Sunday, June 16, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சிவகாசி தொழிலாளிகளுக்கு தீபாவளி உண்டா ?

சிவகாசி தொழிலாளிகளுக்கு தீபாவளி உண்டா ?

-

தீபவளியை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் சிவகாசி பட்டாசு நிறுவனம் ஒன்று அமைத்திருந்த கடையின் முகப்பு
தீபவளியை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் சிவகாசி பட்டாசு நிறுவனம் ஒன்று அமைத்திருந்த கடையின் முகப்பு – வினவு புகைப்படம்

தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜனுக்கு வயது 45 . இவருக்கு வேலைக்கு போகும் மனைவியோடு 12-வது படிக்கும் ஒரு மகனும் மற்றும் கல்லூரியில் படிக்கும் ஒரு மகளும் இருக்கின்றார்கள்.

கடந்த 8 ஆண்டுகளாக சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் வேதியல் இரசாயனங்கள் கலக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் குடிக்கின்ற தேநீரே எட்டு – பத்து ரூபாய் என ஆகிவிட்டாலும் இவருடைய அன்றாட கூலி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 200 ரூபாய் மட்டுமே.  உயிரைப் பணயம் வைத்து பட்டாசுத் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவர் இன்று பெறும் கூலி ரூ.400 மட்டுமே!

Workers make crackers at sivakasi 4
பட்டாசு ஆலையில் தொழிலாளி ( மாதிரிப் படம் )

தீபாவளிக்கு 15,000 ருபாய் போனசாக  கிடைப்பதாய் கூறுகிறார். அதுவும் மிகவும் ஆபத்தான இரசாயனங்கள் கலக்கும் வேலையில் ஈடுபடுவதால் மட்டுமே கிடைக்கிறது. பட்டாசுத் தொழிற்சாலையின் ஏனையத் தொழிலாளர்களுக்கு அந்த உரிமையும் கிடையாது. சட்டத்திற்கு புறம்பாய் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, காலாவதியான உரிமங்களைக் கொண்டு கொள்ளை இலாபம் அடிக்கும் பட்டாசுத் தொழிற்சாலை முதலாளிகள் தங்களது தொழிலாளர்களை பட்டினி போட்டே வதைக்கிறார்கள்.

சீனப்பட்டாசுகள் தடைவிதிக்கப்பட்டதை வரவேற்கிறார் ராஜன். ஆனால் சீனத் தொழிலாளிகளின் குறைந்தபட்ச உரிமைகள் கூட இங்கே இல்லை என்பதை அவர் அறியமாட்டார். சீனப்பட்டாசுகளைத் தடை செய்தால் சிவகாசியில் பட்டாசுத் தொழில் நல்லமுறையில் நடக்கும் என்பதால் ஆதரிக்கும் ராஜன், இந்த நல்ல முறையில் தொழிலாளிகளின் ஊதியம் கெட்டவிதமாக இருப்பதை விதியே என ஏற்கிறார்.

சிவகாசியில் இதுவரை பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பலநூறு தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகி உள்ளனர். இது உயிருக்கு ஆபத்தான தொழில் தான் ஆனால் அதை விட்டாலும் வேறு வழியில்லை பிழைக்க வேண்டுமே ! என்கிறார்.

Workers make crackers at sivakasi 2
சட்டவிரோதமாக வேலை வாங்கப்படும் சிறுமி
( மாதிரிப் படம் )

குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி கேட்டதற்கு, குழந்தைத் தொழிலாளர்கள் யாரும் இங்கில்லை என்று பலகைத் தொங்கவிட்டு இருப்பார்கள். ஆனால் உள்ளே சிறுவர், சிறுமியர் பலர் வேலை செய்கிறார்கள். எப்படியும் அவர்களுக்கு நூறு ரூபாய் கொடுத்தால் போதும். அவர்களை வேலைக்கு வைப்பதால் கம்பனிகளுக்கு தான் கொள்ளை இலாபம் என்று உண்மையைச் சொல்கிறார். அது கூட பரவாயில்லை, பட்டாசுக்கு தாள் ஓட்டும் வேலைகளில் ஈடுபடும் சிறுவர்கள் பசியின் காரணமாக பசையை ( கோதுமை – மைதாவில் செய்யப்படுவது) சாப்பிடாமல் இருக்க அதில் யூரியாவை கலந்து விடுகிறார்களாம், முதலாளிகள். இப்பேற்பட்ட கந்தக பூமியில் தொழிலாளிகளுக்கு என்ன மதிப்பு இருக்கும்?

தனது மகளும் மகனும் பட்டாசுக்கு தாள் சுத்துதல் உள்ளிட்ட பட்டாசு சம்மந்தமான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறார். இப்படி முழு குடும்பமே வேலை செய்யாமல் அங்கே வாழ முடியாது என்பது நிலைமை. இதில் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள் என்று ஏழைப் பெற்றோர்களை விமரிசிக்கின்றனர், ஓய்வு நேர மனிதாபிமானிகளான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர்!

சரி, போனஸ் கொடுப்பதைத் தவிர உங்களுக்கு வேறு என்னவிதமான உரிமைகள் பட்டாசு நிறுவனங்கள் கொடுக்கின்றன என்று கேட்டதற்கு, மாதம் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் (நேரடியாக எண்ணைய் மில்லில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது ) கொடுக்கிறார்கள். “தலைக்கு எண்ணெய் தேய்த்து கண்ணில் சற்று எண்ணெய் விட்டால் தான் கண்ணுல மருந்து எதாச்சும் இருந்தால் கூட எரிச்சல் எடுக்காது” என்று அந்த எண்ணெய் தானத்தின் பயனைக் கூறுகிறார்.

ஸ்டாண்டர்ட், காளிமார்க் போன்ற பெரிய நிறுவனங்களில் கூலி மிகவும் குறைவு. 170-200 ரூபாய் வரைக்கும் தான் கூலியாய் கிடைக்கும். அவர்களுக்கு தினமும் டீ பேட்டா 25 ருபாய் கிடைக்கும். தினமும் இரண்டு வாழைப்பழங்கள் கொடுப்பார்கள். சிவகாசியில் ஸ்டாண்டர்ட் நிறுவனம் 150 இடங்களில் இயங்குவதாக கூறுகிறார் அவர். தனது பட்டாசு ரகங்களில் தரமிருப்பதாக விளம்பரம் செய்யும் ஸ்டாண்டர்டு நிறுவனம தொழிலாளிகளை நடத்தும் விதம் இதுதான்.

சரி விபத்து ஏற்பட்டு உயிரிழப்போ கைகால் இழப்போ ஏற்பட்டால் இழப்பீடு தருவார்களா என்று கேட்டதற்கு, “அங்கீகாரம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக தான் பல மருந்து கம்பெனிகளும் நடக்கின்றன. தொழிலாளர்களுக்கும் நிரந்தர வேலை கிடையாது. இந்த நிலையில் இழப்பீடு பெறுவது என்பது பெரும்பாலும் முதலாளியைப் பொருத்தே இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கொடுப்பார்கள். இல்லையென்றால் இல்லை,” என்கிறார்.

சரி உங்களது வேலை நேரம் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, கோடைகாலம் தவிர பிற மாதங்களில் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரைக்கும் வேலை செய்வோம். 10 மணிக்கு பிறகு கடுமையான வெயிலினால் சூடேறத் துவங்கும் மருந்து எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். கோடை காலத்தில் காலை 5 மணிக்கு போய் 9 மணிக்கு திரும்பி விடுவோம், என்றார். இப்படி அன்றாடம் எப்போது வெடிக்கும் எனும் அபாயத்திலியே தொழிலாளிகள் வேலையைச் செய்கின்றனர்.

