Friday, December 9, 2022
முகப்புஉலகம்இதர நாடுகள்நூல் விமரிசனம் : குடும்பம்

நூல் விமரிசனம் : குடும்பம்

-

‘குடும்பம்’ நாவலை எழுதிய பாஜினைக் கேட்டார்கள்? “நீங்கள் ஏன் எழுத ஆரம்பித்தீர்கள்?” அவர் சொன்னார்: “என் இதயம் பற்றி எரியும் போது வடிகால் தெரியாமல் தவிப்பேன். உடனே எழுத வேண்டுமென்று தோன்றும். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.” 1949 – சீன விடுதலைக்கு முன்பு சீன மக்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் தங்கள் துயரத்துக்கு முடிவு கட்டக் கடுமையாகப் போராடினார்கள்; அதே ஆண்டுகளில் இலக்கியத்தின் வழியாகப் போராட்டத்தில் பங்குகொண்டவர் பாஜின். சீன மக்கள் கடுமையான சுரண்டலின் கீழ் வாழ்ந்ததைக் கண்டு இதயம் எரிந்து இளைஞர்கள் போராடினார்கள். குடும்பம் நாவலின் வழியாக நாம் அதன் எதிரொலிகளைக் கேட்க முடியும்.

குடும்பம் - நாவல்
குடும்பம் – நாவல்

அந்நாளைய சீனச் சமூகத்தில் குடும்பம் என்று சொன்னால் அங்கு வேலை செய்கின்ற அடிமைகளையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்துத்தான் சொல்லப்பட்டது. ஆணாதிக்கம் – குடும்ப உறுப்பினரில் மூத்தவர் மூலமாகக் கோலோச்சியது. “எங்கள் வீட்டில் இத்தனை அடிமைகள் இருக்கிறார்கள்” என்பது அந்நாளைய அந்தஸ்தின் அளவுகோல். அப்படிப்பட்ட நிலவுடமைக் குடும்பங்களும், ஆரம்ப வடிவிலான முதலாளிகளும் கலந்திருந்த காலம் அந்தக் காலம். கதைக்களித்தின் காலம் 1920-களும், 1930-களும்.

காவோ என்ற முதியவரின் கூட்டுக் குடும்பம். மூன்று மகன்கள், பேரன் பேத்திகள். பெரிய மகனுக்கு மூன்று பையன்கள் ஜூக்சின், ஜூமின், ஜூகு. வீட்டு வேலைகளுக்கு அடிமைகள். பெரிய மகன் இறந்த பிறகு பேரன் ஜூக்சினின் தலையில் வீட்டு நிர்வாகம் விழுகிறது. தன் அத்தை மகள் ’மீ’யைக் காதலிக்கிறான்; ஆனால் சர்வாதிகாரி காவோ அவனுக்கு வேறு இடத்தில் ருஜூ என்ற பெண்ணைப் பார்த்துவைக்கிறார்; அவனுக்கென்று ஒரு கம்பெனி வேலையும் ஒதுக்கித் தருகிறார். ’மீ’யும் தானும் கருத்தொருமித்துக் காதலித்ததும், திருமணம் கூடாததும் ஜூக்சினை வாழ்நாள் பூராவும் வாட்டுகின்றது.

