Tuesday, October 15, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மக்களுக்காக போராடும் தமிழக வழக்கறிஞர்களை ஒழிக்க சதி - முறியடிப்போம்

மக்களுக்காக போராடும் தமிழக வழக்கறிஞர்களை ஒழிக்க சதி – முறியடிப்போம்

-

தமிழனுக்கு ஒரு நீதி! டெல்லிக்கு…?
வழக்கறிஞர் சட்ட திருத்தத்தை ரத்து செய்

அன்பார்ந்த பெரியோர்களே!

சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு34(1)ல் பல்வேறு திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி தவறு செய்யும் வழக்கறிஞர்களை மாவட்ட/உயர்நீதி மன்ற நீதிபதிகளே தண்டிக்கலாம். வழக்கறிஞர் தொழில் செய்ய தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தடை செய்யலாம். வழக்கறிஞர் தவறு செய்தால் நீதிபதிகள் தண்டிப்பது சரிதானே என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால், அது சரியல்ல. வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், பட்டயக்கணக்கர்கள் (Auditor) போன்ற பதிவுபெற்று தொழில் செய்பவர்கள் (Professionals) மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்களால் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுமங்களுக்கு மட்டுமே (Council) உண்டு. நீதிமன்ற விதிமுறைகளை மீறுகிறவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு (contempt of court) வழக்கு தொடுத்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மட்டுமே நீதிபதிகளுக்கு உள்ளது.

வழக்கறிஞர்கள் அடிமைகள் அல்ல
வழக்கறிஞர்கள் அடிமைகள் அல்ல

சட்டப்படியான இந்த நடைமுறையைத்தான் சென்னை உயர்நீதி மன்றம் இப்போது மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் வழக்கறிஞர்களை நீதிபதிகளின் அடிமைகளாக்க முயற்சி செய்கிறது. தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் குழுமத்தின் (Bar Council) அதிகாரத்தை முற்றாகப் பறிக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொண்டு வரப்படவில்லை.

சட்டத் திருத்தத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று கோரி கடந்த 2 வாரமாக தமிழக வழக்கறிஞர்கள் ஒட்டு மொத்தமாக நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். உயர்நீதி மன்ற மதுரைக்கிளையும் ஆர்ப்பாட்டம், நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளது.

புதிய சட்ட திருத்தம் சொல்வது என்ன? நீதிபதியின் பெயரால் வழக்கறிஞர்கள் பணம் வாங்குவது, நீதிபதியை மிரட்டுவது, அவதூறு செய்வது, ஆதாரமற்ற புகார்களை தலைமை நீதிபதிக்கு அனுப்புவது, நீதிமன்ற ஆவணங்களைத் திருத்துவது,  நீதிபதிகளை முற்றுகையிடுவது, நீதிமன்ற வளாகத்துக்குள் ஊர்வலம் நடத்துவது, நீதிமன்ற அறைக்குள் (Court Hall) முழக்க அட்டைகளைப் பிடிப்பது, மது அருந்தி நீதிமன்றத்துக்குள் வருவது, நீதிபதிகளை முறைத்துப் பார்ப்பது, குரலை உயிர்த்திப் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்லாமல் மாவட்ட தலைமை நீதிபதிகளும் இடைநீக்கம் செய்யலாம் என்கிறது இந்த சட்டத் திருத்தம். இதற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கனத்த குரலில் பேசிய ஒரு வழக்கறிஞர் மீது நீதிபதி தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதற்கு எதிராக 516 வழக்கறிஞர்கள்  ஒன்று சேர்ந்து வக்காலத்து தாக்கல் செய்துள்ளனர். மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிபதிகளால் பலவாறாக இப்போது மிரட்டப்படுகின்றனர்.

