privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்டாஸ்மாக் - சமஸ்கிருதம் - நீதித்துறை பாசிசம் எதிர்ப்பு போராட்டங்கள் !

டாஸ்மாக் – சமஸ்கிருதம் – நீதித்துறை பாசிசம் எதிர்ப்பு போராட்டங்கள் !

-

களச் செய்திகள் – 04/07/2016

1. சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம் – திருநெல்வேலி பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

rsyf-tnl-sanskrit-protest-1“மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் 28-06-2016 அன்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மாலை 4.00 மணிக்கு பு.மா.இ.மு. தோழர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பேராசிரியர் அமலநாதன் தனது உரையில் “தாய்மொழியை காப்பதிலும் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதிலும் தொடர்ந்து பணியாற்றிவரும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிக்கு நன்றி. இந்தியா ஒரு பல மொழி பேசும் மக்கள் வாழும் இடம். இந்த சமஸ்கிருதம் வருவதற்கு முன்பாக இங்கு பல தேசிய இன மக்கள் வாழ்ந்த இடம் இந்தியா. திராவிட நாகரிகம், திராவிட மொழிகளெல்லாம் அதற்கு முன்பாக இங்கு இருந்தது. கி.மு. 18-17-ம் நூற்றாண்டின் போதுதான் இந்த சமஸ்கிருதம் ஆரியர்களால் கொண்டுவரப்படுகிறது. உலகின் மூத்த மொழியான தமிழ் மக்களின் பல்வேறு வாழ்நிலைகளை அவர்களின் வாழ்க்கை பிரச்சினைகளை பேசுகிறது. மக்களால் இன்றும் அன்றாட வாழ்வில் பேசப்பட்டு வருகிறது.

rsyf-tnl-sanskrit-protest-2ஆனால் சமஸ்கிருத மொழியானது எந்த ஒரு உழைக்கும் மக்கள் பிரச்சனைகளை பேசுவதில்லை. பெரும்பான்மை உழைக்கும் மக்களால் பேசப்படுவதுமில்லை. அது கோவில்களில் ஒரு குறிப்பிட்ட பார்பனர்களால் கடவுளிடம் வழிபாடு நடத்த மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அனைத்து மக்களுக்குமான மொழியாக சமஸ்கிருதம் இருந்ததில்லை. இப்போது ஏன் அதை ஒரு கட்டாய பாடமாக கொண்டு வர வேண்டும். தேவையில்லை. பொதுமக்களே எல்லா பிரச்சனைகளையும் நாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கிறோம். நமது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எங்கோ இருந்து ஒரு நாயகன் ஹீரோ வருவான் என்று எதிர்பார்க்கிறோம். நாம் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொணடு இருந்தால் பிரச்சனை தீராது. அனைவரும் இத்தகைய போராட்டங்களில் பங்கேற்று மத்திய அரசின் இந்த சமஸ்கிருத திணிப்பை முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

rsyf-tnl-sanskrit-protest-3சிறப்புரை ஆற்றிய வழக்கறிஞர் லயனல் அந்தோணிராஜ்

rsyf-tnl-sanskrit-protest-4ஒரு பண்டம் இருக்கு. சாப்பிட நல்ல ருசியா இருக்குது. அதைவிட்டுட்டு ருசி குறைஞ்ச இன்னொரு கேடான பண்டத்தை சாப்பிட சொன்னால் எப்படி? இனிய தமிழ் மொழி இருக்க கேடான சமஸ்கிருத மொழி எதற்கு? உலகத்திலேயே பழமையான மொழிகளான தமிழ் மற்றும் லத்தீன் மொழிகளில் லத்தீன் மொழி இன்றைக்கு அழிந்து போய்விட்டது. தமிழ் மொழி அன்றிலிருந்து இன்று வரை இளமையாக உலகின் அநேக மக்களால் பேசப்பட்டு வருகிறது. சமஸ்கிருத மொழியும் ஒரு செத்த மொழிதான். அது திரும்ப வளராது. வளருவதற்கு அதனிடம் ஒன்றுமில்லை. அதனால்தான் அதை குறுக்கு வழியில் புகுத்துகிறார்கள்.