மற்ற பட்டாசுகளை விட பென்சில் பட்டாசுகளுக்கான இரசாயனக் கலவை மிகவும் ஆபத்தானது என்கிறார் ராஜன். ஒரு இழையின் கனத்தை கூட தாங்காத அந்த ஆபத்து எப்போதும் வெடிக்க காத்திருக்கும்  ஒரு கண்ணி வெடிக்கு சமமானது. அதனால் தான் தேவைக்கு போக மிஞ்சியிருக்கும் பென்சில் பட்டாசுகளுக்கான இரசாயனத்தை அன்றாடம் உடனடியாக அழித்துவிடுவோம் என்கிறார்

சிவகாசி தொழிலாளி ராஜன் (அமர்ந்திருப்பவர்). - வினவு புகைப்படம்
சிவகாசி தொழிலாளி ராஜன் (அமர்ந்திருப்பவர்).

அவரது கம்பெனியில் மொத்தம் 8 அறைகளும், அறை ஒன்றிற்கு 25 கிலோ மருந்து இருக்கும். ஒவ்வொரு அறையிலும் ஒரு குறிப்பிட்ட வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. 100 – 10000 வாலா பட்டாசுத் தயாரிப்பில் அவர் ஈடுபடுகிறார்.

ராஜன் வேலை செய்யும் கம்பெனி  கலெக்டர் லைசன்சு, மெட்ராஸ் லைசன்சு மற்றும் நாக்பூர் லைசன்சு என்று மூன்று விதமான லைசன்சுகளை வாங்கியுள்ளதாக அவர் கூறுகிறார். பெரிய வெடிகள் தயாரிக்க நாக்பூர் லைசன்சு வேண்டும். ஒரு லைசன்சு வாங்கிவிட்டு மற்ற வகை பாட்டாசுகள் தயாரிக்கக் கூடாது. அதிகாரிகள் வந்து சோதனை போடுவார்கள் என்று கூறுகிறார்.  அந்த சோதனை மாமூலுக்கு பயன்படுமளவுக்கு உயிர் பாதுகாப்பு பயன்படுமா என்பதை அதிகரித்து வரும் விபத்தைக்களை வைத்து முடிவு செய்யலாம்.

தீபாவளி முடிந்த பிறகுதான் இரண்டு மாதங்கள் ஓய்வு கிடைக்கும் என்கிறார். காரணம் அப்போது மழைக்காலம் என்பதாலும் உற்பத்தியை நிறுத்தி வைப்பார்கள். மீதி பத்து மாதங்களில் அதிக வெயில் இருக்குமென்பதால் உற்பத்தியும் அசுரவேகத்தில் இருக்கும்.

தீபாவளி தவிர ஓணம், தசரா, வட இந்தியர்களின் பிற விழாக்கள் என பட்டாசுகள் பிற மாநிலங்களுக்கும் விற்கபடுகிறதாம். ராஜனுக்கு கிடைக்கும் 400 ரூபாய் கூலியானது குடும்பச் செலவுக்கு போதாது என்பதால் அவரது மனைவி பொன்வண்டு சோப்பு டீலராக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இட்லி மாவு தயாரித்து விற்பதிலும் ஈடுபடுகிறார்.

அவர் வேலை செய்யும் பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு நேரடி விற்பனைக்காக சென்னை வந்திருக்கிறது. சென்னையில் வர்த்தக மையத்தின் எதிர்புறத்தில் அமைந்திருந்த அந்நிறுவனத்தின் கடையில் பணிபுரிய சிவகாசியிலிருந்து 40 தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

தீபாவளியின் குறியீடான பட்டாசுகளைத் தயாரிக்கும் இவர்களுக்குத் தீபாவளி கிடையாது.

படம், நேர்காணல் – வினவு செய்தியாளர்கள்
(2016 தீபாவளியன்று எடுக்கப்பட்ட நேர்காணல்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க