இந்தியப் பொதுவுடைமை இயக்கம்
வலது, இடது வரலாறு: மண்ணுக்கேற்ற மார்க்சியமா? மரபு வழி மார்க்சியமா?
ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் என்றால் எப்படியும் பேசுவார்கள், கேட்டுக் கேட்டுச் சலித்துப் போனதுதான். ஆனால், “அட இப்படியும் பேச முடியுமா” என்று ஒரு நிமிடம் திகைக்க வைத்துவிட்டார், சீனிவாசன்.
இவர் நேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் மற்றும் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார். ”ஒரு மூத்த கம்யூனிஸ்ட்” தலைவர் திடீரென்று, அக்கட்சியின் பரம எதிரியும், இந்து மதவெறி பாசிசக் கட்சியுமான பாரதீய ஜனதாவுக்கு எப்படி மாறினார்? ஏதாவது ஒரு முற்போக்கு சாயலுடைய கட்சிக்குத் தாவினால் கூட கொஞ்சமாவது நியாயமிருக்கும்.
”முன்புகூட சில சி.பி.ஐ. பிரமுகர்கள், தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் போயிருக்கிறார்கள். கடந்த தலைமுறையில் மோகன் குமாரமங்கலம், நந்தினி சத்பதி, கே.ஆர். கணேஷ் போன்ற சில தலைவர்கள் காங்கிரசு – இந்திரா மூலமாக சோசலிசத்துக்குப் பாதை போடுவதாகச் சொல்லிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால், இப்படியா!” திகைத்து நிற்கிறார்கள், அக்கட்சியில் சிலர்.
”பிழைப்புவாதம் எந்த வயதிலும் வரலாம், இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை” என்று சமாதானம் கூறுகிறார், கட்சியின் இளைய – புதிய தலைவர் மகேந்திரன்.
ஆனால், கட்சி மாறிய சீனிவாசன், தனது செயலுக்குச் சித்தாந்தபூர்வமான நியாயம் சொல்லுகிறார். ”மார்க்சியத்தின் மறுவடிவம் பா.ஜ.க.”
”அது எப்படி முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகிறாரே” என்று நீங்கள் வியக்கலாம்.
”முடியும்” என்று சாதிக்கிறார். ”சிகப்பு வெளுத்தால் காவி” என்று கூடச் சொல்லவில்லை. “காவியும் ஒரு சிகப்பு வண்ணம்தான் – சாயல்தான் வேறு” என்று ”நிகழ்” காலத்துக்கு ஏற்ற ‘நிறப்பிரிகை”த் தத்துவம் பேசுகிறார்.
”இந்திய மண்ணில், இந்தியக் கலாச்சார மரபில், இந்தியத் தத்துவஞானத்தில் வேர்விட்டு, மார்க்சியத்தின் சிந்தனை வழியில் நாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கட்சியின் அமைப்பு விதியிலேயே திருத்தம் கொண்டு வரப்பட்டது. வேதங்களையோ, உபநிஷத்துக்களையோ, இதிகாசங்களையோ, புராணங்களையோ, மகாபாரதத்தையோ, இராமாயணத்தையோ பற்றிக் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் எப்படிச் சிறந்த கம்யூனிஸ்டாக இருக்க முடியும்?” என்று கேட்கிறார், சீனிவாசன்.
மேலும், ”மார்க்சியம் என்பது விஞ்ஞானம். இதை இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுத்த இங்குள்ள கம்யூனிஸ்டுகள் தவறிவிட்டார்கள். காங்கிரசு, திராவிட இயக்கங்கள் போன்றவற்றின் சித்தாந்தங்களும் காலாவதியாகிவிட்டன. மார்க்சிய சிந்தனைகளை இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுத்தக் கூடிய கட்சி பா.ஜ.க. என்பதால்தான் அக்கட்சியில் சேர்ந்தேன்.”
“இந்திய மரபு, இந்திய அறிவு, இந்திய ஞானம் இவற்றில் நாம் வேரூன்றி நிற்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் வாதம். இது மார்க்சியத்தின் மறுவடிவம்தான்.” என்றும் கூறுகிறார்.
“ஒரு கம்யூனிசத் துரோகி கண்டதையும் பேசுவான். அதையெல்லாம் ஒரு பொருட்டாய்க் கொள்ளத் தேவையில்லை” என்று வெகு சுலபமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியும். இது ரொம்ப எளிமையான கணக்கு! பாரதீய ஜனதாவோ இந்து வெறி பாசிச – பார்ப்பன சனாதனக் கட்சி, அதில் போய் சேருகிறவன் வேறு எப்படி இருப்பான், எதிரியின் அணியில் சேருபவன் வேறென்ன பேசுவான் என்பதுதான் அந்தக் கணக்கு.
சீனிவாசன் எதிரி முகாமுக்குப் போய் விட்டதாலேயே அவர் சொன்ன கருத்துப் பற்றிக் கணக்குப் போடுவது பலருக்கு எளிதாகப் போய்விட்டது. பா.ஜ.க.வின் எதிரி முகாமாகிய ”நம்மிடையே” இருக்கும் இவர்களுடைய கருத்துக்களையும் பற்றிக் கணக்குப் போடுவது அதே பலருக்கு சிக்கலாக உள்ளது. பல சமயம் தவறாகவும் போய் விடுகிறது.
பா.ஜ.க.வையும் மார்க்சியத்தையும் இணைப்பதற்கு சீனிவாசன் பயன்படுத்தியிருக்கும் சங்கிலி, ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்.” முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியாக அவர் இந்து மத வெறி பாசிச – பார்ப்பன சனாதனத்தை மார்க்சியத்திற்குள் புதைத்து மோசடி செய்ய முயலுகின்றார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தவிர, ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசுவோர் பட்டியலில் சமீபத்திய அவதாரம்தான் இந்தத் துரோகி என்பது மற்றொரு உண்மை.
“இந்தியப் பொதுவுடைமை இயக்கம் இதுவரை மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைக் கடைப்பிடிக்கவில்லை” என்பது சீனிவாசனின் குற்றச்சாட்டு, ”பா.ஜ.க.தான் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் பின்பற்றும் சரியான கட்சி” என்பது, அவர் எடுத்திருக்கும் முடிவு.
சீனிவாசனின் முடிவில் மாறுபட்டாலும் அவரது குற்றச்சாட்டில் முற்றாக உடன்படுபவர்கள் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்குள்ளும், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், தலித்தியம், தமிழினம், திராவிடம், சமூகநீதி எனப் பல்வேறு பிரிவுகளாக உள்ளவர்கள் வெளியேயும் ஏராளம்.
உள்ளே இருப்பவர்கள் வெளியே போகும்போதெல்லாம், வெளியே இருப்பவர்களின் நிலைப்பாடுகளை பொதுவுடைமை இயக்கத்தவர்கள் விமர்சிக்கும் போதெல்லாம், ஏதோ முற்றிலும் புதிதாகச் சொல்லுவதைப் போல முன்வைக்கப்படுவதுதான் ”மண்ணுக்கேற்ற மார்க்சியம் தேவை” என்கிற வாய்ப்பாடு.
இவர்கள் அனைவரும் இரண்டு உண்மைகளை மறந்து விடுகின்றனர்.
முதலாவதாக, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துக்கு எண்பது ஆண்டு கால வரலாறு உள்ளதென்றால், இந்த “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்கிற வாய்ப்பாட்டுக்கும் எண்பது ஆண்டுகால வரலாறு உண்டு.
இரண்டாவதாக, இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் இந்த எண்பதாண்டு கால வரலாற்றில், ஒரு சில குறிப்பிட்ட, குறுகிய காலங்கள் தவிர இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தியதே ”மரபு வழி மார்க்சியம்” அல்ல; ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” தான். ஆனாலும், ”இந்தியப் பொதுவுடைமை இயக்கம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வகுத்து வழி நடத்தவில்லை. அது வரட்டுத்தனமாக மரபுவழி மார்க்சியத்தைப் பின்பற்றித்தான் பரிதாபகரமாகத் தோற்றுப் போய்விட்டது” என்று விமர்சிக்கப்படுகிறது.
இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” ”மரபு வழி மார்க்சியம்” என்கிற சொற்றொடர்களுக்கு ஒரே பொருள் விளக்கம் தருவதில்லை. அவரவர் நிலையில் நின்று பலவாறாக விளக்கங்களும் விமர்சனங்களும் தருகின்றனர்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறுகளாகிய ஆன்மீகம், அகிம்சையை, ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்துடன் காந்தியத்தையும் இணைப்பதன் மூலம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று சிலர் சொல்லுகின்றனர்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறுகளாகிய தேசிய இனப்பிரச்சினை, சாதிய முறை போன்றவற்றை ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்துடன் பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் இணைப்பதன் மூலம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.
இவ்விரு பிரிவினரின் கருத்துப்படி இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவியவர்களும், அதன்பின் தலைமையேற்றவர்களும் ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியத்தை அப்படியே பின்பற்றினார்கள் என்றாகிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர்கள் என்று ”அறியப்படும் அனைவரும்” மரபுவழி மார்க்சியத்தை ஆரம்ப முதலே ஏற்க மறுத்தவர்கள். உலகப் பொதுவுடைமைக் கட்சிகள் எல்லாம் இணைந்திருந்த மூன்றாவது அகிலம், அதன் மூலமாக லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் வழிகாட்டுதலை நிராகரித்தவர்கள்தான் அவர்கள்.
”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறு, இங்குள்ள தேசிய முதலாளிகள் முற்போக்கானவர்கள். மூன்றாவது அகிலத்தைச் சேர்ந்த போல்ஷவிக் (ரஷ்யப் பொது வுடைமைக் கட்சி) ஏஜெண்டுகளின் மரபுவழி மார்க்சியம் இதைக் கணக்கில் கொள்ளவில்லை. இந்திய தேசியக் காங்கிரசின் முற்போக்குப் பிரிவினருடன் ஐக்கியப்பட்டு, விடுதலையையும் சோசலிசத்தையும் சாதிப்பதுதான் மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்று சொல்லி, அந்த திசையிலே தான் பொதுவுடைமை இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள்.
”தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்” என்று மண்ணுக்கேற்ற மார்க்சியத்தின் பல பிரிவு வாதாடிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுபவர், சென்னை சிங்காரவேலர். அதுவும் 1923-லேயே, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் மண்ணில் – மே நாள் கொண்டாடியவர்; 1925-ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்டுகளின் முதல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கியதுடன் அதில் நிறுவப்பட்ட பொதுவுடைமைக் கட்சிக்குத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சிங்காரவேலர்.
இந்தச் சிங்காரவேலர் மரபுவழி மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. மண்ணுக்கேற்ற மார்க்சியத்தையே வலியுறுத்தி, செயல்படுத்த முயன்றவர். இவர் தனித்தன்மை வாய்ந்த, புரட்சியைச் சாதிக்கவல்ல, இரகசிய – சட்டவிரோத, ஆயுத பாணியாக்கப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் ஒரு போதும் உடன்பாடு கொள்ளவில்லை.
இவருடைய அரசியல் வாழ்க்கையின் முன்பகுதி, காந்தியின் தலைமையிலான காங்கிரசுக்குள் பொதுவுடைமை இயக்க அமைப்புக்களை நிறுவி, விடுதலையையும் கம்யூனிசத்தையும் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் அமைந்தது. அப்போது வன்முறை தவிர்த்த மார்க்சியமே காந்தியம்; புத்தரும் பொதுவுடைமையும், காந்தியமும் ஒன்றே; வழிமுறை மட்டுமே வேறானது. புத்தரின் வாரிசாகவே காந்தியம் அமைந்துள்ளது; புத்தரும் காந்தியும் போதிக்கும் அகிம்சை புரட்சியே சரியானது – இவைதான் சிங்கார வேலரின் ஆரம்பகாலப் பொதுவுடைமைக் கண்ணோட்டம்.
இவருடைய அரசியல் வாழ்க்கையின் இரண்டாம் பகுதி, பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்துக்குள்ளேயே பொதுவுடைமை கட்சியைக் கட்டி விடுதலையையும் சமதருமத்தையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டது. இதற்காக சுயமரியாதை இயக்கத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை சமதருமக் கட்சியை நிறுவினார். இந்தக் காலத்தில் சிங்காரவேலர் கொண்டிருந்த பொதுவுடைமைக் கண்ணோட்டத்தில் காந்தியம் கைவிடப்பட்டிருந்தது; இருந்தாலும் அகிம்சை முறையில் விடுதலை – பொதுவுடைமையைச் சாதிக்கும் நோக்கம் நீடித்தது. சாதி – மத எதிர்ப்பு போன்ற சுயமரியாதைக் கூறுகளும் சேர்க்கப்பட்டிருந்தன.
சிங்காரவேலர் காங்கிரசில் இருந்த போது அதற்குள்ளாகவே, பொதுவுடைமை காணும் நோக்கோடு ”இந்துஸ்தான் பஞ்சாயத்து” என்ற அமைப்பை நிறுவினார். பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுமாறு கம்யூனிச அகிலம் கோரியபோது அதற்குப் பதிலாக “இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி” (தொழிலாளர் விவசாயக் கட்சி)யை நிறுவினார். 1925, கான்பூரில் பொதுவுடைமையாளர்கள் மாநாட்டுக்குத் தலைமையேற்று, கட்சிக்கும் தலைவராவதற்கு முன்பு, தொழிலாளர் அரசியல் கட்சியை நிறுவினார். அது பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைப் போன்று இயங்கும், (ஆங்கிலேய ஏகாதிபத்தியப் பிரதமரான) இராம்சே மாக்டனால்டு போன்றோரின் கருத்துக்களை வழிகாட்டும் தத்துவமாக ஏற்கும் என்றார்.
காங்கிரசில் இருந்து கொண்டு அதன் மூலம் பொதுவுடைமை இயக்கத்தையும் கட்டும் சிங்காரவேலரின் முயற்சி, பொதுவுடைமை கொள்கையில் உடன்பாடு கொண்ட தொழிலாளர் தலைவர்கள் என்று திராவிட – தமிழினவாதிகளால் போற்றப்படும் திரு.வி.க., சக்கரை (செட்டியார்) பூரீராமுலு போன்றவர்களாலேயே முறியடிக்கப்பட்டது. அதுவும் கண்ணியமான முறையில் இல்லை. தொழிலாளர் போராட்டத்துக்காக காங்கிரசு கொடுத்த நிதியை சிங்காரவேலர் கையாடல் செய்தார், பதவிக்காக முறைகேடாக முயன்றார், கான்பூர் சதி வழக்கில் ஆங்கிலேயே அரசிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானார் என்கிற அவதூறு செய்து ஒதுக்கப்பட்டார்.
சிங்காரவேலரால் தலைமையேற்கப்பட்ட தொழிலாளர் போராட்டங்கள், அனைத்திந்திய தொழிலாளர் காங்கிரசின் தலைவர்களான வி.வி. கிரி, என்.எம். ஜோஷி ஆகியோரின் துரோகத்தால் தோல்வியடைந்தன. இதனால் வெறுப்புற்ற சிங்காரவேலர், அப்போது தொழிலாளர் போராட்டங்களை ஆதரித்த பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கம் கண்டார். ஆனால், 1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். இத்தோடு சிங்காரவேலரின் பொதுவுடைமை இயக்க முயற்சிகள் எல்லாம் முடிவுக்கு வந்தன.
ஏறக்குறைய 15 ஆண்டுகள் தனது ”மண்ணுக்கேற்ற மார்க்சியம்” அடிப்படையில் தென்னிந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை நிறுவி, வளர்க்க சிங்காரவேலர் முயன்றார். அதே காலகட்டத்தில் மேற்கு இந்தியாவில் டாங்கேயும் அவரது சீடரும், காந்தி ஆசிரமவாசியுமான சத்திய பக்தாவும் அதே முயற்சியை மேற்கொண்டனர்; வட இந்தியாவில் மணிலால் என்பவர் அதே முயற்சியில் இருந்தார். 1922 டிசம்பரில், கயாவில் கூடிய இந்திய தேசியக் காங்கிரசு மாநாட்டையொட்டி சிங்காரவேலர், டாங்கே, மணிலால் மூவரும் சந்தித்து ஒருங்கிணைப்புக்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பிறகு வங்காளத்தைச் சேர்ந்த முகுந்தலால் சர்க்காரோடு நான்கு மையங்களில் இருந்து நான்கு அறிக்கைகளை முன்வைத்து காங்கிரகக்குள்ளாகவே நான்கு ”பொதுவுடைமை” அமைப்புகளைத் தனித்தனியே அமைத்தனர்.
