privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்அமெரிக்க ஆசியுடன் மோடியின் " பருப்புடா " - சிறப்புக் கட்டுரை

அமெரிக்க ஆசியுடன் மோடியின் ” பருப்புடா ” – சிறப்புக் கட்டுரை

-

international-year-of-pulsesதொடரும் பருப்பு விலையேற்றம்!…பின்னணி என்ன?

வ்வொரு ஆண்டையும் வறுமை ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு என்று அறிவிக்கும் ஐ.நா சபை 2016-ம் ஆண்டை பயறுகள் ஆண்டு (YEAR OF PULSES) என்று அறிவித்திருக்கிறது! ஐ.நா-வின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் பின்னால், அதற்குப் படியளக்கும்‘சர்வதேச சமூகம்’ ஒளிந்து கொண்டிருக்கும் என்பது தெரிந்ததுதான்! ஆனால், பருப்புக்குள் எப்படி இருக்கமுடியும்? இன்றைய நவீனகாலத்து கடவுள் இந்த“சர்வதேச சமூகம்”தான்! கடவுள் தூணிலும், துரும்பிலும் ஏன் பருப்பிலும் இருப்பார்! வாருங்கள் தேடுவோம்!

பற்றாக்குறையும், இறக்குமதியும்!

பயறு வகைகள், உலகிலேயே அதிக உற்பத்தியாகும் நாடு, இந்தியா! அதே நேரத்தில் உலகிலேயே அதிக இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான்! ஏன் என்றால் பருப்புவகைகளை உலகிலேயே அதிகமாக பயன்படுத்துவதும் இந்தியாதான்! அதனால்தான் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை ஈடுகட்ட இறக்குமதி செய்கிறோம் என்கிறது அரசு!

பிரவீன் டாங்கரே
பிரவீன் டாங்கரே-நடுவில் இருப்பவர்

“இந்தியாவின் ஒரு ஆண்டுத் தேவை 2.1 கோடி டன்! ஆனால் உற்பத்தியாவது 1.7 கோடி டன்தான்! பற்றாக்குறையான சுமார் 30 லட்சம் டன்னை இறக்குமதி செய்கிறோம்” என்கிறார் இந்திய பருப்பு மற்றும் சிறுதானிய வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் பிரவீண் டாங்ரே! ஒரு பற்றாக்குறை நாடு என்றால் இறக்குமதிதானே செய்ய வேண்டும்? ஆனால் ஏற்றுமதிக்கும் அனுமதிக்கிறது மத்தியஅரசு! இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள்:

ஆண்டு ஏற்றுமதி (டன்) இறக்குமதி (டன்)
2013-14 3,45,051.38 31,78,264.19
2014-15 2,20,914.58 40,01,965.78
2015-16 2,51,644.32 53,35,033.67

ஆண்டுக்கு 40-50 லட்சம்டன் இறக்குமதி செய்யும் நாடு, தன் கையிருப்பில் உள்ள 2.5 லட்சம் டன் பருப்பை ஏற்றுமதி செய்வது முட்டாள்தனமில்லையா? இந்த ஏற்றுமதியை தவிர்த்திருந்தால் நாட்டின் அந்நிய செலாவணியில் 1,737 கோடி ரூபாயை இழக்க வேண்டியதில்லையே! ஏன் இதை செய்யவில்லை மத்திய அரசு? மேலும், பருப்பு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்திருந்த 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளிலும் கூட ஏற்றுமதிகள் தொடர்ந்துள்ளது!

நாட்டின் உணவுப்பொருள் இறக்குமதியில் முதலிடம் பிடிப்பது பருப்புவகைகள்தான்! ஆண்டுக்கு 17,000 கோடி ருபாய்க்கும் அதிகமான பருப்புகளை கனடா, ஆஸ்திரேலியா மியான்மர் ஆகிய நாடுகளிருந்து இறக்குமதி செய்கிறது இந்தியஅரசு! இந்த பற்றாக்குறை திடீரென்று உருவானதல்ல. கடந்த 1980-81-லிருந்தே நீடித்து வருகிறது. கடந்த 2005-லிருந்து ஆண்டுக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் என்று பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது! இவ்வாறு 35 ஆண்டுகளாக நீடிக்கும் மக்களின் நேரடி உணவு சம்மந்தமான இப்பிரச்சனையில், ஒரு பொறுப்பான மக்கள் அரசு உடனடியாக தலையிட்டு தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்! ஆனால் மத்திய அரசு என்ன செய்தது?

