Thursday, December 1, 2022
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்ஆர்.எஸ்.எஸ்-ன் கோமாதா மூத்திரம் - ஒரு அறிவியல் பார்வை !

ஆர்.எஸ்.எஸ்-ன் கோமாதா மூத்திரம் – ஒரு அறிவியல் பார்வை !

-

ன்றைய தேதியில் நாட்டின் மிக முக்கியமான பிரச்சினை எது? விலைவாசி உயர்வா? வேலையின்மையா? பெண்கள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளா?  இவையெதுவுமில்லை, கோமாதாதான் தலைபோகிற பிரச்சினை என்கிறது மோடி அரசு.

”உன்னுடைய மாதாவின் பிணத்தை நீயே தூக்கிப் போட்டுக் கொள்” என்று குஜராத் தலித்துகள் பார்ப்பன இந்துமதவெறியின் முகத்தில் பீச்சாங்கையை வைத்து விட்டாலும், சோர்ந்து  விடாத காவி கும்பல், தங்கள் ‘புனித அன்னையின்’ புகழைப் பரப்ப கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோமாதாவின் மூத்திரத்தையும் சாணியையும் அள்ளி வந்து ஆராய்ச்சி செய்கின்றனர்.

ஆண்மை பெருகும், இளமை மீளும், வழுக்கையில் முடி முளைக்கும், விரை வீக்கம் அகலும், ஆண் குழந்தைப்பேரு கிட்டுவதோடு புற்றுநோய் கூட குணமாகும் என்று குன்சான ‘அறிவியல்’ ஆய்வுகளை பரப்பி விட்டால் போதுமானது
ஆண்மை பெருகும், இளமை மீளும், வழுக்கையில் முடி முளைக்கும், விரை வீக்கம் அகலும், ஆண் குழந்தைப்பேரு கிட்டுவதோடு புற்றுநோய் கூட குணமாகும் என்று குன்சான ‘அறிவியல்’ ஆய்வுகளை பரப்பி விட்டால் போதுமானது

இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுடைய கடந்த கால செயல்பாடுகளின் மேல் நமக்கு எந்த மரியாதையும் இல்லை என்பது ஒருபுறமிருக்க, தற்போது மேற்படி நிறுவனங்களை மாட்டு மூத்திரத்தை ஆராய களமிறக்கியிருக்கிறது,  பாரதிய ஜனதா அரசு.

நடுத்தர வர்க்க அப்பாவி இந்தியர்களின் தலையில் எதையாவது கட்ட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இன்னன்ன பொருளைத் தின்றால் / பயன்படுத்தினால் – ஆண்மை பெருகும், இளமை மீளும், வழுக்கையில் முடி முளைக்கும், விரை வீக்கம் அகலும், ஆண் குழந்தைப் பேறு கிட்டுவதோடு புற்றுநோய் கூட குணமாகும் என்று குன்சான ‘அறிவியல்’ ஆய்வுகளை பரப்பி விட்டால் போதுமானது. குறிக்கப்பட்ட பொருள் மனித மலமாக இருந்தாலும் அள்ளி அப்பிக் கொள்வதே நமது பெருமைக்குரிய பாரம்பரியம். மாட்டு மூத்திரத்தில் மேற்படி ’மருத்துவ’ குணாம்சங்களோடு கூடுதலாக தங்கத் துகள்களும் இருப்பதாக குஜராத்தைச் சேர்ந்த விவசாய பல்கலைக்கழகம் ஒன்று ‘கண்டறிந்துள்ளது’.

ஒருவழியாக கிழவியைக் கண்டிபிடித்தாகி விட்டது – அடுத்து தூக்கி வைக்க மடி இல்லாவிட்டால் நாடு எப்படி வல்லரசாகும்? இந்த வேலையில் ஏற்கனவே பாபா ராம்தேவின் பதஞ்சலி ஈடுபட்டுள்ள நிலையில் கோதாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் நேரடியாக குதித்து மாட்டு மூத்திர விற்பனையை துவங்கியுள்ளது.