முதலாளித்துவ தேசியவாதத்தை ஆதரிப்பது, சட்டபூர்வ – வெளிப்படையான அமைப்பாக மட்டுமே செயல்படுவது, கம்யூனிச அகிலத்துடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமல் இருப்பது என்பதே அன்றைய பொதுவுடைமை இயக்கத்தின் பிரதான பெரும்பான்மை நிலையாக இருந்தது. தெற்கே சிங்காரவேலரும் வடக்கே டாங்கேயும் இந்த நிலையின் பிதாமகர்களாக இருந்தனர்.
1928-இல் கூடிய கம்யூனிச அகிலத்தின் ஆறாம் மாநாடு ”இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி, எல்லாப் பொதுவுடைமைக் குழுக்களும் தனிநபர்களும் இணைந்து ஒன்றுபட்ட சட்டவிரோதமான கட்சியைக் கட்ட வேண்டும்” என்று அறிக்கை நிறைவேற்றியது. ஆனால் அதை அப்போதைய சி.பி.ஐ நிராகரித்து விட்டது. 1930 இல் மீண்டும் அகிலத்தின் அதிகார பூர்வ பத்திரிக்கை இந்தியாவுக்கான விமர்சனமும் செயல்திட்டமும் எழுதியது. இதை கல்கத்தா மையம் ஏற்ற போதும் டாங்கே தலைமையிலான பம்பாய் மையம் ஏற்கமறுத்து, காந்தி – காங்கிரசு தலைமையிலான இயக்கங்ளில் இணைந்து செயல்பட்டது.
இந்தியாவில் குடியேறி செயல்பட்டு வந்த பிரிட்டன் பொதுவுடைமையாளர்களும், கல்கத்தா மையமும் அகிலத்துக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் 1932-இல் இ.பொ.க.வின் தவறுகளைக் கடுமையாக விமர்சித்து பிரிட்டன், சீனா, ஜெர்மனிப் பொதுவுடைமைக் கட்சிகள் ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பின. 1933-இல் மீண்டும் சீனப் பொதுவுடைமைக் கட்சி, இ.பொ.கவின் அமைப்பு – நடைமுறைகள் மீது விமர்சன அறிக்கை அனுப்பியது.
வெளியிலிருந்து வந்த இத்தகைய இடையறாத முயற்சிகளின் விளைவாக 1933-இல் கூடிய இ.பொ.க வின் இரகசிய மாநாடு, பொதுவுடைமை அகிலத்தில் இணைவது என்றும் அதன் வழிகாட்டுதல்களை ஏற்பது என்றும் முடிவு செய்தது. டாங்கே தலைமையிலான காந்திய – காங்கிரசுக் கம்யூனிஸ்டுத் திட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய புரட்சிகர அறைகூவலை அந்த மாநாடு அமைத்த மத்தியக் குழு விடுத்தது.
ஆனால், ஆறாவது மாதமே கட்சியையும் அதன் துணை அமைப்புகளையும் ஏகாதிபத்திய அரசு தடை செய்தது. டாங்கே போன்ற ”மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகள்” எல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் காங்கிரசு சோசலிசக் கட்சி என்கிற அமைப்பை காங்கிரசுக்குள்ளாகவே நிறுவி, அதில் இணைந்தனர். சிங்காரவேலருக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தின் பொறுப்பேற்ற ஜீவா தலைமையிலான மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகளும் அவர்களைப் பின்பற்றினர்.
காங்கிரசு – காந்திய வழியில் தமது ஆசிரம அரசியலைத் தொடங்கிய ஜீவா, 1932-இல் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். சிறையில் பகத்சிங்கின் கட்சித் தோழர்களிடம் போதனை பெற்று கம்யூனிச அரசியலை ஏற்றார். வெளியில் வந்ததும் பெரியார், சிங்காரவேலருடன் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து ஒரு நாத்திக மாநாடும், பிறகு ஒரு ஜமீன்தாரல்லாத மாநாடும் நடத்தினார். பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார். அதை அச்சிட்டவர் வெளியிட்டவர் என்கிற முறையில் பெரியாரும் அவரது சகோதரியும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததோடு, ஜீவாவையும் அப்படிச் செய்யுமாறு பெரியார் நிர்பந்தித்தார். ஜீவா மறுத்து விட்டார். பார்ப்பனரல்லாதவர்கள் எனத் திராவிட – தமிழினவாதிகளால் இன்றும் போற்றப்படும் பெருவியாபாரிகள் முதலாளிகள், நிலக்கிழார்களின் நிர்ப்பந்தம், அரசின் மிரட்டல் காரணமாக ”கொள்கையைவிட அமைப்பைப் பாதுகாப்பதே முக்கியமானது” என்று சொல்லி சுயமரியாதைத் திட்டதையும் பெரியார் கைவிட்டார்.
இதனால் வெறுப்புற்ற ஜீவா, ”சுயமரியாதை இயக்கம் அவமரியாதை இயக்கமாகிவிட்டது” என்று கூறி வெளியேறி, சிங்காரவேலரைத் தொடர்ந்து சுயமரியாதை சமதருமக்கட்சிக்குத் தலைமையேற்று பிரச்சாரமும், மாநாடும் நடத்தினார். அதற்கு சிறப்பு அழைப்பாளராக வந்த டாங்கே சிறப்புரையாற்றினார். அவரது ஆலோசனைப்படி சுயமரியாதை – சமதருமக் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசு மகாசபையிலும், காங்கிரசு சோசலிசக் கட்சியிலும் இணைந்தனர். 1936-இல் சேலத்தில் மாநாடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசு சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளராக ஜீவா ஆனார்.
மாஸ்கோவில் கம்யூனிசப் பயிற்சி பெற்று தென்னிந்தியாவிற்கு வந்த அமீர் ஹைதர் கான் தலைமறைவாக இருந்து சுந்தரைய்யா, பி. சீனிவாசராவ், ஏ.எஸ்.கே. ஐயங்கார், கே. பாஷ்யம் போன்றவர்களைக் கொண்டு இரகசியக் கட்சி வலைப்பின்னலை உருவாக்கியிருந்தார். அவர்கள் உருவாக்கி இருந்த “யங் கம்யூனிஸ்டு லீக்” என்ற இளைஞர் பொதுவுடைமை அமைப்பு ஆங்கிலேயக் காலனி அரசால் தடை செய்யப்பட்ட போது, அவர்களும் காங்கிரசு சோசலிசக் கட்சியில் இணைந்தனர்.
இக்கட்சியை வலுவாகக்கட்டி, பல தொழிலாளர் அமைப்புக்களை நிறுவி, பொருளாதார போராட்டங்களை நடத்திய போது, இக்கட்சியின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்திருந்த காங்கிரசு முதல் மந்திரி இராஜாஜியும், தொழில் மந்திரி வி.வி. கிரியுமே அவற்றை ஒடுக்கினர். இருந்தாலும் காங்கிரசுக்குள் செயல்பட்டு அதன் அமைப்புப் பதவிகளைப் பிடிப்பதில் முனைப்பாக ஈடுபட்டனர் ஜீவா போன்றவர்கள். இராஜாஜி, காமராஜர், சத்தியமூர்த்தி ஆகியோரோடு போட்டியிட்ட ஜீவா அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 திரிபுரா காங்கிரசில் சுபாஷ் சந்திரபோஸ், மற்றும் காந்தி-நேரு குழுக்களுக்கிடையே தலைமைக்காக நடந்த மோதலின் போது ஒற்றுமையை உருவாக்கவே டாங்கே, ஜீவா போன்றவர்கள் முயன்றனர். காந்தி கும்பல் அம்மாநாட்டில் தோற்றபோதும், நிர்ப்பந்தம் – மிரட்டல் மூலமாக சுபாஷ் சந்திரபோசை விரட்டி விட்டு தலைமையைக் கைப்பற்றியது. அதன் விளைவாக கம்யூனிஸ்டுகள் எனக் கருதப்பட்ட அனைவரையும் காங்கிரசு சோசலிசக் கட்சியிலிருந்து விரட்டும் வேலையை அது மேற்கொண்டது.