ஆங்கில மொழி இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்களுக்கு தொடர்பு மொழியாக வந்தது. அதை முதலில் கற்றவர்கள் பார்ப்பனர்கள்தான். ஆங்கிலேயரிடம் தொடர்பு ஏற்படுத்தி ஆதாயமடைவதற்காக ஆங்கில மொழியை பார்ப்பனர்கள் தான் முதலில் கற்று அவர்களது மொழிக்கு துரோகமிழைத்தார்கள்.

இந்தி மொழி நுழைப்பை 1965-ல் முறியடித்தவர்கள் நாம். நம்மிடம் நேரடியாக வந்தால் நாம் எதிர்ப்போம் என்று இப்போது புறவாசல் வழியாக வருகிறார்கள். இதற்கு மானங்கெட்ட ஊடகங்கள் முழுவதும் துணைபோகின்றன. மத்திய அரசு விளம்பரங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளில் தான் ஒளிபரப்ப வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் மானங்கெட்ட ஊடகங்கள் இந்தி மொழியை அப்படியே வெளியிடுகின்றன. புறவாசல் வழியாக திணிக்கிறார்கள்.

சமஸ்கிருதமொழி பார்பனர்களின் சாதி அமைப்பை பாதுகாக்ககூடியது. நாட்டில் படித்தவர்களுக்கு வேலையில்லை. நித்தமும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடக்கிறது. நேற்றுக்கூட சென்னையில் பட்டப்பகலில் ஒரு பெண் படுகொலை செய்யப்பபட்டுள்ளார். இதைப்பற்றியெல்லாம் மோடிக்கோ அம்மாவுக்கோ கவலையில்லை. ராமயாணத்தை பற்றி பேசியதற்காக சிறையில் போடுகிறார்கள். புத்த மதத்தை இந்து மதம் என்கிறார்கள். அம்பேத்கரை இந்து மதம் என்கிறார்கள். காந்தி இந்து மதத்தை ஆதரித்தார் என்கிறார்கள். ஒரு சாதிக்கெதிராக இனனொரு சாதியை மோதவிடுவது.

ஆர். எஸ். எஸ். பி.ஜெ.பி வேலையே பொய் பித்தலாட்டம் செய்வதுதான். நான் சவால் விடுகிறேன் அம்பேத்கரின் நூல் ஒன்றையாவது இவர்கள் படித்தது உண்டா? இந்து மதத்தை அம்பேத்கர், பெரியார் அளவுக்கு தோலுரித்தவர்கள் உண்டா? ராமயாணத்தை யோக்கியதையை அம்பேத்கர் தெளிவாகவே விளக்கிவிட்டர். தயவுசெய்து இன்று பிற்படுத்தபட்டவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டவர்கள, தலித்துகள் அதை முதலில் படிக்கவேண்டும். அப்போது தான் இவர்களின் அண்டப்புளுகு தெரியும்.

rsyf-tnl-sanskrit-protest-5அமைச்சர் தருண்விஜய்க்கு தமிழ் மீதும் திருக்குறள் மீதும் காதலாம். திருவள்ளுவர் சிலையை கொண்டுபோய் கங்கையில் வைக்கபோகிறாராம். திருவள்ளுவர் சிலையை கருணாநிதி திறந்துவைத்தார். அவரோடு நமக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும் அவருக்கு அதுக்கு ஒரு தகுதி இருக்கு. கங்கையில திருவள்ளுவர் சிலையை வைத்து என்ன செய்யப்போகிறாய். எவனுக்காவது திருக்குறளை பற்றி அங்கே தெரியுமா? தெரியாது. திருவள்ளுவரை ஏதோ ஒரு இந்து முனிவர் என்று கருதுவான். இவர்களோட நோக்கமும் அதுதான். நான் கேட்கிறேன். தருன் விஜய்க்கு ஒரு திருக்குறளாவது தெரியுமா? அதன் பொருள் தெரியுமா? தெரியும்ன்னு சொன்னா நான் பேசுறத நிறுத்திக்கொள்கிறேன். பத்திரிகை பேட்டியிலே அவரே சொல்லிட்டார். தமிழ் மொழிப்பற்றினால் உங்களிடம் என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்று கேட்டதற்கு என் வீட்டில் இப்போது இட்லி வடை போடுகிறார்கள். என் மகன் ரஜினி படம் பார்க்கிறான் என்று பதிலளிக்கிறார். இதெல்லாம் தமிழ் பற்றாம் கேவலம்.

