Tuesday, July 23, 2024
முகப்புஉலகம்அமெரிக்காநசீம் இக்மத் : துருக்கியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்

நசீம் இக்மத் : துருக்கியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்

-

சையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.

நசிம் இக்மத்(வலது)
சிறையில் நசீம் இக்மத்(வலது)

ஒட்டோமான் பேரரசுச் சர்வாதிகாரத்தின் கீழ் 1902-இல் துருக்கியில் பிறந்தவர் நசீம். தந்தை அரசு அதிகாரி, தாய் போலிஷ் இனத்தைச் சேர்ந்த ஓவியர். பிரெஞ்சுப் பள்ளியில் படிப்பு; கடற்படைப் பள்ளியில் மேற்படிப்பு; முதல் உலகப் போரின் கடைசிக் கட்டம் அரங்கேறிய போது நசிம் இஸ்தான்புல்லில் இருந்தார். நேசநாட்டுப் படைகள் ஒட்டோமான் பேரரசின் மீத மிச்சங்களைப் பங்குபோடத் தீவிரமாக இறங்கியிருந்தன. ஆக்கிரமிப்புப் படைகள் தலைநகரை நோக்கி நகர்ந்த சமயம் அங்காரா என்ற நகரில் துருக்கி தேசத்தின் மாற்று அரசை அறிவித்தார் ஓர் வீரர். அவர் தான் முஸ்தபா கெமால். மாபெரும் கலிபோலிச் சண்டையின் கதாநாயகன் என்றறியப்பட்ட கெமால் தேசியப் பாதுகாப்புப் படையை வேகமாகக் கட்டி எழுப்பினார். ‘நாடு அழைத்தது நான் சென்றேன்’ என்று நினைத்த வேகத்தில் தனது நண்பரோடு சேர்ந்து கொண்டு பாதுகாப்புப் படையில் சேர்ந்து விட முடிவெடுத்தார் நசீம்.

அந்த நாட்களில் கெமால் படையில் போய்ச் சேருவது எளிதான செயலுமல்ல. ரயில் பாதைகளை ஆக்கிரமிப்புப் படைகள் கைப்பற்றி விட்டதால், ஆறுகள் மூலமாகவும், கொடிய மலைக் கணவாய்கள் வழியாகப் பல நாட்கள் கடுமையாக நடந்தும் அங்காரா போகவேணடும். வழியில் இவர்களைப் போலவே ‘ஸ்பார்டகஸ்’ பெயரைத் தங்களுக்குச் சூட்டிக் கொண்ட ஒரு குழுவைச் சந்தித்தார்கள். அவர்கள்தான் நசீமுக்கு மார்க்சையும், லெனினையும் அவர்களின் புரட்சிச் சித்தாந்தங்களையும் அறிமுகம் செய்தார்கள். பலநாள் சோறு இல்லாமல், நல்ல தண்ணீர் இல்லாமல் அலைந்து நடந்து போரினால் சிதைக்கப்பட்ட பல கிராமங்களின் வழியாக நசீம் பயணம் சென்றார். அந்த நிலைமையிலும் விவசாயிகள், ஏழைபாழைகள் லட்சியப் பயணிகளுக்குச் சோறு போட்டார்கள்; வழி சொல்லிக் கொடுத்தார்கள்.

முஸ்தபா கெமால்
மாபெரும் கலிபோலிச் சண்டையின் கதாநாயகன் என்றறியப்பட்ட கெமால் தேசியப் பாதுகாப்புப் படையை வேகமாகக் கட்டி எழுப்பினார்