உதவாக்கரைத் திட்டங்களும்-விளைவும்!!

ipgaஇந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மூலம் நாட்டில் பயறுவகை உற்பத்தியை பெருக்குவதற்காக 2010-11-ம் ஆண்டில் “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயல்விளக்க திட்டத்தை” செயல்படுத்தியது. இதன்படி நாட்டில் அதிகளவில் பயறுவகை உற்பத்தியாகும் 11 மாநிலங்களில் 137 மாவட்டங்களை தேர்வு செய்து திட்டத்தை அமுல்படுத்தினார்கள். இதிலும் மாவட்டத்திற்கு 30 முன்னோடி விவசாயிகளை மட்டும் தேர்வுசெய்து, அவர்களுக்கு நவீன தொழில்நுட்பம்- வீரியரக விதை–உரம்-மருந்துகளை மானியவிலையில் கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள்! இதற்காக ஒரு மாவட்டத்திற்கு ஒதுக்கிய தொகை 3 லட்சத்து 20 ஆயிரம் ருபாய்! 137 மாவட்டத்திற்கும் கணக்கிட்டால் 4.38 கோடி ரூபாய்! 3 ஆண்டுகள் தொடர்ந்து சுமார் 15 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்திய இத்திட்டத்தின் பலன் என்ன? இத்திட்டத்தின் பஞ்சாப் மாநில இயக்குனர் விஜய் மல்ஹோத்ராவின் மொழியில் சொன்னால், ”அடுத்த 2 – 3 ஆண்டுகளில் கூடுதலாக 20 லட்சம் டன் உற்பத்தி செய்வதுதான் எங்களின் இலக்கு!” அதாவது, ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யும் பயறுகளை வெறும் 15 கோடிரூபாய் செலவில் உற்பத்தி செய்யும் மோடிமஸ்தான் வேலைதான் இம் மேதாவிகளின் திட்டம்! இறுதியில், இவர்களின் திட்ட உற்பத்தி இலக்கையும் தாண்டி 40 லட்சம் டன் பயறு வகைகளை இறக்குமதி செய்ததுதான் இத்திட்டத்தின் சாதனை! நாட்டில் பயறு விளைச்சளில் தன்னிறைவு பெறுவதற்காக மத்திய-மாநில அரசுகளின்திட்டங்கள் இப்படித்தான் வீணாகிப்போனது!

இந்திய பயறு ஆராய்ச்சி மையம்-விஞ்ஞானிகள்
இந்திய பயறு ஆராய்ச்சி மையம்-விஞ்ஞானிகள்

மேலும் 1966-ம் ஆண்டில் முதன்முதலாக “ஒருங்கிணைந்த பயறுவகை மேம்பாட்டுத்திட்டம்” தொடங்கப்பட்ட போது. ஒரு தனிநபரின் ஒருநாளுக்கான நுகர்வு 60.7 கிராமாகவும், ஒரு ஆண்டிற்கான நுகர்வு 22.1 கிலோவாகவும் இருந்தது! இது 2012-13 –ம் ஆண்டில் 41.6 கிராம் என்றும், 15.2 கிலோ என்ற அளவுக்கும் குறைந்துவிட்டது!