இப்படி வெளியேற்றப்பட்டவர்கள் ஜோஷி தலைமையில் தனிக் கட்சியாக அமைந்தனர். அதற்கு இங்கே ஜீவா, இராமமூர்த்தி போன்றோர் தலைமையேற்றனர். இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில் காங்கிரசின் நிலைப்பாடு எடுத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஜோஷி – டாங்கே போன்ற கம்யூனிஸ்டுகள். சோவியத் ஒன்றியத்தை இட்லரின் ஜெர்மனி தாக்கிய போது கம்யூனிச அகிலத்தின் நிலைப்பாட்டைத் தவறாகப் புரிந்து கொண்டனர். ஏகாதிபத்தியப்போரை எதிர்த்துப் புரட்சியைத் தொடுப்பதற்குப் பதில், சோசலிச அரசைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஆங்கில ஏகாதிபத்திய ஆதரவு நிலை எடுத்தனர். இதனால் தடை நீக்கப்பட்டு வெளியே வந்தார்கள்.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதும் நாடு முழுவதும் காந்திய காங்கிரசு வழிமுறைகளை நிராகரித்து, உடனடி விடுதலை கோரி, தொழிலாளர்கள், படைவீரர்களின் ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் வெடித்தன. இதன்பின்னணியில் கம்யூனிஸ்டுகளின் சதி இருப்பதாகக் கருதிய காங்கிரசு அமைச்சரவை பொதுவுடைமை இயக்கத்தைத் தடை செய்து அதன் அணிகளை வேட்டையாடியது. ஆனால் அதன் தலைவர்களோ, புரட்சிக்கு அவசியமான தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியையும், இரகசியக் கட்சி அமைப்புகளையும் நிறுவுவதற்குப் பதிலாக, காங்கிரசு, திராவிடர் கழகப் பிரமுகர்களின் ஆதரவுடன் வெறுமனே தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். ஆந்திராவின் தெலுங்கானாவில் மட்டுமே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 1947 அதிகாரமாற்ற நெருக்கடியைப் பயன்படுத்தி, ஆயதந் தாங்கிய உழவர் பேரெழுச்சியாக வளர்த்தெடுத்தனர். அதேசமயம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவரான ரணதிவே நாட்டின் நிலைமையை மிகை மதிப்பீடு செய்து ரஷ்யப் புரட்சியை அப்படியே காப்பியடித்து, உடனடியாகவே நாடு தழுவிய முறையில் ஆயுதப் பேரெழுச்சி நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் வழிகாட்டுதலைக் கொடுத்தார். இந்த “அதீதப் புரட்சி” காரணமாக கட்சிக்குப் பேரிழப்பு நேர்ந்ததோடு, டாங்கே, மோகன் குமாரமங்கலம், அஜாய் கோஷ் போன்ற துரோகிகளின் சரணடைவுக்குப் பிறகு தடைநீங்கி, இ.பொ.க. சட்டபூர்வக் கட்சியானது.
அதன்பிறகு, நாடாளுமன்ற சகதிக்குள் மூழ்கிக் கொண்டே, எந்தப்பாதையில் நகர்வது என்று குழம்பிக்கிடந்த போது, பொதுவுடைமைத் தலைவர்களுக்கு குருச்சேவின் வருகை பேருதவியாக அமைந்தது. அவர்கள் இந்திய – சீனப்போரைக் காரணமாக வைத்து ”கம்யூனிசக் கட்சி”. “மார்க்சிசக் கட்சி’ என்று இரண்டு பிரிவுகளாக இயங்கினாலும் அவர்களிடையே அடிப்படைத் திட்டத்தில் ஒரே ஒரு வேறுபாடுதான் இருந்தது.
காங்கிரசு, பிற்போக்குப் பெருமுதலாளிகளின் கட்சி அதனுடன் அணிசேரக் கூடாது என்பது ”மார்ச்சிஸ்ட் கட்சி”யின் நிலையாகவும், காங்கிரசு முற்போக்குத் தேசிய முதலாளிகளின் கட்சி, அதனுடன் அணிசேர்ந்தே ஆகவேண்டும் என்பது ”கம்யூனிசக் கட்சி’யின்” நிலையாகவும் இருந்தது. இந்த இருகட்சிகளுமே காங்கிரசு பற்றிய தத்தமது நிலையை தேர்தல் அரசியலுக்கேற்ப மாற்றிக் கொண்டுள்ளதால் இதுவொன்றும் அடிப்படையான வேறுபாடு அல்ல. 1969-இல் இந்திரா காங்கிரசு அரசு சிறுபான்மையான போது, சி.பி.எம் அதை ஆதரித்துக் காப்பாற்றியது. 1977 தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, சி.பி.ஐ. காங்கிரசுக்கு எதிராகப்போய் சி.பி.எம்.மின் நிலை எடுத்தது. இப்போது காங்கிரசுக்கு ஆதரவு என்ற சி.பி.ஐ.யின் முன்னாள் நிலையை இரண்டு கட்சிகளுமே எடுத்துள்ளன.
தமிழகத்தில், சிங்காரவேலருக்குப் பிறகு, டாங்கேயின் வழியில் ஜீவா, கல்யாணசுந்தரம், பாலதண்டாயுதம் போன்றவர்கள் ஒரு பிரிவை வழி நடத்தினார்கள். நம்பூதிரிபாடு வழியில் ராமமூர்த்தி, பாலசுப்பிரமணியம், நல்லசிவம், சங்கரய்யா போன்றவர்கள் மற்றொரு பிரிவை வழிநடத்தினார்கள்.
இந்த இரண்டு பிரிவுகளுமே, ”மரபுவழி மார்க்சியத்தைப் பின்பற்றின, மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைப் பின்பற்றவில்லை” என்று இந்த இரண்டு ”மார்க்சியங்களை”யும் அறியாதவர்கள்தான் சொல்ல முடியும். இவ்விருபிரிவினருமே மார்க்சிய – லெனினியப் புரட்சிவழியை நிராகரித்து, குருச்சேவ், பிரஷ்னேவ், கோர்பச்சேவ், டென்சியாபிங் வழிமுறைகளைப் பின் பற்றுபவர்களாகத்தான் உள்ளனர்.
தேர்தல் அரசியல்வாதிகளாகச் சீரழிந்துபோய்விட்டார்கள் என்பதற்காகமட்டும் இதைச் சொல்லவில்லை. அகில இந்தியத் தலைமையான டாங்கே, நம்பூதிரிபாடு ஆகியவர்கள் வேத இதிகாசப் – புராணங்களில், பார்ப்பனிய சனாதனத்தையே மண்ணுக்கேற்ற மார்க்சியமாகத் தேடினார்கள். இதைத்தான் ”இந்திய மரபு. இந்திய ஞான. இந்தியக் கலாச்சாரம் ஆகியவற்றில் வேர் விட்டு பொதுவுடமை இயக்கத்தை வளர்க்க வேண்டும்” என்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ”மார்க்சிஸ்ட்கட்சி – சி.பி.எம்”காரர்கள் நம்பூதிரிபாடின் சனாதன வியாக்கியானங்களைப் பற்றி ஒழுகுகின்றனர். ஆனால் சிங்காரவேலர், ஜீவா வழிவந்த சி.பி.ஐ.காரர்கள் பாரதி, வள்ளுவம், கம்பராமாயணம் இவற்றில் எல்லாம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தைத் தேடி “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” உருவாக்கி, அந்த வகையில் திராவிட – தமிழினவாதிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர்.