அங்காராவில் இவர்கள் கெமாலைச் சந்தித்தார்கள். இவரும் நண்பரும் கவிஞர்கள் என்று கேள்விப்பட்டதும் ‘லட்சியத்துக்கான கவிதைகளை எழுதுங்கள்’ என்று சொன்னதோடு கெமால் அவர்களைக் கல்விப் பணிக்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். அந்த நாட்களில் கல்வித் துறை எதிரிகளைச் சந்திக்கும் மற்றொரு போர்முனையாக இருந்தது. இவர்களுக்கு போலு என்ற சிறுநகரத்தில் ஆசிரியர் வேலை பணிக்கப்பட்டது, போர்முனைக்குச் செல்ல விரும்பிய நசீமுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் குறைவான கல்விப்பணியும், அதுவும் பயனற்றுப் போவதைப் பார்த்ததும் மிக விரைவிலேயே சலிப்புற்றனர்; எல்லைக் கோட்டைக் கடந்து ரசியாவுக்குச் சென்றனர்.

சோவியத்தில் கீழை நாடுகளின் தொழிலாளர்களுக்கான கம்யூனிஸ்டுப் பல்கலைக் கழகத்தில் சிலகாலம் கல்வி கற்ற நசீமும் நண்பர்களும் மாயகோவ்ஸ்கி கவிதை வட்டத்திலும், மாஸ்கோ நாடக மன்றத்திலும் பணி செய்ய ஆரம்பித்தனர். ரசியத் தங்கல் நீண்டகாலம் நீடிக்கவில்லை. துருக்கியில், கெமால் விடுதலைப் போருக்குப் பின் குடியரசை வெற்றிகரமாக நிறுவினார் நசீமும் நாடு திரும்பினார்.

திரும்பியவர். கம்யூனிசப் பத்திரிக்கை ஒன்றை அமைத்து வளர்ப்பதில் தீவிரமாக வேலை செய்தார்; அதே காரணத்தாலேயே கைது செய்யப்பட்டுச் சிறைக்கும் சென்றார். ஒரு சந்தர்ப்பத்தில் சிறையை உடைத்து வெளியேறியவர்களோடு நசீம் மறுபடி ரசியா பயணமானார். எதிர்காலச் சமுதாயக்கனவு அவரை மறுபடி சோவியத் ரசியாவை நோக்கி இழுத்தது. மீண்டும் நாடகம், மீண்டும் கவிதை, 1928-இல் துருக்கியில் பொது மன்னிப்பு அறிவிப்பு வந்தவுடன் மீண்டும் துருக்கி வந்த நசீம் முற்போக்கு முகாமில் 10 ஆண்டுகள் சுறுசுறுப்பாக இயங்கினார்; பிழைதிருத்துபவராக, பத்திரிக்கையாளராக, வசனகர்த்தாவாக, மொழிபெயர்ப்பாளராகப் பல வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போதே ஐந்து கவிதை நூல்களை வெளியிட்டார்.

1938-இல் ஐரோப்பா முழுவதும் பாசிசப் பேய் உலுக்கியது; இராணுவத்திற்குள் கலகத்தைத் தூண்டினார் என்று சொல்லி 28 ஆண்டு தண்டனை விதித்து, நசீமைச் சிறையில் தள்ளியது அரசு. அவர் எழுதிய ”ஷேக் பெத்ருதீன்” கவிதைக் காப்பியத்தை இராணுவச் சிப்பாய்கள் சேர்ந்து படிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.

Ding_Ling-paul-robeson-pabloஷேக் பெத்ருதீன் 14-ஆம் நூற்றாண்டு விவசாயப் போராளி; ஒட்டோமான் பேரரசுக்கு எதிராக கிறித்தவர்கள், முசுலீம்கள், யூதர்கள் எல்லோரையும் ஒன்றாக இணைத்துப் படை திரட்டிப் போராடிய மாவீரன். அரசுக்கெதிரான போரைப் பற்றி எளியநடையில் ஒரு நாடோடிக் கதைபோல அக்காப்பியம் எழுதப்பட்டிருந்ததால் சிப்பாய்களிடம் பிரபலமாகி விட்டது.

