Thursday, May 30, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஹாலிவுட்டிலிருந்து ஒரு சுயவிமரிசனம்

ஹாலிவுட்டிலிருந்து ஒரு சுயவிமரிசனம்

-

பேசிக் இன்ஸ்டிங்ட் (Basic Instinct), சில ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களைக் கலக்குக் கலக்கிய ஒரு ஹாலிவுட் திரைப்படம். ஆயினும் இதற்குத் திரைக்கதை எழுதிய ஜோ எஸ்தெராஸ் (Joe Eszterhas) இப்படத்தின் தவறான மதிப்பீடுகள் குறித்து தற்போது சுயவிமரிசனம் செய்திருக்கிறார். ஹாலிவுட் என்றாலே ஏகாதிபத்தியச் சீரழிவு என்று மதிப்பிடுவோருக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். முற்போக்கு, பிற்போக்கு, கலகம், கேளிக்கை, ஒழுக்கம் எனப் பலவிதப் பரிமாணங்கள் கொண்டதாக ஹாலிவுட்டைப் பார்க்கும் பின் நவீனத்துவவாதிகளுக்கோ இது ஒரு மகிழ்ச்சி. ஒரு வகையில் இது உண்மைதானோ என்று ஐயங்கொள்ளும் வகையில் உள்ளன பின்வரும் செய்திகள்.

Basic_instinct
மனிதனின் இயல்பான பாலுணர்வை, ஆவேச வெறியாகப் புனையப் பழக்கியது இத்தகைய படங்கள்தானே?

இரகசியமாக இந்தியா வந்து இராஜஸ்தான் கிழத்திடம் யோகா பயின்று சென்ற டைட்டானிக் நாயகி கதே வின்ஸ்லட், சிலுவையைப் புணருவதைப் போல் நடித்து, கத்தோலிக்கத்தின் புனிதத்தைக் கட்டவிழ்த்த மடோனா, நர்த்தகி ஒருத்தியுடன் பரதம் ஆடி மூன்றாம் உலகின் கலைமரபை மேற்குலகம் தெரிந்து கொள்ள வைத்த மைக்கேல் ஜாக்சன், பெளத்தத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஸ்டீவன்செகல், ரிச்சர்டு கிர்ரே, கருப்பு நடிகன் டென்சில் வாஷிங்டனுக்கு ஆஸ்கார் வழங்க வேண்டும் எனக் குரலுயர்த்திய ஜூலியா ராபர்ட்ஸ், ஏசுநாதரின் இறுதி 12 மணிநேரத்தை லத்தீன் மொழியில் படமெடுக்கத் துணிந்த மெல்கிப்சன் என்று ஹாலிவுட்டின் பரிமாணங்கள் பல.

இந்தக் கலக மரபில்தான் ‘பேசிக் இன்ஸ்டிங்ட் உள்ளிட்ட 14 மெகா வெற்றிப் படங்களுக்குத் திரைக்கதை வடித்த, உலகிலேயே அதிக ஊதியம் பெறும் திரைக்கதைச் சிற்பி ஜோ எஸ்தெராஸும் வருகிறார். தனது வெண்திரை மாந்தர்களைக் கவர்ச்சியான புகையிழுப்பாளர்களாகக் காட்டியதன் மூலம், ஊர் பெயர் அறியாத எண்ணிறந்த மனிதர்கள் புகையினால் கொல்லப்படுவதற்குத் துணை போய்விட்டதாக அவர் மன்னிப்பு கேட்கிறார். இந்த இரத்தக்கறை படிந்த கைகளை வைத்தே தனது வங்கிக் கணக்கின் இருப்பை உயர்த்தியது குறித்து வெட்கப்படுகிறார் அந்த நல்ல மனிதர். மேலும் – “எனது பல திரைக் கதைகளின் உள்ளார்ந்த பகுதியாக சிகரெட் மாறியதன் காரணம் நானே தீவிரமாகப் புகையிழுப்பவன். புகைப் பழக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள தனிப் பட்ட உரிமை என்றே முன்பு நம்பினேன். அதைத் தடை செய்யும் முயற்சிகள், அரசியல் ரீதியில் சரியெனக் கூறுவது தனிநபரின் சுதந்திரத்தை அழிக்கும். இப்படி என்னுடைய கருத்துக்களையும் என் திரைக்கதைகளில் சொல்லியிருக்கிறேன்.”

”பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் புகைபிடிப்பது செக்சுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதில் ஷெரோன் ஸ்டோன் (நடிகை) புகைப்பார். இப்படத்தில் பிரபலமானதும் சர்ச்சைக்குரியதுமான காட்சி ஒன்றில், ஷேரோன் கையில் சிகரெட் இருக்கும். ஆக படத்தை புகையிலை நிறுவனங்கள் வரவேற்றன. பேசிக் சிகரெட் என்ற புதிய பிராண்டையே அறிமுகப்படுத்தின. என் படம் எவ்வளவு பணத்தை அள்ளியதோ அவ்வளவு பணத்தை அவர்களின் சிகரெட்டும் ஈட்டியது. இப்போது நான் செய்ததவறுக்குப் பரிகாரம் செய்வதாகக் கடவுளிடம் உறுதியளித்திருக்கிறேன். என்னைப் போல் ஏனைய படைப்பாளிகளும் இந்தத் தவறு செய்வதைத் தடுத்து நிறுத்த முயல்கிறேன்.”

எனது பல திரைக் கதைகளின் உள்ளார்ந்த பகுதியாக சிகரெட் மாறியதன் காரணம் நானே தீவிரமாகப் புகையிழுப்பவன்.
எனது பல திரைக் கதைகளின் உள்ளார்ந்த பகுதியாக சிகரெட் மாறியதன் காரணம் நானே தீவிரமாகப் புகையிழுப்பவன் – ஜோ எஸ்தெராஸ்

”ஹாலிவுட் நட்சத்திரம் ஒருவரின் கையிலிருக்கும் சிகரெட் உண்மையில் 12 அல்லது 14 வயதுச் சிறார்களைக் குறி வைக்கும் ஒரு துப்பாக்கிக்கு நிகரானது. இருந்தும் இதை நியாயப்படுத்தும் புத்தார்வச் சுதந்திரம், கலைச்சுதந்திரம் போன்ற சொற்குவியல்களின் புகைமண்டலப் பின்னணியில் தஞ்சம் கொள்கிறோம். ஆனால் இந்த அலங்கார வார்த்தைகள் அத்தனையும் பொய்…” – என்று மனதாரப் பேசுகிறார் இந்தத் திரைக்கதைப் படைப்பாளி. இவருடன் வேறு சில பிரபலங்களும் இந்தப் புகை எதிர்ப்புக் கலகத்தை ஹாலிவுட்டில் எழுப்பி வருகிறார்கள். 1960-இல் வெளிவந்த படங்களைவிட 2000-இல் வெளிவந்த படங்களில் புகையிழுப்புக் காட்சிகள் 50 மடங்கு அதிகரித்திருக்கின்றனவாம். எனவே திரைப்படங்கள் என்பது சிறார்களுக்குச் சிகரெட்டை விளம்பரப்படுத்தும் விசயமாகிவிட்டதே என்று வருத்தப்படுகிறார்கள் இந்தப் பிரபலங்கள்.

இன்னொருபுறம் இப்படிச் சினிமாதான் எல்லாரையும் கெடுக்கிறது என்பது கேலிக்கூத்து என்று சில அறிஞர் பெருமக்கள் எதிர்வாதம் வைக்கிறார்கள். ‘புகைபிடிப்பது உடல்நலத்திற்குத் தீங்கானது’ என்று தெரிந்தே பிடிப்பவர்களுடைய தனிப்பட்ட பொறுப்பு பற்றித்தான் பேசவேண்டும் என்று வாதிடுகிறார்கள். அமெரிக்காவில் இத்தகைய ‘புனிதமான’ கருத்துப் போர்கள் வழக்கமானவை.

துப்பாக்கிக் கலாச்சாரம், போதைப் பொருள் பழக்கம், வன்முறை வீடியோ விளையாட்டுக்கள், பாலுணர்வு வக்கிரங்கள் என்று பல பிரச்சினைகளில் தடை செய்ய வேண்டும் என்றும், கூடாது என்றும் தேசிய அளவிலான விவாதங்கள் அனல் பறக்க நடக்கும்.

