privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்மதுரவாயல் டாஸ்மாக் மூடப்பட்டது – மக்கள் போராட்டத்தின் வெற்றி !

மதுரவாயல் டாஸ்மாக் மூடப்பட்டது – மக்கள் போராட்டத்தின் வெற்றி !

-

சென்னை மதுரவாயல் பகுதியில் இருக்கும் ரேசன் கடை மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் 100 மீட்டருக்குள்ளாகவே இருந்தது அந்த டாஸ்மாக் கடை. ஓராண்டுக்கு முன்புதான், ஓம்சக்தி நகரின் முனையில் முளைத்தது அந்த தகர சீட்டுகளால் ஆன டாஸ்மாக் கடை. சின்ன நொளம்பூர், நொளம்பூர், ஓம்சக்தி நகர் மக்களுக்கு வெளியுலகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அந்த டாஸ்மாக் கடை வழியாகத்தான் செல்ல வேண்டும். அன்றாடத் தேவைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு செல்வதானாலும் சரி, இதர வேலைகள் அனைத்திற்கும் சென்னையின் பிற பகுதிகளுக்கு பயணிக்க வேண்டுமானாலும் சரி, வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்புவதானாலும் சரி அந்தக் கடையை கடந்து போகாமல் இருக்க முடியாது. சில நேரங்களில் ஓம்சக்தி நகர் இடுகாட்டிலிருந்து எரிந்தும் எரியாமலும் நாயால் கவ்வி இழுத்துவரப்பட்ட பிணங்களுடன், குடிகாரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பொதுச்சாலையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பர்.

விடியற்காலை ஐந்து மணியிலிருந்து மதுரவாயல் போலீசு ஆசியுடன் கடை செயல்பட்டுக் கொண்டிருந்தது. பெருவாரியான உழைக்கும் மக்களை கொண்டுள்ள சின்ன நொளம்பூர், ஓம் சக்தி நகர் பகுதி மக்களின் தினக்கூலியை பெருமளவு தின்று கொழுத்துக் கொண்டிருந்தது அந்த பச்சை வர்ணம் பூசப்பட்ட டாஸ்மாக் கடை. கூவம் நதியின் கரையில் அமைந்திருந்த அந்த டாஸ்மாக் கடை வழியாக பெண்கள் தனியே செல்ல பயந்தனர். வாகனத்தில் செல்வோர் அச்சத்துடன் பயணித்தனர். அடிக்கடி விபத்துகளும், திருட்டுச் சம்பவங்களும் நடைபெற்றன. பகுதி மக்கள் குமுறினர்; கொந்தளித்தனர்; மீட்பரைத் தேடிக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் அந்த பிரச்சனையில் நுழைந்தது மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. ஏற்கனவே தமிழகத்திலேயே முதன்முறையாக மக்களை திரட்டி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய அழிவிடைத்தாங்கி போராட்ட அனுபவமும், ஆயிரக்கணக்கில் மாணவர்களைத் திரட்டி பச்சையப்பன் கல்லூரியில் டாஸ்மாக்கை நொறுக்கிய அனுபவமும் பு.மா.இ.மு.விற்கு இருந்தது. மக்கள் அதிகாரம் தொடர்ச்சியாக டாஸ்மாக் பிரச்சனைக்காக போராடியும் மேலப்பாளையூர் உட்பட சில பகுதிகளில் நிரந்தரமாக டாஸ்மாக் கடையை இழுத்து மூடியும் வந்துள்ளது. இவர்கள் இணைந்து மக்களை அணிதிரட்டினர். மீட்பர் வேறு யாருமல்ல உழைக்கும் மக்களாகிய நீங்கள்தான் என உணர்த்தியவாறு உழைக்கும் மக்களால் ஆன டாஸ்மாக் எதிர்ப்புக் குழு (நொளம்பூர் பகுதி) கட்டியமைத்தனர்.

