privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்நூல் அறிமுகம்நூல் அறிமுகம் : இந்திய வரலாற்றில் பகவத்கீதை

நூல் அறிமுகம் : இந்திய வரலாற்றில் பகவத்கீதை

-

சிறந்த ஞானத்தையும் ஆழமான அறிவாற்றலையும் கொண்டுள்ள செல்வக் களஞ்சியம் என்று போற்றப்படும் கீதை, இயற்றப்பட்ட நாளிலிருந்தே புரட்சிச் சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதமாகவே பயன்பட்டு வருகிறது” என்பதை அழுத்தமாகத் தனது முன்னுரையிலேயே பதிவு செய்கிறார் நூலாசிரியர்.

உலகாயதத் தத்துவங்களுக்கும், பவுத்தத்திற்கும் எதிரான பார்ப்பனியத்தின் ஆயுதமாக பகவத்கீதை உருப்பெற்றதையும், தொடர்ந்தும் நிலை பெற்றிருப்பதையும் ஆதாரங்களுடனும், பல்வேறு ஆய்வாளர்களின் மேற்கோள்களுடனும் விவரிக்கிறார்.

வரலாற்றில்_பகவத்_கீதைஅந்த வகையில், இந்திய வரலாற்றில் பார்ப்பனக் கருத்தியலின் பாத்திரத்தையும், அதன் ஆளும் வர்க்கச்சார்பையும் ஒரு கோட்டுச் சித்திரமாக வழங்குகிறது இந்நூல். பொதுவான வாசகர்கள் அறிந்திருக்க முடியாத இருட்டடிப்புச் செய்யப்பட்ட இந்தியப் பொருள்முதல்வாதத் தத்துவ மரபுகளை பெருமிதத்துடன் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர்.

ராகுல்ஜி, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கோசாம்பி, ரோமிலா தபார் போன்ற ஆய்வாளர்கள் இந்தியச் சமூக வரலாற்றிலும் தத்துவஞான மரபிலும் களங்கமாய் நிலைத்திருக்கும் பார்ப்பன மரபை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்துள்ளனர். இவையன்றி அம்பேத்கரின் ஆய்வுகள் இத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. எனினும் வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையில் இந்நூல் எழுதப்படாததால், வரலாறென்பது வர்க்கங்களுக்கிடையிலான போராட்டத்தின் வரலாறாக அல்லாமல், கருத்தியல்களுக்கிடையிலான மோதல்களின் வரலாறாகவும், வரலாற்று மாந்தர்களின் வரலாறாகவுமே இந்நூலில் வடிவம் பெறுகிறது.

பவுத்தத்தையோ பிற பொருள்முதல்வாதச் சிந்தனை மரபுகளையோ கருத்தியல் ரீதியில் மோதி வெற்றி கொள்ளும் அருகதையற்ற கீதை இத்தனை நூற்றாண்டுகளாய் ஆதிக்கம் செய்ய முடிவதெப்படி என்ற கேள்விக்குத்தான் நாம் விடை தேட வேண்டும். இனக்குழுச் சமூகத்தின் அழிவிலும், அடிமைச் சமூகத்தின் தோற்றத்திலும் வேர் கொண்டிருந்த ‘அர்ச்சுனர்களி’ன் சாம்ராச்சிய ஆசை பவுத்தத்தை நிராகரித்தது. இந்த ஆசையை நியாயப்படுத்துவதற்கான ‘அறம்’ கண்ணனால் வழங்கப்பட்டது. பின்னர் இந்தியச் சமூகம் எதிர்கொண்ட ஆசியச் சொத்துடைமை உறவுகள் முதல் காலனிய அரைக் காலனிய, அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் வரையிலான அனைத்திலும் வர்க்கச் சுரண்டலை மறைக்கும் கீதையின் இலக்கிய ஆற்றலை காலச் சூழலுக்கு ஏற்ற விதத்தில் சாதுரியமாகப் பயன்படுத்தி வருகிறது பார்ப்பனியம்.

கீதையை உயிரோடு வைத்திருப்பதில் சமூக அடித்தளம் ஆற்றும் பங்கை ஆசிரியரால் காண முடிவதில்லை. எனவே அவர் கட்டோடு வெறுக்கும் பார்ப்பனியம், எதிர்ப்போரை வெல்லும் சர்வ வல்லமை பொருந்திய தத்துவஞான சக்தியாகத் தோற்றம் பெற்று விடுகிறது. 2000 ஆண்டுகளாய் வெல்லப்பட முடியாத அந்தச் சக்தியை வெல்வதற்கு பிரிட்டிஷாரிடம் சரணடைகிறார் ஆசிரியர். முதலாவளித்துவக் கருத்தியலை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய ஒரே காரணத்துக்காகக் காலனியாதிக்கத்தையே பொற்காலமென்றும் போற்றுகிறார்.