தென்மாவட்ட வழக்குரைஞர்கள் கடந்த செப்டம்பரில் மதுரையில் நடத்திய ஊர்வலம்
தென்மாவட்ட வழக்குரைஞர்கள் கடந்த செப்டம்பரில் மதுரையில் நடத்திய ஊர்வலம்

தமிழக வழக்கறிஞர்கள் மீது மட்டும் பாயும் இந்தச் சட்டத் திருத்தத்தை தலைமை நீதிபதி இப்போது கொண்டுவரக் காரணம்? கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10ந் தேதி, லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையில் வழக்கறிஞர் பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்ட முன்னணி வழக்கறிஞர்கள் 13 பேர் எவ்வித விசாரணையும் இன்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தை மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வசம் (ஆண்டுக்கு 30 கோடி நமது வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்து) ஒப்படைத்தார் தலைமை நீதிபதி கவுல். மத்திய படை காவலர் ஒருவர், பெண் வழக்கறிஞர்களை அத்துமீறி வீடியோ எடுத்ததை தட்டிகேட்ட 7  வழக்கறிஞர்கள் தடாலடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உயர்நீதிமன்றத்தில் தாய்த்தமிழ் மொழியில் வழக்காட அனுமதிக்க வேண்டும் என்று கோரிய 10 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்கு, சிறை என தண்டிக்கப்பட்டனர். இவ்வாறாக 43 வழக்கறிஞர்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு பெங்களூரு மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது.

தமிழக வழக்கறிஞர்கள் வரலாறு போராட்ட வரலாறு. ஈழத்தமிழர்கள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசு துணை போனதைக் கண்டித்து விடாப்பிடியாகப் போராடிய வழக்கறிஞர்களை ஒடுக்க சென்னை உயர்நீதி மன்ற வளாகத்துக்குள் 19 பிப்ரவரி 2009-ல் காவல்துறை நடத்திய கொலை வெறித்தாக்குதல் நீதிமன்ற வரலாற்றில் கருப்பு நாள். தாய்மொழிப்பற்று சுயமரியாதை, இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, பாரப்பனீயத்தின் ஆதிக்கம், கனிமவளக்கொள்ளை, நதிநீர் உரிமை போன்ற பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் போராடியவர்கள் தமிழக வழக்கறிஞர்களே!

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

43 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின் வழக்கறிஞர்கள் அப்படியே அடங்கி ஒடுங்கிவிடுவார்கள் என்று கருதித்தான் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக, இதனை விரட்டியடிக்காவிட்டால் நமது வாழ்வுரிமை பறிபோய்விடும் என்பதை உணர்ந்த தமிழக வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் மிரட்டலை துச்சமாக்கிவிட்டுப் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். நீதிமன்ற புறக்கணிப்பு செய்தால் சஸ்பெண்ட்! அப்படியானால் ஒட்டு மொத்த தமிழக வழக்கறிஞர்களையும் சஸ்பெண்ட் செய்துவிட்டு நீதிமன்றத்தை நடத்திக் கொள் என்று இப்போது நிமிர்ந்து விட்டது வழக்கறிஞர் சமூகம்.

இதனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட போவது யார்? சட்ட திருத்தத்தினால் வழக்கறிஞர்களை விட மக்களுக்குத்தான் பாதிப்பு அதிகம். நீதிமன்றங்கள் அநீதி மன்றங்களாக மாறி பலகாலம் ஆகிவிட்டது. லஞ்சம், ஊழல், முறைகேடுகளில் சர்வ சாதாரணமாக நீதிபதிகள் ஈடுபடுகின்றனர். அதனைத் தட்டிகேட்கிற வழக்கறிஞர்களை ஒடுக்கிவிட்டால், மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடுகின்ற வழக்கறிஞர்களைக் களையெடுத்துவிட்டால், சாதாரண மக்களுக்காக போராட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, இதனால் மக்களுக்குத்தான் பெரும் பாதிப்பு என்பதை மக்கள் உணர வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆட்லி நார்ட்டன் என்பவருடைய உருவப்படம் ஒன்று உள்ளது. அதன் கீழ் “அனைத்து அச்சங்களிலிருந்தும் விடுபட்டு ஒருவர் சுதந்திரமாகக் கடமையாற்ற விரும்பினால் அவர் வழக்கறிஞராகத்தான் இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே நீதிமன்றம் இந்த சட்டதிருத்தத்தின் மூலம் வழக்கறிஞர்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறது. நீதிமன்றத்திலே கருத்து சுதந்திரம் இல்லை என்றால் அதற்காக எங்கே போய் போராடுவது. நீதிபதிகளும் வழக்கறிஞர்களே! நீதிபதிகள் ஆண்டைகள் அல்ல. வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல! நீதிமன்றத்தின் மாண்பினைக் காக்கவே (Decorum) வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை என்பதாக நீதிபதிகளும் ஊடகங்களும் சித்தரிக்கின்றனர். நீதிபதிகள் ஊழல் செய்கின்றனர் என்பதற்கு எத்தனையோ சாட்சிகள், நிகழ்வுகள் அம்பலமாகி நாறிக் கொண்டிருக்கின்றது. பார் கவுன்சில் உறுப்பினர்கள் பலர் மற்றும் தரகு வேலை செய்யும் ஊழல் வழக்கறிஞர் சிலர் நீதியரசர்களின் நெருக்கத்தில் உள்ளனர். அவர்களை உடன் வைத்துக்கொண்டு நீதித்துறையை சுத்தப்படுத்துவேன் என்று கொக்கரிப்பது கேலிக்கூத்தாகும். நீதிபதிகளின் உயரிய மாண்புகளின் மூலமாகவே வழக்கறிஞர்கள் அவர்களை மதிப்பர். மாண்பொழிந்து போனவர்கள் மீது எப்படி மதிப்பு வரும்?!

