privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைஒன்றைப் பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக

ஒன்றைப் பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக

-

நான் ஒன்றைப்பற்றிப் பேசும்போது
இன்னொன்றைப் பற்றிப் பேசுவதுபோல இருக்கிறது
என்கிறாய்.
மெய்தான் –
இந்த நாளில் ஒன்றை விலக்கி இன்னொன்றைக்
காணுவது இயலாத காரியந்தான்.

refugeeமன்னாரிலிருந்து வெளிக்கிட்ட தற்கொலைப் போராளியின் உடல்
ஜெருசலேம் நகரில் வெடித்துச் சிதறுகிறது.
மட்டக்களப்புக்குப் போகையில் மறிக்கப்படுவோனது அடையாள அட்டை
இஸ்ரேலியப் படையினனிடம் ஒரு பலஸ்தீனியனால் நீட்டப்படுகின்றன.
திருகோணமலை முற்றவெளியில் பொலிஸ் தேடும் சந்தேக நபர்
ஸ்ரீரீநகரில் இந்தியப்படையினரால் கொண்டு செல்லப்படுகிறார்.
பினோஷேயின் சிலேயில் காணாமல் போனவர்கள்
சூரியகந்தவிலும் செம்மணியிலும் புதையுண்டார்கள்.
கொழும்புச் சோதனைச்சாவடியில் சிக்குண்ட பெண்ணைத்
தமிழகத்துக் காவல் நாய்கள் தடுப்பு மறியலில் கடித்துக் குதறுகின்றன.
வட இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமியன்
அவுஸ்திரேலிய அரசால் அனுமதி மறுக்கப்படுகிறான்.

எல்லா அகதி முகாம்களையும் சூழுகிற வேலி
ஒரே முட்கம்பிச் சுருளால் ஆக்கப்பட்டிருக்கிறது.
எல்லாச் சிறைக் கூடத்துச் சுவர்களும்
ஒரே சூளையின் அரிகற்களால் எழுப்பப்பட்டுள்ளன.
உலகின் எல்லாத் தடுப்பு முகாங்களிலும் உள்ளவர்கள்
ஒரே மொழியில்தான் இரவில் அலறுகிறார்கள்.

துருக்கியில் குர்தியனுக்கு மறுக்கப்பட்ட மொழியை
இலங்கையில் தமிழன் இழந்து கொண்டிருக்கிறான்.
யாழ்ப்பாண நூலகத்தைச் சூழ்ந்த தீயிலல்லவா
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள் வடிக்கப்பட்டன.
சாவகச்சேரியைத் தரைமட்டமாக்கிய குண்டுகள்
காசா நகரத்தின் மீது விழுந்து கொண்டிருக்கின்றன.
கிளிநொச்சியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
பாமியன் புத்தர் சிலைகளை முடமாக்கிச் சரிக்கின்றன.
கியூபா மீதான அமெரிக்க வணிகத்தடை
வன்னிக்கு எரிபொருள் போகாமற் தடுக்கிறது.
புலம்பெயர்ந்த உயர்சாதித் தமிழனின் முகம்
கூ-க்ளுக்ஸ்-க்ளான் முகமூடிக்குள் ஒளிகிறது.
இலங்கையில் விதிக்கப்படும் செய்தித் தணிக்கை
அமெரிக்காவிலும் செல்லுபடியாகிறது.

innondrai-patri-backகாஷ்மீர் விடுதலைப் போராளியின் உயிர்த்தியாகம்
இலங்கைத் தமிழனுக்காக வழங்கப்படுகிறது.
நேபாளத்தின் கெரில்லாப் போராளி
மலையகத் தமிழ்த் தொழிலாளிக்காகப் போராடுகிறான்.
கொலம்பியாவில் விரிகின்ற விடுதலைப் போர்
இலங்கை விவசாயிகளின் விமோனசத்துக்கானது.
இலங்கைத் தமிழரது இடையறாத போராட்டம்
பலஸ்தீனப் போராளிகட்கு உற்சாகமூட்டுகிறது.

ஒரு நியாயத்தை ஆதரிக்கிற சொற்கள்
இன்னொரு நியாயத்தையும் ஆதரிக்கின்றன.
ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள்
எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன.

எனவே
நான் எதைப் பற்றிச் சொன்னாலும்
நீ எதைப் பற்றிச் சொன்னாலும்
எல்லாவற்றைப் பற்றியும் சொன்னது போலத்தான்.

– சி.சிவசேகரம்
இன்னொன்றைப் பற்றி – கவிதை தொகுப்பு
தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு – கொழும்பு.