1950 வாக்கில் உலகெங்கும் நசீமை விடுவிக்கக் கோரும் பேரியக்கம் கிளம்பியது. அமெரிக்காவின் பால்ராப்சன், சிலியின் பாப்லோ நெருடா, சீனாவின் டிங்லிங், ஜெர்மனி ஒவியர் கதே கோல்விட்ஸ் இதில் முக்கியப் பங்காற்றினார்கள். 12 ஆண்டுகள் சிறைக்குள் வதைபட்ட நசீம் விடுவிக்கப்பட்டார்; ஆனால் அவர் சிறையை விட்டு வெளியே வந்த காலகட்டத்தில், துருக்கி, நேட்டோவில் புதிதாக இணைந்த நேரம், நேட்டோவுக்காக கொரியப் போரில் பங்கேற்றது. நசீமைப் பழிதீர்த்துக் கொள்ள நேரம் பார்த்த துருக்கி அரசு கொரியப் போருக்குப் போகச் சொல்லி நசீமை மிரட்டியது. மீண்டும் நசீம் உலகின் ஒரு புரட்சிமையமான சோவியத்துக்குத் தலைமறைவாகச் சென்றார், மனைவி மற்றும் அப்போதுதான் பிறந்திருந்த மகன் இருவரையும் துருக்கியிலேயே விட்டுவிட்டு.

இப்போது மீண்டும் அரசியல் தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கினார் நசீம். பால் ராப்சனின் குரலில் நசீமின் பாடல்கள் உலகெங்கும் போர்முழக்கம் செய்தன.

nazim1
காட்வெல், பால்ராப்சன் போல நசீமின் சர்வதேசியம், கம்யூனிசச் சர்வதேசியம் மற்றும் அவரது நினைவுகள் இதைத் தூண்டிவிட வேண்டும்; தூண்டி விடும்.

திரிபுவாதிகளின் கூடாரமாகக் குழம்பி நின்ற துருக்கி கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினராக இருந்தவர்தான் நசீம். ஆனால் அவரது கட்சியின் தவறான வழியை விமரிசிக்கத் தவறவில்லை. ரசியா சென்று தங்கிய பிறகு, அங்கிருந்த (ஸ்டாலினுக்குப் பிறகான காலகட்டம்) திரிபுவாதத்தை எள்ளி நகையாடி நாடகம் எழுதினார்; நாடகம் தடை செய்யப்பட்டது.

இனியும் ரசியாவில் இருக்க இயலாது என்ற நிலைமையில்தான் போலந்து நாட்டில் அரசியல் தஞ்சம் பெற முயற்சி செய்தார். அந்த நாட்களில் துருக்கித் தாய்நாடும் இல்லாமல், மனைவி – மக்களை விட்டுப் பிரிந்தும், சோவியத் பிரச்சனைகளால் மனம் துன்புற்றும், அல்லல்பட்ட நசீம் 1963-இல் மாரடைப்பால் சோவியத்தில் மரணமடைந்தார்.

நசீமுக்குச் சென்ற ஆண்டு நூற்றாண்டு; அவர் பிறந்து 100 ஆண்டுகளாகி விட்டன. இன்று அமெரிக்க உலக மேலாதிக்க வெறி – உலகெங்கும் ஆக்கிரமிப்புப் போர்வெறியோடு வேட்டை நாயாக அலைகின்றது. உலகெங்கும் அதற்கெதிரான சர்வதேச உணர்வு கொண்ட தொழிலாளர்கள், அரசியல் போராளிகள் போராடத் தொடங்கிவிட்டார்கள். ஈராக் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு ஒர் எடுத்துக்காட்டு. இன்றைய கட்டம் சர்வதேசக் கம்யூனிச மையம், அரசுகள் இல்லாத நிலைமை; நசீமை நினைவுகூர்ந்து அந்த லட்சியங்கள் நோக்கிய நம் பணிகளை விரைந்து வேகப்படுத்த வேண்டிய கட்டம்; காட்வெல், பால்ராப்சன் போல நசீமின் சர்வதேசியம், கம்யூனிசச் சர்வதேசியம் மற்றும் அவரது நினைவுகள் இதைத் தூண்டிவிட வேண்டும்; தூண்டி விடும். கீழே அவரது சில கவிதை களையும், கவிதைச் சிந்தனைகளையும் கொடுத்திருக்கிறோம்.