சட்ட திருத்தத்தை எதிர்த்து திண்டுக்கல்லில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் பேரணி
சட்ட திருத்தத்தை எதிர்த்து திண்டுக்கல்லில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் பேரணி

சாமான்ய மக்களின் இறுதிப்புகலிடம் நீதிமன்றம் என்ற மாயை மக்களிடம் தகர்ந்து வருகிறது. கீழ்நிலை நீதிமன்றங்களின் படிக்கட்டுகள் தொடங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உள் அறை வரை லஞ்சம், ஊழல், முறைகேடுகள், பாலியல் வக்கிரங்கள் பெருகியுள்ளன. ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு ஒன்றே இதற்கு சாட்சி. நீதிமன்றங்களின் இந்த ஈன நிலையைத் திருத்த முடியாத நீதிபதிகள் தங்களுக்கு ஆபத்து என்று முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு ஓலமிடுகின்றனர். எதிர்த்துப்போராடும் தமிழக வழக்கறிஞர்களைப் பழி தீர்க்கின்றனர். நீதிபதிகள் மகா யோக்கியர்கள் போலவும் வழக்கறிஞர்களை ரவுடிகளாகவும் சித்தரித்துப் பேசினார் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து. ஊடகங்களும் வழக்கறிஞர்கள் பற்றிய தவறான கருத்துகளைப் பரப்புவதில் முனைப்புக்காட்டுகின்றன. நீதிபதிகளைப் புனிதர்கள் போல சித்தரிக்கின்றன.

வழக்கறிஞர்களை எளிதில் தண்டிக்க சட்டதிருத்தம் கொண்டு வரும் நீதிபதிகளை லேசில் தண்டிக்க முடியுமா? பல்வேறு விசாரணைக் கட்டங்களைத் தாண்டி இறுதியாக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே பணி நீக்கம் செய்ய முடியும். இதுவரை யாரும் அப்படி பணிநீக்கம் செய்யப்படவுமில்லை. வழக்கறிஞர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. அரசாங்கம் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை. ஆனால் அவர்களது தொழில் உரிமையைப் பறிக்க மட்டும் சட்டம் உள்ளது. நீதிபதிகளின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஆளும் கட்சியும், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் சிலரும் நியமனங்களை கமுக்கமாகப் பகிர்ந்துகொள்கின்றனர். இதனை எதிர்த்து தமிழக வழக்கறிஞர்கள் போராடுகின்றனர்.

பொதுப் பிரச்சினைக்காகப் போராடிய 43 வழக்கறிஞர்களை தலைமை நீதிபதி கவுல் கூட்டாளிகளின் தூண்டுதலின் பேரில் சஸ்பெண்ட் செய்த இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா, பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜேஎன்யு மாணவர் கன்னையன் குமாரையும், பேராசிரியர்களையும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கிய டெல்லி வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறினார் மனன்குமார் .மேலும் நீதிமன்றத்துக்குள்ளே – பாரத் மாதா கி ஜெய்- என்று கோஷம் போட்ட வழக்கறிஞர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழன் என்றால் உடனே நடவடிக்கை பாய்கிறது. வடவன் என்றால் பம்முகிறது.