ஜூக்சின் தன் உணர்வுகள் வடிவம் பெறுவதற்காகக் குடும்பச் சர்வாதிகாரத்தை எதிர்க்கத் துணியாதவன்; அவனுக்கு அடுத்தவன் ஜூமீன், உறவினர் வீட்டுப் பெண் குயினை நேசிக்கிறான்; இளையவன் ஜூகு வோடு சேர்ந்து மாணவருக்கான போராட்டப் பத்திரிக்கை நடத்துகிறான்; காதலுக்காகக் குடும்பத்தில் போராட வலுவில்லாமல் நிற்கும்போது, ஜூகு துணை நின்று திருமணம் நிறைவேற வழி செய்கிறான். அர சியல் ஆர்ப்பாட்டங்களில் ஜூகு, ஜூமீன் பங்கு கொள்வதை தாத்தா கண்டிக்கிறார். ஜூகுவை வீட்டுச் சிறை வைக்கும்படி உத்தரவிடுகிறார்.
ஜூகு வித்தியாசமானவன். வேலைக்காரர்கள் தங்குமிடத்தில் வைக்கோலின்
மீது படுத்துக் கதை கேட்டு அவர்களின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்கிறான். தாத்தா, சித்தி மற்றும் சித்தப்பாக்களின் உத்தரவுகளை அவன் ஒதுக்குகிறான்; அடிமைகள் சுமக்கும் பல்லக்கில் ஏற மறுக்கிறான். மிங் பெங் என்ற அடிமைப் பெண்ணைக் காதலிக்கிறான் – அவள் அவனுக்குப் பிரச்சனை ஏற்படும் என்று எச்சரிக்கிறாள், ஆனால் அவளும் அவனை விரும்புகிறாள்.
கிழட்டு நண்பர் ஒருவருக்கு மிங் பெங்கை வைப்பாட்டியாக அனுப்ப ஏற்பாடு செய்கிறார் காவோ, மிங்பெங். ஜூகுவிடம் முறையிட வந்தும் பேசமுடி யாமல் போய் விடுகிறாள். ஏரியில் குதித்து ஒரேயடியாகத் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஜூக்சின் மூலமாக மிங் பெங்குக்கு நேரவிருந்த கொடுமையை அறிந்து ஜூகு அவளைத் தேடுகிறான். அதற்குள் காவோ ரகசியமாக அவளை அடக்கமும் செய்து விடுகிறார்.

ba-jin-cover
குடும்பம் நாவலின் அட்டை படம்

காதல் ஜூகுவைத் தகிக்கிறது. அதற்காக அவன் புலம்பிக் கொண்டிராமல் குடும்பத்தை விட்டு வெளியே போகிறான். வெளியிலிருந்து கொண்டே வீட்டுக்கு வந்து போகும் ஜூகு குடும்ப உறுப்பினர்களில் வேலையாட்கள், ஜூமின் – குயின் ஜோடி, ஜூக்சினின் மனைவி ருஜூ, குழந்தைகள் எல்லோருடனும் பல விதமான நட்புகளை வளர்க்கிறான்.

ஜூகு மெள்ள மெள்ள சமூகப் போராட்டங்களில் இறங்குகிறான்; நாளேட்டில் எழுதுகிறான் போராட்டங்களுக்கு உதவுகிறான். அன்றைய காலகட்டத்தில் யுத்தப் பிரபுக்கள் தெருச் சண்டை போடுகிறார்கள் – இதை எதிர்த்த சன்யாட் சென்னின் ஜனநாயக இயக்கம் சூடுபிடிக்கிறது.

பிரிட்டிஷ் – மற்றும் பிற ஏகாதிபத்திய ஏஜெண்டுகளின் அரசியல் குறுக்கீடுகள், இவற்றுக்குச் சற்றும் சம்பந்தமில்லாதது போல நிலப்பிரபுத்துவச் சடங்கு சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள், குரூரமான அடக்குமுறைகள், பாலியல் வக்கிரங்கள், பெண் அடிமைத்தனம், அடிமை உLமையின் மிச்ச சொச்சங்கள் ஒருபுறமும், இந்தச் சீரழிவை எதிர்த்து ஜனநாயக இயக்கங்களின் எழுச்சி, அவற்றின் மீது அடக்குமுறை ஆகியவை எதிர்ப்புறமுமாக மோதிக் கொண்ட முப்பதுகளின் கொந்தளிப்பான சூழலின் அறிமுகத்தோடு முடிகிறது நாவல்.