இப்படத்தில் பிரபலமானதும் சர்ச்சைக்குரியதுமான காட்சி ஒன்றில், ஷேரோன் கையில் சிகரெட் இருக்கும். ஆக படத்தை புகையிலை நிறுவனங்கள் வரவேற்றன
இப்படத்தில் பிரபலமானதும் சர்ச்சைக்குரியதுமான காட்சி ஒன்றில், ஷேரோன் கையில் சிகரெட் இருக்கும். ஆக படத்தை புகையிலை நிறுவனங்கள் வரவேற்றன

இங்கே பாபர் மசூதிப் பிரச்சினை, கல்வியில் காவிமயம், பசுவதைப் பிரச்சினை, மதமாற்றம் இன்னபிறவற்றில் வாஜ்பாயியை விட்டு ’தேசீய விவாதம்’ செய்யும் இந்துமத வெறியர்கள் இன்னொரு பக்கம் கடப்பாரைச் சேவையில் காரியங்களை முடித்துக் கொள்வார்கள். அதைப் போல அமெரிக்கப் பிரச்சினைகள் குறித்து உரையாடல் நடத்தும் அமெரிக்க அறிவுஜீவிகளை, தனிநபர் உரிமை, சுதந்திரம் என்ற அமெரிக்கச் சட்டத்தின் பிரம்மாஸ்திரத்தை வைத்து எளிதில் வீழ்த்தி விடுவார்கள் அமெரிக்க முதலாளிகள். ஆக பிரச்சினைகளை முடிந்த அளவு பேசிக் கொள்வது மட்டுமே அங்கே ஒரு மரபாகி விட்டது.

அப்படிப் பேசிக் கொள்வதிலாவது ஒரு நேர்மை இருக்கிறதா என்பதே நமது கேள்வி. பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் சிகரெட்டைப் பிரபலமாக்கிச் சிறார்களைக் கெடுத்து விட்டதாக ஜோ எஸ்த்ராஸ் வருத்தத்தில் ஹமாம் சோப்பு அளவுக்காவது நேர்மை இருக்கிறதா?

இந்தப் படத்தின் சர்ச்சையும், பிரபலமும், வருமானமும் அதன் புகையிழுப்புக் காட்சிகளில் இல்லை, பச்சையான படுக்கைக் காட்சிகளில்தான் இருக்கிறது. ஷேரோன் ஸ்டோனும், மைக்கேல் டக்ளசும் ஒருவரையொருவர் கடித்துக் குதறுவது போன்ற காட்சிகளை உருவாக்கிய கைதான் உண்மையில் கழுவாய் தேட வேண்டும். மனிதனின் இயல்பான பாலுணர்வை, ஆவேச வெறியாகப் புனையப் பழக்கியது இத்தகைய படங்கள்தானே?

கடந்த 10 ஆண்டுகளாகப் பெருகி வரும் மாத்ருபூதங்களும், நாராயண ரெட்டிகளும், பாலுணர்வுக் கோளாறுகளைக் கேள்வி பதிலாக்கும் பத்திரிக்கைகளின் குடும்பப் பிரச்சினைப் பகுதிகளும் என்ன செய்கின்றன? ஹாலிவுட் பாணி படுக்கைக் கலையை அல்லது வக்கிரங்களைக் கல்வி என்ற பெயரில் கற்றுக் கொடுக்கின்றன. சிறார்களுக்குப் பிஞ்சிலே பழுக்க வைப்பதையும், இளைஞர்களுக்கு மிகையான கற்பனையையும், தம்பதியினருக்குத் திருப்தியின்மையையும், தோல்வி மனப்பான்மையையும், பொறாமையையும் ஏற்படுத்துகின்றன.

அரேபியர்களையும், வியத்நாமியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இதுவரை பல கோடி முறை சுட்டுக்கொன்ற ஹாலிவுட்டின் பொம்மைத் துப்பாக்கியின் மீது ஒரு நாய்க்கும் கேவலம் ஒரு பொய்க்கோபம் கூட வரவில்லை.
அரேபியர்களையும், வியத்நாமியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இதுவரை பல கோடி முறை சுட்டுக்கொன்ற ஹாலிவுட்டின் பொம்மைத் துப்பாக்கியின் மீது ஒரு நாய்க்கும் கேவலம் ஒரு பொய்க்கோபம் கூட வரவில்லை.

