Friday, December 9, 2022
முகப்புஉலகம்அமெரிக்காசாத்தானின் பேரரசு – அப்பாவிக் குடிமக்கள் ! வெளிநாட்டு வாசகர் கருத்து !

சாத்தானின் பேரரசு – அப்பாவிக் குடிமக்கள் ! வெளிநாட்டு வாசகர் கருத்து !

-

மெரிக்காவின்  நியூயார்க் நகரத்தில் செப்டம்பர் 11, 2001 அன்று உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட அடுத்த சில தினங்களில் “இண்டி மீடியா சென்டர்” (https://www.indymedia.org/) என்ற இனையத்தளத்தில் புதிய கலாச்சாரம் சார்பாக ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டோம். அமெரிக்க ஐரோப்பிய வாசகர்களைக் குறிவைத்து எழுதப்பட்ட அக்கட்டுரையையும், அதற்கு பல்வேறு நாடுகளிலிருந்து எமக்கு வந்த கடிதங்களில் சிலவற்றையும் இங்கே வெளியிடுகிறோம். – ஆசிரியர் குழு, புதிய கலாச்சாரம்.

தாக்கப்பட்ட உலக வர்த்தக மயம்
தாக்கப்பட்ட உலக வர்த்தக மயம்

நான் நாகரிக உலகைச் சார்ந்தவனல்ல, அநாகரிக உலகைச் சார்ந்தவன். பென்டகனும் உலக வர்த்தக மையக் கட்டிடங்களும் நொறுங்கிச் சரிந்தபோது நான் குதுகலித்தேன். இந்த உண்மையைச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை. என்னுடைய நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்குத் தோன்றிய உணர்ச்சியும் இதுதான். உலகின் மாபெரும் வல்லரசின் முகத்தில் ‘சப்’பென்று ஒரு அறை!

ஆனால் மாடியின் உச்சியிலிருந்து மக்கள் குதிப்பதையும், பெண்கள் கதறுவதையும், பலர் உயிர்தப்பி ஓடுவதையும் பார்த்தபோது வருத்தமாகத்தானிருந்தது. கொல்லப்பட்டவர்களில் பலர் சாதாரணத் தொழிலாளர்கள் என்பதை அறிந்தபோது வருத்தம் மேலிட்டது. ஏனென்றால் நாங்கள் இன்னும் நாகரிகமடையவில்லை. சாக்கலேட்டை மென்றுகொண்டே கோக்கை உறிஞ்சிக் கொண்டே ஈராக் மீது குண்டு வீசுவதைத் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்ததே அமெரிக்கா, அந்த நாகரிகம் எங்களுக்கு இன்னும் கைவரவில்லை.

முதலில் ”அமெரிக்காவின் மீது பயங்கரம்” என்றார்கள், பிறகு ”அமெரிக்காவின் மீது போர்”. இடிபாடுகளின் மத்தியில் நின்று கொண்டு, தீயணைப்பு வீரரின் தோளை அணைத்தபடியே போர்ப் பிரகடனம் செய்கிறார் அமெரிக்க அதிபர்.

ஹாலிவுட் குப்பையான ”இண்டிபென்டன்ஸ் டே” என்ற திரைப்படம் என் நினைவுக்கு வருகிறது. ஆனால் மாயையைக் காட்டிலும் ஆபாசமாக இருக்கிறது இந்த எதார்த்தம். நாகரிக அமெரிக்காவின் மக்கள் படிப்பறிவற்ற இந்திய விவசாயியைக் காட்டிலும் அரசியல் பாமரர்களாக இருக்கிறார்களே… ஆச்சரியமாகத்தானிருக்கிறது.

1986-இல் அது லிபியாவின் மீது குண்டு வீசியது. கடாபியின் குழந்தையைக் கூடக் கொன்றது.
1986-இல் அது லிபியாவின் மீது குண்டு வீசியது. கடாபியின் குழந்தையைக் கூடக் கொன்றது.