இவை ஒருபுறமிருக்கட்டும். மரபு வழி மார்க்சியமே மண்ணுக்கேற்ற மார்க்சியத்தைத் தான் போதிக்கிறது. மார்க்சியத் துரோகிகளும் எதிரிகளும் அவதூறு செய்வதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைகளை வைத்திருப்பதாக மரபுவழி மார்க்சியம் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை. மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மரபுவழி மார்க்சியம் போதிக்கிறது. மார்க்சிய – லெனினிய இயக்கம் மட்டும்தான் இந்த வழியிலே முயற்சிக்கிறது. எனவேதான், அதிகாரபூர்வ கம்யூனிசக் கட்சிகள் புறக்கணித்த தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின, தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பே கையிலெடுத்தது.
இதைக் காண மறுத்துக் கண்களை மூடிக் கொள்ளும் தமிழின, தலித்தியவாதிகள் பெரியாரிய, அம்பேத்கரியப் பார்வையை ஏற்றுக் கொண்டால்தான் தேசிய இன, சாதியப் பிரச்சினையை அணுகித் தீர்க்கும் “மண்ணுக்கேற்ப மார்க்சியம் இல்லையென்றால் மரபுவழி மார்க்சியம்” என்று அடாவடி பேசுகின்றனர்.
மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி பாசிச- பார்ப்பன சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!
சாத்தன்
புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999.
///1934-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை ஆங்கிலேய அரசு தடை செய்து, கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கியவுடன் பெரியார் சுயமரியாதைத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.///
////பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார். அதை அச்சிட்டவர் வெளியிட்டவர் என்கிற முறையில் பெரியாரும் அவரது சகோதரியும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததோடு, ஜீவாவையும் அப்படிச் செய்யுமாறு பெரியார் நிர்பந்தித்தார். ஜீவா மறுத்து விட்டார்.////
_______பெரியாரியவாதிகள் இதற்கு என்ன விதமான வண்ணமய பதில்களை தரப் போகிறார்கள்????
வினவு சமயத்தில் ஆரிய பாசம் மிகுந்து எழுதுவதுண்டு! பெரியார் பகத்சிங் புத்தகத்தை வெளியிட்டதற்கான ஆதாரம் உள்ளது! அதற்காக மன்னிப்பு கேட்டு கொண்டதாக கதைப்பது ஆதாரமற்றது!
அய்யா, கம்யூனிஸ்டுகளை “இழிவுபடுத்தும்” பார்ப்பனிய ஆதிக்க சாதிவெறியில் தாங்கள் சிக்கியிருப்பதால் கட்டுரையை படிக்காமலேயே உளறுகிறீர்கள். பெரியார் பகத்சிங் புத்தகத்தை வெளியிட்டார் என்றுதான் கட்டுரை கூறுகிறது. வெளியிட்டதற்காகத்தான் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
//”பகத்சிங் எழுதிய ”நான் ஏன்நாத்திகனானேன்?” என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக ஜீவா சிறையிலடைக்கப்பட்டார். அதை அச்சிட்டவர் வெளியிட்டவர் என்கிற முறையில் பெரியாரும் அவரது சகோதரியும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததோடு, ஜீவாவையும் அப்படிச் செய்யுமாறு பெரியார் நிர்பந்தித்தார். ஜீவா மறுத்து விட்டார். பார்ப்பனரல்லாதவர்கள் எனத் திராவிட – தமிழினவாதிகளால் இன்றும் போற்றப்படும் பெருவியாபாரிகள் முதலாளிகள், நிலக்கிழார்களின் நிர்ப்பந்தம், அரசின் மிரட்டல் காரணமாக ”கொள்கையைவிட அமைப்பைப் பாதுகாப்பதே முக்கியமானது” என்று சொல்லி சுயமரியாதைத் திட்டதையும் பெரியார் கைவிட்டார்.//
பெரியார் தோழர் ஜீவா அவர்கள் எழுதிய பகத்சிங் நூலின் புத்தக வெளியீட்டுக்காக மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்ற விசயத்தில் ஏதேனும் ஆதாரம் இருப்பின் வெளியிடலாம்… (எனக்கு உண்மை உண்மையில் தெரியவில்லை)
என் பதிலை நீங்கள் சரியாக படிக்கவில்லை போலும்! பெரியார் பகத்சிங்கின் “னான் ஏன்நாத்திகனானேன்?’ என்ற புத்தகம் வெளியிட்டதற்கு ஆதாரம் அந்த புத்தகமே என்னிடம் உள்ளது என்பதே! அதற்கு மன்னிப்பு கேட்டிருந்தால் , அத்ற்கு ஆதாரம் எங்கே?
பெரியாரை பற்றி ஏ எஸ் கே அய்யங்கார் அவர்களோ, சிங்கார வேலரோ அல்லது ஜீவாவோ இப்படி எழிதியிருக்கிரார்களா?
முன்பொரு முறை அயொத்தி தாசர் – பெரியார் ப்ற்றியும், தோழர் எம் சி ராஜா பி அன்ட் சி மில் தொழிலாளர் போராட்டத்தில் முதலாளிகள் பக்கமிருந்தது பற்றியும் தவரான தவல் வினவில் வந்திருக்கிறது! பெரியார் பற்றி வினவு ஏதஓ ஒரு காழ்ப்புணர்ச்சியில் இருப்பது புரிகிறது! எம் சி ராஜாவின் மைத்துனர் கடைசி வரை பெரியார் பக்கமே இருந்தார்! ஆங்கில ஆட்சியின் போது வாடியா, திரு வி க ஆகியோர் தண்டனைக்குள்ளானபோது அதை எதிர்த்து போராடியது பெரியார்தான்! அவர் சிறைக்கு அஞ்சி பணிந்தார் என்றால் அதற்கு தக்க ஆதாரம் காட்ட வேண்டாமா?
P.Jeevanandam who translated into Tamil , Bhagat Singh’s ‘ Why I am an Atheist?’ and E.V.Krishnasamy, Periyar’s elder brother who published it on behalf of the self-respect press were arrested under Section 124 A of IPC (sedition). Periyar asked them to give an undertaking to the Government that they would not indulge in such seditious and anti-government activities and secure their release. In response to the criticism from the young and more militant self -respecters that Periyar’s act was a regretful compromise and a sign of cowardice, he owned up the responsibility for asking his colleagues to give such an undertaking but argued that he was not interested in ‘martyrdom’ either for himself or for other self-respecters but was only exploring avenues to carry forward the self-respect works in a charged political climate where, according to his reading, the Congress-British alliance was being forged after 1932 Gandhi-Irvin Pact and Gandhi’s influence was increasing in civil society while the Government were contemplating a ban on Self-Respect movement following the ban imposed on the Communist party. Periyar argued for a pragmatic way forward steering clear of the obstacles being erected from various directions.
http://www.evrperiyar-bdu.org/
இந்த கட்டுரை என் மனதுக்கு மிக அணுக்கமான கட்டுரையாக இந்திய மார்ஸிய வரலாற்றை விவாதிக்கின்றது…. வினவுக்கு எனது நன்றிகள்..வினவுடன் பல தர்க்கங்களில் முரன்பட்டாலும் பொதுவெளியில் விவாதத்தின் போது தேவை என்று வருகின்ற போது வினவு கட்டுரைகளை தான் ஆதாரத்துக்கும் ,மேற்கோள் கட்டுவதற்கும் நான் எடுத்து கொள்கின்றேன்….(இது பிழைப்புவாதம் அல்ல அல்ல்லவா வினவு?)