ஏற்கெனவே பின்தங்கிய சமூகமான இந்தியாவில் ஆண் – பெண்ணைப் பிரித்து வைத்திருக்கும் மரபில், இயல்பாகவே பாலுணர்வு அறியாமையில் மூழ்கியிருக்கும் மக்களை இவை மேலும் கள்குடித்த குரங்காக்கி விடுகின்றன.

இதனால் அமெரிக்கா பரவாயில்லை என்பதில்லை. அங்கே கூடுதலாகக் குரங்கின் காதில் ஒரு கட்டெறும்பையும் போட்டு விடுகிறார்கள். ஹாலிவுட் உருவாக்கியிருக்கும் செக்ஸ் வெறி அனைவரையும் மாயமானைத் தேடி அலைபவர்களாக மாற்றிவிட்டது. ஒரு ஆணும் பெண்ணும் இயல்பாக, இயற்கையாகப் பாலுறவுகொள்ளும் யதார்த்தம், அதீதப் புனைவுடன் பயங்கரமாக, கவர்ச்சியாக, இறுதியில் ஆட்கொல்லி நோயாக மாறுகிறது.

இப்படி உலகெங்கும் ஹாலிவுட் பாணி செக்ஸ் கல்வி காசு பார்ப்பதோடு, நோயும் பரப்புகிறது. இதெல்லாம் ஹாலிவுட்டின் மனிதநேயப் போராளிகளுக்குத் தெரியாமல் போனது ஏன்? ஏனெனில் புகைப்பழக்கம் நேரடியாக நுரையீரலைப் பாதித்து புற்றுநோயைத் தருகிறது. செக்ஸ் வக்கிரமோ நேரடியாக உடலைப் பாதிப்பதில்லை; உள்ளத்திற்கு மகிழ்ச்சி வழங்கும் பெயரில் ரணமாக்குகிறது. இது கூட அமெரிக்க மனிதநேயத்திற்குத் தெரியாமல் போனது ஏன்?

காரணம் – தின்பதற்கும், செரிப்பதற்கும். கழிப்பதற்கும். பார்ப்பதற்கும். இன்னும் அத்தனைக்கும், அதாவது, மாபெரும் நுகர்வு ரசனையை விரித்துக் கொண்டே இருப்பதில்தான் அமெரிக்கா உயிர் வாழ்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால் அடுத்த விநாடியே அமெரிக்கா செத்துப் போய்விடும். எனவே அமெரிக்கா உயிர் வாழ்வதற்கான விதியிலிருந்தே அமெரிக்க மனிதநேயம் எழுகிறது.

அதனால்தான் அதிக மாத்திரைகளைச் சாப்பிடும் பழக்கத்திருந்து மீட்பதற்கு ஒரு புதிய மாத்திரை, இதய நோய் உள்ளவர்களுக்குக் கொழுப்பில்லாத சிப்ஸ், கலோரிகள் அதிகமுள்ள கோக் பானம் குடிப்பதால் வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக டயட் கோக், அப்புறம் பாதுகாப்பான பாலுறவுக்கான ஆணுறை மட்டுமல்ல பெண்ணுறை என்று உடல் நலிவடைந்தோருக்கான அமெரிக்க ‘மனிதநேயக் கண்டுபிடிப்புகள்’ தொடருகின்றன. சிகரெட்டுக்கு மட்டும் அப்படி ஒரு மாற்று வரவில்லை என்பது அதன் தற்போதைய சோகம்.

இத்தகைய பண்பாட்டுப் பிரச்சினைகளில் புகை மீது மட்டும் பகையுடன் சீறும் அத்தகைய ஹாலிவுட் கலைஞர்களும், இந்தக் கட்டுரையில் முதல் பத்தியில் பார்த்த கலகக்காரர்களும் உண்மையில் கலகக்காரர்களல்ல. ஆம். அமெரிக்க அரசும், முதலாளிகளும் ஏதோபோனால் போகட்டுமென்று தள்ளுபடி செய்யும் ஆபத்தில்லாத பிரச்சினைகளில் மட்டுமே அவர்கள் கலக விளையாட்டை ஆடலாம்.