இதோ, அமெரிக்கா கோபத்தால் துடிக்கிறது. உயிரிழப்பினால் வந்ததல்ல இந்தக் கோபம். மாபெரும் தேசம் அவமானப் படுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்கா இதற்குப் பழிவாங்க வேண்டும். உடனே பழிவாங்க வேண்டும். இதோ பேரரசு திருப்பித் தாக்குகிறது! அதற்குச் சர்வதேசச் சட்டங்கள் ஒரு பொருட்டல்ல. அது உலகிற்கு எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை.

ஜெர்மன் பாராளுமன்றத்திற்குத் தீ வைத்ததாகக் கம்யூனிஸ்டுகள் மீது பொய்க் குற்றம் சாட்டினான் ஹிட்லர். அவன் கூட ஒரு விசாரணை நாடகம் நடத்த வேண்டியிருந்தது. அத்தகைய அற்ப சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதற்கெல்லாம் திருவாளர் புஷ்ஷுக்கு அவகாசமில்லை. சக்ரவர்த்தி அவர்கள் தனது ஜனநாயக மாண்பை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

பேரரசுக்கு பின்லாடன் மீதுதான் சந்தேகம். அதாவது நம்பகமான ஆதாரம் எதுவும் பேரரசிடம் இல்லை. இருந்த போதிலும் சந்தேகப்படும் நபரையும், அவனுக்கு உணவும் உறைவிடமும் கொடுத்த அனைவரையும் கொலை செய்ய பேரரசுக்கு உரிமை இருக்கிறது.

இந்த நன்மையின் திருவுருவம் தான் அந்தத் தீமையை உருவாக்கியது என்ற உண்மையை இங்கே கிளறத் தேவையில்லை. பேரரசுக்குச் சேவை செய்யும் பட்சத்தில் எல்லாத் தீமைகளையும் நன்மை என்றே கொள்ள வேண்டும்.

பேரரசு விரும்பினால் எந்த நாட்டையும் குண்டு வீசி அழிக்கும். 1986-இல் அது லிபியாவின் மீது குண்டு வீசியது. கடாபியின் குழந்தையைக் கூடக் கொன்றது. செத்துப் போன மக்கள் எத்தனைப் பேர் என்று தெரியாது. பெர்லின் இரவு விடுதியில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் இரண்டு அமெரிக்கச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பழிவாங்கத்தான் இந்த நடவடிக்கை, பெர்லின் குண்டு வெடிப்புக்கும் லிபியா அரசுக்கும் என்ன தொடர்பு என்பது இதுவரை நிருபிக்கப்படவில்லை. ஆனால் பழிவாங்கும் நடவடிக்கை முடிந்தது.

நாங்கள் ஆண்டர்சனைப் புகைபோட்டு இழுக்க முடியவில்லை. ஆண்டர்சன் பயங்கரவாதியல்ல என்பதல்ல காரணம். இந்தியா அமெரிக்கா அல்ல என்பதுதான் காரணம்.
நாங்கள் ஆண்டர்சனைப் புகைபோட்டு இழுக்க முடியவில்லை. ஆண்டர்சன் பயங்கரவாதியல்ல என்பதல்ல காரணம். இந்தியா அமெரிக்கா அல்ல என்பதுதான் காரணம்.

1998-இல், சூடானில் ஒரு மருந்துத் தொழிற்சாலையின் மீது அமெரிக்கா குண்டு வீசியது. இறந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை தெரியாது. அங்கே பயங்கரவாதிகளுக்கு ரசாயன ஆயுதம் தயாரிக்கிறார்கள் என்பது குற்றச்சாட்டு. அந்த ஆலையின் அதிபர் அமெரிக்க நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்துள்ளார். இங்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பழிவாங்கும் நடவடிக்கை முடிந்தது.

பேரரசால் கொல்லப்பட்ட உலக மக்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைத் தாண்டும். ஒருவேளை அமெரிக்கரல்லாத உயிர்களைப் பற்றிக் கவலைப்படுவது அமெரிக்கப் பண்பாட்டிற்கு விரோதமானதோ!

