privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் மக்கள் மாநாடு - செய்தி படங்கள்

அரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் மக்கள் மாநாடு – செய்தி படங்கள்

-

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மக்கள் உரிமை பாதுப்பு மையம் நடத்திய

6-வது கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – 2016

அரசுப் பள்ளியே நமது பள்ளி !
கல்வி ஒரு சேவையே! வணிகமல்ல!!
கல்வி வியாபாரத்தை புறக்கணிப்போம்!

puser-rally-01ல்வி தனியார்மய ஒழிப்பு மாநாட்டின் துவக்கமாக 25-06-2016 சனிக்கிழமை மாலை சரியாக 4.00 மணிக்கு பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 500 பேர் விருத்தாசலம் சந்திப்பு சாலையில் உள்ள திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயில் முன் திரண்டனர். பேரணியில் தனியார்மய பள்ளி ஒழிப்பு மாநாடு விளம்பர பதாகையைக் கையில் பிடித்துக்கொண்டு அணிவகுத்தனர்.

பெற்றோர் சங்க தலைவர் வை.வெங்கடேசன், “பெற்றோர்களுக்கு தனியார் பள்ளியின் பால் உள்ள மோகம் அறவே நீக்கப்பட வேண்டும். அனைத்து சமுதாய ஏற்றத் தாழ்வுகளையும், சாதிய வேறுபாடுகளையும் நீக்கி, மாணவர்களிடம் ஒருமித்த வளர்ச்சியை உருவாக்கும் அரசுப்பள்ளி. அரசுப் பணி புரிந்து அரசின் சம்பளம் பெறும் அனைவரும் கட்டாயம் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதன் மூலம் அரசுப் பள்ளியின் தொய்வைப் போக்க முடியும்” என்று கூறி சரியாக 4.30 மணிக்கு பேரணியை துவக்கி வைத்தார்.

பேரணியில் “அரசுப் பள்ளியே நமது பள்ளி!”, “கல்வி தனியார் மயத்தைப் புறக்கணிப்போம்.”, “தாய்மொழி கல்வியைப் போற்றுவோம்.” போன்ற முழக்கங்களுடன் பேரணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துகொண்டு மாநாடு பந்தலை வந்தடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாநாட்டு உரைகள்:

ஜீன் 25 சனி மாலை 5மணி, வானொலித் திடல், விருத்தாசலம்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் பெற்றோர் சங்க துணைத் தலைவர் திரு.வா.அன்பழகன் தன்னுடைய உரையில் மாநட்டுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றதுடன், பசுமைப் புரட்சி, வெண்மை புரட்சி என்பது போல கல்வியிலே புரட்சி ஏற்பட வேண்டும். பெற்றோர்கள் அரசுப் பள்ளியிலே தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று பேசினார்.

puser-conference-11மாவட்ட தலைவர் திரு.வை.வெங்கடேசன் தன்னுடைய உரையில், “ மத்திய அரசு பள்ளி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசிடம் பல கோடி கொடுத்தும் அவற்றைச் சரியானபடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பும் அவல நிலை தமிழ்நாட்டில் உள்ளது. இதை மத்திய அரசின் நிதிக்குழு வன்மையாக கண்டித்துள்ளது. 1353 பள்ளிக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று வரை ஒரு பள்ளிக்குக் கூட புதிய கட்டிடம் கட்டித்தரப்படவில்லை. 4000 பள்ளிகளுக்கு சரியான வசதிகளைச் செய்து தரவேண்டும் என்று மத்திய குழு வற்புறுத்தியுள்ளது செய்யவில்லை. ஆயிரக் கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தரமான கட்டிடவசதி இல்லை. இந்த அவல நிலையை போக்க நாம் கூக்குரலிடவேண்டும். போராடாமல் வெற்றிபெற முடியாது. அரசுப் பள்ளியில்தான் சமூக ஏற்றத் தாழ்வற்ற கல்வியைப் பெற முடியும். ஆகவே நீங்கள் நமது பிள்ளைகளை அரசுப் பள்ளியிலேயே சேர்ப்போம் என சபதம் ஏற்கவேண்டும்” என்றார்.