இது தவிர, நாட்டின் பயறுவகை உற்பத்தியைப் பெருக்கு வதற்காகவே கான்பூரில் இந்திய பயறுவகை ஆராய்ச்சி நிலையம் (INDIAN INSTITUTE OF PULSES RESEARCH-IIPR) உள்ளது. இதன் விஞ்ஞானிகள் பல நூறு கோடிரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட குளு-குளு அறைக்குள் உட்கார்ந்தபடி கருத்தரங்கு, மாநாடு நடத்துவார்கள்! நாலு பாத்தியில் பத்து செடிகளை வளர்த்து இதுதான் புதிய தொழில்நுட்பம் என்று பாடம் நடத்துவார்கள்! முடிந்தால் வருடத்திற்கு ஒன்றிரண்டு வீரியரகங்களை கண்டுபிடிப்பார்கள், அதை “ஒரு ஏக்கரில் பயிரிட்டால் இரண்டு லட்சம் லாபம்” என்று பசுமை விகடன் பாணியில் அப்பாவி விவசாயியின் ஒருவரின் போட்டோவுடன் விளம்பரம் செய்வார்கள்! எல்லாம் சரி…பற்றாக்குறை 40 லட்சம் டன்னுக்கு என்னசார் வழி? என்று கேட்டால் “அது அரசாங்கத்தின் வேலை…அங்கே போய் கேளுங்க” என்று நம்மை விரட்டுவார்கள்! இதற்குமேல் இவர்களால் விவசாயிகளுக்கும் நாட்டுக்கும் எந்தப்பயனும் இல்லை!

நாடு தன்னிறைவு பெறுவதற்கு வழியில்லையா?

futures-trading-in-pulsesபயறுவகைகளில் இந்திய பாரம்பரிய மரபணுகூறுகளை உடையவை என்று இதுவரை 1028 ரகங்கள் இனங்காணப் பட்டுள்ளன! உதாரணமாக கொண்டைக்கடலையில் 350 ரகங்களும், பாசிப்பயரில் 184 ரகங்களும் இருக்கின்றன! இவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட பலநூறு கலப்பினங்களும் உள்ளன! இவைதான் நாடு முழுவதும் பெரும்பாலான விவசாயிகளால் பயிரிடப்பட்டு, இன்று ஆண்டுக்கு 1.9 கோடிடன் உற்பத்தி செய்து வருகிறோம்! இவற்றின் விளைச்சல் திறன் தேசிய சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 637 கிலோ! இதன்படி பற்றாக்குறையான 40 லட்சம் டன்னை ஈடுகட்ட, கூடுதலாக 6300 ஹெக்டேர் நிலத்தை பயறு உற்பத்திக்கு கொண்டுவந்தாலே போதுமானது. புதிய ஆராய்ச்சிகளின் தேவை இல்லாமலே நாம் தன்னிறைவு பெற்றுவிடலாம்! ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணியை மீதப்படுத்தலாம்! இந்த எளிய வழிமுறை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் ஏன் தெரியாமல் போனது?

கூடுதல் நிலத்தை பயறு உற்பத்திக்கு கொண்டு வரமுடியாத பட்சத்தில், அதிக உற்பத்தித் திறன் கொண்ட புதிய ரகங்களை உருவாக்கி இருந்தால்கூட இந்தப் பற்றாக்குறையைத் தவிர்த்திருக்கலாம்! பிற நாடுகளின் வளர்ச்சியை பாருங்கள்:

1961-ல் கனடாவின் உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேருக்கு 114 கிலோவாக இருந்ததை 2012-ல் 1893 கிலோவாக உயர்த்திவிட்டது! இதுபோல பிரேசில் 668– லிருந்து 1027 கிலோவுக்கும், மியான்மர் 442–கிலோவிலிருந்து 1323 கிலோவுக்கும், சீனா 876–கிலோவிலிருந்து 1431–கிலோவுக்கும் தங்களின் உற்பத்தித்திறனை உயர்த்தியுள்ளன! ஆனால் விவசாயப் பாரம்பரியமிக்க இந்தியாவோ 1961–ல் ஒரு ஹெக்டேருக்கு 540 கிலோவாக இருந்ததை இன்றுவரை 700 கிலோ என்ற அளவையே தாண்ட முடியாமல் தள்ளாடிக் கொண்டுள்ளது!