மக்கள் அதிகாரத்தின் ஏப்ரல் 20 டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகையினைத் தொடர்ந்து மே 2-ம் தேதி பகுதி மக்கள் ஒன்று திரண்டு மே–5-க்குள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து மே 5-ம் தேதி தமிழகம் முழுக்க மக்கள் அதிகாரம் டாஸ்மாக்கிற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் டாஸ்மாக் எதிர்ப்பு குழுவினர்.

இந்தப் போராட்டத்தில்தான் சத்யா அம்மாவின் மண்டை உடைக்கப்பட்டது. நொளம்பூர் பகுதியை சார்ந்த பள்ளி மாணவர் ஆகாஷ் போலீசார் தாக்கியதில் மயக்கமடைந்தார். பெண்கள், குழந்தைகள் உட்பட பலரும் போலீசின் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். போராட்டத்திற்கு முன்பாகவே மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியனின் கை, கால்கள் உடைக்கப்பட்டன. நொளம்பூர் பகுதி பு.மா.இ.மு செயலாளர் தோழர் கணேசன் கடுமையாக தாக்கப்பட்டார். பு.மா.இ.மு பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசு கை முறிக்கப்பட்டது.

பகுதி உழைக்கும் மக்களின் பங்களிப்புடன் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மண்டபத்திற்கு வெளியிலும் போராட்டம் நடைபெற்றது. இன்னும் கூடுதலாக அதன்பின்னர் ஓட்டுக்கேட்டு வந்த அ.தி.மு.க, பகுஜன் சமாஜ், சி.பி.எம் கட்சியினரை ஊருக்குள் விடாமல் மக்கள் விரட்டியடித்தனர். மதுரவாயல் தொகுதியிலேயே குறைவான வாக்குப்பதிவு நடந்த இடமாக இருந்து தேர்தலையும் புறக்கணித்துள்ளனர் இவர்கள். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த்து இவர்களின் போராட்டம். சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தின் விளைவாகவும், தமிழகம் முழுக்க மக்கள் அதிகாரமும், பல்வேறு அமைப்பினரும், உழைக்கும் மக்களும் இணைந்து நடத்திய போராட்டங்களின் விளைவாகவும் 19-6-2016 அன்று மதுரவாயல் ரேசன்கடை டாஸ்மாக் மூடப்பட்டது.

நேற்று காலையில் டாஸ்மாக்கில் இருந்து சரக்குப்பெட்டிகள் லாரிக்குள் ஏற்றிக் கொண்டிருந்தபோது பு.மா.இ.மு தோழர் சாரதியுடன் உழைக்கும் மக்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். பார்வையிட்ட ஒவ்வொருவருக்கும் போராட்டத்தின்போது தாங்கள் வாங்கிய அடிகளும், போலீசின் அராஜகமும்தான் நினைவிற்கு வந்தன. கடையை காலி செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரிக்கும்போது எல்லாம் “நீங்க செஞ்ச போராட்டத்தாலதான் கடையை மூடுறாங்க” என தெரிவித்தபோது அந்த வலி இன்பமாக மாறிப்போனது.