மருத்துவர் செல்வம், மருத்துவர் டேவிட், தோழர் பாரதி தம்பி, அன்பழகன், செந்தாமரைக் கந்தன், சிறுத்தொண்ட நாயனார் ஆகியோர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். ஒவ்வொரு மாணவருக்கும், பரிசு, மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மருத்துவர். செல்வம், விருத்தாசலம் : “எனது MBBS படிப்பு சென்னையில் நடைபெற்றது. நான் அரசுப் பள்ளியில், அதுவும் தமிழ்வழியில் எனது துவக்கக் கல்வியை துவங்கி இன்று ஒரு முழுமையான சேவை செய்யும் மருத்துவராகத் திகழ்வதற்கு தாய்மொழிக் கல்வியும், அரசுப் பள்ளியும் என்றால் அது மிகையன்று. எனது துவக்கப்பள்ளி படிப்பையும் அதற்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் பெருமக்களையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த பசுமையான நினைவுகள் என்னைவிட்டு அகலாதவை” என்றார். மாநாட்டிற்கு வந்திருந்த ஒவ்வொருவரும் தங்களுடைய கடந்த கால பள்ளிப்படிப்பை நினைவு கூறும் வகையில் அவருடைய பேச்சு இருந்தது.

puser-conference-15புரட்சிகர கலைக்குழு தோழர்கள் “படிப்பை கெடுத்திட்டியே அம்மா” என்ற பாடலை பாடினார்கள். இந்தப்பாடல் அரசுப்பள்ளியைப் புறக்கணித்து தனியார் பள்ளிக்கு ஊக்கம் கொடுப்பதை கண்டிப்பதாக அமைந்திருந்தது.

கற்க கசடற தொடர் பாரதிதம்பி, பத்திரிக்கையாளர், ஆனந்த விகடன், சென்னை :

“தனியார் பள்ளியில் ஒழுக்கம் கட்டுப்பாடு உள்ளதாக பெற்றோர்கள் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. தவறான முடிவை எடுத்து கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளியில் நமது பிள்ளைகளைச் சேர்த்து வறுமையடையக் கூடாது. அரசு நியமித்த கோவிந்தராசு கமிட்டி ஒரு அறிக்கை கொடுத்து அந்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக தனியார் பள்ளிகள் வசூல் செய்கின்றன. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகத்தான் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. அங்கு மாணவருக்கும், பெற்றோருக்கும், ஆசிரியருக்கும், நிர்வாகத்திற்கும் ஒரு இணக்கம் கிடையாது. அரசுப்பள்ளியில் அப்படி இல்லை. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தன்னிடம் படிக்கும் பிள்ளைகளிடம் நெருங்கிப்பழகி, அவனது பெற்றோரைச் சந்தித்து குடும்ப நிலையை, மாணவர் நிலைமையைப் புரிந்து கொண்டு கற்பிக்கிறார்கள்.

puser-conference-10

“தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பிணைக் கைதிகளைப் போல நடத்தப்படுகிறார்கள். மாணவர்களை துன்புறுத்துகிறார்கள். நாம் அவர்களை எதுவும் கேட்க முடியாது. ஏனெனில் நமது மாணவர்கள் உயர்ந்த மதிப்பெண் பெற்று மருத்துவர், பொறியாளர்களாக ஆகவேண்டும். இதற்கிடையில் எது நடந்தாலும் பரவாயில்லை என்று தனியார் பள்ளிகள் செய்யும் அக்ரமங்களையெல்லாம் சகித்துக்கொள்கிறோம். நமது சுயமரியாதையை இழக்கிறோம். கேவலப்படுத்தப் படுகிறோம். நாம் அரசுப் பள்ளியைக் கண்காணித்து ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய உதவி செய்தோமானால் நல்ல முழுமையான கல்வி பெற்ற நமது பிள்ளைகளைப் பார்க்க முடியும். எப்போதோ உள்ள நடைமுறையை வைத்து அனைத்து அரசுப்பள்ளியும் மோசம் என முத்திரை குத்தி விடுகிறோம். இப்போது அப்படி இல்லை. அரசுப் பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளிக்கு சவாலாக மதிப்பெண் பெறுகிறார்கள். அரசுப்பள்ளியை அரசு ஒரு போதும் தூக்கி நிறுத்தாது. நாம் தான் இதற்காகப் போராட வேண்டும். அரசுப் பள்ளியே நமது பள்ளி என்ற முழக்கத்தை முன்னெடுப்போம்” என்றார்.

puser-conference-13புலவர் சிவராம சேது : “மதிப்பெண் மட்டுமே கல்வி வளர்ச்சிக்கு உதவுமா? இதைப் பற்றிய செய்தியைப் பத்திரிகை மூலமே பேசுகிறோம். ஆங்கிலம் படித்தவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்று முன்னேறுகிறார்கள் என்பது மாயை. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பு பெறமுடியாது என்பது உண்மையல்ல. இராமநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த 5 மாணவர்கள் MBBS-ல் இடம் பிடித்துள்ளார்கள். இந்த 5 மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள்.

தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தொடர்புடைய ஆசிரியர்களே விடைக்கான துண்டுச் சீட்டு கொடுத்து பிடிபட்ட செய்தியை நாம் செய்திதாள் மூலம் காண்கிறோம். எப்படியாவது மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்ணை காட்டி கல்விக் கொள்ளை அடிக்கிறார்கள். மதிப்பெண் பெறுவதால் மட்டுமே ஓர் உன்னதமான மாணவனை உருவாக்கிட முடியாது. 9 மாணவர்களுக்கு ஆசிரியர்களே துண்டுச் சீட்டு கொடுத்து பிடிப்பட்டு இன்று அந்த 9 மாணவர்களும் எதிர்காலத்தை இழந்து நிற்கிறார்கள். ஒரே இடத்தில் உட்காரவைத்து விடை எழுதிய செய்தியெல்லாம் நாம் பார்க்கிறோம். அவர்களின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிந்தனை திறனை வளர்க்க நல்ல விஞ்ஞானிகளை உருவாக்க மதிப்பெண் மட்டுமே உதவியாக இருக்க முடியாது.”

puser-conference-14டாஸ்மாக் போராளி. மாணவர் மாரிமுத்து, சென்னை:

“அரசுப் பள்ளியில் கட்டமைப்பு வசதி இல்லை. சிறுநீர் கழிப்பிடம் சரியாக இல்லை. இருக்கும் பள்ளிகளில் சரியாக பராமரிக்கப் படுவதில்லை. வீட்டிலும் பிரச்சனைகளை எதிர்கொண்டு விட்டு பள்ளியிலும் சரியாக படிக்க முடியாமல் தினம் தினம் நாங்கள் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். பள்ளி மாணவர்களாகிய நாங்கள் எங்களுடைய எதிர்காலத்திற்கும் தயாராக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான் 48 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தேன். சமுதாய விழிப்புணர்ச்சிக்காக டாஸ்மாக் போராட்டத்தில் இறங்கினேன் அரசுப் பள்ளிகளின் உயர்வுக்காக போராடுவோம்! வெற்றிபெறுவோம்!!” என்றார்.

பேராசிரியர் சந்திரசேகரன்:

puser-conference-16“பல்வேறு பரிசுகள் இங்கு வழங்கப்பட்டன. பரிசு கொடுத்தவர்களையும், பரிசு பெற்றவர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். தமிழ் வழிக் கல்விகற்றேன், நான் ஒரு சிறந்த பேராசிரியராக பணி புரிகிறேனா என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.

அரசுப் பள்ளியில் பிள்ளைகளை சேர்த்துள்ள பெற்றோர்கள் அவர்கள் வீட்டில் படிக்கிறார்களா என கண்காணிக்கவேண்டும். நீங்கள் சீரியல் பார்ப்பதை அறவே விட்டுவிட வேண்டும். பிச்சை புகினும் கற்கை நன்றே என்றார் ஔவையார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அனைத்தும் வணிக மயமாகி வருகிறது, கல்வியையும் வணிகமயமாக்குகிறார்கள். அரசுப் பள்ளியை உயர்த்திப் பிடித்து எதிர்கால சமுதாயத்தின் உயர்வுக்கு துணை நிற்போம் என்றார். அறிவினால் ஆகுவது உண்டோ என்ற குறளில் பிறர் துன்பத்தை தன் துன்பமாக கருதுவது தான் உண்மையான வளர்ச்சி” என்றார்.

மருத்துவர் வள்ளுவன், விருத்தாசலம் :

puser-conference-17“கல்வி நிதியைக் களவாடுகின்றன நகராட்சிகள், உள்ளாட்சிகள் மாநகராட்சிகள். கல்விக்காக ஒதுக்கப்படும் 2.5 சதவித கல்விக் கட்டணம் கொள்ளையடிக்கப்படுகிறது. 2006-ம் ஆண்டின் புள்ளி விவரப்படி 33,103 மின் இணைப்புகள் வீடு, வணிகம், சொத்து வரிவிதிப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. 16,201 வீடுகளுக்கு சொத்து வரி விதிக்கப்படாமல் உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 50 கோடி இழப்பு. இதற்கு யார் குற்றவாளிகள்? நகராட்சி நிர்வாக ஆணையர்கள் நமது வரிப் பணத்தில் சம்பளம் பெற்று கொண்டு அரசியல் வாதிகள் கொள்ளையடிக்க பங்கு போட்டுக் கொள்ள துணை நிற்கிறார்கள்.

