“நீதிமன்ற பாசிசத்துக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரிப்போம். கருப்புச் சட்டங்களை வீழ்த்துவோம்!” என்கிற தலைப்பின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களின் சார்பாக, பூந்தமல்லி அருகிலுள்ள குமணன் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில்.,
“தமிழகத்தில் நடைபெற்றுவரும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்திருக்ககூடும். இருந்தபோதிலும், வழக்கறிஞர்கள் போராடுவது சரியா? தவறா? என்பன போன்ற பல கருத்துக்கள் மக்கள் மனதில் நிலவிவருகிறது. அவற்றிற்கு விடை அளிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமையும்.
தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராடுகிறார்களே! அவர்களுடைய கோரிக்கைதான் என்ன? உயர்நீதிமன்றம் கொண்டு வந்திருக்கும் வழக்கறிஞர் சட்டப்பிரிவு 34(1)-ல் சட்டத்திருத்தத்தை திரும்பபெற வேண்டும் என்பதுதான் வழக்கறிஞர்களுடைய போராட்டத்துக்கான காரணம். உயர்நீதிமன்றம் கொண்டுவந்துள்ள சட்டதிருத்தம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் வழக்கறிஞர்களுடைய போராட்டம் சரியா? தவறா? என்பதை கண்டறிய முடியும்.
சட்டத் திருத்தத்தின் வாயிலாக சொல்லக்கூடிய விஷயங்கள் என்ன என்று பார்த்தால்…
- நீதிபதிகள் பெயரை பயன்படுத்தி வழக்கு தொடுப்பவரிடம் பணம் வசூலிக்க கூடாது!
- நீதிபதிகளை தரக்குறைவாக பேசக்கூடாது!
- ஆதாரமில்லாமல் நீதிபதிகள் குறித்து அவர்களது உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பக்கூடாது!
- நீதிமன்ற ஆவணங்களை திருத்தக் கூடாது!
- நீதிபதிகளை கெரோ செய்யக்கூடாது!
- நீதிமன்ற வளாகத்திற்குள் முழக்க அட்டை பிடிக்கவோ, ஊர்வலமாக செல்வதோ கூடாது!
- குடித்துவிட்டு நீதிமன்றத்திற்குள் வரக்கூடாது!
மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் வழக்காடும் உரிமையை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பறிக்கின்ற அதிகாரம் நீதிபதிகளிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயக உரிமைகளுக்காக போராடுபவர்களையும், குடிகாரர்களையும் ஒன்றுசேர்த்து பார்க்கமுடியுமா? வழக்கறிஞர்களின் போராட்ட குணம் என்பது புதிதல்ல. மிகப் மிகப் பாரம்பரியமானது. காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழ இனப்படுகொலை, என பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக 2009-ல் இந்திய அரசின் துணையோடு சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்தபோது தமிழகமே கொந்தளித்தது. அப்போது இந்திய அரசை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியவர்கள் தமிழக வழக்கறிஞர்கள். அந்தப் போராட்டத்தை முறியடிக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையையும் நாம் மறந்து விட முடியாது. வழக்கறிஞர் போராட்டம் வலுவடைவதைக் கண்டு, போலிசை ஏவி ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது தமிழக அரசு. அந்த காலகட்டத்திலும் வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். அதே அடிப்படையில் தான் இப்போதும் வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறோம்” என ஆர்ப்பாட்டத்தின் பின்னணியை விளக்கினார்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தனது உரையில்,

“வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு 34(1)-ல் திருத்தம் செய்துள்ளதன் மூலம் வழக்கறிஞர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளது. 18 பட்டி நாட்டாமைகளைப்போல நடந்து கொள்கின்றனர் நீதிபதிகள். இதுதான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படுகிற நீதிமன்றத்தின் நடவடிக்கை. வழக்கறிஞர் தவறு செய்தால் பார் கவுன்சில் தான் முன்னர் நடவடிக்கை எடுக்கும். பார் கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து தற்போது நீதிபதிகளே இதைக் கையிலெடுத்துள்ளனர். புகார் கொடுப்பது நீதிபதி விசாரிப்பது நீதிபதி. தண்டனையளிப்பதும் நீதிபதி. இது தான் அவர்களின் ஜனநாயகம்! என்ன ஜனநாயகம் இது? இது ஜனநாயக நாடா?
மன்னராட்சி போல உள்ளது. கேள்விக்குறி போல் முதுகு வளைந்து கிடக்கும் ஜெயா அமைச்சர்களைப் வழக்கறிஞர்கள் இருக்க வேண்டுமென நீதிபதிகள் கருகிறார்கள்.