குடும்பம்(family) திரைப்படத்தின் காட்சி
குடும்பம்(family) திரைப்படத்தின் காட்சி

நாளை என்ற ஒன்று இல்லாத, நேற்று என்ற ஒன்று மட்டுமே உள்ள மீ ஜூக்சினின் கண் எதிரேயே இறந்து போகிறாள்; அவனது சித்தப்பா வேசியுடன் சுற்றுகிறார். போதைக்கு அடிமையாகிறார். தாத்தா, குடும்பம் அழிவதைக் கண்டு வெருண்டு போகிறார். அந்தத் தாத்தா அடிமைகளைப் பெண்டாளுமை செய்து வந்தவர்தான்; வேசியோடு இருப்பவர் தான்; குடும்ப விழாக்களில் பெரிசிலிருந்து சிறிசுவரை தண்ணி அடிக்க வைத்து தானும் தண்ணி அடிப்பவர்தான்; அதே விழாக்களில் நண்பர்கள் ஆட்டக்காரிகளோடு சரசமாடுவதைக் கண்டு சிரித்துக் களித்தவர்தான்.

ஒருதார மணமும் – வேசித்தனமும் ஒரே கோட்டில் இணைந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டு, தன் மகனை மட்டும் ஒழுக்க சீலனாக்க விரும்பும் கோமாளித் தாத்தாவுக்கு இதயம் முறிந்துபோகிறது.
சாகும் தறுவாயில் தாத்தா ஜூகுவை அழைத்து நல்லாசி கூறித் தன் ஆதரவைத் தெரிவிக்கிறார். ஜூமீனுக்கும் அவன் காதலுக்கு எதிராக வேறொரு அயோக்கியனின் பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடு செய்திருந்ததை ரத்து செய்வதாகச் சொல்லி ஆசி கூறுகிறார். சுமார் 300 பக்கங்களுக்கு நீண்டு செல்லும் நாவல் எல்லாப் பாத்திரங்களையும் யதார்த்தமாகச் சித்தரிக்கிறது. பின்னாளில் குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜூகு கூட குடும்பத்தில் கூட்டணி வைத்துக் கொண்டு, எல்லோருடனும் உணர்ச்சிக் கொந்தளிப்போடு சம்பந்தப்படும் போதெல்லாம் அலைபாய்வதும், தன்னையே விமரிசித்துக் கொண்டு நங்கூரம் போட்டு நிலை நிற்பதும், ஒரே திசையில் தன்னை அமைத்துக் கொண்டு முன்னேறுவதும் யதார்த்தமானவை.

டிராகன் நடனம்
டிராகன் நடனம்

இந்தியா என்றால் மேலை நாட்டவருக்கு பாம்பாட்டிகள், பிச்சைக்காரர்கள், சாமிகள், சடங்குகள், சாமியார்கள்; சீனா என்றால் – இரும்புச் செருப்பைக் காலில் இட்டு வளர்ந்த பெண்கள், சடங்குகள், பாம்பைத் தின்பவர்கள். ஆனால் சீனாவின், சீனப் பணக்காரக் குடும்பங்களின் உள்ளும் புறமுமான வாழ்க்கை இப்படி ஒரிரு சொற்களில் அடங்கி விடக் கூடியதல்ல.

புத்தாண்டின் ஒன்பதாவது நாள் வீட்டு (’கோட்டை’) வளாகத்திற்குள் நடக்கும் பறக்கும் பாம்பு எரிக்கப்படும் நிகழ்ச்சியையும், காவோ இறந்து சடங்குகள் நடந்த நாட்களில் கருத்தரித்த ஜூக்சினின் மனைவி ருஜூ ஊரின் மூலைக்குத் தனியே விரட்டப்படும் வக்கிரமும், அங்கே அவள் உடலும் மனமும் நொந்து, குழந்தையைப் பெற்றுக் கொடுத்துக் கேட்பாரில்லாமல் செத்துப்போகும் கோரத்தையும் படித்தால் அச்சமூகத்தை ‘அழிந்து போ” என்றுதான் சபிக்கத் தோன்றும். ஐந்து அத்தியாயங்களை இதற்காகவே ஒதுக்கியிருக்கிறார் நாவலாசிரியர்.