1.தலித் போராட்டங்கள் பொங்கி எழும் இன்றைய தருணத்தில் விசிக வின் ரவிக்குமார் இன்று மோடிக்கும் குடைபிடிக்கவில்லையா? அது போன்ற பிழைப்புவாதம் தான் சீனிவாசனின் கட்சி மாற்றமும்…. என்ன விசிக வினர் இந்த ரவிக்குமாரை இன்னும் அனுசரித்து கொண்டு உள்ளார்கள்…. அந்த அளவுக்கு எல்லாம் கம்யூனிஸ்டு கட்சிகள் சித்தாந்த எதிரிகளை அனுசரிக்காது அல்லவா?( கட்சியினுள் இந்த சீனிவாசன் கருத்தியல் ரீதியில் போராடியிருப்பார் என்று நம்புகிறேன்) அப்படி என்றால் அவர் வெளிஏற்றப்படுவதும் அல்லது அவர் வெளியேறுவதும் வியக்க தக்க ஒன்று அல்லவே?//“இந்திய மரபு, இந்திய அறிவு, இந்திய ஞானம் இவற்றில் நாம் வேரூன்றி நிற்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் வாதம். இது மார்க்சியத்தின் மறுவடிவம்தான்.” என்றும் கூறுகிறார்.//
2.இந்த இரண்டாவது கருத்தின் மீதான விவாதத்தை இந்த கட்டுரை முன்னெடுத்து செல்லவில்லை என்று நம்புகிறேன்… சாதி ஒழிப்புக்கு அம்பேதகாரின் கொளகைகள் போதாமை என்று கூறும் கம்யூனிஸ்டுகள் அவரின் சாதி ஒழிப்பு கொள்கைளை நடைமுறை படுத்தாமலேயே பேசுகின்றார்கள் என்று தான் நம்புகிறேன்… வர்க்கப்போருக்கு முன் நிபந்தனையாக சாதிஒழிப்பு இருக்கவேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன்… அதனை வெகுசன போராட்டங்களில் அண்ணல் மற்றும் சமத்துவ ஆசான் ஆகியோரின் பதகைகளுடன் “சாதியை ஒழிப்போம்……. வர்க்கமாய் எழுவோம்” என்ற கொள்கை முழுக்கத்துடன் முன்னெடுத்து செல்லவேண்டும் என்று கூறுகிறேன்…..இந்தியாவில் சாதி ஒழிப்பு இன்றி
உழைக்கும் மக்களை அணிதிரட்ட முடியாது அல்லவா?
//”இந்த நாட்டின் தனிச்சிறப்பான கூறுகளாகிய தேசிய இனப்பிரச்சினை, சாதிய முறை போன்றவற்றை ஐரோப்பியத் தத்துவமான மரபுவழி மார்க்சியம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்சியத்துடன் பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் இணைப்பதன் மூலம் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.//
“சாதி ஒழிக்கப்பட்ட சமுகத்தில் உழைக்கும் மக்கள் வர்க்கமாய் திரள்வது என்பது எளிது….சாதியுடன் வர்க்கப்போரில் வெல்லமுடியாது….அப்படி வென்றாலும் உழக்கும் மக்கள அரசிலும் சாதியும் கூடவே பயணிக்கும்”
அய்யா, வர்க்கப் போராட்டத்திற்கு முன் சாதி ஒழிப்பை எப்படி, என்ன முறையில், என்ன பாதையில் செய்வீர்கள்? விளக்கவும். திட்டம் ஏதும் இருப்பின் அளிக்கவும்.
தோழர் வினவு,
திரு அம்பேத்கார் அவர்களின் சாதியை ஒழிப்பது எப்படி(anillation of cast) என்ற நூலை சாதி ஒழிப்புக்கான வேலைத்திட்டமாக நடைமுறை படுத்தலாம் வினவு தோழர்…..
மார்சியம் உழைக்கும்.., ஒடுக்கப்பட்ட மக்களுக்களின் அரசை நிறுவதுக்கான செயல் ஆயுதம்… வர்க்க போரில் போர் தந்திரம் என்பது நீண்ட கால வர்க்க போரில் உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிது சிறிதாக இலக்கை நோக்கி முன்னேறுவதற்ற்க்கான அரசியல் கள சண்டைகள்…,போராட்டங்கள்… நமது போர் தந்திரம் சாதியை ஒழிப்பதாக இருப்பதால் முதலில் நாம் அம்பேத்கார் காட்டும் வழியில் சாதிகளை ஒழிப்பதன் மூலம் உழைக்கும்.., ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைப்போம்…. நாம் இப்படி சாதியை அழித்து பாட்டாளி வர்க்கமாக நாம் அணி திரளும் தருணத்தில் இந்திய அரசு என்ன உலக ஏகாதிபத்தியங்களே நன்மை கண்டு பயத்து நடுங்கும்… பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறைவேற்றுவதன் ஊடாக உலகம் எங்கும் வர்க்க போர் நடக்க வழிகாட்டுவோம்….
மேலும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு முன் நிபந்தனையே சாதியை ஒழிப்பது என்பதால் தான் “””சாதியை ஒழிப்போம்…. வர்க்கமாய் எழுவோம்”” என்கிறேன்….காரணம் எளிது.ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு அப்பாலும் உழைக்கும் மக்கள் உள்ளார்கள் தோழர்… அவர்கள் சாதியால் பிளவுபட்டு இருப்பார்கள் எனில்(அது தான் உம்மையும் கூட) இங்கு சாதி ஒழிப்பு என்பது ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்கவே முக்கிய தேவையாக நம் முன் நிற்கின்றது…என்ன செய்யலாம் ஒருங்கிணைக்க? சாதியை ஒழிப்பதனை தவிர….
80 ஆண்டு கால நீண்ட நெடிய இந்திய கம்யூனிச வரலாற்றில் கம்யுனிஸ்டுகளாகிய நாம் இன்று சாதியை ஒழித்து இருந்தால் (ஒழிக்கவில்லை என்பது தான் உண்மை) .., அடுத்தகட்ட வர்க்க போருக்கு நாம் இன்று வெற்றிகரமாக சென்று இருக்க முடியும்…
//அய்யா, வர்க்கப் போராட்டத்திற்கு முன் சாதி ஒழிப்பை எப்படி, என்ன முறையில், என்ன பாதையில் செய்வீர்கள்? விளக்கவும். திட்டம் ஏதும் இருப்பின் அளிக்கவும்.//
அய்யா கேள்விக்கு பதில் வரவில்லை, ஒரு புத்தகத்தை நடைமுறைபடுத்தலாம் என்பது புரியவில்லை. அம்பேத்கரின் சாதியை ஒழிப்பது எப்படி நூலின் படி எப்படி சாதியை ஒழிப்பீர்கள் என்பதை விளக்குங்கள்! புரியவில்லை என்றால் மீண்டும் ……. அம்பேத்கரின் புத்தகத்தை நீங்கள் படித்திருக்கிறீர்கள். உங்கள் புரிதலின் படி எப்படி சாதியை ஒழிப்பீர்கள் என்பதை ஒரு கருத்தாக முன்வரைவாக வையுங்கள்!
“”விளக்கவும். திட்டம் ஏதும் இருப்பின் அளிக்கவும்””. என்ற வினவின் கோரிக்கைக்கு பதிலை தான் திரு அம்பேத்கார் அவர்களின் சாதியை ஒழிப்பது எப்படி(anillation of cast) என்ற நூலை சாதி ஒழிப்புக்கான வேலைத்திட்டமாக நடைமுறை படுத்தலாம் வினவு தோழர்…..என்று பதில் அளித்து இருந்தேன்…உங்களுக்கு அந்த நூலை சாதி ஒழிப்புக்கான வேலை திட்டமாக ஏற்க இயலாத நிலையை கண்டு நான் உண்மையில் வருந்துகின்றேன்….”ஒரு புத்தகத்தை நடைமுறைபடுத்தலாம் என்பது புரியவில்லை.” என்று வியப்புடையவேண்டாம் ஐயா… சமத்துவ ஆசான் மார்க்ஸ் அவர்களின் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை எப்படி உலக உழைக்கும் மக்களுக்கு எல்லாம் கம்யூனிச சமூகத்தை அமைக்க வேலை திட்டமாக அமைந்ததோ அது போன்று தான் அம்பேத்கார் அவர்களின் சாதியை ஒழிப்பது எப்படி(anillation of cast) என்ற நூலும் இந்திய சமூகத்தின் சாதிகளை ஒழிக்க வேலைத்திட்டமாக அமையும்… உங்களுக்கு அந்த நூலில் கருத்து வேற்றுமை இருப்பின் கண்டிப்பாக விவாதிக்கலாம் வினவு தோழர்…
அய்யா, பொய்யுரைப்பது அழகல்ல. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு திட்டத்தை அமல்படுத்தலாம் என்பதை விளக்குங்கள் என்று கேட்டால் நீங்கள் அதை திட்டமாக ஏற்கவில்லை என்று திசைதிருப்புகிறீர்கள்? கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எப்படி அமல்படுத்துகிறீர்கள் என்று யாரும் கேட்டால் அதை எப்படி அமல்படுத்துவோம் என்பதை விளக்கும் கடமை, புரியவைக்கும் கடமை, கேள்வி கேட்டால் பதில் அளிக்கும் கடமை ஒரு கம்யூனிஸட்டுக்கு உண்டு. மாறாக அந்த கேள்வியை மறுத்து அந்த நூலை நீங்கள் ஏற்கவில்லை என்று புலம்பினால் அவர் ஒரு கம்யூனிஸ்ட்டே கிடையாது. ஆகவே மீண்டும் கேள்வி…அம்பேத்கரின் நூலை வைத்து சாதியை எப்படி ஒழிப்பீர்கள்? ப்ளீஸ்……….