‘என்னைப் பற்றிப் பேசும் கவிதைகளை எழுத விரும்புகிறேன். எதிரே உள்ள ஒற்றை நபர் மற்றும் எதிரே உள்ள பல லட்சம் மக்களிடம் பேசுவது போன்ற கவிதைகளை எழுத விரும்புகிறேன். ஓர் ஆப்பிளைப் பற்றி, உழுது புரட்டப்பட்ட மண்ணைப் பற்றி, இருட்டுச் சிறைக்குள் சித்திரவதைப் படுத்தப்பட்டுத் திரும்பிவரும் மனிதனின் மன இயல்பு பற்றி, நல்லதொரு வாழ்க்கைக்காக மக்கள் போராடுவது பற்றி, காதலின் துன்பங்கள் பற்றி – இவை எல்லாம் பற்றி கவிதை எழுத விரும்புகிறேன். சாவைப் பற்றிய பயம் பற்றியும், சாவைக் கண்டு அஞ்சாமல் நேருக்கு நேர் நிற்பது பற்றியும் கவிதை எழுத விரும்புகிறேன்’ என்று சொன்னார் நசீம்.

– நசீமின் கவிதை இயங்கியல் இதுதான். சிறைக்குள் பனிரெண்டு ஆண்டுகள் கும்மிருட்டில் தனிச்சிறையில் தள்ளப்பட்டு உடல் வதைபட்டு இருந்தபோதிலும், அவரது உள்ளமோ, சீன மஞ்சள் நதி கடந்து செம்படை செம்மாந்து நடப்பதைக் காட்சியாகச் சித்தரித்துக் கவிதை பல எழுதியது. உலக இலக்கிய, நாடக, சினிமா அனுபவத்தில் ஊறி எழுந்ததால் அவரது காப்பியங்கள் புதிய வடிவத்தை எட்டின என்பார்கள். அதில் நாடோடிக் கதை சொல்லி உண்டு; நாவல் உண்டு; சினிமா போல் அசைவுகள் உண்டு – மற்றப்படி அச்சு வடிவம் மட்டும் கவிதை போல் இருக்கும்; கட்டமைப்போ மேலே சொன்ன எல்லா விதங்களையும் கலந்திருக்கும்.

Nazım-Hikmetஅந்த வடிவத்தை நசீம் ‘மக்களைப் பற்றிய கலைக் களஞ்சியம்’ என்றழைத்தார். அவர்கள் – தளபதிகளல்ல – சுல்தான்கள் – விஞ்ஞானிகள் – கலைஞர்கள் அல்ல, அழகுப் பேரரசிகள் அல்ல; கொலைகாரர்களோ, கோடீசுவரர்களோ அல்ல; அவர்கள் – தொழிலாளிகள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள்; இடம் பெற்ற விசயங்களோ – பட்டறைகள், கிராமங்கள், அண்டை – அசல் ஊர்கள். அந்தப் புது வடிவத்தை ‘மனித நிலங்கள்’ (Human Landscapes) என்று அழைத்தார்; தானும் தன் கலை போலவே கவிஞனல்லாத வேறு ஒரு ஜீவியாக உருமாறிவிட்டதை வேடிக்கையாகச் சொல்வாராம்.

அந்த நாட்களில் அவர் செய்த மற்றொரு பணி: “போரும் – அமைதியும்” டால்ஸ்டாய் நாவலை துருக்கி மொழியில் மொழி பெயர்த்ததே.