நாங்களும் தான் ஒரே நாளில் 5000 உயிர்களை இழந்தோம் போபாலில். ஒரு இலட்சம் பேருக்கு மேல் இங்கே முடமாக்கப்பட்டார்கள். இந்தப் படுகொலைக்குப் பொறுப்பான அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனம் இதை ஒரு ”விபத்து – வாயுக் கசிவு” என்றது. உண்மையில் கசிந்ததோ ஒரு இராணுவ இரகசியம். பென்டகனுக்கு இரசாயன ஆயுதம் தயாரித்துத் தரும் ஆராய்ச்சிதான் உள்ளே நடந்திருக்கிறது என்ற இரகசியம்.

யூனியன் கார்பைடின் தலைவர் ஆண்டர்சன் தான் முதல் குற்றவாளி. அவருக்கெதிராக கிரிமினல் வழக்கு இருக்கிறது. பிடி வாரண்டும் இருக்கிறது. ஆனால் அவரோ அமெரிக்காவிலுள்ள தன் தலைமையகத்தில் உல்லாசமாக அமர்ந்திருக்கிறார். ”ஆப்கன் குகைக்குள்ளிலிருந்து பின்லாடனைப் புகை போட்டு வெளியே இழுத்து விடுவோம்” என்கிறார் புஷ், நாங்கள் ஆண்டர்சனைப் புகைபோட்டு இழுக்க முடியவில்லை. ஆண்டர்சன் பயங்கரவாதியல்ல என்பதல்ல காரணம். இந்தியா அமெரிக்கா அல்ல என்பதுதான் காரணம்.

”எந்த நாட்டில் வேண்டுமானாலும் அத்துமீறி நுழைந்து குற்றவாளிகளைக் கைது செய்து கொண்டுவர அமெரிக்கப் போலீசுக்கு அதிகாரம் உண்டு” என்று தீர்ப்பளிக்கிறது அமெரிக்க உச்ச நீதிமன்றம். நாடுகளின் இறையாண்மையை மீற அனுமதியளிக்கும் அதே நீதிமன்றம் தான், வர்த்தகநெறிகளை மீறும் பில்கேட்ஸின் ஏகபோக பயங்கரத்திற்கும் அனுமதி வழங்குகிறது. இது பேரரசின் நீதியன்றோ!

குறைந்தபட்சம் எங்களது போபால் மக்கள் இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைப் பிடித்துக் கொன்றாவது பழி தீர்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவமானத்தால் துடிப்பவர்கள் தான் அத்தகைய கொலைகளைச் செய்ய முடியும். அமெரிக்க அரசுச் செயலர் காலின் பாவெலின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அதற்கு உடம்பில் ஒரு சொட்டாவது நாகரிக ரத்தம் ஓடவேண்டுமே!

’பழுப்பு நிறத்தில் ஜொலிக்கும் அமெரிக்காவின் கோபம்’ என்று டைம் சிறப்பிதழில் லான்ஸ் மாரோ வருணிக்கிறாரே, அந்தக் கோபம்தான் அங்கே ஆசிய மக்களைத் தாக்குகிறது. அமெரிக்கக் கோபத்தின் உண்மையான நிறம்தான் என்ன, பழுப்பா அல்லது வெள்ளையா?

ஆப்கானில் அமெரிக்க படையால் கொல்லப்பட்ட சிறுவன்
ஆப்கானில் அமெரிக்க படையால் கொல்லப்பட்ட சிறுவன்

கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கக் கோரினால் உடனே நாமும் தெரிவித்து விடுகிறோம். உண்மையில் அனைவரும் அப்பாவிகள் தானா? தங்களைச் சுற்றி நடப்பது எதுவும் அவர்களுக்குத் தெரியாதா?

“அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக 5 லட்சம் ஈராக்கியக் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்களே” என்று கேட்டபோது அமெரிக்க அரசுச் செயலர் மாடலைன் ஆல்பிரைட் அம்மையார் ”அது ஈராக் கொடுக்கத் தகுந்த விலைதான்” என்று பதிலளித்தார்.