ரயில் மறியல், உண்ணாவிரதம், நீதிமன்ற புறக்கணிப்பு என தொடர்ந்து வழக்கறிஞர் போராட்டம் நடத்திய பின்னர், இப்போது வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிறார்கள் நீதிபதிகள். சட்டத்திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்க மாட்டார்களாம். 05 நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்துவார்களாம். முதலில் சட்டத்திருத்ததை திரும்பப் பெறு பின்னர் பேசலாம் என்கிறார்கள், வழக்கறிஞர்கள். அரசாணை வெளியிடப்பட்டபின் நடவடிக்கை எடுக்க மாட்டோம் எனக் கூறுவது ஏமாற்று வேலை. இது ஒரு ஜனநாயகப் படுகொலை.
நீதிபதிகள் யோக்கியமானவர்களா?
குடித்துவிட்டு வழக்காடக்கூடாது என்கிறார்களே, இப்படிச் செய்பவர்கள் யாரென்று தெரியாதா? அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?
நீதிபதிகள் என்ன உத்தமர்களா? கடவுள் தான் பெரிய சக்தி என்கிறார்களே அதுக்கும் மேலேயா?
அயோக்கியத்தனத்தில் ஈடுபடுபவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், நீதிபதிகள் என் ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டுகள் இருந்தும் அதன் மீதான நடவடிக்கை இல்லை. தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் நீதிபதியே புகார் கொடுத்துள்ளார்.
நிதி கொடுத்தால் நீதி கிடைக்கும் என்பது தமிழகத்தில் பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்படவில்லையா? வரலாற்றுப் புகழ் பெற்ற ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் “ தனி நபர் சொத்து சேர்ப்பது தவறா?” என கேட்கவில்லையா? “மாருதி தொழிலாளர் போராட்டம், இந்தியாவுக்கு அவமானம்” என ஒரு நீதிபதி கூறவில்லையா? உச்சநீதிமன்ற நீதிபதிகள் 14 பேர் லஞ்சம் வாங்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் சாந்திபூஷன் வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்தாரே? இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? வைகுண்டராஜன், பிஆர்பி போன்றோர், தமிழக கணிம வளங்களை கொள்ளையடிக்க துணை போனவர்கள் அல்லவா இந்த நீதிபதிகள்?
ஜே.என்.யு மாணவர் தலைவர் கன்னையா குமார் பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாலும், ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலும் தாக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தவர்களல்லவா இவர்கள். இவர்கள் தான் கோர்ட்டுக்குள் கொடி பிடிக்கக்கூடாது, கோஷம் போடக்கூடாது என உத்தரவிடுகிறார்கள். 10 பெண்களை அரைகுறை ஆடையுடன் நடனமாட வைத்து பார்த்து ரசிக்கிறார்கள் நீதிபதிகள் என பெண் வழக்கறிஞர்கள் புகார் கொடுத்தார்களே? அதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்களா? இந்த அயோக்கியர்கள் தான் தன்னை பற்றி பேசக்கூடாது என்கிறார்கள்.
தமிழக வழக்கறிஞர்கள் மீதான வன்மம் என்ன?
மறுகாலனியாக்க நடவடிக்கைகள மிகத் தீவிரமாக செய்து வருகிறார் மோடி. 8 துறைகளில் 100% அந்நிய மூலதனத்துக்கு அனுமதியளித்துள்ளது மோடி அரசு. இதை எதிர்த்துமக்கள் போராடக்கூடாது என்பதற்காக இந்து மதவெறியை தூண்டுகிறது. சமஸ்கிருதமயமாக்கத்துக்கெதிரான போராட்டம், தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற போராட்டம், ஈழ இனப்படுக்கொலைக்கெதிரான போராட்டம், சர்வதேச சமூகம் தலையிட வேண்டும், ஐ.நா தலையிட வேண்டுமென்றெல்லாம் தமிழக கட்சிகள் / அமைப்புகள் பேசிக்கொண்டிருந்த போது ராஜபக்சேவை தண்டிக்க நூரம்பர்க் போன்ற விசாரணை நடத்த வேண்டுமென குரல் கொடுத்தவர்கள் தமிழக வழக்கறிஞர்கள். அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்காகவும் போராடியவர்கள் தமிழக வழக்கறிஞர்கள். இது அரசியல் ரீதியானப் போராட்டம். தமிழகக் காவல்துறையின் ஒடுக்குமுறைக்கெதிராக முன்வரிசையில் நிற்பவர்கள் வழக்கறிஞர்கள்.