வாஜ்பாயி தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரத்தில் இருந்த போது மத்திய மனித வளத் துறை மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறைகளின் அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியின் நேரடிப் பார்வையில் மூத்திர ஆராய்ச்சி துவங்கியது. ”பசு விஞ்ஞான ஆராய்ச்சி மையம்” (Gau Vigyan Anusandhan Kendra – GVAK) என்ற ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பு அப்போதைய மத்திய அரசின் ஆதரவோடு பசு மூத்திரத்திற்கு நான்கு காப்புரிமைகளை பதிவு செய்தது. கடந்த ஆண்டு மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (Central Council for Researches in Ayurvedic Science) சார்பாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் பஞ்சகவ்யத்தை மருந்தாக பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

cow-pee-medicine
“கௌலோக பீயா” (Gauloka peya) என்கிற பெயரில் நாடெங்கும் தனக்குள்ள ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளில் மூத்திரத்தை விற்று வருகின்றதது கோ சேவா சங்கம்.

மத்திய அரசின் அழுத்தத்துடன் பெருமளவிலான மக்களின் வரிப் பணமும் மூத்திர ஆராய்ச்சியை நோக்கித் திருப்பி விடப்பட்டன. விவசாய ஆராய்ச்சிகளுக்கான இந்திய மையம் (ICAR), இந்திய கால்நடை ஆராய்ச்சி மையம் (IVRI), தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் (TNAU), அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (CSIR), ஒரியா மாநில விவசாய பல்கலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ஏராளமான ’ஆய்வுக்’ கட்டுரைகளை சமர்பிக்கத் துவங்கின.

அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் (Journal) என்கிற பெயரில் இந்திய மற்றும் சர்வதேச அறிவியல் பத்திரிகைகளில் இடம் பெறத் துவங்கிய இந்தக் கட்டுரைகளில் ‘அறிவியல்’ என்கிற கந்தாயத்தை நுண்ணோக்கி கொண்டு தேடினாலும் கிடைக்காது என்பதைத் தனியே விவரிக்கத் தேவையில்லை. உண்மையில், மாட்டு மூத்திரம் என்பதும் மற்ற எல்லா விலங்குகளின் (மனிதன் உட்பட) மூத்திரத்தைப் போன்றது தான். பிற எந்த உயிரினத்தின் உடலிலும் மலம், மூத்திரம் எந்த அடிப்படையில் உற்பத்தியாகிறதோ அதே அடிப்படையில் தான் மாட்டின் உடம்பிலும் நடக்கிறது.

உடலில் உள்ள திரவ நிலைக் கழிவுகள் சிறுநீரகத்தால் பிரித்து எடுக்கப்பட்டு கழிவுப் பாதையின் மூலம் வெளியேற்றப்படுகிறது. உடலுக்குத் தேவையற்ற உயிரிகள் மற்றும் இரசாயனங்கள் இந்தக் கழிவு நீரில் கலந்திருக்கும். (கோமாதாவோ மனிதனோ) 95 சதவீதம் தண்ணீரும், 2.5 சதவீதம் யூரியாவும் சேர்ந்ததே மூத்திரம் – இதோடு உடலுக்குத் தேவையற்ற இரசாயன மற்றும் ஹார்மோன் கழிவுகளும் சிறு சிறு அளவுகளில் கலந்திருக்கும்.

மூத்திரத்தில் உள்ள இரசாயனங்களால் எந்தப் பலனும் இல்லையா? பலன் இருக்கலாம். அந்த இரசாயண மூலத்திற்கு என்று உள்ள அனைத்து பலனும் இருக்கும். ஆனால், அதை இயற்கையிலிருந்து நேரடியாகவே பெறமுடியும் போது ஏன் மூத்திரத்தைக் கிளற வேண்டும். மனிதக் கழிவுகளில் உள்ள நொதிகளின் (enzymes) மருத்துவ பலன்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக மனித மூத்திரத்தில் கட்டுப்படுவதைத் தடுக்கும் குணம் உள்ள ஊரோகினோஸ் (Urokinase) என்கிற நொதி தனியே பிரித்தெடுக்கப்பட்டு இதய நாளங்களில் (Coronory arteries) இரத்தம் கெட்டிப்படுவதை தடுக்க பயன்படுத்தப்படுகின்றது. அதற்காக, மூத்திரத்தைப் பிடித்து நேரடியாக குடிப்பதற்குப் பெயர் அறிவியல் அல்ல – முட்டாள்தனமான காட்டுமிராண்டித்தனம்.