சதாம் உசேன் இழைத்ததாகச் சொல்லப்படும் குற்றத்திற்கு ஈராக்கியக் குழந்தைகள் – உண்மையான அப்பாவிகள் – தங்கள் உயிரை விலையாகக் கொடுக்க வேண்டுமென்றால், இதுதான் அமெரிக்க நீதி என்றால், இப்போது அமெரிக்கா கொடுத்திருக்கும் விலையும் நீதியானதுதான்.

ஆனால் அமெரிக்கா கொடுத்திருக்கும் இந்த விலை, கொடுக்கத் தகுந்த விலைதானா என்பது முற்றிலும் வேறுகேள்வி. ஆல்பிரைட் அம்மையாரைக் கேட்டுப் பாருங்கள். ”அமெரிக்காவின் உலக மேலாதிக்க நலனுக்காக இந்த விலையும் கொடுக்கத் தகுந்துதான்” என்று தயங்காமல் பதிலளிப்பார்.

“ஆபரேசன் இறுதித்தீர்ப்பு” அமெரிக்காவை அடியற்ற படுகுழிக்குள் இழுத்துச் செல்லும். ’அப்பாவி’ அமெரிக்கர்களை குழிக்கு வெளியிலிருந்து பயங்கரவாதம் அச்சுறுத்தும். குழிக்கு உள்ளே பாசிசம் துன்புறுத்தும்.

அமெரிக்க மக்களே,

உங்கள் அப்பாவித்தனத்தை விடுங்கள். கொஞ்சம் தலையை நிமிர்த்துங்கள். உங்கள் பேரரசு உலகெங்கும் உருவாக்கியிருக்கும் இடிபாடுகளைப் பாருங்கள். அப்பாவித்தனத்தை விடுங்கள். இல்லையேல் இன்னும் ஏராளமான அப்பாவிகள் உயிரை விட வேண்டியிருக்கும். வருந்தத்தக்கது தான். எனினும் இதுதான் வரலாறு.

  • புதிய கலாச்சாரம், (15-செப், 2001-இல் இண்டி மீடியா சென்டர் இணைய தளத்தில் வெளியானது).

(இக்கட்டுரைக்கான வாசகர்களின் எதிர்வினைகள் கீழே)

சாத்தானின் பேரரசு – சிக்கிக்கொண்ட குடிமகன்

உங்கள் கட்டுரையைப் படித்தேன். சரியான நெற்றியடி, ”படிப்பறிவில்லாத இந்திய விவசாயிகளைக் காட்டிலும் அமெரிக்கக் குடிமக்கள் அரசியல் பாமரர்களாக இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே அது அமெரிக்க ’நாகரிகத்தை’ச் சந்திக்கு இழுக்கிறது. நியூயார்க்கில் இறந்த மக்களுக்காக யாசர் அராபத் இரத்த தானம் செய்வதை இங்கே பிரிட்டன் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. ஆனால் இதுவே அமெரிக்காவில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. நாசமாய்ப் போன நாகரிகம்! நான் போய் நிம்மதியாக கஞ்சா அடிக்கிறேன். சாத்தானின் பேரரசு – சிக்கிக் கொண்ட குடிமகன்

டக்ளஸ், இங்கிலாந்து.

‘சதாம் உசேன்’

against-nato
சிலபேர் என்னை சதாம் உசேன் என்று திட்டினார்கள்

உங்கள் கட்டுரையைப் படித்தேன். பெரிதும் பயனுள்ளதாகவும் நறுக்கென்றுமிருந்தது. எனக்கு வயது 16. அமெரிக்காவில் நடந்த தாக்குதல் பற்றி எங்கள் பள்ளியில் கட்டுரை எழுதச் சொன்னார்கள். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் அமெரிக்காவின் உலகக் கொள்கைக்கும் வேறுபாடு எதுவுமில்லை என்று நான் எழுதினேன். என் கருத்தை யாரும் ஏற்கவில்லை. சிலபேர் என்னை சதாம் உசேன் என்று திட்டினார்கள்.