அனைத்து அச்சங்களிலிருந்தும் விடுபட்டு ஒருவர் சுதந்திரமாகக் கடமையாற்ற விரும்பினால் அவர் வழக்கறிஞராகத்தான் இருக்க வேண்டும்
அனைத்து அச்சங்களிலிருந்தும் விடுபட்டு ஒருவர் சுதந்திரமாகக் கடமையாற்ற விரும்பினால் அவர் வழக்கறிஞராகத்தான் இருக்க வேண்டும்

அண்மையில் ஆந்திராவுக்கு மாறுதலாகிப் போயுள்ள நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், – “நான் போராட்டக்களத்தை விட்டு ஒடிப்போய் விடவில்லை. குறிப்பிட்ட தொலைவில் என்னை நிலை நிறுத்தியுள்ளேன். தலைமை நீதிபதியுடன் எப்போதும் தொடர்பில் உள்ளேன். அங்கிருந்து கொண்டு உரிய நேரத்தில் எனது எதிரிகளை ஏவுகணை மூலம் தாக்குவதற்கு தயார் நிலையில் உள்ளேன்” என்று தனது பிரியா விடை நிகழ்ச்சியில் பேசினார். போராடும் வழக்கறிஞர்கள் மீது அவர் கொண்டுள்ள வன்மம் ஒரு பானைச் சோற்றுக்குப் பதம்.

எனவே இன்றைய நீதித்துறையின் கட்டமைப்பு அம்பலப்பட்டு திருத்த முடியாத நிலையில் சீரழிந்து நிற்கிறது. அதைச் சீர்திருத்த வக்கற்றுப்போன தலைமை நீதிபதி கவுல் கூட்டாளிகள் சட்டத் திருத்தம் என்று நீதிமன்றப் பாசித்தைக் கட்டவிழ்த்துள்ளனர். அம்பலப்பட்டு நாறிப்போயுள்ளவர்களின் இந்த ஆணவக் குரலுக்கு அஞ்சாமல் வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்கிறது. மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்துப் போராடுகிற அவர்களுக்கு ஆதரவாக மக்களாகிய நாம் நமது ஆதரவைத் தந்து இணைந்து போராடுவோம்!

  • வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறு !
  • 43 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனே ரத்துசெய்!
  • மக்களுக்காகப் போராடும் தமிழக வழக்கறிஞர்கள் மீது வன்மம் வைத்துப் பழி தீர்க்கும் தலைமை நீதிபதி கவுலை பணியிடமாற்றம் செய்!
  • இந்தியாவில் எங்கும் இல்லாத கருப்புச் சட்டம் தமிழன் மீது மட்டுமா?
  • பார்கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து வழக்கறிஞர் சமூகத்தை நீதிபதிகளின் கொத்தடிமையாக்காதே!
  • உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களே! மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்களுடன் இணைந்து போராடுங்கள்!

உழைக்கும் மக்களே!

வழக்கறிஞர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக அணி திரள்வோம்! போராடுவோம்!

ஆர்ப்பாட்டம்

நாள்: 27.06.2016 திங்கட்கிழமை காலை 10.30 மணி
இடம்: அண்ணா நகர் பேருந்து நிலையம் (அம்பிகா திரையரங்கு அருகில்) மதுரை.

தலைமை: வழக்கறிஞர் பா.நடராஜன் துணைத் தலைவர், ம.உ.பா.மையம், மதுரை.

கண்டன உரை:
வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்
திரு. ம. லயனல் அந்தோணிராஜ் மாவட்ட செயலாளர், ம.உ.பா.மையம்
தோழர் கதிரவன்   ம.க.இ.க. தமிழ்நாடு.
தோழர் குருசாமி, தோழர் மோகன், மக்கள் அதிகாரம். அமைப்பாளர்கள்
பேரா.அ.சீனிவாசன் ம.கா.பல்கலை பாதுகாப்புக் குழு
பேரா.இரா.முரளி, துணைத் தலைவர்   மக்கள் சிவில் உரிமைக் கழகம்
வழக்கறிஞர் கனகவேல் சமநீதி வழக்குரைஞர் சங்கம், மதுரை.
வழக்கறிஞர் ராஜேந்திரன் சமநீதி வழக்குரைஞர் சங்கம், மதுரை.
வழக்கறிஞர் நெடுஞ்செழியன்   து. தலைவர் மதுரை வழக்கறிஞர் சங்கம்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக்கிளை
150-இ, ஏரிக்கரை சாலை, கே.கே.நகர், மதுரை-20.
தொடர்புக்கு 9443471003

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க