்டு, கேரள அரசியல் அரங்கில் வளர்ந்துள்ள இந்துவெறி சக்திகள், தேர்தலுக்கு பின் போலி கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருகின்றன.

ஓட்டுப் பொறுக்குவதற்காக இந்துவெறிக் கும்பலுடனான மோதலில் ஏராளமான ஊழியர்களைப் போலி கம்யூனிஸ்டுகள் ஏற்கெனவே பலி கொடுத்திருக்கிறார்கள். ஓட்டுக்காக இந்துவெறியர்களுடன் மோதுவதற்குத் தயாராக உள்ள போலி கம்யூனிஸ்டுகள், ஏன் அரசியல் – சித்தாந்த ரீதியாக இந்துத்துவத்துக்கு எதிராகப் போராடவில்லை என்பதை அக்கட்சிகளிலுள்ள அணிகள் பரிசீலிக்க வேண்டும்.

போலி கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாத நடைமுறையை நிராகரித்து, அரசியல் – சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் இந்துத்துவத்துக்கு எதிரான ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு போராடுவதே இந்துவெறி பாசிச பயங்கரவாத சக்திகளை முறியடிப்பதற்கான ஒரே வழியாகும். அதற்கு மாறாக, மத நல்லிணக்கம் பேசிக்கொண்டு இந்துத்துவத்துடன் சமரசமாகிப் போனால், இப்படிப்பட்ட விபரீத நிலைமைதான் ஏற்படும் என்பதை கேரளம் எதிர்மறை படிப்பினையாக உணர்த்துகிறது.

– தனபால்
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________