பாலஸ்தீன மக்களைக் கொன்று, அவர்களது மண்ணை ஆக்கிரமிக்கின்ற அமெரிக்க அடிமை நாடான இந்த இசுரேலில் கூட சோசலிசத்தை நேசிக்கும் மக்களும், என்னைப் போன்ற பையன்களும் இருக்கிறார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். மூலதனத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம். போராட்டத் தீயை அணைய விடாதீர்கள்.

– உங்கள் சகோதரன்,
தால் ராச்மேன், இசுரேல்

ஆஸ்திரேலியாவில் அமெரிக்க வெறி

உங்கள் கட்டுரையைப் படித்தேன். தாக்குதலைக் கண்டவுடன் நீங்கள் என்ன உணர்ச்சிக்கு ஆளானிர்களோ, அதே உணர்ச்சிதான் எனக்கும் ஏற்பட்டது. இங்கே ஆஸ்திரேலியாவில் பழிவாங்கும் வெறியும் குருட்டுத்தனமான சென்டிமென்டும் தலை விரித்தாடுகிறது. அமெரிக்கத் தொலைக்காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ஆஸ்திரேலிய மக்கள் பலர் அமெரிக்க அரசாகவே மாறிவிட்டார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நம்மைப் போன்றவர்கள், உண்மைக்காகப் போராடுபவர்கள், சலிக்காமல் கத்திக் கொண்டேயிருக்க வேண்டும். ஓய்ந்து விடக்கூடாது. அடுத்ததாக எதிர்ப்புக் குரலையெல்லாம் நசுக்கத் தொடங்குவார்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

ரே டிரூ, எழுத்தாளர், புகைப்படக் கலைஞர், ஆஸ்திரேலியா.

அமெரிக்க மக்கள் அப்பாவிகள்!

BushIsATerrorist
மூன்றாம் உலக நாடுகளின் கொடூர ஆட்சிகள் பலவற்றைக் காப்பாற்றுவதே அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தான் தெரியுமா?

உங்கள் கட்டுரையைப் படித்து அதிர்ச்சியடைந்தேன். “தன்வினை தன்னைச் சுடும்” என்கிற ரீதியில்தான் எல்லோரும் விமரிசிக்கிறீர்கள். பொதுவாக அமெரிக்கர்களிடம் காணப்படும் ஆணவம், சுயநலம், அறியாமை போன்ற எதிர்மறைப் பண்புகள் என்னிடம் கிடையாது. அதே நேரத்தில் ஒரு சராசரி அமெரிக்கன் எப்படிச் சிந்திக்கிறான் என்பதைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும்.

அரசியலே போரடிக்கும் விசயம் என்று சிந்திக்க அவன் பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறான். ஈராக்கியக் குழந்தைகள் சாவதைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போது ”அமெரிக்காவையா எதிர்க்கிறாய்… அனுபவி” என்று யாரும் நினைப்பதில்லை. “வாவ். சினிமா மாதிரியே இருக்கிறதே” என்று குதூகலிப்பதுமில்லை. மாறாக ”குழந்தைகள் சாவது பாவம்தான். இருந்தாலும் நம் அரசாங்கம் சொல்வதை நம்பாமலிருக்கவும் முடியாதே. நாம் தானே நம் அரசைத் தேர்ந்தெடுத்தோம்” என்று சிந்திக்கிறார்கள். பெற்றோரை நம்பும் பிள்ளைகள் போல அரசாங்கத்தைக் கேள்விக்கிடமின்றி நம்புகிறார்கள்.

தங்களது அரசாங்கம் செய்யும் தவறுகளைப் புரிந்து கொள்ளத் தெரியாதது மட்டுமல்ல, மற்றவர்கள் அமெரிக்காவை ஏன் வெறுக்கிறார்கள் என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் உண்மையிலேயே அப்பாவிகள்தான். ஆயிரம்தான் இருக்கட்டும் மரணத்தைக் கண்டு யாராவது குதுகலிக்க முடியுமா என்ன? வெறுப்பாக இருக்கிறது.