”ஒரு புத்தகத்தை நடைமுறைபடுத்தலாம் என்பது புரியவில்லை.” என்று வியப்புடன் பேசியது நீங்கள் தானே? அதில் உள்ள பொருள் என்னவென்று சிந்தனை செய்து பாருங்கள்…எனக்கு அம்பேத்காரின் சாதியை ஒழிப்பது எப்படி என்ற நூலை விளக்குவதில் அல்லது விளக்கவுரை எழுதுவதில் ஏதும் பிரச்சனை இல்லை… அதே நேரத்தில் இதுவரையில் கம்யூனிஸ்டுகள் அந்த புத்தகத்தை பற்றிய எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் இருப்பது எப்படி என்ற கேள்வி தான் இங்கு தொக்கி நிற்கின்றது… அவரின் anillation of cast நூலை படிக்க கூட நேரமில்லையா உங்களுக்கு? அல்லது மனமில்லையா உங்களுக்கு?
அய்யா, சாதி ஒழிப்பிற்கான திட்டம், நடைமுறை அம்பேத்கரின் நூலில் இருப்பதாக கூறியது தாங்கள், நானல்ல! இந்த எளிய கேள்விக்கு கூட பதிலிளிக்க திணறுவதால் அம்பேத்கரின் நூலை வைத்து சாதியை ஒழிக்க முடியும் என்று தாங்கள் சிறிதளவு கூட கருதியதில்லை என்பது தெரிகிறது. நன்றி. நீங்கள் படித்த நூல் குறித்து கேள்வி கேட்டால் நீயே படித்து தெரிந்து கொள், இது வரை படித்ததில்லையா என்பதெல்லாம் எந்த வாதத்திலும் எடுபடாது. கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கையை வைத்து எப்படி புரட்சி நடத்துவீர்கள் என்று கேட்டால் நீங்களே அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள், ஏற்கனவே படிக்கவில்லையா என்று ஒருக்காலும் நாங்கள் யாரையும் கேட்க மாட்டோம். கம்யூனிசம் ஏன் சரி, அதை எப்படி அமல்படுத்துவது என்பதை விளக்க வேண்டியது கம்யூனிஸ்ட்டுகளின் கடமை. ஆகவே மீண்டும் கேள்வி. அம்பேத்கரின் நூலை வைத்து சாதியை எப்படி ஒழிப்பீர்கள்? சான்றாக தமிழகத்தில் உங்கள் தலைமையில் ஒரு கட்சி அம்பேத்க்ரின் நூலை வைத்து சாதி ஒழிப்பை எப்படி அமல்படுத்தும்? என்ன பிரச்சாரம் செய்வீர்கள்? யாரை அணிதிரட்டுவீர்கள்? யார் எதிரிகள்? யார் நண்பர்கள்?
உங்களின் பதட்டம் என்னை ஆச்சிரிய படுத்துகின்றது…. முதலில் அந்த நூலை (anillation of cast ) விமர்சனம் செய்யும் அளவுக்கு கூடவா உங்களுக்கு பொறுமை இல்லை…. எனக்கு பதில் அளிக்க முயன்று நீங்கள் தான் வாசகர்களிடம் அம்பலப்பட்டு போகினரிகள்… இந்த நூல் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய புத்தகம்… கம்யூனிஸ்டு கடசி அறிக்கை பற்றி வாசகர் ஒருவர் அப்படி உங்களிடம் கேள்வி எழுப்பினால் நீங்கள் பதில் அளிக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது… அதே நேரத்தில் இன்னும் உங்கள் தோழர்கள் யாருமே .., ஒருவர் கூடவா anillation of cast நூலை படிக்கவில்லை ? உங்கள் தோழர்கள் யாருமே… அந்த நூலை பற்றி விவாதிக்கவில்லை என்ற உண்மையை மீண்டும் மீண்டும் வெளிப்டுத்திக்கொண்டு உள்ளீர்கள்….நன்றி…
உங்களுக்கு anillation of cast நூல் சாதி ஒழிப்புக்கு காட்டும் வழிமுறைகள் ஏற்புடையனவா இல்லையா என்பதனை அந்த நுலை படித்துவிட்டு இங்கு விவாதியுங்கள் வினவு தோழர்….
அய்யா கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை குறித்து வாசகர் கேட்டால் மட்டுமே பேசுவோம் மற்றவர் கேட்டால் பதிலளிக்க மாட்டோம் என்பெதெல்லாம் உங்களின் பயங்கரமான கற்பனை. எங்களைப் பொறுத்த வரை வாசகர், எழுத்தாளர், அறிஞர்கள், மக்கள், கட்சியினர் யார் கேட்டாலும் பேசுவோம், பதிலளிப்போம், விவாதிப்போம், புரிய வைப்போம். மாறாக அந்த அறிஞரே கம்யூனிஸ்டு கட்சி- அறிக்கையை படித்திருந்தாலும் அது எங்களுக்கு பிரச்சினையில்லை, போதுமானதில்லை, தேவையில்லை. போதுமா? மற்றபடி அதே கேள்வி……….சாதி ஒழிப்பு எப்படி?
ஒரு கேள்வி அம்பேத்காரின் anillation of cast நூலை உங்கள் தோழர்கள் படித்துவிட்டு அல்லது படிக்காமல் எந்த நிலையில் இந்த கேள்வியை எழுப்புக்கினறிகள் வினவு தோழர் ? உங்கள் பதில் எனக்கு விவாதிக்க தேவையாக உள்ளது வினவு தோழர்…
//அம்பேத்கரின் நூலை வைத்து சாதியை எப்படி ஒழிப்பீர்கள்? சான்றாக தமிழகத்தில் உங்கள் தலைமையில் ஒரு கட்சி அம்பேத்க்ரின் நூலை வைத்து சாதி ஒழிப்பை எப்படி அமல்படுத்தும்? என்ன பிரச்சாரம் செய்வீர்கள்? யாரை அணிதிரட்டுவீர்கள்? யார் எதிரிகள்? யார் நண்பர்கள்?//
அய்யா, கம்யூனிஸ்டுகளின் புரட்சி திட்டத்தை விவாதிப்பதற்கு, கற்றுக் கொடுப்பதற்கு யாரிடமும் கம்யூனிச நூல்களை படிப்பது நிபந்தனை அல்ல என்று நாங்கள் சொல்வதையும், சாதி ஒழிப்பு குறித்து ஐயம் கேட்கும் ஒருவரிடம் பேச முடியாது, அவர் அம்பேத்கரின் நூலைத்தான் படிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வதையும் நீங்களே ஒத்துக் கொண்டதற்கு நன்றி. உரையாடல் முடிந்தது. அதற்கு மீண்டும் ஒரு நன்றி.