ஆயிரக்கணக்கான வேளாண் விஞ்ஞானிகள், வல்லுனர்கள், ஆராய்ச்சி நிலையங்கள் எல்லாம் இருந்தும் ‘வல்லரசு கனவு காணும்’ இந்தியாவால் ஏன் இதை சாதிக்க முடியவில்லை?

பயறுவகைகளின் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்துவருவது, பற்றாக்குறை உள்ளபோதே ஏற்றுமதிக்கு அரசு அனுமதிப்பது, உள்நாட்டுத்தேவையை ஈடுகட்ட வெளிப்படையான வாய்ப்புகள் இருந்தும் அரசு அலட்சியமாக அதை புறக்கணிப்பது, எல்லாமே மத்திய அரசால் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது! நிலவுகின்ற பற்றாக்குறையை தொடர்ந்து நீட்டிக்கவே மத்தியஅரசு விரும்புகிறது என்பதுதான் உண்மை!!

ஏனென்றால், இதன் பின்னால் உலக வர்த்தகக் கழகமும் (WTO), சர்வதேச வர்த்தக நலனும், அரசியலும் ஒளிந்து கொண்டிருக்கிறது!

சர்வதேச சந்தை நிலவரம்!

உலக வர்த்தகத்தின் வேளாண் பொருள்கள் சந்தையில், எண்ணெய் வித்துக்கள் மற்றும் நவதானியங்களின் மதிப்போடு ஒப்பிட்டால், பயறுவகையின் வர்த்தக மதிப்பு என்பது மிகவும் சிறியது. உலகின் மொத்த உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 7 கோடி டன்! இதில் 1.5 கோடி டன் மட்டுமே உலக சந்தையில் ஏற்றுமதி-இறக்குமதிக்கு பயன்படுகிறது! (மீதி முழுவதும் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுகிறது) இதன் வர்த்தக மதிப்பு சுமார் 6,000 கோடி ரூபாய்தான்! ஆனால் உலக நாடுகளில் பயறு வகைகளின் சில்லறை வர்த்தக மதிப்பு 6 லட்சத்து 60 கோடிரூபாய் என அமெரிக்க வேளாண் வர்த்தகத்துறை-(USDA) மதிப்பிடுகிறது!

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பயறுகள் முக்கிய உணவுப் பொருளாக இல்லை. இங்கு விளையும் பயறுகளில் மூன்றில் ஒருபங்கு பன்றி மற்றும் கோழித் தீவனமாகவே பயன்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக ஊட்டச்சத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், உடல் எடை அதிகரிப்பு பற்றிய அச்சமும் இம்மக்களிடம் அதிகரித்திருப்பதால் பயறுவகை உணவுப் பழக்கமும், அதற்கான நுகர்வும் அதிகரித்து வருகிறது.! இதனால் கடந்த 10 ஆண்டுகளில் பயறுகளின் உலக வர்த்தகமானது 6 மடங்கு அதிகரித்திருப்பதால், பன்னாட்டு வேளாண் வர்த்தகக் கம்பெனிகள் இத்துறையில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன! பயறுகளின் தேவையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், பயறுவகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், அதன் நன்மைகள், பலவித சுவைகளில் பயறுவகை உணவுகள் தயாரிக்கும்முறை ஆகியவற்றைப் பிரலப்படுத்தும் விளம்பரங்களை மேற்கத்திய நாடுகளில் பரவலாக்கி வருகின்றன பன்னாட்டு வேளாண் வர்த்தக நிறுவனங்கள்!.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]  

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]  