ஒன்பது துண்டுகளாக மூங்கில் கட்டமைப்பு, அதன்மேல் வண்ணத்தாள் ஒட்டி வடிவமைத்த பாம்புக் கூட்டுக்குள் புகுந்து நடனக்காரர்கள் ஆடுவார்கள். பேரிகை, மத்தளம் முழங்கத் தொடங்கியதும் உண்மையான பாம்பு போலவே நீண்டும். படுத்தும், சுருண்டும், புரண்டும் நெளிந்தும் நடனமாடத் தொடங்கிவிடும். அந்த மனிதப் பாம்பு வெடிச் சத்தம் எழ எழ பாம்பு கொடுரமாக ஆடும். வெடிபொருள், இரும்பு, பித்தளைக் குண்டுகள் நிரம்பிய மூங்கில் குழாய்கள் பற்ற வைக்கப்பட்டு தீப்பொறிகளைப் பாம்பின் மீது வீசுவார்கள். பறக்கும் பாம்பு பைத்தியம் பிடித்து ஆடும். வேடிக்கை பார்க்கும் மக்கள் ஆரவாரிப்பார்கள். தீப்பிழம்புகள் வீசப்பட, வீசப்பட பாம்பு எரிகிறது; நடனக்காரர்கள் அலறுகிறார்கள் தலை முதல் கால் வரை வெந்து வடிந்து அரைப் பிணமாய் அக்கலைஞர்கள் வெளியேறுகிறார்கள்….

பா ஜின்
பா ஜின்

பணம் கொடுத்து ஒரு மனிதனை எரித்துக் கொல்லலாமா? பணக்காரக் குடும்பத்தின் வக்கிரத்துக்காக இப்படி ஒரு கலையா?- ஜூகு அண்ணன் ஜூமினைக் கேள்விகளால் துளைத்தான்; நடனமாடும் ஏழைக் கலைஞர்கள் மேல் இரக்கம் தோன்றவில்லையா என்று கேட்கிறான்.
காவோ இறந்த பிறகு, ருஜூவின் மரணத்தால் கோபமும் துயரமும் ஒன்றாய் அடைந்த ஜூகு அந்நகரத்தை விட்டு பீஜிங் சென்று போராட்டத்தில் இணைய முடிவெடுக்கிறான். ஜூக்சின் தம்பியைத் தடுக்கிறான்; ஜூமின் தன் காதலி குயினோடு ஒதுங்கி விடுகிறான். புது வாழ்க்கை, புதிய நடவடிக்கை, புதிய நண்பர்களை நோக்கி ஜூகு செல்கிறான். ஒரு பழைய சமூகத்தை வெறுப்பது புதிய ஒன்றைப் படைப்பதற்காக என்று குறிப்பாக உணர்த்திவிட்டு முடிக்கிறார் பாஜின்.

இந்த நாவலில் இளைஞர்கள் பத்திரிக்கை நடத்துவது, தங்கள் முரண்பாடுகளை வெட்ட வெளிச்சமாகச் சுயவிமரிசனம் செய்து பேசுவது போன்ற இடங்களும், நாவலின் சமூக விமரிசனமும் முக்கியமான பகுதிகள்.

‘குடும்பம்’ நாவல் நிலப்பிரபுத்துவக்கூட்டுக் குடும்பம் ஏன் அழிக்கப்பட வேண்டுமென்ற நியாயத்தை உள்ளிருந்து தருகின்ற கதைப்பாத்திரங்களை முக்கியமாக வைத்திருக்கிறது. சாதி எதிர்ப்புக்கான காரணங்களை தலித் ஒடுக்குமுறையை எதிர்ப்பதற்கான அடிப்படைகளை மேல்சாதி கதாபாத்திரங்களின் வாழ்க்கை ஊடாக, அங்கிருந்து தோன்றும் ஜனநாயக மாந்தர்களின் அனுபவத்தின் ஊடாக சித்தரிப்பதற்கு இந்நாவல் ஒரு துண்டுதலை நிச்சயம் கொடுக்கும்.

– இராசவேல்.
புதிய கலாச்சாரம், நவம்பர் 2000.

நூல்: குடும்பம்
ஆசிரியர் : பாஜின்
தமிழாக்கம்: நாமக்கல் சுப்பிரமணியம்
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்.

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க