Friday, December 9, 2022
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 08/09/2016

ஒரு வரிச் செய்திகள் – 08/09/2016

-

செய்தி: தலைநகர் புதுதில்லியில் சென்ற வருடம் ரூ.30-க்கு விற்பனையான சர்க்கரை தற்போது ரூ.42-க்கு விற்கிறது. மேலும் கடந்த எட்டு வருடங்களில் தற்போதுதான் குறைவான கோதுமை இருப்பு – 268 லட்சம் டன்கள் – அரசிடம் இருக்கிறது.

நீதி: மோடி அரசின் தித்திக்கும் தீபாவளி வாழ்த்து!

=====

செய்தி:  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் “இஸ்ரோ” செப் 08, 2016 வியாழனன்று மாலை நான்கு மணிக்கு “இன்சாட் – 3டிஆர்” எனும் அதி நவீன வானிலை ஆய்வு செய்ற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது.

நீதி: நல்லது, நாளை திருப்பதியில் நேர்த்திக்கடனாக எதை செலுத்துவார்கள்?

=====

செய்தி:  காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் அப்துல் ரஷீத் கான்டேயின் வீட்டுக்கு வந்த தீவிரவாதிகள், காவலுக்கு இருந்த போலிசாரை துரத்தி விட்டு துப்பாக்கிகளை எடுத்துச் சென்றனர்.

நீதி: துப்பாக்கிகளுக்கே பாதுகாப்பில்லாத காஷ்மீரில் மனித உயிருக்கு மட்டும் எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று வரும் துக்ளக் தலையங்கத்தில் சோ எழுதுவது உறுதி.

=====

செய்தி: வியட்நாமின் லாவோசில் நடக்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்.

நீதி: மோடி பிரதமரான பிறகு 2014 செப்டம்பர் முதல் இன்று வரை 8 தடவை பகவான் ஒபாமாவைச் சந்தித்து ஷேமம் விசாரித்திருக்கிறார். இந்த ஆறு நிமிட தேநீர் சந்திப்பில் அமெரிக்க இராணுவத்தின் உல்லாசபுரியாக செயல்பட இந்தியா சம்மதித்ததற்கு நன்றி சொல்வாரோ ஒபாமா?

=====

செய்தி: ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தும் ஐ ஃபோன் 7 மற்றும் 7+ ஃபோன்கள் அக்டோபர் 7, 2016 முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். ஐ ஃபோன் 6  வரிசையில் 16 ஜி.பி திறன் ஃபோனுக்கு ரூ.62,000 விலை வைத்த ஆப்பிள் தற்போது 32 ஜி.பி திறன் கொண்ட புது ஃபோனுக்கு ரூ.60,000 மட்டுமே நிர்ணயித்துள்ளது.

நீதி: அமெரிக்க ராணுவத்திற்கு சேவை செய்யும் இந்திய அரசின் குடிமக்களுக்கு அமெரிக்காவின் அன்புப் பரிசு!

=====

செய்தி: பிரீமியம் ரயில்கள் என அழைக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற அதிவிரைவு ரயில்களின் பயணக் கட்டணம் – தேவைக்கேற்ப கூடும் முன் பதிவுக் கட்டணம் – கிட்டத்தட்ட 50% உயர்த்தப்படுவதாக அரசாங்கம் புதனன்று அறிவித்திருக்கிறது. இதன் மூலம் குறைந்த அளவு விமானக் கட்டணங்களைக் கொண்ட நிறுவனங்களோடு போட்டி ஏற்படும் என்று தெரிகிறது.

நீதி: இதன் மூலம் அதிவிரைவு ரயில்களின் கட்டணத்தை விட விமானக் கட்டணம் குறைவு என்று மேட்டுக்குடியினர் விமானத்திற்கு மாறலாம். பிறகு ரயில் வருமானம் குறைவு என்று சாதா ரயில் கட்டணத்தை உயர்த்தலாம். அரசு ரயில், தனியார் விமானம் இரண்டிலும் நட்டமிருக்காது. வட்டிக் கடை சேட்டு நாடாண்டால் சட்டியும் அடமானத்திற்கு போகும்.

=====

செய்தி: பாபர் மசூதி 1992-ம் ஆண்டில் இடிக்கப்பட்ட பிறகு முதன முறையாக நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி அயோத்தி நகருக்குச் சென்று, பிரச்சினைக்குரிய இடத்திலிருந்து ஒரு  கி.மீட்டர் தொலைவில் இருக்கும் ஹனுமன் கார்கி ஆலயத்தில் வழிபட்டார். உத்திரப்பிரதேசத்தில் அவர் மேற்கொள்ளும் கிசான் யாத்திரையின் அங்கமாக இந்த பயணம் நடைபெற்றது.

நீதி: பாபர் மசூதி இடிப்பிற்கு முன் ராமர் சிலை வழிபாட்டை திறந்து வைத்த ராஜீவ் காந்தியின் வழித்தோன்றல் மட்டும் இந்துக்களின் ஓட்டுக்களை கவர வேண்டாமா?