உலகின் மிகப்பெரிய இறக்குமதி நாடான இந்தியச் சந்தையைக் கைப்பற்றுவதில் ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்க நாடுகளிடையே போட்டியிருந்தாலும், கனடா- தான் ஆதிக்கம் செலுத்துகிறது! அல்பெர்ட்டா (ALBERTA) என்பது கனடாவின் முன்னணி வேளாண் வர்த்தக நிறுவனம். இது பல ஆயிரம் ஏக்கர் பண்ணை நிலங்களின் உரிமையாளர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு ‘விவசாயிகள்’ கூட்டமைப்பு! கனடா அரசின் வேளாண்மைத் துறையில் அரசியல் செல்வாக்குப் பெற்ற இந்நிறுவனம், தங்களுக்கு சொந்தமான பண்ணையில் விளையும் பயறுகள் மட்டுமல்லாது, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையும் பயறுகளையும் நேரடியாகக் கொள்முதல் செய்து, பதப்படுத்தி, அங்கிருந்தே உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது! இந்நிறுவனம் 2014–முதல் பஞ்சாப்,மேகாலயா மாநிலங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்கி வருகிறது!

சர்வதேச பயறு வர்த்தகக் கூட்டமைப்பு
சர்வதேச பயறு வர்த்தகக் கூட்டமைப்பு

அல்பெர்ட்டா-வைப்போல, 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்துள்ள “சர்வதேச பயறு வர்த்தகக் கூட்டமைப்பு”(GLOBAL PULSES CANCLAVE – GPC) தான் பயறுகளின் உலக வர்த்தகத்தை தீர்மானிக்கிறது! 25 நாடுகளிலிருந்து 1,200 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டமைப்பின் வருடாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தை, கடந்த பிப்ரவரி 17-19/2016-ல் ஜெய்ப்பூர் நகரில் நடத்தியிருக்கிறார்கள்! இவர்களின் வர்த்தக நலனுக்காகவே 2016-ம் ஆண்டை பயறுகளின் ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது!

இந்திய சந்தையின் நிலவரம்!

இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான உள்நாட்டு தேவை 2.1-கோடி டன்! உற்பத்தியாவது சராசரியாக 1.7 கோடி டன்! பற்றாக்குறையான 30 லட்சம் டன்னை இறக்குமதி செய்கிறோம் என்று பொதுவாக மத்தியஅரசு கூறுகிறது. ஆனால், படிப்படியாக இப்பற்றாக்குறை அதிகரித்து வருவதன் உச்சகட்டமாக 2015-16-ம் ஆண்டில் 53 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டது!

2014-15-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியா இறக்குமதி செய்யும் ஒரு கிலோ பயறுவகையின் சராசரி விலை 35 ரூபாய்! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விலை ஒரு கிலோ 45 ரூபாய்! உள்நாட்டு விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் செய்யும் விலை அதிகபட்சமாக 46 ரூபாய்! இதை சேமித்து பதப்படுத்தி, தரம்பிரித்து சந்தைக்கு கொண்டு செல்வதுவரை ஆகும் செலவுகளையும் சேர்த்தால் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய், லாபம் 10 ரூபாய், அரசுக்கு செலுத்தும் வரி 10 ரூபாய் என்று கணக்கிட்டாலும் கூட சில்லறை சந்தையில் கிலோ 80 ரூபாய்க்கு தாராளமாக விற்கலாம்! ஆனால் தற்போது 245 ரூபாய்க்கு விற்பனையாவது மாபெரும் கொள்ளையல்லவா? இதன் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் யார்?

ஒரு ஏக்கர் மானாவாரியில் பயிரிடுவதற்கு 15,000 முதல் 20,000 வரை செலவாகும் நிலையில், மத்தியஅரசு 2015-ல் அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பாருங்கள்:

பயிர்வகை: ஆதரவு விலை(குவிண்டாலுக்கு ரூபாய்) கிலோவுக்கு ரூபாய்
ஏக்கருக்கு சராசரி 280 கிலோ வீதம் விவசாயிக்கு கிடைப்பது –ரூபாய்
சுண்டல் 3,175 31.75 8,890
துவரை 4,350 43.50 12,180
பாசிப்பயறு 4,600 46.00 12,880
அவரை 4,350 43.50 12,180

வர்த்தக சூதாடிகளின் அரசு!