கோமியம்
கோமியம்

மேலும் நமது கோமாதா ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் அனைத்தும் சில பழங்கால நூல்களில் உள்ள மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டே சுழல்கின்றன. குறிப்பாக சரகர், சுஸ்ருதர், வாக்பட்டர் போன்றோரால் எழுதப்பட்ட சமஸ்கிருந்த நூல்களில் கோமூத்திரம் மருந்தாக பயன்படுத்தப்பட்டதைக் குறிப்பிடும் இந்துத்துவ வில்லேஜ் விஞ்ஞானிகள், அதே வேத நூல்களில் மாட்டு மாமிசம் உண்பதைப் பற்றி எழுதியுள்ளதைக் குறித்து பேசுவதில்லை.

2010-ம் ஆண்டிலிருந்து மாட்டு மூத்திர யாவாரத்தில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பான கோ சேவா சங்கம் (GSS) நேரடியாக இறங்கியுள்ளது. நீரிழிவு மற்றும் கான்சர் நோயைக் குணப்படுத்தும் அருமருந்து என இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனிய மூடர்களிடையே விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் மாட்டு மூத்திரத்தின் விலை 12ரூபாய் (ஒரு லிட்டர்). “கௌலோக பீயா” (Gauloka peya) என்கிற பெயரில் நாடெங்கும் தனக்குள்ள ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளில் மூத்திரத்தை விற்று வருகின்றது கோ சேவா சங்கம்.

மேற்படி பரிவார அமைப்பு 2002-ல் மாட்டு மூத்திரம் மற்றும் சாணியை அடிப்படையாக கொண்ட அழகுசாதனப் பொருட்கள் சிலவற்றை அறிமுகம் செய்து அவற்றுக்கு விளம்பரம் செய்ய பாலிவுட் நடிகைகள் சிலரை அணுகியுள்ளது. அப்போது உச்சத்தில் இருந்த பல பாலிவுட் நடிகைகள் விசயத்தைக் கேள்விப்பட்டு தெறித்து ஓடியுள்ளனர். பத்திரிகை ஒன்றிடம் இது குறித்து பேசியுள்ள ஐஸ்வர்யா ராய், ”மாட்டு மூத்திரத்தை முகத்தில் தேய்ப்பது அல்லது குடிப்பது பற்றி நினைத்தாலே நடுக்கமாக இருக்கிறது. நிச்சயம் அழகு குறித்த எனது சிந்தனை இதுவல்ல” என்று தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய் தனது கருத்தைத் தெரிவித்த போது பிரதமர் நாற்காலியில் திருவாளர் ஐம்பத்தாறு இன்ச் இல்லை என்பதால் பிழைத்தார் – இல்லாவிட்டால் தேசதுரோகியாக்கி பாகிஸ்தானுக்கு நாடு கடத்தியிருப்பார்கள்.

“வளர்ச்சி” கோஷங்களை முன்வைத்து ஆட்சிக்கு வந்த பின், சொல்லப்பட்ட ”வளர்ச்சி” அம்பானி அதானி வகையறாக்களுக்கே சேவை செய்யக்கூடியதென்பது அம்பலமாகியது. மக்களின் வாழ்நிலையோ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தாழ்ந்துள்ளது. இந்நிலையில் மொத்த சமூகத்தையும் மத ரீதியில் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் அடையும் வகையில் இந்துத்துவ செயல்திட்டங்களை வெறியோடு முன்னகர்த்துகின்றது காவி கும்பல். அதற்குத் தோதான ஆயுதமாக கையிலெடுத்திருப்பது தான் ’புனித கோமாதா’.