அவரது பிரபலமான சொற்கள் இதோ: “என்று கவிதை எழுதத் தொடங்கினேனோ அன்றிலிருந்தே – கலை, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், அது நல்ல எதிர்காலம் படைக்க அவர்களை அறைகூவி அழைக்கவேண்டும் என்றே விரும்பினேன்; கலையை மக்களின் துன்பதுயரம், அவர்களின் கோபம், நம்பிக்கை, மகிழ்ச்சி, வேதனைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் – கருவியாக்கிவிட வேண்டும். கலை பற்றி நான் அறிந்ததில் என்றும் மாறாத கொள்கை இது ஒன்றுதான். கலைபற்றிய பிற அம்சங்கள் (செய்முறைகள்) மாறிவிட்டன; மாறிக் கொண்டேயிருக்கின்றன; தொடர்ந்து மாறும். மாறாத ஒரே கொள்கையை அதன் அற்புத உணர்ச்சிப் பெருக்கோடு, திறமையான, பயனுள்ள, அழகு ஒளிரும் அச்சு அசலான வடிவத்தில் வெளிப்படுத்தவே நான் விரும்புகிறேன்.”

”மறுபடியும் சந்திப்போம் தோழர்களே
மறுமுறை நிச்சயம் சந்திப்போம்
ஒன்றாகச் சூரியனைப் பார்த்துப்

புன்னகைப்போம்
ஒன்றாகப் போர் புரிவோம்” – நசீம்

குதிரை வீரனின் பாடல்:

horse-legsஎங்கோ
ஆசியாவிலிருந்து துள்ளி ஓடிவந்து
மத்தியத் தரைக்கடலுக்குள்
எட்டிப் பார்க்கும்
பெண் குதிரைத் தலைபோல
இந்நாடு – எம்முடையது.

மணிக்கட்டில் ரத்தம் கொப்பளிக்க
இறுகிய தாடை, அழுந்திய பற்கள்
புழுதிபடிந்த வெறுங்கால்கள்
கீழே நிலம்
பட்டு விரிப்புப் போல
இந்த நரகம், இந்தச் சொர்க்கம்
எம்முடையது.

அந்நிய நாடுகளைச்
சார்ந்திருக்கும்
வாயிற் கதவுகளை இழுத்து மூடு –
அவை
என்றும் திறவுபடக் கூடாது
ஒரு மனிதனுக்கு இன்னொருத்தன்
அடிமையில்லை, இல்லை,
ஓங்கி எழும் அழைப்பு –
எம்முடையது.

ஒற்றை மரமாய் விண்ணில் சிறகு விரி!
காட்டுமரங்களாய்
ஒற்றுமைத் திரட்சி கொள்!
ஏக்கம் – அந்த ஏக்கம் – எம்முடையது.

இதய வேதனை:

(சிறை மருத்துவரை நோக்கிப் பாடுவதுபோல இக்கவிதையை – எழுதினார் நசீம்)

அருமை நண்பரே,
என் இதயத்தின் ஒரு பாதி
இங்கேயிருக்கிறது;
மறுபாதி சீனாவில்
மஞ்சள் நதிநோக்கி
அலை அலையாய் நடக்கும்
செம்படையில் இருக்கிறது.

நண்பரே,
ஒவ்வொரு நாளும்
விடியலின் கருக்கில்
என் இதயம் கிரீஸில்
சர்வாதிகாரத் துப்பாக்கிப்
படையின்முன்
சுட்டு வீழ்த்தப்படுகிறது.
என் சக கைதிகள் உறங்கிக்
கிடக்கிறார்கள்;
மருத்துவமனை
வெறிச்சோடியிருக்கிறது;
என் இதயமோ –
ஒவ்வோர் இரவும்
சிதைந்து அழியும்
சாம்லிஜாவில்1 தங்கியிருக்கிறது.