இப்ப சில தமிழறிஞர்கள் நீதிஅரசர்கள் எல்லாம் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கைக்காக போராடுகிறார்களாம். ஏன் அங்கே போகிறீர்கள். இங்கே நம்ம ஹைகோர்ட்ல தமிழுக்காக எவ்வளவோ நாள் போராடுகிறோம். அங்கே முதலில் தமிழைக் கொண்டு வாருங்கள். இங்கேயே முடியல ஹார்வர்டு ஏன் போறீங்க. ஜெயலலிதா எப்போதும் தமிழுக்கும் சமச்சீர்கல்விக்கும் எப்பவும் எதிரிதான். ஆதலால் நாம் இந்த நரித்தனமான நஞ்சகமான சமஸ்கிருத திணிப்பை ஆரம்பத்திலேயே எதிர்த்து முறியடிக்க வேண்டும். அதற்கு அனைவரும் இணைந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்” என பேசினார்.

வழக்கறிஞர் அரிராகவன் தனது உரையில் “இங்கே சில பேர் ‘ஹிந்தி படிச்சா என்ன தப்பு. ஹிந்தி படிச்சா வேலை. கருணாநிதி ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பன்னிட்டு அவரோட குடும்பத்துல உள்ளவங்கள எல்லாம் ஹிந்தி படிக்க வைச்சாரு’ அப்படின்னு சொல்றாங்க. எந்த மொழியையும் எவர் வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விருப்பமில்லாமல் ஒரு மொழியை திணிப்பதுதான் தவறு என்கிறோம். மற்ற மொழிகளை அழிக்கும் நயவஞ்சகத்தோடு கொண்டுவரப்படுவதே சமஸ்கிருத மொழி திணிப்பு. தமிழ் முருக கடவுளை பார்ப்பன இந்து கடவுளாக மாற்றிவிட்டார்கள். இந்து மத புராணங்களே ஆபாச குப்பைகள்தான். சமஸ்கிருதமும் அந்த குப்பையில் ஒன்றுதான். அதில் ஒன்றுமில்லை. நாம் சமஸ்கிருத திணிப்பை ஆரம்பத்திலேயே எதிர்த்து முறியடிக்க வேண்டும்” என்று பேசினார்.

இறுதியில் தோழர் சிவா நன்றி கூறினார்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருநெல்வேலி.

2. தேவர்கண்டநல்லூர் டாஸ்மாக்கை எதிர்த்து மக்கள் அதிகாரம்

மக்கள் நடத்திய மனு கொடுக்கும் போராட்டம்!

tvr-shutdown-tasmac-6திருவாரூருக்கு அருகில் உள்ள தேவர்கண்டநல்லூர் என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் மக்களின் குடியை கெடுத்துக்கொண்டு இருக்கிறது. அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் உச்சிமேடு, சிங்களாஞ்சேரி, நாங்கரை, வடக்குவெளி, பெருந்தரக்குடி, குளிக்கரை, சாருவன், வெள்ளக்குடி, தென்புலியூர், மேப்பலம், கீழப்புலியூர், கீரன்கோட்டகம், கடமங்குடி, தென்பாதி, ஒட்டக்குடி ஆகிய அனைத்து ஊர் மக்களுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் அன்றாடம் உழைக்கின்ற கூலி விவசாயிகள், தொழிலாளிகளின் வருமானத்தை அபகரித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் வீட்டிலும் சண்டை சச்சரவுக்கு காரணமாக இருக்கின்றது. கடைக்கு அருகில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்கள், குழந்தைகள் வந்து செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதனால் பெண்கள் பல்வேறு பாலியல் சீண்டல்கள், கேலி, கிண்டல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். அதனோடு இக்கடை சட்டவிரோதமாக ரேசன் கடை மற்றும் தேசிய நெடுஞ்சாலை, அரசு நடுநிலைப்பள்ளி, நூலகம் ஆகியவற்றின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