மைக்கேல் மெக் அபி, அமெரிக்கா.

அபத்தம், குப்பை, முட்டாள்தனம்!

*சரியான அபத்தம். ஆதாரங்களே இல்லாமல் எழுதப்பட்ட இப்படியொரு குப்பையை நான் இதுவரை படித்ததில்லை. வளைகுடாப் போரின் உண்மையான பின்னணியைத் தெரிந்து கொள்ள விரும்பினால் நூற்றுக்கணக்கான இணையத் தளங்களில் பார்க்கலாம். அவற்றில் மிகவும் நடுநிலையானது அமெரிக்க அரசின் இணையத்தளம் தான். உங்களைக் கேட்டால் அவையெல்லாம் பொய் என்பீர்கள். பயங்கரவாதிகளை உருவாக்குவதே இந்த முட்டாள்தனம்தான்.

– பால், அமெரிக்கா.

அமெரிக்கா இன்றி வாழ முடியுமா?

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை பூவால் அடித்த லாட்வியா நாட்டின் பெண் - பெண்ணின் மீது ஆயுள் தண்டனை வழக்கு !
பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை பூவால் அடித்த லாட்வியா நாட்டின் பெண் – பெண்ணின் மீது ஆயுள் தண்டனை வழக்கு !

அடுத்த முறை நிலநடுக்கம் ஏதாவது வந்து உங்கள் அருமை விவசாயிகளைக் காப்பாற்ற உதவி தேவைப்படும்போது வேறு இடம் பாருங்கள். நாங்கள் தீய வல்லரசு, ஆனால் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உடனே அமெரிக்காவைத் தேடுவீர்கள். எங்களிடம் ஒன்றும் அன்புக்குப் பஞ்சமில்லை. உங்களைப் போல நாங்கள் பெண்டாட்டியைக் கொளுத்துபவர்களில்லை.

அமெரிக்காவின் சிறந்த மருத்துவர்களெல்லாம் இந்தியர்கள்தான். உங்கள் அரசாங்கத்தின் கொடுமை தாங்காமல்தான் அவர்கள் இங்கே ஓடிவந்திருக்கிறார்கள். நீங்களோ எங்களைப் பார்த்துத் தீயசக்தி என்கிறீர்கள். அமெரிக்கா இல்லாத உலகத்தில்தான் வாழ்ந்து பாருங்களேன். அமெரிக்கா என்றால் என்னவென்று அப்புறம் தெரியும்.

– ஜிம், அமெரிக்கா.

ஜிம் அவர்களுக்கு, ஐயா சுயவிமரிசனச் சக்ரவர்த்தியே, எதப்பா கொடுமையானது, பெண்டாட்டியை எரிப்பதா, அல்லது பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கி கைக்குழந்தையுடன் தவிக்க விட்டுவிட்டு புதுப் பெண்டாட்டி தேடி அலைகிறீர்களே அது கொடுமையானதா? மூன்றாம் உலக நாடுகளின் கொடூர ஆட்சிகள் பலவற்றைக் காப்பாற்றுவதே அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தான் தெரியுமா? அந்த ஆட்சிகளை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராடும் போது அந்த “பயங்கரவாதத்தை ஒடுக்க” உதவி செய்பவர்கள் யார் தெரியுமா? நம் அமெரிக்கா தான்.

ஜிம், உன்னுடைய முட்டாள்தனம் ரொம்பவும் பச்சையாக வெளியே தெரிகிறது. அதை மறைத்துக் கொள்ளவாவது நீ கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும்.

– கேயாஸ், அமெரிக்கா.

