மோடி ஆட்சியில், இந்துவெறி பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு விசுவாசமான அரசு பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் கைவிடப்பட்டு அடுத்தடுத்து அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். காங்கிரசு அரசின் பழிவாங்கும் செயல், ஓட்டுக்காக முஸ்லிம்களை அனுசரித்துப் போகும் செயல் என்று கூறி இந்த வழக்குகளை ஒன்றுமில்லாத விவகாரமாக்குவது, இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்துவெறி பயங்கரவாதிகளை விடுதலை செய்வது, இதற்கேற்ப நாட்டின் புலனாய்வு அமைப்புகள், நீதித்துறை உள்ளிட்ட அரசு எந்திரத்தையே மாற்றியமைப்பது என்ற திட்டத்துடன் மோடி கும்பல் செயல்பட்டு வருகிறது.
இதன்படி, மோடி – அமித் ஷா கும்பல் ஆட்சிக்கு வந்ததும், குஜராத்தின் நரோடா பாட்டியாவில் நடத்தப்பட்ட இந்துவெறி பயங்கரவாத கொலைவெறியாட்ட வழக்கில் 26 ஆண்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட குஜராத்தின் முன்னாள் அமைச்சரான மாயா கோத்நானி பிணையில் விடுவிக்கப்பட்டார். குஜராத்தில் போலி மோதல் கொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்ட அரசு பயங்கரவாத வெறியன் டி.ஜி. வன்சாரா, மோடி அரசால் பிணையில் விடுவிக்கப்பட்டு, கௌரவமாக ஓய்வு பெற்றுச் சென்றுவிட்டான். இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கிலும், சொராபுதீன் கொலை வழக்கிலும் குஜராத்தின் கிரிமினல் போலீசு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு, அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. சோராபுதீன் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட அமித் ஷாவை அவ்வழக்கிலிருந்து விடுவித்ததற்குப் பரிசாக, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு கேரள ஆளுநர் பதவி தரப்பட்டது. இந்த வரிசையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்துவெறி பயங்கரவாத பெண் சாமியாரான பிரக்யா சிங் மற்றும் ஐந்து இந்துவெறியர்களுக்கு இதில் தொடர்பில்லை என்று இப்போது தேசியப் புலனாய்வுக் கழகம் அறிவித்துள்ளது.

மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டில் நடந்த குண்டுவெடிப்பானது, முஸ்லிம்கள்தான் பயங்கரவாதிகள் என்று பழிபோட்டு ஒடுக்குவதற்காக இந்துவெறி பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய சதித் திட்டத்தின் ஒரு அங்கமாகும். குஜராத்தில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளுக்குப் பிறகு, இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாகப் பீதியூட்டி அடக்குமுறையை ஏவுவது, அதன் மூலம் இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டி எதிர்த்தாக்குதலைத் தொடுக்குமாறு தூண்டுவது, அப்படி அவர்கள் செய்யாத பட்சத்தில் தாங்களே அத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி பழியை முஸ்லிம்கள் மீது போடுவது – என்ற சதித் திட்ட நிகழ்ச்சிநிரலின்படி, இதற்காகவே தனியாக ஒரு சதிகார வலைப்பின்னல் உருவாக்கப்பட்டு, குண்டுகள் தயாரிப்பு மற்றும் குண்டுவைப்புச் சதிகளை இந்துவெறி பயங்கரவாதிகள் தொடங்கினர்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் .பயங்கரவாதிகள் மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் இரகசியமாக வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு இருவர் மாண்டனர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து இந்துவெறி பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் போலீசு அடுத்தடுத்து கைது செய்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாளன்று மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரில் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் 4 குண்டுகள் வெடித்தன. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில் அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதே ஆண்டு மே மாதத்தில் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து நவம்பர் 11 அன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. மீண்டும் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி ரம்ஜான் விழாவின்போது மலேகானில், மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் கொல்லப்பட்டு 79 பேர் படுகாயமடைந்தனர்.

இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும்போதும், எவ்வித விசாரணையுமின்றி முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டே உருவாக்கப்பட்டன. மலேகான் குண்டுவெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே முஸ்லிம் குடியிருப்புகளைச் சுற்றிவளைத்து, சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை போலீசு இழுத்துச் சென்றது. பின்னர், இவர்கள்தான் குண்டு வைத்தார்கள் என்று சல்மான் பார்சி, நூருல் ஹூதா, சபீர் அகமது, ரைஸ் அகமது, முகம்மது அலி, ஆஷிப் கான், ஜாவித் ஷேக், பரூக் அன்சாரி, அப்ரார் அகமது – ஆகிய ஒன்பது அப்பாவி முஸ்லிம்கள் மகாராஷ்டிர மாநில தீவிரவாத எதிர்ப்புப் போலீசுப் படையால் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்தனர். கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு சிறையிடப்பட்ட அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின.
இதற்கிடையே சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருட்களை முன்னாள் ராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் என்பவன் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான தடயங்கள் கிடைத்தன. மலேகான் குண்டுவெடிப்புகளிலும் ஆர்.டி.எக்ஸ் .ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அபிநவ் பாரத் எனும் இந்துத்துவ அமைப்பின் முக்கிய பிரமுகராக இருந்த பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 2008-இல் பிரக்யா சிங், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்துவெறி பயங்கரவாதிகளை கார்கரே கைது செய்தார். 2006-2008 ஆம் ஆண்டுகளுக்கிடையே ஒன்பது குண்டு வெடிப்புகளை நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கொன்றுள்ள இப்பயங்கரவாதச் சதியில் இந்துவெறியர்கள் ஈடுபட்டுள்ளதை வாக்குமூலமாகப் பெற்று பல்வேறு ஆதாரங்களுடன் அவர் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தார். இந்துவெறியர்களும் அரசு எந்திரமும் எதை மறைத்தார்களோ அதை வெளிக்கொண்டுவந்து, கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்கள் அப்பாவிகள் என்றும், இந்துவெறியர்கள்தான் குண்டு வைத்தார்கள் என்றும் முதன் முறையாக நிரூபித்தார். அதன் பிறகுதான் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது அப்பாவி முஸ்லிம்களுக்குப் பிணை கிடைத்தது.
பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தியபோது, இந்துவெறி பயங்கரவாதிகளின் சதிகள் படிப்படியாக வெளிவரத் தொடங்கின. இதற்கான ஆதாரங்களைத் திரட்டிய போலீசு அதிகாரியான கர்காரே, 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையின் போது திட்டமிட்டே கொல்லப்பட்டார்.
மலேகான் குண்டுவெடிப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்.இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தாவை கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பரில் சி.பி.ஐ. கைது செய்து சிறையிலடைத்து விசாரணை நடத்தியது. “மலேகான் நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், எங்களது முதலாவது குண்டு வெடிப்பை அங்கே நடத்தினோம். … அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால் அதனைத் தடுத்து இந்துக்களை அசசுறுத்துவதற்காக அங்கே குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது…. சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில் ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்” என்று அவர் தானே முன்வந்து நீதிபதி முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை இந்துவெறியர்கள்தான் செய்தனர் என்று பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, அன்று காங்கிரசு கூட்டணி ஆட்சியின் உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இது இந்து பயங்கரவாதம் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்.