நண்பரே,
உள்ளதைச் சொல்கிறேனே –
கடந்த பத்து ஆண்டுகளாக
எனது ஏழை நாட்டுக்கு
என்னால் கொடுக்க முடிந்த
காணிக்கை
ஒரே ஒரு ஆப்பிள் மட்டுமே –
நண்பரே
சிவந்த ஆப்பிள்
அதை நான்
இதயம் என்றழைக்கிறேன்.

ரத்தக் குழாய்த் தடிப்பு அல்ல;
நிகோடினும்2 காரணம் அல்ல;
சிறைத்தனிமையும் அல்ல;
அது மட்டுமே – அது மட்டுமே
நண்பரே
என் இதய வேதனைக்குக் காரணம்.

சிறைக் கம்பிகளில்
முகம் பதித்து உடல் அழுந்த
இரவை ஊன்றிப் பார்ப்பேன்
நெஞ்செலும்பு – அதிக
அழுத்தம் தாங்கிய போதும்
என் இதயம் துடிதுடிக்கும்
நெடுந்தொலைவு நட்சத்திரங்களைப் போலவே.

குறிப்புகள்: 1 – துருக்கிக் கிராமம் 2 – புகை அதிகம் பிடிப்பதனால் உடலில் சேரக்கூடிய நிகோடின் விஷம்.

 

Beyond the Walls
Beyond the Walls

அந்தச் சுவர்

அந்தச்
சுவரோடு நிறுத்தி
அவர்கள்
நம் மக்களைச் சுட்டுக் கொன்றார்கள்
அந்தச் சுவர் நெடுகில்
ஒவ்வொரு அடிக்கல்லும்
காவியம் பல சொல்லும்

அந்தச் சுவர்
சுவரருகே கொல்லப்பட்டவரின்
ஆண் குறியை அறுத்துக்
குருதி நிணநீர் பிரித்து
மேகநோய் படர்ந்த
பண முதலைகளின்
வற்றிய எலும்புக் கூட்டுக்குக்
கொடுத்தார்கள்
– அவர்கள்
இளமை தொலையாதிருக்க

விபச்சாரிகளின் சதைகளில்
புரண்டு கிடந்த
பண முதலைகளுக்கோ
கொலைச் செய்திகள்
இசை மழை போல இருந்தன

உலகெங்கும் அவர்கள் திரட்டிய
போர்த்தளவாடங்கள்
பலதரம் பலவிதம் பலரகம்
1914 ஐ விட 1939-ல்….
அதைவிடப் பின்னாளில்..
அதிநவீனம் அதிபயங்கரம்.
அவர்களின் ஆறாம் கடற்படை;
அணுக்கதிர் ஆயுதங்கள்
ஏகாதிபத்தியத் தளபதிகள்;
சி.ஐ.ஏ. உளவுப்படை;
இரண்டாம் அகிலம்;
வெடிமருந்தின் வாசம் தங்கிய
வெள்ளைக் கையுறைகளுடன்
அரசுத் தூதர்கள்;
‘மதத்தின்’
ஆழ்மண் உழுது தோண்டி
உரமிட்டு – அதன்
நச்சு மலர் பறித்து
வங்கியின் பணக்கற்றைகளில்
படைப்பை எழுதும்
தத்துவ ஞானிகள்;

ஆய்வுகளில் மூழ்கி மீண்டு
சாக்கதிரின் கண் திறக்கும்
அறிவியல் வித்தகர்கள்
இவர்கள் அத்தனைப் பேரும்தான்
அவர்கள் உலகெங்கும் குவித்த
போர்த்தளவாடங்கள்.

அந்தச் சுவரே
பதாகையாய்
நெடிய
நீண்ட
அந்தச் சுவர்
ஏகாதிபத்தியச்சுவர்

– குப்பண்ணன்
புதிய கலாச்சாரம், ஜுன் 2003

மேலும் நசீம் இக்மத் கவிதைகளை படிக்க:
Nâzım Hikmet Ran (His Poetry:)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க