கொஞ்சம் நிறவெறியும் காலியான மண்டையும்

அமெரிக்க அப்பாவி மக்களின் சாவுக்கு வருந்துகிறோம். ஆனால் உலகப் பண மூட்டைகளின் இலாப வெறிக்குப் பலியாகும் ஆயிரக்கணக்கான மக்களின் சாவைப் பற்றிக் கேட்பாரில்லை. போர்வெறியையும், நிற வெறியையும் முதலாளித்துவத் தகவல் ஊடகங்கள் திட்டமிட்டே உருவாக்குகின்றன.

அமெரிக்க அரசு தான் முதலாளித்துவக் கொடுமைகளை உலகத்தின்மீது திணிக்கிறது என்ற உண்மை கூட அவன் மண்டையில் ஏறவில்லை. அமெரிக்கர்களைக் கண்டால் ஆத்திரம்தான் வருகிறது.
அமெரிக்க அரசு தான் முதலாளித்துவக் கொடுமைகளை உலகத்தின்மீது திணிக்கிறது என்ற உண்மை கூட அவன் மண்டையில் ஏறவில்லை. அமெரிக்கர்களைக் கண்டால் ஆத்திரம்தான் வருகிறது.

ஏற்கனவே கொஞ்சம் நிறவெறியும், காலியான மண்டையும் கொண்ட அமெரிக்கக் குடிமக்கள் இதையெல்லாம் அப்படியே விழுங்கித் தொலைக்கிறார்கள். என் புருசனும் இப்படி ஒரு ஆள்தான். என்னால் சகிக்க முடியவில்லை. ”போ… போய் இராணுவத்தில் சேர்ந்து சண்டை போட்டு எங்கேயாவது ஒரு கண்காணாத பாலைவனத்தில் செத்துத் தொலை” என்று சொல்லிவிட்டேன்.

ஆனால் ஒருவகையில் இந்தச் சம்பவம் எனக்கு இறைவன் கொடுத்த வரம்தான். ஆணாதிக்கத் திமிர் பிடித்த பன்றிகளான இப்பேர்ப்பட்ட கணவன்மார்களிடமிருந்து என்னைப் போன்ற பரிதாபத்திற்குரிய மனைவிகளுக்கு இப்படியாவது ஒரு விடுதலை கிடைக்கட்டும்.

– போரில் கணவனின் சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனைவி, அமெரிக்கா.

இப்போதுதான் விழித்தோம்

அரசியலற்ற பேரின்ப நிலையின் கோமாவில் நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். உண்மையான சுதந்திரத்திற்காக, அமெரிக்கக் கொலைக் கரங்களிலிருந்து விடுதலையடைவதற்காக, இன்னும் எதற்காகவெல்லாமோ உலகெங்கும் மக்கள் சாகிறார்கள். அடி எங்கள் மேல் விழுந்தவுடனே விழித்துக் கொண்டோம். துக்கக் கலக்கத்தில் தடுமாறும் அமெரிக்கர்கள் தங்கள் கொடியை வைத்து உலகத்திற்கு விழிப்புணர்வு ஊட்டப் போகிறார்களாம்!

– மாலிக், அமெரிக்கா.

ஆத்திரமும் அனுதாபமும்

என் வயது 18. தொலைக்காட்சி, பத்திரிகைகளைக் கண்டு வெறுத்துப் போன இளைஞன் நான். போன வெள்ளிக்கிழமை ஒரு அமெரிக்கனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அமெரிக்க அரசு தான் முதலாளித்துவக் கொடுமைகளை உலகத்தின்மீது திணிக்கிறது என்ற உண்மை கூட அவன் மண்டையில் ஏறவில்லை. அமெரிக்கர்களைக் கண்டால் ஆத்திரம்தான் வருகிறது. பல உண்மைகள் அவர்களுக்கு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அந்த உண்மைகள் தெரியவந்தாலும் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.

இவர்களுக்காக நான் மட்டும் ஏன் வருந்தவேண்டும்? ஏதோ ஒரு நாட்டின் சேரிகளில் வாழ்ந்துகொண்டு, மோசமான கூலிக்கு நைக் காலணிகளை உற்பத்தி செய்து கொடுத்துவிட்டு, தங்கள் நோயாளிக் குழந்தைகளுடன் வாழ்க்கையைத் தள்ளுகிறார்களே அந்த கோடிக்கணக்கான அப்பாவி மக்களுக்காகத்தான் நான் அனுதாபப்படுவேன்.