கல்வி நிதியைப் பொருத்தவரை சரியாக நிர்வகிக்கப்படவில்லை A பிரிவு மனை, B பிரிவு மனை, C பிரிவு மனை என மூன்று பிரிவாக நமது நகரத்தைப் பிரித்து வரிவிதிக்கிறார்கள். நம்மிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு ஊழல் செய்தால் தமிழ் நாட்டில் நேர்மையான நிர்வாகத்தை எப்படி பெறமுடியும்.

குடிநீர் வசதி சரியில்லை. 90,000 மக்கள் தொகைக்கு ஏற்ற வசதி இல்லை. தொலை நோக்கு திட்டமில்லை. நம் நாட்டில் இல்லாத வளமில்லை. மக்கள் வரிப்பணம் சீரழிக்கப்படுகிறது.

இங்குள்ள வணிக சங்கங்கள், விருதை நகர மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிலுவையில் உள்ள 52 கோடி வரி நிலுவையை வசூல் செய்யுங்கள். பிறகுதான் நாங்கள் வரிசெலுத்துவோம் என போராடவேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.

வழக்கறிஞர் புஷ்பதேவன் :

puser-conference-18“தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் விருத்தாசலத்தில் 33 நகராட்சிகள், வார்டுகள் உள்ளன என்று தகவல் பெறப்பட்டுள்ளது. நகராட்சிப் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து ரூ.5 லட்சம் வீதம் பலமுறை கொள்ளையடித்துள்ளார்கள். காத்தாடி போட்டோம், டைல்ஸ் போட்டோம், மின்விளக்கு போட்டோம் என்று செலவு காண்பித்து இலட்சக்கணக்கில் பணத்தைக் களவாடி இருக்கிறார்கள். நகராட்சியில் என்ன செய்தார்கள்? எப்படி கொள்ளையடித்தார்கள் ? என்பதை விருதைவாழ் மக்கள் கூட்டம் முடிந்து போகும்போது நகராட்சி பள்ளிகளை ஒரு தடவை சென்று பாருங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

மங்கையர்கரசி, யோகா ஆசிரியை, விருத்தாசலம்:

puser-conference-09“நமக்கு எப்போது ஒரு விஷயம் தலைவலியாக இருக்கிறதோ, அப்பொழுதுதான் அந்த விஷயம் ஒழித்தே தீர வேண்டும் என்ற வேகம் வரும். கல்வி தனியார் மய ஒழிப்பு யாருக்கு இது தலைவலியாக இருக்கு என்று பார்த்தோமானால், பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும்தான். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் நிறைய மதிப்பெண் வாங்கி டாக்டராக வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் சுயசிந்தனை என்பதை அழித்துவிட்டு வெறும் மதிப்பெண் வாங்கும் கல்வியை மட்டுமே வழங்குகிறார்கள். சுயசிந்தனை இல்லாமல் ஆளுமைத்திறன் இல்லாமல் வெளிவரும் மருத்துவ மாணவன் எப்படி உண்மையான மருத்துவ சேவையை சமூகத்துக்கு செய்ய முடியும்? என பெற்றோர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும், தனியார் பள்ளியில் படித்தவர்கள் நல்ல பண்பாடு உடையவர்களாக உருவாக்கப்படுவார்கள் என்றால், ஏன் இத்தனை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது? நன்றாக படிக்கத் தெரிந்தவர்கள்தான் சிகரெட், குடிபழக்கத்திற்கு ஆட்படுகிறார்கள். நமக்கு அருகாமையில் யாரெனும் கீழே விழுந்தால்கூட நமக்கென்ன என்று ஓடி ஒளிந்துவிடுகிறோம். நமக்கென்ன? என்ற நிலை, கூடவே மனித நேயம் அறவே இல்லாத நிலை பெருகி வருகிறது. அரசு பள்ளியில், உங்கள் பிள்ளைகளை சேருங்கள். பெற்றோர்கள் அரசு பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து உங்கள் பிள்ளைகள் எப்படி படிக்கிறார்கள்? என்று கேளுங்கள். தனியாக கேட்டால் பிரச்சினையாக இருந்தால் எங்கள் அமைப்போடு தொடர்பு கொள்ளுங்கள். சிறு விஷயத்தை ஏன் கஷ்டமாக மாற்றி கொள்கிறீர்கள். பள்ளியிலே உனக்கு படிப்பு வராது என்று வெளியேற்றப்பட்ட மாணவனின் கண்டுபிடிப்பில் தான் இன்று பள்ளிக்கூடம் வெளிச்சத்தில் இருக்கிறது என்று தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றியும், தமிழ்நாட்டிலே அப்துல் கலாம் அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர்தான் என்று சுட்டிக்காட்டி இது ஏன் நமக்கு தெரியவில்லை? அரசுப் பள்ளியே நமது பள்ளியே” என்று கூறி தன்னுடைய உரையை முடித்தது வந்திருந்த அனைவரிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருந்தது.