அரேபியர்களையும், வியத்நாமியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் இதுவரை பல கோடி முறை சுட்டுக்கொன்ற ஹாலிவுட்டின் பொம்மைத் துப்பாக்கியின் மீது ஒரு நாய்க்கும் கேவலம் ஒரு பொய்க்கோபம் கூட வரவில்லை. ஆனால் ஹாலிவுட் நடிகன் கையிலிருக்கும் சிகரெட் மட்டும் ஒரு சிறுவனைக் குறிவைக்கும் துப்பாக்கி என்பது அயோக்கியத்தனமில்லையா? மூன்றாம் உலகநாடுகளின் மக்களையும், போராளிகளையும் சிகரெட் பிடிக்காமல் கொன்று குவிப்பது மட்டும் மனதிற்கு ஒழுக்கம் கலந்த உற்சாகமளிக்கிறது என்றால் அந்த மனம் எவ்வளவு அருவெறுப்பாக இருக்கும்? இதுவே இவர்களது ரத்தக்கறை படிந்த கைகள் சொத்து சேர்த்த கதையின் இலட்சணம்.

இதற்கும் மேல் ‘சிகரெட்டைப் புகைப்பது ஒரு தனிமனிதச் சுதந்திரம் என்று தவறாக நினைத்தேன்’ என்று தத்துவம் பேசும் நமது கட்டுரை நாயகருக்கும் எந்தக் காலத்திலும் எந்தச் சுதந்திரமும் இருந்தது கிடையாது. அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால் அமெரிக்காவில் எழுதப்படும் திரைக்கதைகள் ஒரு இயக்குநருக்கோ, ஸ்டுடியோ முதலாளிக்கோ, அச்சுக்கோ, எந்த எழவுக்கும் தரப்பட வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை இருக்கிறது. அது, அக்கதை ”அமெரிக்க நலனுக்கு எதிரானது இல்லை” என்று அமெரிக்க அரச சான்றிதழ் தரவேண்டும். இந்தச் சான்று கிடைக்காதவை குப்பையிலோ, படைப்பாளியின் பாழடைந்த டிரங்குப் பெட்டியிலோ மட்டும் வாழலாம்.

நல்ல வேளை, கோடம்பாக்கத்தில் அனாதையாகச் சுற்றி வரும் திரைக்கதை இளைஞர்கள் பலர் தண்ணியிலிருக்கும் தயாரிப்பாளர்களிடம் தான் வாய்வலிக்கக் கதை சொல்லி அழ வேண்டியிருக்கிறது. அமெரிக்கா போல முதலில் ஜெயலலிதாவிடமும், முரளி மனோகர் ஜோஷியிடமும்தான் கதை சொல்ல வேண்டும் என்ற நிலைமை இல்லை! அப்படிப் பார்த்தால், அமெரிக்காவை விட இந்தியா ஜனநாயக நாடாகத் தெரிகிறதே!

வேல்ராசன்
புதிய கலாச்சாரம், அக்டோபர் 2002.

 1. நம் நாட்டிலும் அது தானே நடந்தது .

  வில்லன் கையில் இருந்த மது பாட்டில்கள் ஹீரோ கையிற்கு போனது .

  மது குடிப்பவர்கள் வாழ்வை என்ஜாய் செய்பவர்கள் என்பது போல காட்டி மற்றவர்கள் வாழ்க்கை அர்த்தம் அற்றது என்பது போல மட்டம் தட்டும் காட்சிகள்.

  மதுவின் வகைகளை பேசி வாழ்க்கையை நுகர பல வழிகள் என்பது போல ஒரு மாய தோற்றம் ஏற்படுத்துவது.

  மதுவை வில்லனாக சித்தரிக்கும் படங்களுக்கு வரி விலக்கு அளிக்காமல் , தமிழில் பெயர் வைத்தால் போதும் என்று மொழி போதையில் ப்ரையாரிட்டி மறந்து விட்டது சமூகம்

  • நான் தம்மடிக்கிற ஸ்டைலைப் பார்த்து…….. விரும்புச்சு. நான் ரம்மடிக்கிற ஸ்டைலைப்பார்த்து….. விரும்புச்சு. (பெயர்களைப்போடாததற்குக் காரணம் தமிழ் ஹீரோ நான் எப்படியிருந்தாலும் தமிழ்ப்பொண்ணு விரும்பும் என்று ஹீரோயிஸம் காட்டியது ஹாலிவுட்டுக்கு சமமில்லையா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க