பிராமண மதத்தை இந்து மதமாக உருவாக்கித் தந்ததற்காக சங்கராச்சாரியின் பாராட்டைப் பெற்ற பிரிட்டிஷ் ஆட்சி இந்நூலாசிரியரின் பாராட்டையும் பெறுகின்ற ’விபரீதம்’ இவ்வாறு நடந்தேறுகிறது.

arjuna“இந்து மத ஆதிக்கம் சாதியம் குறித்துக் கடுமையான விமரிசனங்களை முன்வைப்பவர்கள் ஏகாதிபத்தியத்தின் ஆளுமைக்கு உட்பட்டே  இந்து மதமும் சாதியமும் இயங்குகின்றன என்பதை மறந்துவிடுகிறார்கள்” என்று நூலாசிரியரின் இந்தக் குறையை விமரிசிக்கிறது பதிப்புரை.

இது மறதியோ, விவரங்களைப் பரிசீலிக்கத் தெரியாத குறையோ அல்ல; எம்.என்.ராய்க்கு ஆசிரியர் செலுத்தும் புகழஞ்சலியிலும், லெனின், ஸ்டாலின் ஆகியோர் மீது அவர் வைக்கும் ’விமரிசனங்களிலும்’, விடுதலைப் பேராட்ட காலம் முதல் 1970 வரையிலான அரசியல் சூழல் குறித்த பார்வையிலும் ஆசிரியரின் இந்தக் குறை சாதாரன வாசகனைக் கூட அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் பாமரத்தனமாக வெளிப்படுகிறது.

வர்க்கப் போராட்ட அரசியலிலிருந்து பார்ப்பனிய ஒழிப்பைப் பிரித்தொதுக்கும் இந்தக் கண்ணோட்டம், இந்திய வரலாற்றிலிருந்து பகவத் கீதையைப் பிடுங்கியெறிய முடியாத சூழலையே உருவாக்கும்.

நூலாசிரியரின் பார்வை குறித்த இந்த விமரிசனங்களைப் பதிவு செய்வது அவசியமாக இருந்தபோதிலும், பார்ப்பனக் கருத்தியலைத் திரைகிழித்து, இந்திய வரலாற்றிலிருந்து இருட்படிப்புச் செய்யப்பட்ட பொருள்முதல்வாதத் தத்துவ மரபை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நூல் என்ற வகையில் இதனைப் படிக்க வேண்டிய நூல் என்று தயக்கமின்றிக் கூறலாம்.

மூலநூலை நாம் படிக்கவில்லையென்றாலும், ஆங்கிலச் சொற்களின் நேரடி மொழியாக்கத்தைத் தவிர்த்து நூலாசிரியரின் கூற்று நடையையும், தொனியையும் பற்றிக் கொண்டு கே.சுப்பிரமணியன் அவர்கள் செய்திருக்கும் மொழியாக்கம் வாசகர்களைப் படிக்கத் தூண்டுமென்பது திண்ணம்.

ஒப்பீட்டளவில் மலிவான விலையிலும் தரமான அச்சு மற்றும் கட்டமைப்பிலும் இந்நூலைப் பதிப்பித்துள்ள விடியல் பதிப்பகம் மற்றும் சூலூர் வெளியீட்டகத்தாரின் இம்முயற்சி ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

நூல் : இந்தியவரலாற்றில் பகவத்கீதை
ஆசிரியர் : பிரேம்நாத் பசாஸ்
வெளியீடு: விடியல் பதிப்பகம்,

சூலூர் வெளியீட்டகம்,
11, பெரியார் நகர்,
மசக்காளிபாளையம் (வடக்கு),
கோவை-15.

தற்போது இந்நூல் உள்ளிட்ட ஐந்து நூல்களை மலிவு பதிப்பாக விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விவரங்களுக்கு கீழே இணைப்பை அழுத்துக!

இந்துத்துவத்திற்க்கு எதிராக 5 நூல்கள் – விடியல் பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடு!

முழுத்தொகுப்பு விலை: ரூ.300.00

வெளியீடு: விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015,
தொலைபேசி – 0422-2576772, 9789457941
மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org

நூல்கள் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367

மற்றும் அரசியல் – முற்போக்கு நூல்களை விற்பனை செய்யக்கூடிய தமிழகத்தின் அனைத்து கடைகளிலும் இந்நூல்கள் கிடைக்கும்.

______________________________

புதிய கலாச்சாரம், செப். 2004

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க