மற்றவர் கேட்டால் பதில் அளிக்கமாட்டிர்கள் என்பது உங்களின் சுய கற்பனையாக வேண்டுமானால் இருக்கலாம்… நான் அப்படி கூறவும் இல்லை..கற்பனை செய்யவும் இல்லை… இது விவாதத்தை திசைதிருப்பும் முயற்சி… அந்த முக்கியமான சாதி ஒழிப்புக்கான வேலை திட்டத்துடன் கூடிய நூலை நீங்கள் இதுவரையில் படிக்காமல் தான் உள்ளிகளா? //”அய்யா கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை குறித்து வாசகர் கேட்டால் மட்டுமே பேசுவோம் மற்றவர் கேட்டால் பதிலளிக்க மாட்டோம் என்பெதெல்லாம் உங்களின் பயங்கரமான கற்பனை “–வினவு //
வினவு தனி நபர் கிடையாது… ஒரு மார்ஸிய இயக்கத்தின் தளம்… எனவே தான் கேட்கின்றேன்…. உங்கள் தோழர்கள் யாருமே அந்த நூலை பிடிக்கவில்லையா? இது வரையில் அந்த நூலை நீங்கள் யாருமே விவாதிக்கவில்லையா என்று…//அய்யா, கம்யூனிஸ்டுகளின் புரட்சி திட்டத்தை விவாதிப்பதற்கு, கற்றுக் கொடுப்பதற்கு யாரிடமும் கம்யூனிச நூல்களை படிப்பது நிபந்தனை அல்ல //
இந்த உரையாடல் வாசகர்களிடமும் சென்று சேரும் என்ற நிலையில் அதனை கருத்தில் கொள்ளாமல் விவாதத்தை முடித்துக்கொண்டு உள்ளீர்கள்….இதுவரையில் விவாதித்தமைக்கு மிக்க நன்றி வினவு தோழர் ….
என்னய்யா வினவு எல்லாத்துக்கும் தீர்வ ஆசான் மார்கஸ் எழுதிட்டாறுனு சொல்லியாச்சே அப்புறம் இன்னாத்துக்கு இன்னொரு ஆளுகிட்ட தீர்வ எதிர்பாக்குறீக வர்க்கம் வர்க்கமுனு சொல்லுறீகளே அது என்னய்யா வர்க்கம் உழைக்கும் வர்க்கம் தானே எல்லாரும் உழைக்கும் வர்க்கம் தான் என்றால் ஏன் சாக்கடை அள்ள மட்டும் ஒரு ஜாதி,ஏன் பெரும்பான்மை விவசாய கூலிகளாக இன்னொறு ஜாதி ,ஆலை தொலிலாளிகளாக பெரும்பான்மையினர் ஒரு ஜாதி இதையெல்லாம் ஒழிக்காம் வர்க்க போராட்டமுனு புருடா விடப்புடாது
திரு ஜோ.., இந்திய பாட்டாளி வர்க்கம் சாதியாய் பிரிந்து உள்ளது என்ற உண்மையை நீங்கள் உணர்ந்து உள்ளீர்கள் ஜோசப்… மேலும் அந்த பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட,சமதர்ம ஆசான் மார்க்ஸ் கூறியபடி உலக தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் என்ற அவர் கனவு இந்தியாவில் நிறைவேற சாதி அழித்து ஒழிக்கப்படவேண்டும் என்ற உண்மையயையும் நீங்கள் உணர்கின்றிகளா நன்பரே? புரிவித்தலுக்கு நன்றி.நன்றி.நன்றி
விஞ்ஞான சோஷியலிசத்தை விடுத்து , “வேதிய சோஷியலிசம்” பேசும் வட இந்திய தலைமையை ஆதரிப்பதால் “திராவிட” இயக்கங்களை கொச்சைப்படுத்த வேண்டுமா?
அல்லது கருத்து ரீதியில் ஒத்த கருத்துள்ளவர்களிடம் இணைந்து பணியாற்ற வேண்டுமா என்பதை , உண்மையில் மக்கள்நலனில் அக்கரை கொண்டவர்கள் கவனிப்பார்களாக! வினவின் கட்டுரைகளையேநான் பலருக்கும் ஆதாரமாக சொல்லி வருகையில் , சில பார்பன சக்திகளுக்கே உரிய திரிப்பு களைநாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்! அம்பேதாரோ, பெரியாரோ விட்டு சென்றிருக்கும் அறிவு களன்சியங்களைநாம் விமர்சிக்கலாம், ஆனால் ஆதாரமற்ற , தனிநபர் இழிவு படுத்தும் செய்திகளை தவிர்க்கவும்! அம்பேத்கர்-பெரியார் இணைப்பை துண்டிப்பதால், தாழ்த்தப்பட்டவர்-பிற்படுத்தப்பட்டவர் இணைவதை தடுக்க அந்த காலத்திலேயே பார்பனர் ஆரம்பித்த முயற்சி இது ! அன்பர்கள் துணை போக வேண்டாம்!!
“Cast is not just division of labour ,it is division of Labourers “– Dr. B.R. Ambedkar
இந்திய சாதி அமைப்பு வேலையை மட்டும் பிரிவினை செய்யவில்லை… அது வேலையாட்களையும் பிரிக்கின்றது… இன்னும் தெளிவாக சொல்வது என்றால் அது பாட்டாளி வர்க்கத்தையே பிரிகின்றது… அத்தகைய நிலையில் இந்திய உழைக்கும் மக்களை வர்க்கமாக ஒருங்கிணைக்க முதன்மையான பணி சாதியை ஒழிப்பது மட்டுமே ஆகும்…சாதியை ஒழித்தால் தான் பாட்டாளி வர்க்கம் ஒருங்கினையும் எனில் சாதியை ஒழிப்பது தான் வர்க்கப்போருக்கு முன்நிபந்தனையாக இருக்கமுடியும். இந்த கருத்தின் மீது வினவுக்கு கருத்து வேற்றுமை இருந்தால் விவாதிக்கலாம்…
சாதியை ஒழிப்பது எப்படி என்ற வினவின் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் முன்நிபந்தணை பின் நிபந்தனை என்று பேசினால் என்ன அர்த்தம்.
திரு ரவி முதலில் வர்க்க போருக்கு முன் சாதியை ஒழிக்கும் தேவை இருப்பதனை நீங்கள் உணருகின்றிர்களா இல்லையா? அதனை கூறமுயலுங்கள்…”முன்நிபந்தனை,பின்நிபந்தனை” என்று எல்லாம் கிண்டல் செய்து விவாதத்தை கொச்சை படுத்தாமல் பேசுங்கள் நன்பரே….
பாட்டாளி வர்க்க போருக்கு முன் சாதியை ஒழிக்கும் தேவை இருப்பதனை அம்பேத்காரின் கருத்துக்களுடன் இணைத்து தான் விவாதித்து உள்ளேன்… இந்த கேள்விக்கான பதிலை நாம் அடைவதன் மூலம் அடுத்ததாக எப்படி சாதியை ஒழிப்பது என்று விரிவாக விவாதிக்கலாம்….அது சரி அம்பேத்காரின் annihilation of cast என்ற நூலை வாசித்திர்களா நன்பரே… அந்த நூலின் அடிப்படையில் தான் பேசிக்கொண்டு உள்ளேன்….
நான் வாசித்ததில்லை. பாட்டாளி வர்க்க போருக்கு முன் சாதியை ஒழிக்க தேவை இருக்கிறது அதை எப்படி செய்வது?
“As a form of division of labour , the Caste system suffers from another serious defect. The division of labour brought about by the Caste System is not a division based on choice. Individual sentiment, individual preference, has no place in it. It is based
on the dogma of predestination.” -Dr. B.R. Ambedkar
ஒரு இந்திய உழைப்பாளி அவன் எந்த மாதிரியான வேலையை செய்ய தன் உழைப்பை விற்க வேண்டும் என்பதனை அவனே முடிவு செய்ய இயலாத நிலையை இந்திய சாதி அமைப்பு உருவாகியுள்ள நிலையில் இந்த சாதி அமைப்பை அழிக்காமல் எப்படி நாம் உழைப்பாளிகளை ஒரே நிலையில் உள்ளவர்கள்.., ஒரே வர்க்கம் என்று இந்திய சமூகத்தில் வரையறை செய்ய முடியும்? சாதியை ஒழிக்காமல் எப்படி உழைக்கும் வர்க்கத்துக்குள் வர்க்க சமநிலையை நாம் அடையமுடியும்…? எனவே தான் இந்திய பாட்டாளி வர்க்கத்தை ஒன்றுபடுத்த,வர்க்க போரை சாத்தியமாக்க சாதி ஒழிப்பு என்பது மிக முக்கிய முன்நிபந்தத்தை ஆகின்றது… இந்த கருத்தின் மீது வினவுக்கு கருத்து வேற்றுமை இருந்தால் விவாதிக்கலாம்…