Thursday, April 15, 2021
முகப்பு செய்தி திருப்பதியில் ஆதார் : பக்தியின் புதிய பெயர் நுகர்வுக் கலாச்சாரம் !

திருப்பதியில் ஆதார் : பக்தியின் புதிய பெயர் நுகர்வுக் கலாச்சாரம் !

-

Aadharந்திய குடிமக்களுக்கு அந்தரங்க உரிமை (Right to Privacy) உண்டா? ‘இல்லை’ என்று ஆதார் வழக்கில் வாதிட்டார் அட்டார்னி ஜெனரல் முகில் ரஸ்தோகி ! குடிமக்களை உளவு பார்க்கவும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடவும் கார்ப்பரேட்டுகள் தனது வியாபாரத்திற்கு அதைப் பயன்படுத்துவும் ஆதார் அட்டை ஒரு கருவியாக இருக்கிறது என ஜனநாயக சக்திகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

இந்த வழக்கு விசாரணையில் முகில் ரஸ்தோகி, இந்திய அரசியல் சாசனம் அந்தரங்க உரிமையை குடிமக்களுக்கு வழங்கவில்லை என்று வாதிட்டார் ! [1] இதன் அர்த்தம், மக்களின் தரவுகளை அரசு விற்பதில் என்ன தவறு இருக்க முடியும் ? என்று வெளிப்படையாக கேட்பதாக இருந்தது! வழக்கு விசாரணையின் போக்கில் அட்டார்னி ஜெனரல் இன்னொரு கேள்வியையும் முன்வைத்தார். இந்தியக் குடிமக்கள் தனது வறுமையப் போக்கிக் கொள்ள தங்களது தனிப்பட்ட தகவல்களை விற்பதில் என்ன தவறு ? என்றார்.

வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கவும், ரேசன் பொருட்கள் பெறுவதற்கும், மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கும், எரிவாயு உருளை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் என்று அரசு மக்களைப் பகிரங்கமாக மிரட்டிய பொழுது முகில் ரஸ்தோகி முன்வைத்த கேள்வி இது ! அரசாங்கம் மக்களைக் காக்கும் கடமையிலிருந்து விலகிக்கொண்டு ஆள்பிடித்து கொடுக்கும் தரகனாக இருக்கிறது என்பதை ஆதார் விசயத்தில் ரஸ்தோகியின் வாதம் தெளிவுபடுத்தியது !

ரஸ்தோகியின் வாதப்படி இந்தியக் குடிமகன்களுக்கு அந்தரங்க உரிமை இல்லை. சரி, வழிபாட்டு உரிமையாவது இருக்கிறதா ? இல்லை என்கிறது திருப்பதி தேவஸ்தானம் போர்டு ! ஆன்லைன் தரிசனத்திற்கு இனி ஆதார் கட்டாயம் என்று அடுத்த கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது [2]. தி இந்து தமிழ் நாளிதழில் வந்த செய்தியின்படி “சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, விசேஷ பூஜை, அஷ்டதள பாத பத்மராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், பிரம்மோற்சவம்” [2] போன்ற பார்ப்பன சடங்குகளில் பங்கேற்பதற்கு இனி ஆதார் அட்டை அவசியம். இதன் மூலம் இப்புனிதச் சடங்குகளை யார் யார் செய்கிறார்கள் ? இச்சடங்குகளின் மார்க்கெட்டை எப்படி உயர்த்துவது ? போன்றவை ஆதார் அட்டை மூலம் இனி துல்லியமாக தெரியவரும் !

ஏற்கனவே குடும்ப உறுப்பினர்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால் ரேசன் கார்டிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என்று அரசு மிரட்டியது ! அரிசி, பருப்பு போன்ற அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்காக மக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். அந்தரங்க உரிமையா ? வயிற்றுப் பசியா ? என்பதில் பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்று அரசின் ஐடியா ஒர்க்அவுட் ஆனது ! [3] இதன்பின் பள்ளிகளில் மாணவர்களை ஆதார் அட்டை மூலமாக பின் தொடரப்போவதாக அரசு அடுத்த அறிவிப்பை வெளியிட்டது [4]. இது மாணவர்களின் பாதுகாப்பிற்காக என்று ஜால்ரா தட்டிய பத்திரிக்கைகள் அமெரிக்கா தன் நாட்டு இளைஞர்களை இப்படித்தான் வேவு பார்க்கிறது என்பதை அப்பட்டமாக மறைத்தன.

அளவிடமுடியாத தகவல் சுரங்கத்தில் பக்தியும் படுக்கையறையும் தரவுகளாக தங்கத்தைப் போன்று மிளிரும் மூலதனங்கள் என்பதை கார்ப்பரேட்டுகளும் பார்ப்பனியக் கும்பலும் இங்கு நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் மக்களை டிஜிட்டல் மயப்படுத்தி தரவுகளாக மாற்றி இணையத்தோடு இணைப்பது என்பது மறுகாலனியாதிக்கத்தை தீவிரப்படுத்தும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலாகும் ! இதற்கு ஏழுமலையானும் உடந்தை என்பது இச்செய்திலிருந்து தெரியவருகிறது !

“ஒன்றுமே கிடைக்காததற்கு வங்கு நாயின் உரோமம் கிடைத்தாலாவது சிறிதளவு பயனிருக்கும்” என்று ஜாரின் முடியாட்சியின் கீழ் ஒரு பண்ணையடிமையின் மனநிலை என்னவாக இருந்தது என்பதை கேப்டன் மகள் நாவலில் பிரதிபலித்திருப்பார் அலெக்சாண்டார் புஷ்கின். இங்கு மறுகாலனியாதிக்கத்தில் சிக்குண்டு கிடக்கும் மக்கள் தங்களுடைய வாழ்க்கைப் பிரச்சனைக்களுக்கு தீர்வு கிடைக்காமல் பரிகாரத்திற்கு இறைவனை நாடலாம் என்றால் இறைவன் ஆதார் அட்டையோடு வா என்கிறார். இதை எப்படி விவரிப்பதென்று புரியவில்லை ! ஆனால் ஆதார் பக்திவரை வந்தாகிவிட்டது !

இனி பக்தனின் படுக்கையறைவரை வருவதற்கு ரொம்பக் காலம் இல்லை ! பக்தியின் தரமே தரவு (data) என்றாகிவிட்ட பிறகு பக்தர்களின் கதி என்ன?  இனி பகவான் என்பவர் ஏழுமலையான் அல்ல, பன்னாட்டு நிறுவனங்களே என்பதை புரிந்து கொண்டால்தான் பக்தர்கள் பக்தியைக் காட்ட முடியும். அப்போது அவர்களின் பெயர் பக்தர்கள் அல்ல; நுகர்வோர்கள்!

செய்தி ஆதாரம்:
[1]. Privacy not a right, Aadhaar legit: Centre
[2]. ஆன்லைன் தரிசனத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு (தி இந்து தமிழ், 5-11-2016).
[3]. Dark clouds over the PDS,
[4] பள்ளி மாணவரை ஆதார் மூலம் பின்தொடர மத்திய அரசு முடிவு (தி இந்து தமிழ், 2-11-2016)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க