பின்னர்,2011-ஆம் ஆண்டில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மைய அரசின் தேசியப் புலனாய்வுக் கழகம் ( என்.ஐ.ஏ.) விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, கைது செய்யப்பட்ட ஒன்பது அப்பாவி முஸ்லிம்களும் குற்றமற்றவர்கள் என்று ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஆதாரங்களைச் சமர்பித்தது. இவர்களில் ஷபீர் அகமது ஏற்கெனவே விபத்தொன்றில் இறந்து விட்டார். எஞ்சியுள்ள எட்டு பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கடந்த ஏப்ரல் 26 அன்று மும்பை கீழமை நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது.
மலேகான் குண்டுவெடிப்பு விசாரணையை முடித்த தேசிய புலனாய்வுக் கழகம், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மே 13 அன்று குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில், மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் போலீசார் இந்த வழக்கு விசாரணையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டிருப்பதாகவும்,பெண் சாமியாரான பிரக்யா சிங் மற்றும் 5 பேருக்கு இக்குண்டுவெடிப்பில் தொடர்பில்லை என்றும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அதேசமயம் மகாராஷ்டிரா மாநில அமைப்பு ரீதியான குற்றத் தடுப்புச் சட்டப்படி, முன்னாள் ராணுவ அதிகாரி சிறீகாந்த் புரோகித் உள்ளிட்ட 10 பேர் மீதான வழக்கு விசாரணை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

இந்துவெறி பயங்கரவாதிகளை வழக்குகளிலிருந்து விடுவிப்பதற்காக தேசியப் புலனாய்வுக் கழகம் கீழ்த்தரமாக இயங்குவதை மலேகான் வழக்கு நிரூபித்துக் காட்டிவிட்டது. அரசியல் தலையீடு காரணமாக, சி.பி.ஐ. நடுநிலையாகச் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரசு ஆட்சின் போது பா.ஜ.க. கூச்சல் போட்டது. ஆனால் இப்போது மோடி ஆட்சிக்கு வந்ததும் தேசிய புலனாய்வுக் கழகம் அப்பட்டமாகவே இந்துவெறி கும்பலின் கைப்பாவையாகி நிற்கிறது. இதற்கு அரசியல் தலையீடு மட்டும் காரணமல்ல; புலனாய்வு அமைப்புகளின் அதிகார வர்க்கமே இந்துமயமாகியிருப்பதையே இது நிரூபித்துக் காட்டுகிறது.
மோடி கும்பலின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே, தேசியப் புலனாய்வுக் கழகத்தின் தலைமை இயக்குனராகப் பதவி வகித்துவரும் சரத்குமாரின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 31,2015-இல் முடிவுக்கு வந்துள்ள போதிலும், அரசியல் சாசன விதிகளுக்கு எதிராக அவரது பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததும், மலேகான் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளை மென்மையாகக் கையாளுமாறு சுஹாஸ் வார்கி என்ற தேசிய புலனாய்வுக் கழகத்தின் போலீசு அதிகாரி தனக்கு நிர்பந்தங்கள் கொடுத்ததாக முன்னாள் அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞரான ரோகினி சாலியன் கூறியிருப்பதே இப்புலனாய்வு அமைப்பின் யோக்கியதையை அம்பலப்படுத்திக் காட்டுகிறது.
நடப்பது சட்டத்தின் ஆட்சி என்றும், அதிகார வர்க்கமும், நீதித்துறையும் நடுநிலையானது என்றும் பரப்பப்படும் மாயைகள் தகர்ந்து, இந்நிறுவனங்கள் சீரழிந்து கிடப்பதையும், இந்நிறுவனங்களின் அதிகார வர்க்கமே இந்துமயமாகியிருப்பதையும் மலேகான் மற்றும் இஷ்ரத் ஜஹான் வழக்குகள் நிரூபித்துக் காட்டுகின்றன.
– குமார்
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________
dear vinavu team, June 16, Dated Dinamar Chennai Edition, in 3rd Page(top left corner) it publishes a message like if you know sankrit/ hindi you should avoid mistakes in Tamil, I believe that message is irrelevant, Please look below link and write a detailed article about it. thanks.
Raja
http://epaper.dinamalar.com/index.aspx?EID=342&dt=20160616#