– லியோனி ஹாட்ஜ், செக்கோஸ்லோவாகியா

இதை முன்னரே எதிர்பார்த்தேன்!

அன்பார்ந்த புதிய கலாச்சாரம் ஆசிரியருக்கு,

Hand-Baby-Raghu
உங்கள் பேரரசு உலகெங்கும் உருவாக்கியிருக்கும் இடிபாடுகளைப் பாருங்கள்

நீங்கள் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்த கட்டுரையின் மையக் கருத்துடன் நான் முழுவதும் உடன்படுகிறேன். நான் ஒரு டாக்ஸி டிரைவர் என் குடும்பம் நியூயார்க்கில் இருக்கிறது. இந்தத் தாக்குதலில் எனது மாமனையும், இரண்டு அத்தைகளையும் இழந்துவிட்டேன். வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் இதற்கு பயங்கரவாதிகளைக் குற்றம் சொல்லமாட்டேன்.

மேற்குலகில் இருக்கிற எனது சக குடிமக்களைப் போல இந்தத் தாக்குதலைக் கண்டு நான் கடுகளவும் ஆச்சரியப்படவில்லை. இது முன்னமே நடந்திருக்கவேண்டும். இத்தனை தாமதமானதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

நான் ஒரு சலுகை பெற்ற வெள்ளைக்காரனாக தென்னாப்பிரிக்காவில் வளர்ந்தவன். சக மனிதனினர் துன்பத்தில் கிடைக்கும் செல்வம் எத்தனை கொடுமையானது என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தவன்.

பல இசுலாமிய நாடுகளுக்கும் நான் பயணம் செய்திருக்கிறேன். அவர்களின் ஆழ்ந்த அறிவைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவர்கள் மீது மேற்குலகம் திணித்திருக்கும் அவமானத்தையும் அநீதியையும் எண்ணிக் கூனிக் குறுகியிருக்கிறேன்.

தங்கள் தொலைக் காட்சிப் பெட்டிகளை முடிவிட்டு, உண்மையில் உலகம் எப்படி இருக்கிறது என்பதை அமெரிக்கர்கள் கண்ணால் பார்க்க வேண்டும், சிந்திக்க வேண்டும்.

இல்லையென்றால் எதிர்காலத்தில் அவர்களது பிள்ளைகள் அனுபவிக்கவிருக்கும் துன்பத்திற்கான காரணத்தை அவர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.

தம்முடைய டாம்பீக வாழ்க்கையும், தாம் தெரிவு செய்யும் அரசியல் தலைவர்களும் தான் எண்ணற்ற ஏழை நாட்டுக் குழந்தைகளை துயரத்தில் தள்ளியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாத வரை தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் அவர்கள் புரிந்துகொள்ள முடியாது.

அமெரிக்காவிடம் எவ்வளவு பொருளாதார ராணுவ வலிமை உள்ளதோ அதற்கு உகந்த அளவு அரசியல் அறிவும் பொறுப்புணர்ச்சியும் அதன் குடிமக்களுக்கு இருக்கவேண்டும். ஆனால் இப்போதைக்கு அது நடக்கிறமாதிரி எனக்குத் தெரியவில்லை.

தான் விரும்புகிற உலக ஒழுங்கை எந்த அளவுக்கு நம் மீது அமெரிக்கா திணிக்கிறதோ, அதே அளவுக்கு இத்தகைய பதிலடிகளும் அதிகரிக்கத் தான் செய்யும்.

இந்த உலக தாதாவின் திமிர்த்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் தான் முயலவேண்டும்.

அன்புடன்,
மைக்கேல், ஆஸ்திரேலியா.

புதிய கலாச்சாரம், டிசம்பர் 2001.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க