tvr-shutdown-tasmac-1டாஸ்மாக்கை எதிர்த்து தமிழ்நாடு முழுக்கப் போராடும் மக்கள் அதிகார அமைப்பின் போராட்டத்தை பார்த்த மக்கள் அப்பகுதியில் செயல்படும் மக்கள் அதிகாரத் தோழர்களிடம் முறையிட்டுள்ளனர். ஆகவே மக்களை திரட்டி இந்த டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று திட்டமிட்டு ஏறக்குறைய ஒரு மாதக்காலமாக அப்பகுதிகளில் உள்ள மக்களிடம் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தி “நாங்கள் மட்டும் மூட முடியாது நீங்கள் வந்தால் தான் மூட முடியும்” என்பதை வலியுறுத்தி பேசியதில் அந்த மக்களும் நிச்சயமாக வருகிறோம் என்று சொல்லி ஏறக்குறைய 2000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். முதற்கட்டமாக மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுப்பது என தீர்மானித்து 01-07-2016 அன்று மக்கள் அதிகாரம் தோழர் சண்முகசுந்தரம் தலைமையில் 80-க்கும் மேற்பட்டப் பெண்கள், மாற்று கட்சியினர், பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட மக்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனுகொடுக்க சென்றனர்.

tvr-shutdown-tasmac-2முன்னரே இதையறிந்த காவல்துறை 50க்கும் மேற்பட்ட காவலர்களை குவித்து மக்களை ‘வரவேற்க’ தயாராக காத்திருந்தது. மக்களை அலுவலக வளாகத்திற்குள் விடாமல் தடுக்க முயற்சி செய்தனர். தோழர்களோடு மக்களும் அதை எதிர்த்து “கலெக்டரிடம் மனுகொடுக்கவரும் எங்களை இப்படித்தான் தடுப்பீர்களா” என வாதிட்டனர். அதன்பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். கலெக்டர் மறுநாள் பத்திரிகை செய்திக்கு போஸ் கொடுக்க வேறு இடத்திற்கு சென்றுவிட்டதால், அங்கிருந்த கலெக்டர் உதவியாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.

tvr-shutdown-tasmac-3இன்னும் 15 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் இந்த டாஸ்மாக்கை மூடவில்லை என்றால் நாங்களே களத்தில் இறங்கி டாஸ்மாக்கை மூடுவோம் என்று கெடுவிதித்துவிட்டு வந்துள்ளனர். மக்களிடம் எப்படியாவது மூடியே தீரவேண்டும் என்கிற உறுதியையும், உற்சாகத்தையும் காண முடிந்தது. மற்ற கட்சியினரும் இதில் கலந்துக்கொண்டு மக்கள் அதிகாரம் நடத்தும் போராட்டங்களில் “எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறினர். இவையெல்லாம் மக்கள் முன்னால் இருக்கும் ஒரே மாற்று மக்கள் அதிகாரம் தான் என்பதை உணர்த்தும் விதத்தில் இருந்தது.

tvr-shutdown-tasmac-4இப்போராட்டத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்ற 7 வயது சிறுவன் கலந்து கொண்டான். இந்த சாராயக்கடையால் அவனது தந்தை குடித்து விட்டு அவனது அம்மாவை நாள்தோறும் அடித்ததில் இறந்துவிட்டார், பிறகு அவரும் குடித்து குடித்து இறந்துவிட்டார். தற்போது அனாதை ஆக்கப்பட்ட அந்த சிறுவனை அவனது சித்தி மகள் 8-ம் வகுப்பு படித்த ராதிகா தனது படிப்பை விட்டுவிட்டு இந்த சிறுவனை பராமரித்து வருகிறார். இந்த அரசை நம்பிய மக்களுக்கு (சக்திவேல் குடும்பத்துக்கு) இந்த அரசு கொடுத்த பரிசு இது! மக்கள் இனியும் இந்த அரசு கட்டமைப்பை நம்ப கூடாது என்பதை தெரிந்தே வைத்துள்ளனர், அவர்களுக்கு தெரியாத விசியம், இந்த கட்டமைப்பை எப்படி தகர்ப்பது என்று! அதை மக்கள் அதிகாரம் அவர்களுக்கு வழிகாட்டும்!

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

3. வழக்கறிஞர்கள் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

சிதம்பரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

விருத்தாசலம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க