இந்துக்கள் என தம்மைச் சொல்லிக் கொள்கிறவர்கள் மனசாட்சியோடு இந்த உண்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வெறும் நம்பிக்கைகள் அரசியலை, சமூகத்தை, பொருளாதாரத்தை, வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்றால் – நீங்கள் அடையப் போவது வளர்ச்சியல்ல, காட்டுமிராண்டிக் கலாச்சாரமே.

– தமிழரசன்.

வீடியோ நன்றி: dailymail.co.uk

மேலும் படிக்க:
Of ‘cowpathy’ & its miracles
Cow’s Excreta as Medicine: Insult to Humanity
All Our Problems Solved: Scientists Find Gold In Cow Urine
India’s Hindus won’t eat cows, but might drink their pee
Doctors scoff at Hindu ‘health drink’ containing cow urine
Chin chin: Urine-drinking Hindu cult believes a warm cup before sunrise straight from a virgin cow heals cancer – and followers are queuing up to try it

  1. ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு பசுமாடு கொடுத்துவிட்டு மருத்துவர்கள்,மருத்துவ மனைகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள்,பன்னாட்டு மருந்துக்கம்பெனிகள் எல்லாவற்றையும் தடைசெய்துவிடலாம்.ஆறு குளங்கள், நீர் நிலைகளைச் சுற்றி கோ சாலைகள் அமைத்து மூத்திரத்தைக் கலக்கச் செய்து வீடுகளுக்கு வினியோகிக்கலாம்.எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு மாடு மேய்க்கும் தொழிலை மட்டும் செய்யலாம்.தின்ன சாணி,குடிக்க மூத்திரம்,சத்துக்குப் பால்,தோல் என்று நித்திய வாழ்வு வாழலாம்.ஆஹா.. நினைக்கவே இன்பமாக இருக்கிறது.மாட்டுச் சாணியை வாசலில் தெளித்தால் வீட்டுக்குள் லட்சுமி வருவாள்.செல்வம் பெருகும் என்று மேற்படி வகையறாக்கள் கதையைக் கட்டிவிட்டதில் கொங்கு மண்டலத்தில் சாணிக்கு ஏக டிமாண்ட்.சாணிப் பவுடர் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.இப்போது ஒவ்வொரு மண்டலமாகப் பரவுகிறது.அதில் மக்களுக்கு கை மேல் கிடைக்கும் பலன் ஒன்று உள்ளது.சாணிப் பவுடர் நாறாமல் இருப்பதற்கு அதில் விஷத்தன்மையுடைய ரசாயனம் கலக்கப்படுகிறது.அதைக் குடித்து பலர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்,விவசாயிகள் பூச்சிக்குத் தெளிக்க வேண்டிய பாலிடாலைக் குடித்துச் சாவதைப் போல.கோ மாதா எங்கள் கொலை மாதா!

  2. நிச்சயமாக தமிழ்நாட்டு மக்கள் இது போன்ற கேவலங்களுக்கு துணைபோக மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.ஒருவேளை”எத்தை தின்றால் பித்து தெளியும்”என்ற ஊசலாட்டத்தில் உள்ள குருட்டு பக்தியாளர்கள் இதுபோன்ற கேவலங்களால் தடுமாறினாலும் தீவிரம் காட்ட மாட்டார்கள்.ஏனெனில் ஓரளவு பண்பட்ட நெறிபட்ட மண்ணாக இது இருக்கிறது.

  3. மூத்திரம் குடிக்கலாம், சாணி சாப்பிடலாம்,சாணியை வாசலில் தெளித்தால் வீட்டுக்குள் லட்சுமி வருவாள், உயிரை வைத்து அதன் பால் குடிக்கலாம், கறி சாப்பிட்டால் குற்றம், லாஜிக்கே சரியில்லையே, இதில் அறிவில்லையே, இவர்களை நாட்டைவிட்டு சீக்கிரம் விரட்டவேன்டுமே, இல்லவிட்டால் நாடு கெட்டுவிடுமே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க