=====

செய்தி: அரசாங்கத்தை கடுமையாக விமரிசப்பதெல்லாம் தேசத் துரோக சட்டப் பிரிவின் கீழ் வராது என்பதை கேதார் நாத் வழக்கில் நாங்கள் கூறியுள்ளது அனைத்து கீழமை நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நீதி: ஊத்திக் கொடுத்த உத்தமி பாடியதற்கும், பாராளுமன்றத்தை கழிப்பறையாக வரைந்ததற்கும் போலிசால் போடப்பட்ட 124 ஏ தேசத்துரோக வழக்கை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்ரேட்டுகளுக்கு என்ன தண்டனை யுவர் ஆனர்?

=====

செய்தி: ஜம்மு காஷ்மீர் பிரிவினை வாதிகளின் பாதுகாப்பு, பயணம், விடுதி தங்கல் முதலியவைகளுக்கு சுமார் 356 கோடி ரூபாயை கடந்த ஐந்து வருடத்தில் செலவழித்த அரசை எதிர்த்தும் அந்த நிதியுதவியை நிறுத்துமாறும் பொதுநல வழக்கு தொடரப்பட்டதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாங்களும் அதே மனநிலையில் இருப்பதாக கூறினர்.

நீதி: கடந்த ஐந்து வருடமாக இந்திய இராணுவம் காஷ்மீரில் தங்க, தின்ன, சுட, உடுத்த, சரக்கடிக்க எத்தனை நூறு கோடி ரூபாய் செலவழித்தார்கள் என்பதை அறிவார்களா அந்த லார்டு லபக்தாஸ்கள்?

=====

செய்தி: வரும் 2019 பாராளுமன்றத் தேர்தலில், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, வட கிழக்கு மாநிலங்களில் 115 தொகுதிகளை கட்சி புதிதாக பிடிக்க முடியும் என்று பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

நீதி: இந்தி பேசும் மாநிலங்களை வளைத்துப்போட்ட அதானி-அமித் ஷா கும்பல் மற்ற மாநிலங்களை வளைக்க என்ன சதித்திட்டம் வைத்திருக்கிறதோ?

=====

செய்தி: நாட்டில் 40% ஆள் கடத்தல் சம்பவங்கள் அசாம், மேற்கு வங்க மாநிலத்தில் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆள் கடத்தல் சம்பவங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 2015-ல் மட்டும் ஆள் கடத்தல் தொடர்பாக 577 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நீதி: அம்மா ஆட்சியில் ஆள்கடத்தும் போட்டியில் சாதனை புரிந்து மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம் அடுத்த ஆண்டே அம்மா ஆசீர்வாதத்தோடு முதலிடத்தை அடைவது உறுதி!

=====

செய்தி: தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் நக்மா வலியுறுத்தியுள்ளார்.

நீதி: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கலை மூலம் சொல்லிக் கொடுத்து பயிற்சி அளிக்கும் தமிழ் சினிமாவிற்கு வரிவிலக்கு ஏதும் கேட்கலையா நக்மா?

=====

செய்தி: மும்பையை தலைமை இடமாகக் கொண்டுள்ள ‘யெஸ் பேங்க்’ நாடு முழுவதும் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்தப் பெயருடன் கூடுதல் எழுத்துக்களைச் சேர்த்து ‘யெஸ் ஏபிஎஸ் பேங்க்’ என்ற பெயருடன் தருமபுரியில் போலி வங்கி நடத்திய 4 பேரை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

நீதி: மல்லையா எனும் ஒரு ஆள் பத்து வங்கிகளை ஏமாற்றும் போது நான்கு பேர் ஒரு வங்கியை ஏமாற்றுவதில் என்னய்யா குற்றம்?

=====

செய்தி: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில்பாதை ஓரமாக நடந்து சென்ற வட மாநிலங்களை சேர்ந்த 4 பேர் மீது மின்சார ரயில் மோதியதில் அவர்கள் உயிரிழந்தனர்.

நீதி: வடக்கே வாழ்வில்லை என்று வந்தவர்களுக்கு தெற்கில் மரணம்!

=====

செய்தி: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களால் 2-வது நாளாக தமிழகப் பேருந்துகள் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டன.

நீதி: நெய்வேலி மின்சாரத்தை மட்டும் ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

=====

செய்தி: கடனை அடைக்க தங்களது 5 மாத குழந்தையை விற்ற கான்பூர் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

நீதி: ஐந்து மாத குழந்தையை விற்றால் கைது  செய்யும் போலிசார் அமெரிக்காவிற்கு நாட்டையே விற்பனை செய்யும் மோடி மஸ்தான் கும்பலை என்ன செய்வார்கள்?

=====

  1. கடனை அடைக்க தங்களது 5 மாத குழந்தையை விற்ற கான்பூர் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

    நீதி: ஐந்து மாத குழந்தையை விற்றால் கைது செய்யும் போலிசார் அமெரிக்காவிற்கு நாட்டையே விற்பனை செய்யும் மோடி மஸ்தான் கும்பலை என்ன செய்வார்கள்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க