மாநாட்டுத் தீர்மானங்கள்

puser-conference-011. கல்வி வியாபாரத்தை தடைசெய்து மத்திய மாநில அரசு சட்டம் இயற்றவும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியில் அனைவருக்கும் அரசே வழங்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

2. அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக அறிவித்து மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், போன்றவற்றை அரசே செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

3. 25 சதவீத இலவச ஒதுக்கீடும், கல்விக் கட்டணம் என்ற பெயரில் அதற்காக வழங்கப்படும் மக்கள் வரிப்பணமும் தனியார் பள்ளிகளை பாதுகாக்கவே. இதைக் கைவிட்டு அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

4. அரசுப் பள்ளியில் தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக் கொள்கிறது.

5. அரசுப்பள்ளிகளில் உரிய கட்டமைப்பு இல்லாத சூழலிலும் அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி அதிக தேர்ச்சி கொடுக்க பாடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களை இம்மாநாடு ஒரு மனதார பாராட்டுகிறது.

puser-conference-026. அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், போதிய வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், போதுமான கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், ஆய்வுக்கூடம், நூலகம், சுற்றுச்சுவர், போதிய ஊழியர்கள், ஆகிய கட்டமைப்பு வசதிகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்து, அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, அரசாணை நிலை எண் 270, (எக்ஸ் 2) துறை, நாள் 22,10,2012 ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.

7. கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மாநிலத்திலேயே கடலூர் மாவட்டத்தை கல்வியில் முதல் மாவட்டமாக உயர்த்த நமது மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் பாடுபடுவது என ஒரு மனதாக தீர்மானிக்கிறது.

8. அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவர்களை அரசு நிதி உதவி கொடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

9. சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்புப்படி தனியார் பள்ளிகளில் “மெட்ரிகுலேஷன் பள்ளிகள்” என்ற பெயரை எடுத்துவிட விரைவில் உத்தரவு வழங்குமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக்கொள்கிறது.

10. அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி மாணவர்களின் கல்லி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையம் இணைந்து 19-06-2016 அன்று ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கலந்து கொள்ளச் செய்து நடத்திய விழிப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டத்திற்கு ஆதரவு தராத கடலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அவர்களை இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக்கொள்கிறது.

11. கடந்த 10 ஆண்டுகளாக கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியால் நகராட்சி பள்ளிகள் பராமரிப்பில் நடைபெற்ற கல்வி நிதி செலவில் லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசை இம்மாநாடு ஒரு மனதாக கேட்டுக் கொள்கிறது.

12. மத்திய அரசு 2010-11 மற்றும் 2011-12 ம் ஆண்டுகளில் கல்வி நிதியாக அளித்த பலகோடி ரூபாயை உரிய காலத்தில் பள்ளி பராமரிப்பிற்கு செலவிடாமல் கிடப்பில் போட்டுள்ளதும், செலவிடாமல் மத்திய அரசுக்கு திருப்ப அனுப்ப இருப்பதும் குறித்து இம்மாநாடு தமிழ்நாடு அரசை ஒரு மனதாக வண்மையாக கண்டிக்கிறது.

(வை.வெங்கடேசன்),

மாநாட்டுக்குழுத் தலைவர் மற்றும், மாவட்ட தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான, பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம், கடலூர் மாவட்டம்,
தொடர்புக்கு : 93450 67646