மிகச் சமீபத்தில் ஆந்திராவில் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இணைந்து தான் போராடினார்கள். இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் தமிழக வழக்கறிஞர்கள் நடத்துவதைப்போல அரசியல் ரீதியான போராட்டங்கள் வழக்கறிஞர்கள் நடத்துவதில்லை. மற்ற மாநிலங்களில் நீதிபதிகள் – காவல்துறை – வழக்கறிஞர்கள் இந்த முக்கூட்டணியில் தான் தீர்ப்புகள் எழுதப்படுகிறது.
பு.ஜ.தொ.மு ஏன் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறது?
எங்களுக்கும் நீதிபதிகளுக்கும் தனிப்பட்ட முரண்பாடா? அல்லது எங்களது தொழிற்சங்க ரீதியான வழக்குகளில் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டர்கள் என்பதற்காகவா?
இல்லை.
எந்த வர்க்கம் ஒடுக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பது எங்களது கடமை. இந்த பாசிசத்தாக்குதலுக்கு எதிராக மட்டுமல்ல, இந்துமயமாக்கலுக்கு எதிராகவும், தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகளினால் உழைக்கும் மக்கள் சுரண்டப்படும் போதும் அதற்கெதிராக குரல் கொடுப்பதும், களத்தில் நின்று போராடி வீழ்த்துவதும் ஒரு புரட்சிகர அமைப்பின் பணி என்ற வகையிலே தான் வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.

இந்த அரசுக் கட்டமைப்பு ஆளத்தகுதியிழந்து தோற்றுபோய் விட்டது. இனிமேலும் இந்த அரசமைப்புக்குள்ளேயே நின்று இதற்கு தீர்வு தேட முடியாது. மக்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது தான் தீர்வு. தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும் அதிகாரமுள்ள மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அப்படி ஒரு அமைப்பை நிறுவும்போது நீதிமன்ற சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்ட முடியும். அதற்காக உழைக்கும் மக்கள் ஓரணியில் திரள வேண்டும்” என்று அறைகூவினார்.
இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஆர்ப்பாட்டத்தையொட்டி பிரச்சாரம் செய்த தோழர்களுக்கும், ஒளி, ஒலி அமைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நிறைவு செய்தார்.
ஆர்ப்பாட்ட முழக்கம்
ஆதரிப்போம் ஆதரிப்போம்!
நீதிமன்ற பாசிசத்துக்கெதிரான
வழக்கறிஞர் போராட்டத்தை
ஆதரிப்போம் ஆதரிப்போம்!
நீதிபதிகளை ஆண்டைகளாகவும்
வழக்கறிஞர்களை அடிமைகளாகவும்
மாற்றத் துடிக்குது நீதிமன்றம்
தமிழ் மொழியில் வழக்காட
இந்தித் திணிப்புக்கெதிராக
ஈழப்படுகொலைக்கெதிராக
காவிரி – பெரியாறு உரிமை மீட்க
இயற்கை வளங்களைப் பாதுகாக்க
ஊழல் நீதிபதிகளுக்கு எதிராக
போராடியவர்கள் வழக்கறிஞர்கள்
போராடும் வழக்கறிஞர்களுக்கு
வாய்ப்பூட்டு போடவே
அடிமைகளாக நடத்தவே
வழக்கறிஞர் சட்டத்திருத்தம்
துணை நிற்போம்! துணை நிற்போம்
சட்டத்திருத்ததுக்கு எதிராக
வழக்கறிஞர்கள் நடத்துகின்ற
போராட்டத்தில் துணை நிற்போம்!
உத்தமர்களா உத்தமர்களா
ஆற்றுமணல் தாதுமணல்
நிலக்கரி, கிராணைட் உள்ளிட்ட
இயற்கை வளங்களை சூறையாடும்
தேசத்துரோகிகளை பாதுகாக்கும்
நீதிபதிகள் உத்தமர்களா?
உரிமைக்காக போராடிய
மாருதி தொழிலாளிகளுக்கும்
கோவை பிரிக்கால் தொழிலாளிகளுக்கும்
லார்டுகள் கொடுத்த தீர்ப்பு என்ன?
அழுகி நாறுது அழுகி நாறுது
ஜனநாயகத்தின் கடைசி புகலிடம்
நீதிமன்றமே அழுகி நாறுது
முறியடிப்போம்! முறியடிப்போம்!
ஜனநாயகத்துக்கெதிரான
நீதிமன்ற கருப்புச் சட்டங்களை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
தீர்வு இல்லை! தீர்வு இல்லை!
நிலவுகின்ற கட்டமைப்புக்குள்
தீர்வு இல்லை தீர்வு இல்லை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும்
மக்களுக்கு அதிகாரமுள்ள
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), வேலூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 8807532859, 9444461480, 9445368009, 9994386941