alberta-ceo
அல்பெர்ட்டா நிறுவன தலைமை அதிகாரி

நாட்டின் பற்றாக்குறை ஈடுகட்ட இறக்குமதி செய்வதும், பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் தனியார் வர்த்தக நிறுவனங்களே! மத்திய-மாநில அரசுகள் இதில் நேரடியாக தலையிடுவதில்லை!! இந்நிறுவனங்களின் கூட்டமைப்பான “இந்திய பயறுகள் மற்றும் நவதானியக் கழகம்-(IPGA)”தான் இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதியை கட்டுப்படுத்துகிறது! நாடுமுழுவதும் 400 உறுப்பினர்கள், 10,000 ஒப்பந்ததாரர்களைக் கொண்ட இவர்கள் நேரடியாக விவசாயிகள் மற்றும் வட்டார-மாவட்ட மொத்த வியாபாரிகள், சேமிப்புக்கிடங்குகள் ஆகியவற்றிலிருந்து பயறுவகைகளை கொள்முதல் செய்கின்றனர்! இதேபோல இறக்குமதி செய்த பயறுகளையும் மேலிருந்து கீழ்வரை விநியோகிப்பதும் இவர்கள்தான்! இதுதவிர குவாலிட்டி அக்ரோ ப்ராசசர்ஸ், அக்ரோஷன் கமாடிட்டீஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் பயறு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன!

கொள்முதல் விலையிலிருந்து விற்பனை விலை வரை, இவ்வர்த்தகச் சூதாடிகளே தீர்மானிக்கின்றனர்! சர்வதேச நிலவரம், உள்நாட்டு உற்பத்தி நிலவரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, செயற்கையாக விலையை ஏற்றிக் கொள்ளையடிகின்றனர்! இவர்களின் லாபவெறிக்காகவே உள்நாட்டில் பற்றாக்குறை நீடித்தாலும், ஏற்றுமதி செய்துகொள்ள அனுமதிக்கிறது மத்திய அரசு!

மேலும், MULTI COMMODITY EXCHANGE-(MCX) என்ற சர்வதேச ஆன்லைன் வர்த்தக நிறுவனம் 2013, நவம்பர் முதல் செபியின் அனுமதியுடன் இந்தியாவில் இயங்கி வருகிறது. உலகின் 5-வது பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இது, இந்தியாவில் 2100 உறுப்பினர்கள், 2,96,000 வர்த்தக மையங்களுடன் 11 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது! இதன் ஒருநாள் பரிவர்த்தனை மதிப்பு 51,419 கோடிரூபாய்! என்பதிலிருந்து இதன் பூதாகரமான செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம்!

இக்கொலைகார நிறுவனம், இந்திய அஞ்சல்துறையுடன் இணைந்து கிராமப்புற விவசாயிகளை ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் பயிற்சி அளிப்பதற்காக “கிராமின் சுவிதா கேந்த்ரா”(GRAMIN SUVIDHA KENTHRA) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது! 2016-மார்ச் வரை மகராஷ்டிரா, உ.பி, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் 1343 கிராமங்களை சேர்ந்த 31,460 விவசாயிகளுக்கு பயிற்சியளித்து வருவதாக MCX-ன் இணையதளம் கூறுகிறது! விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலைநிர்ணயம் செய்ய வக்கற்ற மத்திய அரசு இதுபோன்ற திட்டத்தின் மூலம், வர்த்தக சூதாடிகளிடம் விவசாயிகளை நேரடியாக சிக்க வைக்கும் வேலையை மட்டும் நயவஞ்சகமாக செய்து வருகிறது!

தொடரும் நெருக்கடிகள்!

