privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஎச்சரிக்கை ! வரவிருக்கும் நாட்கள் மிகக் கொடியவை !

எச்சரிக்கை ! வரவிருக்கும் நாட்கள் மிகக் கொடியவை !

-

ந்த அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்பதை முரசறைந்து கூறும் அளவுக்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன என்ற போதிலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிதான் இதற்குத் தலையாய சான்று. சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் “மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் கடைகளை மூடுவதற்கான போராட்டங்களை நடத்தியபோது, தேர்தல் நேரத்தில் அப்போராட்டங்கள் தேவையற்றவை என்று சிலர் எண்ணினர்.

amangalam-shutdown-tasmac-protest-14படிப்படியாக கடையை மூடுவதாக வாக்குறுதியளித்த ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்தார். கடை திறந்திருக்கும் நேரத்தை இரண்டு மணி நேரத்தைக் குறைப்பதாக அறிவித்தார். அது பொய் என்பது அன்றைய தினமே அம்பலமானது. “தற்போது 500 கடைகளை மூடியிருப்பதாகச் சொல்வதும் பொய். மக்கள் கடுமையாகப் போராடிய இடங்களிலும், விற்பனையாகாத இடங்களிலும் சேர்த்து சுமார் 81 கடைகள் மட்டுமே மூடப்பட்டிருக்கின்றன” தினமலர் நாளேடு கூறுகிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் வசூலிக்கும் அதிகார வர்க்கமும் போலீசும், தத்தம் வட்டாரத்தில் உள்ள கடைகள் மூடப்படுவதை எதிர்க்கிறார்கள் என்ற உண்மையையும் இந்தச் செய்தி அம்பலமாக்கியிருக்கிறது.

இனி மதுவிலக்கு கோரும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த தேர்தலுக்காக 5 ஆண்டுகள் காத்திருந்து, இன்னும் சில லட்சம் இளைஞர்கள் போதை அடிமைகளாக மாறுவதை வேடிக்கை பார்க்க வேண்டுமா? அல்லது சசி பெருமாளைப் போல நீதிமன்றத்தை நம்பி உயிர் துறக்க வேண்டுமா? மக்கள் நேரடியாக களத்தில் இறங்கி கடைகளை மூடுவது ஒன்றுதான் தீர்வு என்பதையே ஜெயலலிதாவின் ஒரு மாத கால ஆட்சி நமக்கு மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறது.

மாறாக, இது புதிய ஆட்சி போலவும், புதிய துவக்கம் போலவும், கடந்த 5 ஆண்டு அசிங்கங்கள் மற்றும் அராஜகங்களின் தொடர்ச்சி அல்ல என்பது போலவுமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த ஜெயலலிதாவின் ஊடக அடிமைகள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சிகளை கேலிக்குரியதாக்கும் வகையிலான நிகழ்வுகளை அ.தி.மு.க. அரசே அன்றாடம் அரங்கேற்றுகிறது.

தன்னுடைய ஊழல் நோக்கத்துக்காக தமிழகத்தின் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கினை தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து, மின்வாரியத்தை மீளாக்கடனில் தள்ளியிருக்கும் ஜெ. அரசு, “தமிழ்நாடு மின் மிகை மாநிலமாகிவிட்டது” என்று பச்சையாகப் புளுகுகிறது. கூலிப்படை கொலைகளும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், கொள்ளைகளும் தமிழகமெங்கும் தலைவிரித்தாடுகின்றன. வினுப்பிரியா என்ற பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் கொடுக்கப்போன அவரது தந்தையிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு நடவடிக்கையும் எடுக்காத போலீசின் குற்ற நடத்தை காரணமாக அந்தப் பெண் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். ஆனால், தனது தலைமையில் காவல்துறையின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்வதாக கூச்சமேயில்லாமல் பேசுகிறார் ஜெயலலிதா.

படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு மட்டுமல்ல, இந்த அரசு வாய்திறந்து பேசுவது அனைத்துமே பொய் என்று தெளிவாகத்தெரிகிறது. ஜெ. கும்பல் பொதுச்சொத்துகளையும் அரசுக் கருவூலத்தையும் கொள்ளையிட்டு, தமிழகத்தை நிதி நெருக்கடியிலும் கடனிலும் தள்ளியிருப்பதால், வரவிருக்கும் நாட்கள் இன்னும் கொடிதாக இருக்கும். இந்த அரசமைப்பில் நம்பிக்கை வைத்து முறையிட்டோ, அன்றி ஆட்சி மாற்றத்துக்காக காத்திருந்தோ, நீதி பெறுவது சாத்தியமில்லை என்ற உண்மையை, அ.தி.மு.க. ஆட்சி என்று அழைக்கப்படும் இந்தக் குற்றக்கும்பல், தனது சொந்த நடவடிக்கைகளின் மூலம் வெகு விரைவில் மக்களுக்குப் புரிய வைக்கும்.
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________