போராட்டத்தில் கலந்துக்கொள்ளாது போராட்டத்தை கொச்சைப்படுத்திய ஒவ்வொருவரும் பு.மா.இ.மு சாரதியையும், கணேசனையும் சந்தித்து வருத்தம் தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஓம்சக்தி நகரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோதுதான் வெற்றிவேல் செழியனை போலீசு அடித்து இழுத்து சென்றிருந்தது. அப்போது தங்களால் போலீசை தடுத்து அவரை மீட்க முடியவில்லை என்பதை உண்மையான வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டனர் அப்பகுதி மக்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த அபிராமி அம்மா நம்மிடையே அவரின் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். அருகிலிருக்கும் குடியிருப்பில் வீட்டுவேலை செய்துவருகிறார் அவர். அவர் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் ஒருபோதும் இவரிடம் ஒருவார்த்தை பேசியதில்லை. சிறிதும் சட்டை செய்ததில்லை. ஆனால் வேலைக்கு விடுப்பு போட்டுவிட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டதன் மறுநாளே இவரிடம் அந்த வீட்டம்மா முதன்முறையாக பேசி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல் நேற்று வேலைக்கு சென்றபோது டாஸ்மாக் கடை மூடப்பட்டதை சொன்னபோது வேகமாக ஓடிவந்து இவரை கட்டியணைத்து வாழ்த்துகளை தெரிவித்தாராம் அந்த வீட்டம்மா. மேலும், “நீங்க வாங்கின அடி, உதை வீணாகலை. நீங்க ஜெயிச்சிட்டீங்க” என சொன்னதை நம்மிடம் சொல்லி நெகிழ்ந்து போனார் அபிராமி அம்மா. மேலும் இந்தப் போராட்டம் எங்கள் பகுதியின் டாஸ்மாக் பிரச்சனையை மட்டும் தீர்க்கவில்லை, சமூகத்தில் எங்களுக்காஅன அங்கீகாரத்தையும் அளித்துள்ளாதாக சொல்லி ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

டாஸ்மாக் கடைக்கு எதிரில் கடைபோட்டுள்ள கிரில் கதவு செய்யும் கடைக்காரரிடம் “என்னன்ணே எதிரிலே இருந்தது. போய் தண்ணி குடிச்சிட்டு வர மாதிரி அப்பப்போ சாப்ட்டுட்டு இருந்தீங்க இப்ப மூடிட்டாங்க, இனி என்ன பண்ணப்போறீங்க?” என கிண்டலாக பகுதியைச் சார்ந்த ஒருவர் கேட்டதற்கு, “இது மூடனதுல எனக்கும் சந்தோசம்தான். இதுக்கு முன்னாடி சம்பாதிக்கிறதுல 300, 400 ரூவா இதுக்கே போய்டும். ஆனா இனிமே அப்படி பணம் போகாது, வேற கடைக்கு தேடிப்போனாலும் 100ரூவா தாண்டாது. என்னவிட என் வீட்டுக்காரிக்குதான் சந்தோசம்” என சொல்லியுள்ளார்.

ஆனால் இந்தக் கடை மூடப்பட்டது மட்டுமே சாராயப் பிரச்சனையை முழுமையாக தீர்த்துவிடாது என்பதை இப்பகுதி மக்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். இந்த பகுதியில் கடை மூடப்பட்டால் வேறு பகுதிக்கு குடிக்கச் செல்வர். அதனால் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடினால் மட்டுமே நிரந்த தீர்வு கிடைக்கும் என்பதுதான் இவர்களின் நிலைப்பாடாக உள்ளது. அதோடு குடிகாரர்களை மீட்டெடுக்க மாநிலம் முழுவதும் மறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் எனவும் கோரி வருகின்றனர். இந்தக் கடை மூடப்பட்டது மட்டுமே தீர்வல்ல ஆனால் அதே நேரத்தில் மக்கள் அதிகாரத்தின் போராட்டங்கள் இல்லாமல் இந்தத் தீர்வும் நமக்கில்லை என்பதை உணர்ந்தே அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகிறது டாஸ்மாக் எதிர்ப்புக்குழு (நொளம்பூர் பகுதி) மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

அருகிலிருக்கும் மற்ற பகுதி மக்களை பார்த்து, “எங்க இடத்துல நாங்க ஒண்ணு சேர்ந்து கடையை மூடிட்டோம். நீங்க எப்போ ஒண்ணு சேரப்போறீங்க” என கேட்கின்றனர் டாஸ்மாக் எதிர்ப்பு குழுவினர் ஒவ்வொருவரின் முகத்திலும் தாங்கள் போராடியதன் பெருமிதமும், அடுத்தடுத்த பிரச்சனைகளுக்கு போராட தயாராக உள்ள போர்க்குணமும் தெரிந்தது.

வினவு செய்தியாளர்கள், சென்னை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க