பயறுவகை ஏற்றுமதி நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா, மியான்மர் ஆகிய நாடுகளின் பயறு விவசாயிகள், கட்டுபடியான லாபம் கிடைக்காததால் சோளம்,கோதுமை, மற்றும் எண்ணைய் வித்துக்கள் உற்பத்திக்கு மாறிவருகிறார்கள். இதனால் தங்கள் வர்த்தகத்தில் ஏற்படும் தொய்வை ஈடுகட்டவே “முன்பேர வர்த்தகம்”- “ஒப்பந்த விவசாயம்”- “உத்தரவாதமான விலை” என்று கவர்ச்சிகாட்டி விவசாயிகளை ஏய்த்து வருகிறார்கள்! “கனடா ஒரு ஏற்றுமதிநாடு. எனவே நாங்கள் ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு சாதகமான சந்தையைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்! இந்தியா 100 கோடி நுகர்வோரைக் கொண்ட சந்தையை பிரதிபலிக்கிறது. இங்கு நாங்கள் வலுவாகக் காலூன்ற விரும்புகிறோம்!” என்று கனடாஅரசின் வர்த்தகப்பிரதிநிதி இயன் டோனோவர் கூறுவதன் பொருள் இதையே உறுதிப்படுத்துகிறது!

“பயறுவகைகள் உட்பட நாட்டின் மொத்த உணவுதானிய உற்பத்தியும், கடந்த 10 வருட சராசரியோடு ஒப்பிட்டால், 2015-ல் 130.5 லட்சம்டன் குறைந்துள்ளது! பயறு வகைகளில் மட்டும் கடந்த 5 வருட சராசரியோடு ஒப்பிட்டால் 10.4 லட்சம்டன் உற்பத்தி குறைந்துள்ளது!” என APEDA-வின் சந்தை ஆய்வுகள் கூறுகிறது! ஒவ்வொரு ஆண்டும் அரிசி-கோதுமை-காய்கறி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற வேளாண்மை சார்ந்த பொருள்களின் இறக்குமதி அதிகரித்துவருகிறது! கடந்த ஆண்டில் மட்டும் 76.41 லட்சம்டன் இறக்குமதியாகியுள்ளது!

மறுபக்கத்தில்,“உள்நாட்டுத் தேவையில் பற்றாக்குறை நிலவினாலும், இல்லாவிட்டாலும் கூட, நாட்டின் மொத்த உற்பத்தியின் ஒருசதவீத அளவுக்கு கட்டாயமாக இறக்குமதி செய்யவேண்டும்!” என்று மிரட்டுகிறது உலகவர்த்தகக் கழகம்! உலகச்சந்தையில் பிறவகைப் பயறுகளை ஓரங்கட்டிவிட்டு, தனது நாட்டில் உபரியாக விளையும் சோயாவை முன்னுக்கு கொண்டுவர சாதுரியமாக காய்நகர்த்திக் கொண்டுள்ளது அமெரிக்கா! “உணவுப்பொருள்கள் விளையும் பரப்பபளவு படிப்படியாக குறைந்து வரும்போது, ஏற்றுமதி உற்பத்திக்கான தோட்டக்கலைப் பயிர்கள் விளையும் பரப்பளவு இரு மடங்காக அதிகரித்து வருகிறது! 2001-02 -ல் 12,770 ஹெக்டேராக இருந்த தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பு, 2015–ல் 24,388 ஹெக்டேராக அதிகரித்திருக்கிறது.”

மேலதிக தகவல்களுக்கு:

www.indiaagristat.com
eands.dacnet.nic.in
DGCIS annualdata
agricxchange.apeda.gov.in
indian horticulture statistics database(NHB)

இவ்வாறு, எல்லாத் திசைகளிலும் இந்திய விவசாயத்தின் குரல்வளை நெருக்கப்பட்டு வருகிறது! புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் காட் ஒப்பந்தத்தின் விளைவாக பிற துறைகளைவிட விவசாயம் தீவிரப் பாதிப்புக்குள்ளாகி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது! ஆனால் கையாலாகாத மோடி அரசோ, “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போகிறோம்” என்று வாய்ச்சவடால் அடித்து வருகிறது! நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, விவசாயத்தைக் காப்பாற்ற வக்கற்று, தோற்றுப்போய், தன் நாட்டு விவசாயிகளுக்கே சவக்குழி பறித்துவரும் இந்த அரசுக் கட்டமைப்பு, இனியும் தேவையா என்பதை விவசாயிகளும், நாட்டு நலன் விரும்பிகளும்தான் முடிவு செய்ய வேண்டும்!

-மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,

தேனி.